பா.சத்தியமோகன்
2269.
பதிக இன்னிசைப்பாடி ஆடியே
பிற பதிகள் பலவும் சென்று
கங்கை நதி அணிந்தவர் கோயில்களை விரும்பியே வணங்கி
மதுர முத்தமிழ் வாசகரான சம்பந்தர் அடைந்தார்
பொன்னம்பலத்தில் கூத்தாடும் —
அதிர்கின்ற சிலம்படி கொண்ட இறைவரின்
திரு அவளிவணல்லூர் எனும் ஊரினை.
2270.
நிலை பெற்ற அப்பதியில்
தேவர்களும் துதிக்க மகிழ்ந்து எழுந்தருளும்
தன்மை கொண்ட இறைவரின் கோயிலுள் புகுந்து
தம்பரிசு உடையார் எனும் நாமம் நிகழ வைத்துப் புகழ்ந்தார்
இறைஞ்சினார் திருமுன்பு வணங்கினார்
பிற பதிகள் பலவும் சென்று பணிந்தார்.
( ?கொம்பிய ? எனத் தொடங்கும் பதிகம் அருளினார்
திருஅவளி வணல்லூரில்)
2271.
பழுதுகளை சீர் திருத்தும் திரும்பரிதி நியமத்தைப் பணிந்தார்
அங்கே
எழுதுகின்ற மாமறையான திருப்பதிகத்தை இசையுடன் போற்றினார்
முழுதுமான இறைவரின் கோயில்கள் வணங்கியவாறே
முறைமையிலிருந்து வழுவாத சிறப்புடைய
திருப்பூவனூர் வணங்கி வந்து சேர்ந்து-
[ ?விண் கொண்ட ? எனத் தொடங்கும் பதிகம், திருப்பரிதி
நியமத்தில் எனும் பதியில் பாடி அருளினார். ]
2272.
பொங்குகின்ற காதலினால் போற்றியபடி
அங்கிருந்து அருளுடன் சென்று
தாமரைகளின் தடம் கொண்ட
பெரும் வயல்கள் சூழ்ந்த பதிகள் யாவும் துதித்து
எங்கும் அன்பர்கள் ஒலி பெருக வாழ்த்தியபடி வந்து
அங்கணர் (சிவன்) அமரும்
திரு ஆவூர் எனும் பழையதலம் அடைந்தார்.
2273.
அத்தலத்தில் பசுபதி ஈ ?வரர் கோயிலில்
இனிதாக வீற்றிருந்த மணியான இறைவரை
உள் புகுந்து வழிபடும் விருப்பத்தால் வணங்கி
தணியாத காதலுடன்
குளிர்ந்த தமிழ் மாலைகள் சாத்தினார்
அழகிய திருநல்லூரினை மீண்டும் அணைந்தார்.
2274.
வேதங்கள் விளங்கும் அந்தத் தலத்தில்
மணிகண்டரான இறைவரின் பொன்னடிகளை
நிறையும் அன்போடு வணங்கினார் ஆளுடைய பிள்ளையார்
பிறை சூடிய இறைவரின் நிலையான திருவருள் பெற்று
உலகம் உய்வு பெறத்
தேன் பொருந்திய பூக்களில் வண்டுகள் ஒலிக்கின்ற
மணம் வீசும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழி வந்து சேர்ந்தார்.
2275.
பிறைமதி புனைந்த இறைவர் திருவலஞ்சுழியில் வாழ்கின்ற
பெரும் தவத்தின் முயற்சியுடைய அன்பர்கள்
முத்தமிழ் விரகரான ஞானசம்பந்தர் முன் வந்து
எதிர் கொண்டு வரவேற்ற காட்சி
ஒளி உடைய மேகங்கள் மதியைச் சூழ்ந்தது போலிருந்தது.
2276.
கலந்து வந்த அன்பர்கள் தொழுது வணங்கியதும்
கவுணியர் தலைவரான பிள்ளையார்
அன்று பூத்த செந்தாமரை போன்ற கரம் குவித்து அணைபவராய்
திருவலஞ்சுழிப் பெருமான் மகிழ்ந்து எழுந்தருளிய
கோவில் வந்து எய்தினார்.
பொன் உடைய நீண்ட சுடர்விட்டு இலங்கும் கோபுரத்தை
இறைஞ்சி கோயிலுள் புகுந்தார்.
2277.
பகைவரின் மூன்று புரங்கள் எரித்த இறைவரின்
திருமுன்றில் வலம் வந்தார்
உருகும் அன்புடன்
உச்சி மேல் கரம் குவித்து அஞ்சலியினர் ஆனார்
திருவலஞ்சுழி இறைவரின் சேவடித் தலத்தில்
பெருகும் அன்புடன்
பெரியோரான சம்பந்தர் பணிந்து எழுந்தார்.
( ?விண்டெல மல ? எனத் தொடங்கும் பதிகம் அருளினார்.)
2278.
ஞானப்பால் பருகிய போனகர்
இறைவர் திருமுன்பு தொழ வேண்டும் எனும்
விருப்பத்தால் விளைந்த காதலில்
இறைவரை முன்னிலைப்படுத்தி
வினவுகின்ற கருத்துடைய
குற்றம் அற்ற இசையுடன் விளங்கும் திருப்பதிகத்தை
குவளைமலர் போன்ற கண்டத்தை உடைய
இறைவரைப் பாடித் துதித்தார் பரவினார்.
2279.
ஞான உபதேசமாய் புலன்கள் கொள்ளும் இன்பதமிழால் போற்றினார்
இசையால் துதித்தபடியே கோயிலின் வெளியே வந்தார்
நலம் மிக்க காதலுடன் சிவபெருமான் தாளினை
நாள்தோறும் வணங்கினார்
வலஞ்சுழிப் பெருமானின் தொண்டருடன் மகிழ்ந்தார்.
2280
மகிழ்வுடன் அந்தப் பதியில் வாழும் நாளில்
வானில் விளங்கும் கதிரவன்
மிதுன ஓரையுள் சேர்ந்ததால்
பொருந்தும் ஏழ்கடலும் தனது நீர்மை குன்றுமளவு
வெகுண்டது வெங்கதிர்!
கொடிய முதுவேனில் பரந்து விரிந்தது.
2281..
குளிர்ச்சியுடைய நீரில் எழும் குளிர்க்காற்றையும் –
நறுமணம் வீசும் சந்தனத்தையும் –
பண்பு பொருந்திய வாசம் மிக்க மலர்களுள் பொதிந்த பனிநீரையும் –
வாழ்க்கைத் துணைவியான மனைவியையும் –
ஒளி வீசும் மணிகளாகிய முத்து மாலைகளையும்-
உண்ண விரும்பும் இன்சுவைப் பண்டங்களையும்-
உலகினர் தேடும் வண்ணம்
வேனில்காலம் முதிர்ந்துகொண்டே வந்தது
2282.
கரிய மணல் மிக்க காட்டாற்றில்
நீர் அருந்தும் ஆசையால் வந்த மான்
பெற இயலா நீர் (கானல்நீர்) என்று அறியாமல்
பேய்த் தேரின் பின் தொடர்கிறது
மழைத்துளிகளை உணவாகக் கொள்ளும் சாதகப்பறவை
இரைதேடித் தேம்புகின்றது
சிறகு விரித்த பறவைகள் வெம்மை தாளாமல்
ஒடுங்கிக் கொண்டு
குளிர்ந்த இடங்களில் தங்குகின்றன.
2283.
நீண்ட இலைகள் கொண்ட மாளிகைகள் மீதும் –
நிலா முற்றத்தின் பக்கங்களிலும் –
ஒளியுடைய நிழல் பரப்பும் சோலைகளிலும் –
மலர்ப் பொய்கையின் பக்கங்களிலும்-
முத்து அணிந்த பூங்குழலார் முலைத்தடத்திலும்-
மக்கள் மகிழ்ந்து உறைவராயினர்.
2284.
மயில்பறவைகள் ஒடுங்கும்படியாக
வண்டுகள் ஆடும்படியாக
தாமரை அரும்புகள் விரியும்படியாக
சோலையின் மெல்லிய தளிரைக் கோதி
குயில் கூவி எழும்படியாக
துயில் கொள்ளா உயிர்களும் துயில் கொள்ளும்படியாக
வெம்மையான கதிர்கள் ஒடுங்காமல்
வெம்மை தர விரிந்துகொண்டே வந்தன முதுவேனில் நாட்கள்.
2285.
சண்பை நகரில் அவதரித்த பிள்ளையார்
சடையை மகுடமாகக் கொண்ட சிவபெருமானின்
திருவலஞ்சுழியை எண்ணம் பெருகத் தொழுதார்
பிறகு
பழையாறைக்கு நட்புடைய அடியார்களுடன் செல்வதற்காக
நடந்து அருளினார்.
வான் தொட நீளும் மதில் கொண்ட
பழையாறை மேல்தளியை அடைந்தார்.
[ சண்பை- சீர்காழி ] [ பிள்ளையார் – ஞானசம்பந்த பெருமான்]
2286.
பழையாறை மேற்றளியில் வீற்றிருக்கும்
செந்தீ உருவாளன் அடி வணங்கி
உருகிய அன்போடு போற்றினார்
மணம் பொருந்திய குழல் மலையாள் வழிபட அருள் புரிந்த
திருச்சத்திமுற்றம் எனும் பதியின் வெளிப்பக்கம் அடைந்தார்.
[மலையாள் – மலையரசன் மகள்]
2287.
திருச்சத்திமுற்றம் சென்று அடைந்து
திருமலையாள் அருச்சித்த சேவடிகளை
ஆர்வமுடன் பணிந்தேத்தி
கருச்சுற்றில் அடையாமல் கைகொடுக்கும்
இறைவர் திருவடிகள் பாடி
விருப்பமுற்று
திருப்பட்டாசரம் வணங்கச் சென்றார்.
(கருச்சுற்று- பிறவிச்சுழல்)
2288.
வெப்பத்தை மிகுதியாக அளிக்கும் முதுவேனில் காலத்தின்
வெம்மையைத் தணிப்பதற்கு
முத்தமிழ் வல்லுநரான தமிழ் விரகர் ஞானசம்பந்தர் திருமுடி மீது
சிவபூதம்
தம்மை வெளிப்படுத்தாமல்
முத்துப்பந்தலை எடுத்துப் பிடித்தது
?பட்டாசர் எங்களை இதனுடன் சென்று தரச் சொன்னார் ?
என இயம்ப-
2289.
அந்தச் சொற்களும்
அழகிய முத்துப்பந்தலும்
ஆகாயத்தில் எழுந்தன கண்டு
செம்மையான மெய்ஞானம் உணர் சிரபுரத்துப் பிள்ளையார்
?இவ்வினைதான் ஈசர்திருவருளால் நமக்கு இசைவதாக ? என
மேனியில் புளகம் உண்டாக
நிலத்தில் வீழ்ந்து வணங்கினார்.
2290
அக்கணமே –
பரிவாரங்கள்
அழகிய முந்துப் பந்தரை அருள் சிறக்க ஒளிவீசும்
அழகிய காம்புகளைக் கையில் பிடித்தன.
மதுரமொழி மறைத்தலைவர் அருகில்
தேவர்கள் பொழிந்த மணமுடைய தெய்வப்பூக்களால்
அந்தப் முத்துப் பந்தல்
பூப்பந்தல் போலவும் விளங்கியது.
2291.
தொண்டர்குழாம் ஆர்ப்பரிக்க
சுருதிகளின் பேரொலி எட்டுத் திக்குகளிலும் நிறைந்தோங்க
எழுந்தருளி வருகின்ற பிள்ளையார்
வெண்மையான முத்துப்பந்தலின் நிழலானது
தமது முடி மீது நிழல் பரப்புவதால்
பொன்னம்பலத்தில் அண்டர்பிரான் எடுத்த
திருவடி நிழலில் அமர்ந்திருப்பது போல அமர்ந்திருந்தார்
2292.
நிலத்தின்மீது
தொண்டர்களுடன் வருகின்ற பிள்ளையார்
பாம்புகளான மாலையைச் சூடிய இறைவர் அளித்த
அருட்கருணை திறம் போற்றிய வண்ணம்
ஈர உள்ளம் களிப்புடன் தழைக்க
எதிர்கொண்டு முகமலர்ந்து
திருப்பட்டாச்சரத்தை அடைந்தார்.
[ ?பாடல்மறை ? எனத் தொடங்கும் பதிகம் திருப்பட்டாச்சரத்தில் அருளினார்]
2293.
சென்று சேர்ந்து
வாசலின் வெளியில் வணங்கி
உள்ளே புகுந்து
வெற்றி பொருந்திய காளையை உடைய
சிவபெருமான் திருக்கோயிலை வலம்வந்து
வெள்ளைக் கொம்புடைய பன்றி உருவெடுத்து
திருமால் நிலம் தோண்டியும் அறியாத
பாத தாமரைக் கண்டு
முன்தொழுது விழுந்தார்
மொழிமாலை போற்றி இசைத்தார்.
2294.
அருள் வெள்ளப் பெருக்கின் திறம் துதித்து
ஆனந்தப் பெரு வெள்ளத்திடை மூழ்கி
மாறாத பெருங்காதல் கொண்டு
திரு உள்ளப்பரிவுடன்
செம்பொன்மலை வல்லியார்
பொன்கிண்ணத்தில் ஞான அமுது செய்வித்த பிள்ளையார்
கோவிலின் புறம் அடைந்தார்.
2295.
அப்பதியில் விரும்பி அமர்கின்ற
ஆளுடைய பிள்ளையார்
செம்பெரும் சிறப்புடைய
பழையாறை வடதளியில் சென்று இறைஞ்சி
ஒப்பிலாத தமிழ் (பதிகம்) பாடினார்
தம் உடனாய் விரும்பிய தொண்டர்களுடன்
எப்பொருளுமாய் நின்ற சிவபெருமானின்
திரு இரும்பூனை அடைந்தார்.
[ திரு+இரும்பூனை= திருவிரும்பூனை பூனை ஒரு வகைச் செடி.
அது இத்தலத்திற்குரியது]
2296.
தேவர்களின் தலைவரான சிவபெருமான் அமர்ந்த
திருஇரும்பூனை சென்று எய்திய ஞானசம்பந்தரை
பந்தல்கள் தோரணங்களுடன் நாட்டப்பட்டு
பெரு மகிழ்ச்சி சிறந்து அமைந்த
அழகிய மாலைகள் தொங்கிட
பூரண பொன்குடம் வரிசைபெற அமைத்து
அனைவரும் போற்றி இசைத்து
வரவேற்றனர் தொண்டர்கள்.
2297.
அழகிய முத்துச் சிவிகையிலிருந்து
வளம் வாய்ந்த தேவாரத் தமிழின் மொழித் தலைவரான பிள்ளையார்
தொண்டர் கூட்டம் எதிரே வரவேற்க இறங்கினார்
அவர்களைத் தொழுதே
தேவர்பிரான் கோயிலினை அடைந்து வணங்கி
திருமுன் நின்றார்
பண்களை வெளிப்படுத்தும் இனிய இசையுடைய
பரம்பொருளான இறைவரைப் பாடினார்.
2298.
நிகரில்லா மேருமலையை
ஓர் அணுவாக ஆகுமாறு நீண்ட பெருமை உடையவராகியும்
தன்னை நுகர்கின்ற தொண்டர்க்கு அமுதாகியும்
நொய்யவராகியும் விளங்கும்
அந்த பரம்பொருளைத்
தகுதியுடன் அடியாரை வினவும் தன்மையில்
தமிழ்வல்லுநரான பிள்ளையார்
பகர்கின்ற அருமறையின் உட்பொருள் விரியுமாறு பாடினார்.
[ ?சீரார்கழலே ? எனத் தொடங்கும் பதிகம் திருஇரும்பூனையில் பாடி
அருளினார்]
2299.
?அரதைப் பெரும்பாழி ? எனத் தொடங்கும் பதிகம் பாடினார்
அறிவுடையோர் பயில்கின்ற பதிகளான
திருச்சேறை, திருநறையூர், திருநாவலூர், தெந்திருப்புத்தூர், குடவாயில்
ஆகிய பதிகளில் பதிகம் புனைந்து
அப்பெரிய நகரில் தங்கியிருந்தார்.
–இறையருளால் தொடரும்
pa_sathiyamohan@yahoo.co.in
- நால்வருடன் ஐவரானேன்
- பின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்
- மஸ்ஸர்ரியலிசம்(MASSURREALISM)இலக்கியத்தில்
- புராண நிகழ்வை பிறிதொரு தளத்தில் விரிவடையச் செய்யும் புத்துருவாக்கம்
- கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை
- மாற்று அரசியலில் கட்டுடையும் பெண்ணியம்
- அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் ‘
- தொகுதிப் பங்கிடு-ஒரு கற்பனை
- நேரம் கேட்டால்கூடச் சொல்லாதே!
- “ஹால் டிக்கெட்”
- தீம்தரிகிட மாத இதழ் இணைய இதழாகிறது
- உலகமயமாக்கலில் எழும் சில சந்தேகங்கள்
- வனப்பிரஸ்தம் – குந்தியின் தனிமையும், தேடலும்
- பெரியாரும், சிறியாரும்
- நம்பமுடியாமல்…
- இந்திரா பார்த்தசாரதியுடன் ஒரு நாடகப் பயிற்சி முகாம்
- யேல் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் திரைப்படங்கள்
- தேயும் விரல்களும், தோய்ந்த நஞ்சும்
- சான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம் ஆங்கிலம்
- கடிதம்
- கடிதம் ஆங்கிலம்
- தமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)
- அறிவியல் புனைக்கதை : என்னை யாரென்று எண்ணி எண்ணி
- வேம்பு
- ஒரு மயானத்தின் மரணம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 14
- தொ ட ர் க தை- ராகு கேது ரங்கசாமி -3
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஏழு: ‘கோட்டை வாசலும், கோட்டையடியும் வெயிலுகந்தபிள்ளையார் ஆலயமும் ‘
- புலம் பெயர் வாழ்வு (6)
- உயிரா வெறும் கறியா ?
- வாசிப்புக் கலாசாரம்
- சிறு தெய்வங்களுக்கு நேர்ந்துள்ள அபாயம்
- ஸ்டாலின் முதலமைச்சர் ஆனால் என்ன தப்பு ?
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-14) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- இறை மறுப்பாளர் நீட்சேயின் இன்ப அறிவியல் (GAY SCIENCE BY FREDRICH NIETZSCHE)
- கீதாஞ்சலி (66) எனது கடைசிக் காணிக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கவிதை
- பெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- அலறியின் கவிதைகள்
- முதலாம் பிசாசின் நடத்தை
- நினைவலையில் காற்றாலை
- வெண்ணிலவை நோக்கி மீண்டும் விண்வெளிப் பயணங்கள்!
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -3 (சென்ற வாரத் தொடர்ச்சி)