பெரியபுராணம் – 73 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

பா. சத்தியமோகன்


1990.

இவ்வாறாக பலகூறி வேதமொழி அந்தணரும் பிறரும்

நின்று துதி செய்து

பிள்ளையாரின் திருவடிகளை

தம் முடி மீது அணிய வரிசைபெற நின்றபோது

அதில் சென்றணைந்த சிவபாத இருதயரும்

தெய்வஞானக் கன்றான சம்பந்தரை

முன் சென்று எடுத்து

தம் தோளில் சுமந்து களி கூர்ந்து செல்ல-

1991.

மாமறையோர் குழாம் பக்கத்தில் சூழ்ந்த திருத்தொண்டர் குழாம்

அருகருகே சூழ்ந்து

தம் உடையின் மேல் உள்ள ஆடைகளையும் உத்தரியங்களையும்

வானில் வீசி ஆர்ப்பரிக்கும் தன்மை

பூ மிதக்கும் சிவானந்த வெள்ளம் பெருகிய ஆறு போல பொங்கியது

அதன் மேல் நுரைத்துப் பூக்கும் குமிழிகள் போல

பெரும் காட்சி என ஆனது!

1992.

பெரிய மலைகளின் மேல் மின்னல் கூட்டம் புடை பெயரும்

காட்சியைக் கொண்டது போல

நீடும் சீகாழியில் அந்தணர்களின் மாளிகைமேல்

அங்கு நின்ற மறையோரின் மங்கையர்

மங்கலமான பெரும் சொற்களால் வாழ்த்திக் கொண்டனர்

மணமுடைய இதழ்களுடைய புதிய குளிர்ந்த பூக்களையும்

சுண்ணப்பொடிகளையும் தூவி நிற்பவராயினர்.

1993.

மற்றும் சிலர் மங்கல வாத்தியம் இசைப்பார்

சிலர் மறை கானங்களைப் பாடுவார்

பக்கங்களில் சிலர் பொங்கும் அழகிய விளக்குகளை ஏந்தி

பூரணக் கலசங்களையும் வரிசையாக வைப்பார்

அவர்கள் மனதில் எழுந்த அதிசயம்

பெரிய விருப்பமும் அன்பும் பெருக்கிற்று

அவ்வுணர்வுடன் வீதி வழியே

சண்பை நகரை வலமாக வரும் போது-

1994.

அழகிய பொன் பூண்ட திருத்தோணி மீதிருந்த

இறைவருடன் விளங்கிய பெரிய நாயகி அம்மையாரின்

திருமுலைப்பால் மணம் மாறா மொழியுடன்

பவளம் போன்ற வாயுடன்

ஞானசம்பந்த பிள்ளையார் தம் திருமாளிகைக்கு எழுந்தருளும் போது

சங்கநாதம் கேட்டது

தேவதுந்துபி முதலான அளவிலாத ஒலி கேட்டது

உள்ளே புகலானார்.

1995.

தூய அழகிய மாளிகையில் அமர்ந்திருந்து அன்றைய இரவு

பழமையான பெரிய வேதங்கள்

திரண்டு உருவெடுத்தது போன்ற திருத்தோணியில்

நிலை பெற்று வீற்றிருந்த சிவபெருமானின்

திருவடித் தாமரைகள் தம் கருத்தில் பொருந்தியதால்

இடையறாத காதல் கொண்டு

பெரிய ஞாயிறு தோன்றும் முன் நேரத்திலே

திருத்தோணியப்பரின் திருக்கோயில் அடைந்தார்.

1996.

மிக்க அன்போடு திருக்கழுமலம் அணைந்து

அத்திருத்தலத்தில் தம்முடன் வீற்றிருந்த தம் தந்தையாரையும்

வெளியே எவராலும் தாங்குவதற்கரிய மெய்ஞானத்தை

தமது போகமுலையினால்

ஞானப்பால் எனச் சுரந்து அளித்த

புண்ணிய வடிவுடைய திருத்தாயாரையும் முன் வணங்கிப் போற்றி

மேன்மையான அருள் பெற்று

திருக்கோலக்கா எனும் தலம் வணங்கி இறைஞ்சுவதற்காக

விருப்புடன் சென்றார்.

1997.

நீர்ப்பெருக்கம் இரைச்சலிட்டு அலைகள் வீசும் காவிரியில்

நன்னீருடன் தேன் உடையமலர்! முத்துக்கள்!

அம்மலர்களில் வரிவண்டுகள்

அவ்வாற்றில் குடைந்து நீராடும் மங்கையர்

நீரையுடைய வாவிகள் என விளங்கும்

திருக்கோலக்கா எய்தினார்.

தேவர்களின் தலைவரான இறைவரின் திருக்கோயிலை

வலம் வந்து முன் நின்றார்

வேதங்கள் முறையிட்டும் அறிவதற்கு அரிய

இறைவனின் திருவடிகளைத் துதிப்பதற்குத் தொடங்கினார்.

1998.

மெய்மை நிறைந்த செம்பொருளான சிவனை

வேதத்தின் விழுப்பொருளான சிவனை

சடைமீது பையுடைய பாம்புடன்

பசுமையான பிறைச்சந்திரன் தாங்கி அருள்வானை

நஞ்சுடைய மிடறு உடையவனை

“மடையில் வாளைகள் பாய” எனும் வாக்கால்

திருக்கரங்களால்

கால வரையறை செய்யும் தாளங்கள் ஒத்து வர

கலைகள் நிரம்பிய திருப்பதிகத்தை

கவுணியர் பெருமான் ஆகிய சம்பந்தர் பாடியபோது —

1999.

திருக்கைகளால் தாள ஒத்து அறுதியிட்டுப் பாடியதும்

அதனைக் கண்டு அருள் செய்து

கருணை கூர்ந்த தேவர் பெருமானின்

அஞ்செழுத்து எழுதிய செம்பொன் தாளங்கள்

இறையருளால் அத்திருப்பாடலுக்கு

உலகமெல்லாம் உய்வதற்கு வந்த

மறைச்சிறுவரான பிள்ளையாரின் திருக்கைகளில்

அப்போதே வந்து சேர்ந்தன.

2000.

(சீ) காழியில் தோன்றிய பெருந்தகையரான ஞானசம்பந்தர்

தமது திருக்கையில் வந்த தாளக்கருவி கண்டு

வாழ்வடையுமாறு

அதனைத் தம் திருமுடிமேல் கொண்டார்

மனம் களித்தார்

இனிமை மிக்க திருவாக்கால்

ஏழிசைகளும் தழைத்தோங்க

இன்னிசை பொருந்திய தமிழ்ப்பதிகம் பொருத்தமாகப் பாடினார்

விரும்பி ஏற்றருளிய

குழை அணிந்த சிவபெருமானின் திருமுன்னர்

திருக்கடைக்காப்பு சாத்தி நின்றார்.

2001.

தேவர் உலகமும் அதிசயிக்கும்படி ஓங்கியது நாதம்

அந்நாதத்தின் உண்மை கண்டு

நாரதர் தும்புரு முதலான

இசைத்துறை வல்லவர்கள் துதித்தனர்

பூமி மீது

தேன் உடைய மலர்மழை பொழிந்தனர்

வேதங்கள் வாழ

வந்து தோன்றிய குழந்தையாகிய சம்பந்தரும்

தம் இறைவன் அருள் போற்றி அங்கிருந்து

சண்பை நகரான சீகாழி அடையச் செல்வார்.

2002.

செந்தாமரை மலர்க் கரத்தில் திருத்தாளம் போட்டு

ஞானசம்பந்தர் நடந்து செல்லும் போது

தம் குலத்தந்தையார் (சிவபாத இருதயர்)

அவர் நடப்பதைத் தாங்க முடியாமல்

தோளின் மீது தரித்துக் கொண்டார்

அவரது தோள் மீது அமர்ந்தபடி எழுந்தருளி

சுற்றிலும் தேவர் சூழ்ந்து போற்றும்

சந்திரன் தங்கும் சடையுடைய சிவபெருமானார் உறையும்

அழகிய மாட சிகரம் கொண்ட திருத்தோணிபுரம் கோவில் வந்தார்.

2003.

அருட்செல்வம் பெருகும் அந்தப்

பெருங்கோயிலை சூழ்ந்து வலமாக வந்தார்

இறைவர் திருமுன் நின்றார்

அருள் பெருகும் திருப்பதிகத்தை தக்க பண்ணுடன் வகுத்தார்

எட்டுப் பதிகங்கள் கொண்டதாகிய கட்டளைகளுள் ஒன்றில்

தோணியப்பரைப் பாட வேண்டும் எனும் விருப்புக்கு ஏற்ப

“பூவார் கொன்றை” எனத் தொடங்கிப் பாடினார்.

2004.

தொடங்கிய திருப்பதிகத்தின் இசை அமைதியை

திருத்தாளத்தினால் வரையறை செய்து இசைத்தார்

அடுத்தத் திருப்பதிகமும் அதே போல நிகழ

பாடி அருளி வணங்கினார்

காவிரி பாயும் வயல்கள் சூழ் சீகாழிப்பதியில் உள்ளோர் வாழ்வடைய

இளங்குழவியான திருக்கோலத்தின் தோற்றம் தந்து அருளினார்

நிறைவான ஞானமழைக் கருக் கொண்ட

மேகம் போன்ற சம்பந்தர்.

2005.

அவ்வாறு இருக்கும் நாளில்

சம்பந்தரைப் பெற்று அளித்த தாயார்

முயன்ற தவமுடைய திருநனிப்பள்ளியில் உள்ள மறையார்களோடு

யாவரும் நிலைத்த மகிழ்ச்சியுடன்

மங்கல வாத்திய ஒலியுடன் வேதங்கள் ஓதியபடி

அழியாத மதில் சூழ்ந்த சண்பைநகர் சேர்ந்து

கவுணியர் பெருமான் திருவடியில் வீழ்ந்து வணங்கினார்.

2006.

மங்கலம் தரும் மெய்ஞானத்தை உலகம் மகிழ

அவர் பெற்ற பெருவார்த்தை தந்தது

அதனால் அத்திருத்தலத்தில் இருபிறப்பாளரும்

இருபிறப்பாளர் அல்லாத பிறரும்

அன்பு பொங்கும் திருத்தொண்டர்களும் அதிசயித்தனர்

குழாமாகக் கூடினர்

புகலியில் உள்ள (இளம் சிங்கமான) ஞானசம்பந்தரிடம் வந்து

கழல் பணிந்து சிறப்பில் மிக்கவர் ஆயினர்.

2007.

வந்திருந்த திருத்தொண்டர்க்கும் கூடிய அந்தணர்க்கும் மற்றவர்க்கும்

மனமகிழ்ந்து உண்பித்தல் முதலான சிறப்பான செயல்களை

தம்தம் அளவில் விரும்பும் தன்மையினால்

கடமை செய்யும் அந்தச் சீகாழித் தலம்

எம் இறைவரின் சிவலோகமே என விளங்கி

எவ்வுலகினரும் போற்றும் அந்த நாளில்-

2008.

செழுமையான முத்துக்கள் தரும்

காவிரி ஆறு சூழ்ந்த நனிப்பள்ளியில் உள்ளோர்

ஞானசம்பந்தரைத் தொழுதனர்

சந்திரனின் கொழுந்து அணியும் சடை தரித்த இறைவரை

எங்கள் தலத்தில் கும்பிடும் பொருட்டு வந்தருள வேண்டும்

என வேண்டினர்

திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவனாரின் கழல் இறைஞ்சி

வணங்கி விடைபெற்று

தொழுவதற்காக எண்ணிச் சென்றார்.

2009.

இதழ்கள் அவிழும் செந்தாமரையின்

உட்புற இதழ்கள் போலிருந்தன சிறிய திருவடிகள்

தரையின் மீது பொருந்தி நடந்ததை எவராலும் பொறுக்க முடியவில்லை

மாதவம் செய்த சிவபாத இருதயர்

தம் தோளில் சுமக்க முன் வந்தார்.

சிவபெருமானின் திருவடிகளைத்

தம் முடிமீது கொண்ட உள்ளத்தவராய் சம்பந்தர் சென்றார்.

2010.

தேன் சிந்தும் கொன்றைமலர் அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும்

திருநனிப்பள்ளியை சேரச் செல்லும் பிள்ளையார்

வான் அளாவும் மலர்ச்சோலைகளுடன் தோன்றும் இது எந்த ஊர் ?

என வினவியதும் மகிழ்ச்சி எய்திய தந்தையார் சிவபாத இருதயர்

குவளை மலர் நிறைந்த வயல் கொண்ட திருநனிப்பள்ளி இது

எனக்கூறினார் அதைக்கேட்டு

ஞானப்பால் அமுது உண்ட பிள்ளையார் தொழுது

தமிழ்ப்பாமாலையான திருப்பதிகம் சொல்லத் தொடங்கினார்.

2011.

“காரைகள் கனக முல்லை” எனத் தொடங்கி

கலை சேரும் வாய்மை விளங்கும் சிறப்புமிகு பதிகம் பாடினார்

திருக்கடைக் காப்புதன்னில்

உமையை ஒருபாகம் கொண்ட சிவபெருமான் நிலையாய் எழுந்தருளிய

திருநனிப்பள்ளியை நினைப்பவர்களின் பெரிய இடர் யாவும் கெடும்

இது நம் ஆணை! எனும் பெருமையினைப் பொறித்து வைத்தார்.

2012.

ஆதியார் கோவிலாகிய நனிப்பள்ளி சிவபெருமான் கோவில் வாசல் அடைந்து

அன்பு மிக்க நியதியால் வணங்கித் துதித்துப்

பேரரருள் பெற்று வெளியே செல்பவரான

கவுணியர் தலைவரான ஞானசம்பந்தப் பிள்ளையார்

தம்மைச் சூழ்ந்து கொண்டு அந்தணர் குழாம்

போற்றும் காதல் கண்டு

அங்கே விரும்பி எழுந்தருளியிருந்தார்.

2013.

அம்பிகையான பார்வதி அம்மை அளித்த ஞானத்தை

அகிலமே உய்வதற்காக உண்ட நம் பெரும்தகையாரை

தேவர்களும் மெய்மையுடைய தவத்தொண்டர்களும்

திருத்தலைச்சங்காடு வாழும் அந்தணர்களும்

அவரை எதிர்கொண்டு விருப்புடன் வணங்கினர்.

2014.

ஞானப்பிள்ளையாரை வரவேற்று அழைக்கும் விதமாக

கமுகு மரங்கள் வாழை மரங்கள் நிறுத்தினர்

மலர்மாலைகளைத் தொங்கவிட்டனர்

அங்காடித் தெருக்கள் எல்லாம் அலங்கரித்தனர்

அண்ணலாரை மலர்ம்மென் சோலை சூழ்ந்த

வளமான பதிக்குள் அழைத்துப் போயினர்.

2015.

திருமறை ஓதும் அந்தணர்கள் சூழ்ந்து

சிந்தையில் மகிழ்ச்சி பொங்கிட

அரிய வேதம் பொருளாய் உள்ளவரை வணங்கி

அழகிய வலம்புரி சங்கின் வடிவில் அமைந்த கோவில்

அவ்விறைவர் விரும்பி வீற்றிருக்கும் தன்மை பற்றி திருப்பதிகம் பாடினார்.

(இக்கோவில் கோச்செங்கண் சோழரால் அமைக்கப்பட்டது)

2016.

நஞ்சின் கருமை கொண்ட கழுத்துடைய சிவபெருமானின்

கோயிலைக் காதலால் பணிந்து பாடினார்

அந்தணர்கள் அவரைப் போற்றி வலம் வந்து பிறகு

திருவலம்புரம் எனும் தலத்தில் இறைவரைத் தொழுதார்

“கொயுடை மும்மதில்” எனத் தொடங்கும் பதிகம் பாடினார் பிறகு

நிறைந்த நீர்வளம் உடைய திருச்சாய்க்காடு எனும்

தலம் தொழுவதற்குப் புறப்பட்டார்.

2017.

பாம்புகளை அணியாகப் பூண்ட சிவபெருமானை

திருப்பல்லவன் ஈச்சரத்தில் தலையினால் வணங்கி ஏத்தினார்

திருந்தும் இசையுடைய திருப்பதிகம் பாடி

காவிரி எனும் பொன்னி நதி சூழும் திருச்சாய்க்காட்டில்

நிலைத்த புகழ் திருத்தொண்டர்கள் எல்லாம்

மகிழ்ந்து எதிர்கொள்ளுமாறு புகுந்தார்.

(“பரசு பாணியர்” என்பது திருப்பதிகத்தின் தொடக்கம்)

2018.

வானளாவ உயர்ந்த அக்கோவிலின் வாயிலுள் புகுந்து

வலமாக வந்து

தேன் சொரிய மலர்கின்ற கொன்றை மலர்மாலை அணிந்த

சிவபெருமானின் திருமுன் போய்த் தாழ்ந்து

இடக்கையில் மானைக் கொண்ட சிவபெருமானைப் போற்றினார்

ஊன் எல்லாம் உருகும்படி ஏத்தி

உச்சி மீது திருக்கைகளை கூப்பி வணங்கினார்.

2019.

சிறப்புடன் விளங்கும் பாடலால்

திருக்கடைக்காப்பு செய்து வணங்கினார்

உலகில் விளங்கிய திருத்தொண்டர் போற்ற

அங்கிருந்த பிள்ளையார்-

மேலும்

அழகும் இசையும் கொண்ட திருப்பதிகம் பாடித் துதித்துச் சென்று

இறைவர் எழுந்தருளும் திருவெண்காட்டினைப்

பணிவதற்குப் புறப்பட்டார்.

2020.

பொன் போன்ற இதழ் கொண்ட கொன்றைமலர்

வன்னி, சங்கை, பிறைச்சந்திரன் என்ற இவற்றை

அணிந்த திருவெண்காட்டுத் தொண்டர்கள் எதிரே வந்து

இன்ன தன்மையுடையவரானார் எனச் சொல்ல முடியாத மகிழ்ச்சி பொங்க

நிலைத்த புகழ் சீகாழியில் வந்து உலகை ஆளும்

தலைவரான பிள்ளையாரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

(இறையருளால் தொடரும் )
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்