பா.சத்தியமோகன்
2114.
சங்குகள் ஆர்பரித்து ஒலித்தன
கொம்புகள் ஒலித்தன
உறவினர் ஆரவாரம் செய்தனர்
ஆன்மாக்களுடன் இறைவரின் கருணை பிணிக்கப்பட்டதுபோல
பெருங்கதிர்கள் வீசும் முத்துக்களுடன்
மேலே கவிக்கப்பட்டு
ஆர்ப்பரித்தது வெண்குடை.
2115.
பெருகும் வெண்கதிர்கள் போல் ஒழுங்குடைய
முத்துச் சிவிகை மீது
திருநீற்று ஒளியுடன் விளங்கும் சீகாழித் தலைவர் எழுந்தருளினார்
வெண்சங்குகள் வாரி வீசும் பாற்கடலில்
வளர்சந்திரன் தோன்றியது போல.
2116.
மிகுந்த தொண்டர்களும் அந்தணர்களும்
பிறகு நெருங்கி வந்து
உள்ளம் கொண்டெழும் மகிழ்ச்சியினால்
மலர்க்கைகளை மேலே குவித்து ஆடுகின்றனர் பாடுகின்றனர்
அளவிலா ஆனந்தம் கூடியவர்களாயினர்
கண்கள் புனல் பொழியும் வெள்ளத்தில் குளித்தனர்.
(புனல்- நீர்)
2117.
சிவந்த பொன்னால் ஆனது சின்னம்
வெண் முத்துக்களால் அழகு சிறக்கும் சின்னம்
“சைவத்திற்கும் வேத வைதீகத்திற்கும் தலைவரான
சிவபெருமானிடத்தில் பெற்ற
ஒப்பிலாத எக்காளம் என்ற சின்னத்தினால்
உலகம் ஏழும் ,
வேதங்களும்,
நிறைதவசீலர்களும்
உய்யுமாறு வந்தான் ஞானசம்பந்தன்” என்று கூறி ஊதினர்.
2118.
சுற்றிலும் ஒலிக்கும் மகாவேதச் சுருதியின்
பெருகும் ஒலி நடுவே
பகைவரின் முப்புரம் எரித்தவர் தந்த திருச்சின்னம்
“ஞானமே முழுதுமாக ஆன மேனி கொண்ட பெரியநாயகி
தனது முலை சுரந்து ஊட்டப்பெற்ற
பாலறாவாயர் வந்தார்” எனக்கூறி ஊதினர்.
2119.
செல்கின்ற மெய்த்தவ முனிவர் குழாம் முன்பாக
இணைந்த முத்துக்களின் ஒளிப்பெருமை காட்டும்
தாரை என்ற சின்னத்தினால்
“பெரிய வேதங்கள் முதல் அகில உலகம்வரை
ஓதாமல் உணர்ந்தவரான முத்தமிழ் விரகர் வந்தார்” எனக்கூறி ஊதினர்.
2120.
“தெளிவினைத்தருகின்ற உண்மைக்கலைகள் ஓங்கிடவும்
அதனால் உலகத்தவர் சிந்தை இருள் நீங்கிடவும்
எழுதுகின்ற சொல் மறையை அளிப்பவரான ஞானசம்பந்தர் போற்றி”
என்று துதிப்பவர்க்கு அருள்கின்ற
அங்கணர் உறையும் திருவரத்துறை வந்தடைந்தார்.
(அங்கணர்- சிவபெருமான்)
2121.
வந்தார் கோபுரமணி நெடுவாயில் தொலைவில் தெரியும் போதே
அழகிய முத்துச் சிவிகை விட்டு கீழிறங்கி
நிலத்தில் தாழ்ந்து விழுந்து எழுந்தார்
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி அவருக்கு முன்னே செல்ல
அந்தியில் நாணும் மதி அணிந்தவரின்
திருவரத்துறை திருக்கோவிலுள் புகுந்தார்.
2122.
பொருந்திய அக்கோவிலை வலம் வந்து
இறைவரின் திருமுன்பு வந்து தலை மீது கரம் குவித்து வீழ்ந்து
அன்போடு திளைப்பவரானார்
“என்னையும் பொருளாகக் கொண்டு
இனிய அருள் புரிந்தருள் செய்யும்
பொன்னடித்தலமான தாமரை போற்றி”
என்று எழுந்து துதித்தார்.
2123.
சூடினார் கை எனும் மலர்களை தலைமேல்;
ஆடினார் திருமேனி நனைய பெருகி வழியும் கண்ணீரால்;
விரும்பினார் திரு அரும்பெரும் கருணை நிகழுமாறு;
பாடினார் திருப்பதிகம் ஏழிசையுடன் பொருந்துமாறு.
2124.
ஏழிசை விளங்க இயல்பினில் பாடி நின்று துதித்து
மேலே கங்கை நீர் விளங்குவதற்கு இடமான சடையுடைய
சிவனார் அருளினால்
அசைவிலாப் பெருமையுடைய தொண்டர்களுடன்
அத்தலத்தில் இருந்தார்–
திசைதோறும் உள்ளவரெல்லாம் சிவஞானம் பெறுவதற்காக.
2125.
தேவர்களின் தலைவரான சிவபெருமான்
வீற்றிருக்கும் திருவரத்துறையினில் இறைஞ்சி இருந்த நாட்களில்
சிவபெருமானின் திருவெண்ணெய்நல்லூர் முதலிய தலங்களை
சீகாழித் தலைவரான சம்பந்தர் (அன்பர்களுடன் தொழுது)
இறைவரின் திருவருளுடன்
மீண்டும் வந்தார் திருவரத்துறைக்கு.
2126.
வணங்குதற்குரிய வேணுபுரமான சீகாழியில்
திருத்தோணிக் கோவிலில் வீற்றிருந்த
திருநீலகண்டரான இறைவர் தம் காதலியாருடன் கூட
உள்ளம் கொள்ளப் புகுந்து
உணர்வினில் வெளிப்படுமாறு உருகி
வளம் மிக்க அழகிய நீர் பொருந்திய
சீகாழிக்குச் (புகலிக்கு) செல்ல மனம் வைத்தார்.
2127.
பெருமையுடைய அண்ணலாரான
திருவரத்துறை இறைவர் அடிகளை வணங்கி
பொருந்திய அவரது பெரும் திருவருளால்
விடை பெற்றுச்சென்று ஆனந்த நடனம் கொண்டு
உள்ளே நிறைந்த அழகிய திருவடிகளைத்
(உச்சி) தலை மீது மேற்கொண்ட வண்ணம்
வெண்நிலவு மலர் என ஒளிவிடுகின்ற–
முத்துச் சிவிகை மீது ஏறினார்.
2128.
சிவிகையில் பதித்த முத்தினில் பெருகும் ஒளி
திசை எல்லாவற்றையும் விளக்கும் ஒளி தந்து
கவிழ்த்த குடையின் ஒளி
வெண்மதி போன்ற ஒளியினைக் கதிர்கள் உதிர்க்கும் வானில் கலந்து
குவித்த கைகளைத் தலை மீது மேற்கொண்ட அந்தணர்கள்
ஆனந்த மேலீட்டால் குணலை இட்டு ஆடினர்
“எந்தக் கைம்மாறும் இல்லாமல்
உலகைக் காக்கும் பொருட்டு பூமிக்குப் போற்றி அருள
அவதரித்த ஞானசம்பந்தர் வந்தார்” என்று.
( குணலை – ஒருவகை
கூத்து )
2129.
வேதங்கள் ஒலித்தன
வளமையுடைய தமிழ் மறைகள் ஒலித்தன
கொம்புகளின் குறைகள் ஒலித்தன
எக்காளங்கள் மெய்க்கீர்த்திகளை ஒலித்தன
மற்றும் பலவகை வாத்தியங்கள் ஒலித்தன
முரசுகளான பெரிய இயங்கள் ஒலித்த்ன
அடியவர்கள் துதிக்கும் ஒலியோ
இவற்றை விட மேலாய் ஒலித்தன!
2130.
ஆளுடைய பிள்ளையார் வரும் இடங்களில்
அந்த ஊரில் உள்ளவர்கள் இருபுறமும் அழகிய கொடிகள்,
துகில்கள்,நடைக்கு ஆவணம் வைத்தனர்
இருபுறங்களிலும்
பாக்கு, வாழை ,நெருங்கிய மாலை அலங்காரங்கள் வைத்தனர்.
இருபுறமும் நீர்நிறைந்த குடங்கள் வைத்தனர்.
2131.
அத்தகு செய்கைகளால்
தம்மை எதிர்கொள்ளும் இடங்களிலெல்லாம்
வினைகள் ஏற்படுத்தும் பிறவி தீர்ப்பவரின் கோவில்களுக்கு சென்றார்
புனையும் வளமை கொண்ட தமிழ்ப்பதிகங்கள் மொழிந்தார்
பணிந்தார்
பனை போன்ற நெடும் கை உடைய
யானையை உரித்த சிவபெருமான் வீற்றிருக்கும்
திருப்பழுவூர் என்ற தலத்தைப் பிள்ளையார் அடைந்தார்.
2132.
அங்கே சேர்ந்து
இளம்பிறை அணிந்த சென்னியரான
இறைவரின் பொங்கும் எழில் கோபுரம் தொழுதார்
கோவிலுள் புகுந்த பின்பு
பெரிய விமானத்தைச் சூழ்ந்து வலம் வந்து
தாமரை போன்ற சேவடிகளைப் பணிந்து பாடுபவராகி-
2133.
மண் உலகில் சிறந்து விளங்கும்
அந்தணர் குலத்தில் வந்த மலையாளர் தொழுது
எண்ணற்ற சிறப்பான பணிகள் செய்து
துதிக்கின்ற தன்மையில்
பொருந்திய வகைகளைச் சிறப்பித்தார்
நாதரை (தலைவரை)
பண்ணில் திகழும் திருப்பதிகத்தால் பாடினார்.
( “முத்தன் மிடு மூவிலை நல்” எனத் தொடங்கும் பதிகம் இங்கு பாடப்பட்டது)
2134.
பாவிளம் வழியே திருப்பதிகம் பாடியவாறு
அங்கு நின்று பிறகு சென்றார்
யாவரும் தொழுது தாழ்ந்து
முன்பு மூவுலகும் உய்வதற்காக
நஞ்சுண்ட மூர்த்தியார் மேவிய
திருவிசயமங்கை எனும் தலத்திற்கு.
2135.
அந்தணர் வாழ்கின்ற விசயமங்கையினில்
அங்கணரின் (சிவபெருமான்) ஒப்பற்ற ஆலயம் வலம் வந்தார்
தாழ்ந்து வந்தணை செய்தார்
பசுக்களும் காமதேனுவும் வழிபட்ட செயலை நினைந்து
செந்தமிழ் மாலையான திருப்பதிகம் சிறப்பித்து பாடினார்.
(“மருவார் குழலுமை” எனத் தொடங்கும் திருப்பதிகம்)
2136.
விசயமங்கை என்ற தலம் விட்டு அகன்றார்
அசைவிலாத “வைகா” எனும் தலம் அணைந்து பாடினார்
சத்தே சொரூபமாய் அமைந்த இறைவனின்
திருவடிகளைப் பாடி
தமிழ் இசை வளர்க்கின்ற ஞானசம்பந்தர்
திசைகளை ஆடையாய் உடைய இறைவரின்
திருப்புறம்பயம் எனும் பதி அடைந்தார்.
(“கோழைமிடறாத கவி” எனும் பதிகம் வைகாவில் பாடப்பட்டது)
2137.
திருப்புறப்பயத்தில் எழுந்தருளிய இறைவரை வணங்கிப் போற்றினார்
திறம்புரிகின்ற தன்மையில் வரும் பதிகமான செந்தமிழை
வண்ணம்மிகு இசையுடன் பாடி
நீடும் அறம் தரு கொள்கையினரான பிள்ளையார்
அங்கு அமர்ந்து மேவினார்.
(“மறம்பய மலைந்தவ” எனும் பதிகம் இங்கு பாடியது)
2138.
அந்தத் திருப்புறம்பயம் எனும் பதி விட்டு அகன்று போய்
அனல் கைத்தலத்தில் ஏந்திய சிவனாரின்
பிற பதிகளை வணங்கிக் கை தொழுவதற்காக
முத்தமிழ் வித்தகராம் முதல்வர்
ஞானசம்பந்தர் சென்றடைந்தார்
வயல்களில் சங்குகள் முத்துக்கள் ஈனுவதற்கு இடமான
சேய்குலூர் எனும் ஊரினை.
(இடையில் அவர் திருவியலூர் திருந்துதேவன்குடி எனும் தலங்களில்
முறையே “குரவம்கமழ்” மற்றும் “மருந்து வேண்டில்”
இவை எனும் பதிகங்கள் பாடியுள்ளார்.)
2139.
செல்வம் மலிந்த புகலியின் தலைவர் வர
சேய்நலூரில் வாழ்கின்ற அந்தணர்களும்
தம் பதியை அலங்கரித்தனர்
அதற்கு முன் வேத முழக்கத்துடன் மங்கல் முழவு ஒலி விளங்க
முறைப்படி பிள்ளையாரை எதிர்கொள்ளும் பொருட்டாய் வந்தனர்.
(புகலித்தலைவர்- சீகாழித் தலைவர்)
2140.
“இறைவர் தமது சடையில் சாத்திய
தூயநறும் கொன்றைமலர் மாலையை
முன்பு சூட்டும் கண்டாசர்
பான்மையினால் வந்து தோன்றிய தலம் இது”
என ஞானசம்பந்தப் பெருமான் எண்ணியபடி
முத்துப் பல்லக்கிலிருந்து இழிந்து
எதிர் வணங்கி இறைஞ்சி அடைந்தார்.
(இழிந்து- இறங்கி)
2141.
விரும்புதற்குரிய தங்கள் சண்டாசர்
அன்று அந்த அழகிய பதியில்
மீண்டும் எழுந்தருளி வரக்கண்டது போன்ற மகிழ்வுடன்
வண்மையுடைய புகலிப் பிள்ளையார் எழுந்தருளியதைக் கண்டு
வணங்கி ஆடி
ஆரவாரம் செய்தனர் பெருமையுடைய அந்தணர்கள்.
2142.
அவ்வூரினர் மனம் களித்தனர்
புண்ணிய கமண்டல நீரைத் தெளித்தனர்
பொரிகளும் மலரும் சிந்தினர்
ஆனந்தக் கண்ணீர் மழை துளிர்த்தனர்
அளவற்ற வேதம் அளித்தவராகிய
சிவபெருமானின் கோவிலுள்
அப்பிள்ளையாரின் முன்பு சென்றனர்.
2143.
வெங்குரு எனப்படும் சீகாழி வேந்தரான பிள்ளையாரும்
விளங்கும் கோயிலைப்
பொங்கிய விருப்பத்தோடு
சுற்றி வலமாய் வந்தார்
சிவந்த கைகளை சென்னி மேல் குவித்தபடியே
உள்ளே புகுந்து
அங்கணர் முன்பு சேர்ந்தார்
தாழ்ந்து வணங்கினார்.
(அங்கணர்- அங்கத்தில் கண் உள்ள இறைவர்)
2144.
தம் தந்தையின் காலை வெட்டிய சண்டாசப் பிள்ளையாரின்
பாதகச் செயலுக்கு
இறைவரின் மகனார் ஆக்கிய தன்மை
அளித்தமைக்கு இடமான
அந்தணர் வாழ் சேய்நலூரில்
விமலரின் திருவடிகளை வணங்கிப் போற்றினார் ஞானசம்பந்தர்.
– இறையருளால் தொடரும்
pa_sathiyamohan@yahoo.co.in
- கடிதம் – ஆங்கிலம்
- உண்மையின் ஊர்வலங்கள்.. -1
- அவுஸ்திரேலியாவில் தமிழ் போதனாமொழி -மூத்த – இளம் தலைமுறையினர் சங்கமித்த எழுத்தாளர் விழா -“ உயிர்ப்பு” நூல் வெளியீடு
- நீதிக்குத் தவித்த நெஞ்சம் – டி.வி.ஈச்சரவாரியாரின் ‘ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள் ‘
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்-3
- பயணக்கிறக்கம் (Jet lag)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 11 சிஷெல்ஸின் சில முக்கிய தீவுகள்
- பழையத் துறவியும் ஜானி வாக்கரும் !
- விவாதம்:சூபிசம் – வகாபிசம் -உள்ளும் புறமும்
- புனித முகமூடிகள்
- உயிர்மெய் – பெண்கள் காலாண்டிதழ்
- தகவல் பிழைக்கு வருந்துகிறேன்
- பின் நவீன இசை : ஒரு திருப்புமுனை
- கலைச்செல்வன் ஓராண்டு நினைவொட்டிய நாள் – 5 மார்ச் 2006
- மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும்
- புலம்பெயர் வாழ்வு (1)
- துக்ளக்கில் வெளிவந்த மலர் மன்னன் கட்டுரையும், கிறிஸ்துவர்கள் விநியோகித்த துண்டுப்பிரசுரமும்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘
- செலாவணியாகாத நாணயங்களைத் திரும்பப் பெறுகிறேன்
- மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2
- இரு கவிதைகள்
- கவிதைகள்
- கீதாஞ்சலி (62) உனை நாடிச் செல்வது! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- வரலாற்றை எழுதுவதை முன்வைத்து
- பூவினும் மெல்லியது…
- பார்வைகள்
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம், பகுதி மூன்று)
- எட்டாயிரம் தலைமுறை
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 9
- வர்க்க பயம்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் மூன்று: நல்லூர் ராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்!
- காந்தம் போல் எல்லோரையும் கவர்ந்தவர் கோல்வல்கர்
- முஹம்மது நபி(ஸல்) என்ன செய்திருப்பார்கள் ? ( ஆங்கிலத்தில்: இப்ராஹீம் ஹூப்பர் )
- தீக்குளித்து மாண்ட 8000 நகரத்தார் குடும்பங்கள்
- ஹர்ஷன், அவுரங்கசீப், ஐயா வைகுண்டர் மற்றும் விவேகானந்தர் பாறை நினைவாலயத்திற்கு திமுகவின் பங்கு
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-10) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- சில கதைகளும், உண்மைகளும்
- எடின்பரோ குறிப்புகள் – 9
- கவிதைகள்
- கவிதைகள்
- ஒரு பாசத்தின் பாடல்
- பெரியபுராணம் – 77 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- அல்லாவுடனான உரையாடல்
- அருவி
- தியானம் கலைத்தல்…
- நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் கோட்பாடுகள் [100 Years of Einstein ‘s Theories]