பா. சத்தியமோகன்
2052.
செல்வம் மல்கிய தில்லை எனும் பழமை வாய்ந்த ஊரில்
தெற்கு திசை வாசல் வழியே எல்லை நீங்கினார்
உள்ளே புகுந்து இருபக்கமும் ஏற்றிப்புகழும் ஒலிசூழ
வளமையுடைய அங்காடித் தெருவினைக் கடந்தார்
அந்தணர்களின் நிறைவாழ்வு வாழும் பழமையான திருமாளிகைகள்
வரிசையாக நிற்கும் திருவீதி தொழுது
பிள்ளையாரான சம்பந்தர்
நகரத்துள் சென்றார்.
2053.
உலகெலாம் மலர்ந்த பேரொளி
குளிர்ச்சியினை சிவமணம் கமழ்ந்து வீசி
வானின் குற்றங்கள் நீங்கப் பெற்று
சிலம்பு ஒலிக்கும் சேவடி உடைய
கூத்தபெருமான் பொருந்தியுள்ள தன்மையால்
திருத்தொண்டில் கலந்து
அன்பரின் உள்ளம் போல் விளங்கும் அந்த வீதியானது
இவ்வுலகம் பயன் கொள்ளத் தோன்றிய ஞானசம்பந்தப் பிள்ளையாரின்
கண்களை மகிழும்படி செய்தது
எழுநிலைக் கோபுரத்தைத் துதித்துப் பணிந்தார்.
2054.
நீண்டு உயர்ந்த நிலைகளைக் கொண்ட தெற்கு கோபுரத்துள் புகுந்து
நிலை பெற்ற திருமுற்றத்தின் பக்கமுள்ள
செம்பொன் மாளிகை வலம் வந்து
வானளாவ வளரும் சந்திரனைச் சூடும்படி
உயர்ந்த பேரம்பலத்தை வணங்கினார்
அரிய வேதங்கள் தொடர்ந்து துதிக்குமாறு
திருக்கூத்தாடுகின்ற கூத்த பெருமானின் திருமுன் அடைய
அழகுமிகும் அணிகளுடைய திருவணுக்கன் திருவாயிலை
ஞானசம்பந்தர் அடைந்தார்.
2055.
நந்திதேவரான சிவபெருமானைத்
தம்தலைவனாகக் கொண்ட சிவகணநாதர்
நன்மை மிக்க பல வரிசைகளாகக் கூடி நிற்க
முடிவிலாத அடியார்கள், முனிவர்கள்,தேவர்கள்
அவ்வரிசைகளின் பின் நின்று தொழும் திருவணுக்கன் வாயிலில்
உள்ளத்தில் ஆர்வம் பெருகுமாறும்
தலை மீது சிறிய சிவந்த கைகள் குவியுமாறு
கண்கள் மகிழ்ச்சியினால் பொருந்தவும்
மனம் உருகும் அன்புடன்
கோவிலுள் புகுந்தார் காழிப்பிள்ளையார்.
2056.
பெருமையுடைய அண்ணலார் சிவபெருமான்
தமக்கு அளித்த மெய்ஞானமான திரு அம்பலத்தையும்
நினைந்து நினைந்து நெஞ்சமெல்லாம் நிறைந்து உறைந்த
ஞானத்தினால் எழும் ஒரு பெரும் தனிக்கூத்தினையும்
கண்ணின் முன் நிகழக்கண்டு எழும் களிப்பால்
கடல் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய சிவபுண்ணியக் கொழுந்து போன்ற
தூயவரான ஞானசம்பந்தர் போற்றினார் இறைவரின் திருவடியழகை.
2057.
உள் உணர்வு பெறும்படியாக வருகின்ற சிவபோகத்தை
இடைவிடாமல் ஐம்புலன்களின் அளவிலும்
எளிதில் வர அருளினாயே எனப் போற்றினார்.
இணையிலாத பெரும் கருணையைத் துதித்து
முன் தொடங்கிய சொல் பதிகத்தில் பொருந்தும்
இனிய இசையுடன் பாடினார் ஆடினர்
கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பொழிந்தார்.
2058.
ஊழிகளின் முதல்வரான கூத்தபெருமானுக்கு
உரிமையான தொழில் இயற்றும் சிறப்பால்
திருத்தில்லையில் வாழும் அந்தணரை முன் வைத்து
ஏழிசையும் ஓங்குமாறு “கற்றாங்கு எரியோம்பி” எனும் திருப்பதிகத்தை
சீகாழித் தலைவர் தொடங்கியவராய்-
2059.
பண் நிரம்பிய திருப்பதிகத்தின்
கடைக்காப்பு நிறைவித்துப் போற்றினார்
உடலுக்குள் ஆதரவாய் அறியப்படும்
எலும்பும் உயிரும் கரையுமாறு உருக்கும்
இறைவரின் அருட்கூத்தை வெட்டவெளியில் அனுபவித்து
கண்களில் நிறைந்த அமுதத்தை உட்கொண்டார்.
2060.
முற்காலத்தில் திருமாலும் நான்முகனும் அறியாத இறைவரின்
திருமுன் நின்றார்
சொல்மாலையான திருப்பதிகத்தால்
எல்லாக் காலமும் துதித்தார் இறைஞ்சினார்
அளவிலாத பெரும் வேதங்களால் சூழ்ந்து வாழ்த்தும்
செம்பொன் மாளிகையான பொன்னம்பலத்தை
வலமாக வந்து புறத்தே போந்தார்.
2061.
செல்வம் பொருந்திய திருவாசலில் தாழ்ந்து எழுந்து
தேவர்குழாம் மல்கும் திருவாசலில் வந்துஇறைஞ்சி
மாதவங்கள் அளிக்கும் திருவீதியாகிய நான்கும் தொழுது
அங்கு தங்கும் தன்மைக்கும்
பிள்ளையார் அஞ்சுபவராய்-
2062.
சிவந்த சடையுடைய சிவபெருமானின்
திருவேட்களம் சென்று கையால் தொழுதார்
சொற்பதிகம் பாடினார் கழுமல அரசர் ஞானசம்பந்தர்
இறைவர் தங்கி அருளுமிடம் அவ்விடமாகவே எண்ணி
அம்பலத்தின் திருக்கூத்தாடும் நடனத்தைக் கும்பிட்டு
அணைந்திருக்கும் நாளில்-
2063.
தம் திருக்கையில் மான்கன்று ஏந்திய சிவபெருமான்
எழுந்தருளும் திருக்கழிப்பாலையுள் சேர்ந்து
மெய்மை கொண்ட மாலையான சொல்பதிகம் பாடினார்
மணமுடைய கொன்றை மலரால் அமைந்த
அழகிய மாலை சூடிய சடையுடைய சிவனார்
திருவுச்சி எனும் பதியில் எழுந்தருளிய அம்மானைக் கும்பிட்டார்
அருந்தமிழ்ப்பதிகமும் பாடினார்.
(திருக்கழிப்பாலையில் பாடப்பட்டது “வெந்த குங்குலி” எனும் பதிகம்.
திருவுச்சியில் திருநெல்வாயிலில் பாடியது “புடையினார் பள்ளி” எனும்
பதிகம்)
2064.
பாடுகின்ற பதிக இசையினை
திருநீலகண்ட யாழ்பாணரும் வாசித்து
நாடும் சிறப்பு எய்தினார்
நாளும் திருத்தில்லை சென்று
தில்லைவாழ் அந்தணர்கள் நீளும் திரு அம்பலத்தில்
ஆடும் திருவடிகளுக்கு அணுக்கத் தொண்டர்களாக
இருக்கும் பேறு பார்த்து வியப்பு கொண்டார்.
2065.
ஆங்கே வாழும் அந்தணர்களுடைய ஒழுக்கத்தின்
அளவிலா தன்மை நினைத்து
ஓங்கி எழுந்த காதல் நீங்கா உள்ளத்துடன்
மணம் வீசும் சோலை சூழ்ந்த திருவேட்களம் கடந்து
மலர்கள் நிரம்பிய அகழி சூழ்ந்த
பூங்கிடங்கான திருப்புலியூரினுள் சேர்கின்ற பொழுதில்-
2066.
அண்டங்களுக்கெல்லாம் இறைவரான கூத்தப் பெருமான் அருளால்
அழகிய தில்லையில் வாழ்கின்ற
நெற்றியில் திருநீறு அணிந்த அந்தணர் மூவாயிரவர்களும்
திருத்தொண்டின் தன்மையுடைய கணநாதர்களாய்த் தோன்றக்கண்டு
ஞானசம்பந்தர் அதனை யாழ்ப்பாணருக்குக் காட்டினார்.
2067.
அருட்செல்வம் சிறிதும் நீங்கப்பெறாத தில்லைவாழ் அந்தணர்கள்
எல்லையிலாத சிறப்புடைய சீகாழியில் அவதரித்த
இளஞ்சிங்க ஏற்றைப் போன்ற ஞானசம்பந்தர் எழுந்தருளி
விரைந்து வந்து தம்மை வணங்குமுன்
தாமும் உடனே வணங்கி
செழிப்பும் அழகும் மிக்க வீதியில் அவர் அருகே வந்தார்கள்.
2068.
மேலும் மேலும் பெருகி எழும் காதல் வெளிப்படுமாறு
அந்தணர்களின் சிங்கம் போன்ற ஆளுடைய பிள்ளையார்
தலை மீது கூப்பிய தாமரைமலரின் அழகையும் வெல்லும் வனப்புடன் ஒங்கும்
செங்கையுடன் சென்று
திருவாயிலுள் புகுந்தார்.
2069.
இறைவரிடம் ஒன்றுபட்ட சிந்தை உருகுமாறு
உயர்ந்த மேருமலை போன்ற பேரம்பலத்தில் நிறைந்து
அருட்கூத்து நிறைந்து ஆடும் மாணிக்கக்கூத்தரின் எதிரே
திருக்களிற்றுப்படியின் கீழே நின்று தாழ்ந்து எழுந்தார்.
2070.
ஆடினாய் நறுநெய்யோடு பால்தயிர் என்று தொடங்கி
மிகுந்த ஆர்வத்துடன் பாடினார் பின்பு
அப்பதிகத்தின் துதித்தவற்றுள் ஒரு திருப்பாட்டில்
நீடுவாழும் தில்லை வாழ் அந்தணர்களை
அன்று தாம் கணநாதராய்க் கண்ட
அந்நிலை எல்லாம் பொருந்தும்படி கோர்த்து
அத்தன்மையுடையோர் தொழும் திருச்சிற்றம்பலம் இது எனக்கூறி-
2071.
இன்ன தன்மையில் இனிய இசைபதிகமும்
திருக்கடைக்காப்பும் சொல்லி நிறைவு செய்து
நிலைத்த ஆனந்த வெள்ளத்தில் மூழ்கித் திளைத்து
எதிரில் நின்றாடும் பின்னிய சடையுடைய கூத்தரின்
திருவருள் பெறும்படி பிரியா விடை பெற்று
பொன் அம்பலத்தைச் சூழ்ந்து வலம் வந்து வெளி முற்றம் அடைந்தார்.
2072.
புறத்தில் இருக்கும் முற்றம் வணங்கி அங்கு திருவருள் பெற்று
அழகிய மணிகள் பதித்த திருவாயில் தொழுது வணங்கி எழுந்தார்
தம்முடன் வருவதற்கு பேறுபெற்ற புகழுடைய
யாழ்பாணர் ஞானசம்பந்தப் பிள்ளையாரின்
திருஅடிகளை வணங்கித் துதித்து
அடியேனின் திருவெருக்கத்தம்புலியூர் முதலான
நிவா நதிக்கரையிலுள்ள ஒப்பிலாத தலங்கள் யாவும்
சென்று வணங்க வேண்டும் என வேண்ட அதற்கு ஒப்பினார்.
2073.
பொங்கும் தெளிந்த அலைகளுடைய
புனித நீர் நிரம்பிய நிவா நதிக்கரை வழியே மேற்கு திக்கில் போய்
தம்முடன் தங்கிய தந்தை சிவபாத இருதயருடன்
பரிவாரங்களும் தவமுனிகளும் உடன் வர
செங்கையில் யாழுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணரும் ஒன்றாக
அவர் துணைமங்கை மதங்க சூளாமணியாரும் உடன் வரச் சென்றருளினார்.
2074.
பெரிய நீர்நிலைகளும் வயல்களும் கடந்துபோய்
எருக்கத்தம்புலியூரின் பக்கத்தில் சென்று சேர்ந்தார்
நீலகண்டப் பெரும்பாணணார் வணங்கி நின்று
நெருங்கிய பூஞ்சோலைகளால் சூழப்பட்ட இத்தலம்
அடியேனின் தலமாகும் என்று மிகவும் இன்புற்றார்
அரிய வேதம் முதலிய கலைகள் யாவும் விளங்கும்
சிறிய இளைய யானைக்கன்றைப் போன்ற பிள்ளையார்
அத்தலத்தில் அருள் செய்பவராகி-
2075.
ஐயரே நீவீர் இங்கு அவதரிக்க இத்தலமானது அளவற்ற தவத்தை
முன்பு செய்திருந்தது என சிறப்புரை அருளி
செழுமையான அந்தப்பதியில் இடம் கொண்ட
மை கொள் கண்டரின்(திருநீலகண்டர்) கோவிலின் உள்ளே புகுந்து
வலம் கொண்டு வணங்கினார்
உலகம் உய்யும்படி தோன்றிய பிள்ளையார்
செழுந்தமிழ்ப் பதிகத்தை அங்கு இசையுடன் உரை செய்தார்.
2076.
அங்கு நின்று எழுந்தருளி மற்றவருடன்
அழகிய பொன்மலையில் தோன்றியருளும்
பொன்மலை வல்லியான உமையை ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான்
இனிதாய் உறையும் பதிகள் பலவற்றுக்கும்
பரிவோடு சென்று பணிந்தேத்தி
உயர்ந்த வண்டமிழ் பாமாலைகள் பாடிச் சென்றார்
பழமையான சீகாழி வேந்தர் ஞானசம்பந்தர்
சிவந்த கண்களைக் கொண்ட காளையூர்தி கொண்ட
சிவபெருமானின் திருமுதுகுன்றத்தை வணங்கிச் செல்பவராக-
2077.
மிக்க பெருமணிகளைக் கொழித்துக் கொண்டு
மணிமுத்தாறு சூழ்ந்த முதுகுன்றம் அடைவோம்
எனப் பொருந்தும் சொல் மலர்மாலைப்பதிகத்தை
இசையோடும் புனைந்து ஏத்தினார் துதித்தார்
செய்வதற்கரிய தவம் புரியும் திருமுனிவரும்
தேவரும் திசையெல்லாம் நெருங்கும்படி இறைவரின் சேவடி பணிவதற்காக
அந்தப் பழமலையினிடத்து ஆதரவுடன் சென்றார்.
(திருமுதுகுன்றம்- விருதாசலம் / மணிமுத்தாறு- ஆற்றின் பெயர்)
(இங்கு பாடிய பதிகம் “மத்தாவரை நிறுவிக்கடல்” எனத் தொடங்கும்)
2078.
வானநாயகர் சிவபெருமானை
திருமுதுகுன்றத்தில் வழிபட வலம்வரும் ஞானசம்பந்தர்
யாப்பில் ஒருவகையான இருக்குக்குறள் மூலம்
தூய நறும் தமிழ்ச்சொல்லால்
“நின்றுமலர்தூவி” எனும் பதிகத்தை மொழிந்து துதித்தார்.
ஞானம் பருகிய பிள்ளையாரான சம்பந்தர்
சிவபெருமானின் கோவிலை அடைந்து
அங்கு உள்ளே புகுந்து
தேன் சிந்தும் குளிர்ந்த கொன்றைமலர்மாலை அணிந்த
சிவனாரின் சேவடிகளில் மிகுந்த அன்புடன் தாழ்ந்து வணங்கினார்.
2079.
இறைவரைத் வணங்கித் தாழ்ந்து எழுந்தார் பிள்ளையார்
“முரசு அதிர்ந்து எழுதரு” எனும் குளிர்தமிழ் மாலை சாத்தினார்
இன்புற்று வாழ்ந்து வெளியே வந்து
வளம் கொண்ட அந்தத் தலத்தில் தங்கியிருந்தார்
மலைபோல் மணிகள் சூழ்ந்த குளிர் நீருடைய மணிமுத்தாறோடு
சேர்த்து இயற்றிய திருப்பதிக மாலையை
காதலில் வீழ்ந்து பலமுறையும் விளம்பினார்
தங்கியிருந்தார் அங்கு சிலநாட்கள்.
2080.
ஆங்கு வீற்றிருக்கும் நாதரைப் பணிந்தார் வணங்கினார் பிறகு
பெண்ணாகடம் எனும் பதி அடைந்து
வேதங்களின் ஓசை ஓங்கும்
தூங்கானைமாடம் என்ற அக்கோவிலுள்
விரும்பி வீற்றிருக்கும் ஒரு தனிப்பரஞ்சோதி
இறைவர் பக்கம் சேர்ந்து வலம் வந்தார்
பணிவுற்றார்
பரவுகின்ற சொல்லால் தமிழ்ப்பதிகம் பாடினார்
“தீங்கு நீக்குவீர் கருத்துடையார்களே” எனும் இசைப்பதிகமும் பாடினார்.
2081.
பிறவியின் எல்லையில் புகாதவர்கள்
இனி பிறவி ஏதும் இல்லாதவர்கள்
கைதொழுகின்ற சுடர்க்கொழுந்து ஈசரை வணங்கி உள்ளம் உவந்தார்
தோணியப்பனரிடம் தவம் செய்து பெற்ற வரத்தால்
தம்மை ஈன்ற தந்தையுடன் திருவரத்துறையை சேர்வோம் எனப்போவராகி-
2082.
முன்நாட்களில் தந்தையாரின் தோள்மீது
ஒருஒரு சமயம் எழுந்தருளிச் சென்ற அப்பிள்ளையார்
இப்போது தவிர்த்தார்
அந்தணர்களும் அத்தந்தையும் அருகே வர
சிந்தையில் கொண்ட பெருவிருப்போடு
முன்னால் சென்றார்.
(திருவருளால் தொடரும் )
pa_sathiyamohan@yahoo.co.in
- ஹெச். ஜி. ரஸூலின் திண்ணை கட்டுரைக்கான எதிர்வினை
- இன்று சொல்லிச் சென்றது
- அணுவும் ஆன்மீகமும்
- செவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் [Rover Explorations on Planet Mars (2006)]
- கற்பு என்றால் என்ன ?
- கவிதையில் வடிகட்டிய உண்மை
- அந்த பொசங்களின் வாழ்வு….
- உறுபசி (நாவல்) – எஸ்.ராமகிருஷ்ணன் – மரணமடைந்த நண்பனைப் பற்றின குறிப்புகள்
- விளக்கு விருது – ஒரு கொண்டாட்டத்தின் அடையாளம்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 9. ஊடகங்கள், காட்சி சாலைகள்.
- மஸ்ஸர்ரியலிசம்:புதிய புரிதலுக்காக
- சிவா ! ராமா ! – 2060
- சிரிப்பு
- கடிதம்
- K. இரவி சிறீநிவாசின் கடாவுக்கு விடை
- மலர்களும் முட்களும்
- ‘ வடக்கு வாசல் ‘ – மாத இதழுக்கு உதவுங்கள்
- திருவள்ளுவர் கல்வி நிலையம்
- கடிதம் – ஆங்கிலம்
- இனி காலாண்டிதழ் அறிமுகம் – No More Tears ஆவணப்படக்காட்சி
- டொரோண்டோ பல்கலைக்கழகம் – மே 11-14 2006 தமிழ் ஆய்வு கருத்தரங்கு
- எதிர் வினைகளுக்கு விளக்கங்களா, வேறு விஷயங்களா, எது வேண்டும் ?
- சமாதானப் பிரபுவின் ரகசியம் (Secret of Prince of Peace)
- கீதாஞ்சலி (60) காதல் பரிசென்ன ? ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- மண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்
- சொ ல் லி ன் செ ல் வ ன் ( அன்டன் செகாவ்/ருஷ்யா)
- மன்னனின் கெளரவம் சதுரங்க நடுவிலே!
- கறுப்புப் பூனை
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 7
- பாலம்
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! – இலக்கிய நாடகம்
- மோகினிப் பிசாசு ( பிரெஞ்ச் மூலம் : தனியெல் புலான்ழே )
- எடின்பரோ குறிப்புகள்-8
- மீள் வாசிப்பில் சூபிசம்
- உறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை
- காசி விசுவநாதர் ஆலயம், காஷ்மீர கர்ஷன், கன்னியாகுமரி கலவரம்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஊடகங்களில் சில கரும்புள்ளிகள்
- இணையவழி தமிழ் கற்பித்தல் – தொடக்கக்கல்வி அறிமுகமும், சிக்கல்களும், தீர்வுகளும்
- நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு – 1
- மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 1
- பெரியபுராணம் – 75 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- இளமையா முதுமையா
- எதுவுமில்லாத போது
- மீண்டும் மரணம் மீதான பயம்
- கவிதைகள்
- சிரிப்பு
- புனித உறவுகள்