பெரியபுராணம் – 56 – ( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )

This entry is part [part not set] of 28 in the series 20050916_Issue

பா.சத்தியமோகன்


1514.

திருவீழிமலை வந்தடைந்த நாவுக்கரசினையும்

சீகாழி ஞானப்பிள்ளையையும்

கலந்த உள்ளக் காதலோடு வணங்கி எதிர்கொண்டனர் நகர்புறத்தில்

சக்கரப்படை உடைய திருமாலும் அறியாத

சிவபெருமானின் அடியார்களும் மறையோர்களும்

அவர்களை வணங்க

அந்த இருமேலோர்களும் வணங்கினர் தலம் புகுந்தனர்.

1515.

மாடவீதிகள் அலங்கரித்தனர் மறையோர்

அழகிய விளக்குகள், வாழைகள், இலை செறிந்த பாக்குகள்

மாளிகை வாசல்களில் வரிசை பெற வைக்கப்பட்டன

நீர் நிறைந்த பொற்குடங்கள் ஏந்தி பெருமையுடன் வரவேற்றனர்

விண்ணை இழிவு செய்யும்விமானமுடைய திருக்கோயில் வாசலை

நாவுக்கரசரும் ஆளுடைய பிள்ளையாரும் தொண்டர்களும்

சென்று அடைந்தனர்.

1516.

கோவிலுள் புகுந்து திருவீழிமலை விரும்பி அமர்ந்திருக்கும்

செம்பொன் மேருமலையை வில்லாக உடைய சிவபெருமான்

மகிழ்ந்த கோவிலை வலமாகச் சுற்றி வந்து

திருமுற்றம் வணங்கி திருமுன் சேர்ந்து

மூன்று கண்களையும் சடைமுடியையும்

வெற்றி பொருந்திய காளையூர்தியையும் உடைய

அப்பெருமானின் திருவடியின் கீழ் விழுந்தார்

எழுந்தார் நாவுக்கரசர் விம்மினார்.

1517.

இருகைகளும் தலைமீது குவித்து

சிவபெருமான் கழல் வணங்கி

கலந்தார் அன்புடன் கரைந்துருகினார்

திருமேனியிலே கண்ணீர் அருவியானது

“சிவந்த சடையார் சிவனாரைச் சேராதவர்

தீங்கு நெறிசேர்கின்றார்” எனும் சொல்மாலை ஆகிய

உய்கின்ற நெறி காட்டும் திருத்தாண்டகம் பாடி

அங்கிருந்து நீங்க முடியாத காதல் மேலோங்க-

1518.

முன்காலத்தில் நான்முகனும் திருமாலும்

முடிவும் முதலும் அறிய இயலாமல் நீண்ட

பொன்னார் மேனி உடைய மணிமலையான இறைவரை

அழகிய நீர்வளம் கொண்ட திருவீழிமலை வணங்கி

பலநாட்களும் பிரியாமல் இருந்தனர்

அந்நாளின்போது மறையோர்களும்

அப்பதியில் அருந்தவம் மிக்க மெய்யடியார்களோடு தங்கியிருந்தனர்.

1519.

சிறப்பால் விளங்கும் திருத்தொண்டர்கள்

அவ்வாறு இருந்து சிலநாள்கள் சென்றபின்

நாள் பொய்யாது அளிக்கும் காவிரி

நீர்தரும் பருவத்தில் தாராமல் வறண்டது

நீரால் விளையும் உணவுப்பொருள்கள் அருகின

உணவால் வாழும் உயிர்களெல்லாம்

உல்கின் மிக்க வறுமை காரணமாக

துன்பம் மிகுதி அடையும் வறுமை பரவியது.

1520.

சிறப்பால் விளங்கும் திருத்தொண்டர்கள்

அவ்வாறு சில நாட்கள் கழிந்த பின்னர் மழை சுருங்கியது

வளம் தரும் பொன்னிநதி (காவிரி)யும்

பருவத்தில் நீர் தராமல் மாறுதல் அடைந்தது

நீரைச் சார்ந்த உணவுப் பொருட்கள் அருகியது

நிலவுகின்ற பல மன்னுயிர்களெல்லாம்

உலகின் மிக்க வறுமை காரணமாக

துன்பம் மிகுதி அடையும் வறுமை பரவியது.

1521.

உலகம் எங்கும் வற்கட காலமாய் ஆக

உலக உயிர்கள் வருத்தமுற்று நையும் நாளில்

ஞான சம்பந்தருக்கும் நாவுக்கரசருக்கும்

கையில் மானும் மழுவுடன் தோன்றி

திருவீழி மலையில் வீற்றிருக்கும் செஞ்சடையார்

கனவில் எழுந்தருளிச் செய்தார்.

1521.

வறிய காலம் காரணமாக

உங்கள் கருத்தில் வாட்டம் அடைய மாட்டார்

எனினும் உம்மை வழிபடுவோர்க்கு அளிப்பதற்காக அளிக்கின்றோம் என்று

திருக்கோலம் காண எழுந்தருளிக் குலவும் பெருமையுடைய

அந்த இருபெரு மக்களுக்காக உலகம் அறியும்படி

நாள்தோறும் படிக்காசு வைத்தார் திருவீழிமிழலை நாயகனார்.

1522.

வானிலிருந்து இறங்கிய விமானமான

அந்தக் கோவிலுள்

கிழக்கிலும் மேற்கிலும் உள்ள பீடத்தில்

அண்ணல் ஞானசம்பந்தருக்கும் நாவுக்கரசருக்கும்

வணங்க வரும் நாள்கள் தோறும் படியாக

காசை வைத்தருள

பரந்த இவ்வுலகில் எண்ணிலாத அடியாருடன்

அமுது செய்து அங்கிருந்தார்கள் இருவரும்.

1523.

கரிய கழுத்துடைய கண்டரான

அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசினால்

பலவாறு பொருந்திய வளங்கள் பெருக

பரமன் அடியவர்கள் அனைவரும்

எல்லாம் எய்தி உண்க என இரண்டு வேளையும் சாற்றுவித்து

சொல்லால் சாற்றிச் சோறிட்டார்கள்

கூர்மையான துயரமான வறுமையைத் தொலைத்திட்டார்கள்.

1524.

உமையம்மையாரின் திருமுலைப்பால்

தேசம் உய்யும் பொருட்டு உண்ட திருமகனார்

மிழலை நாதரிடத்து

வாசியுடன் செல்லும் காசினைப் பெற்றார்

திருநாவுக்கரசர் கைத்திருத்தொண்டு செய்வதால்

வாசி இல்லாத காசினைப் படியாய்ப் பெற்றார்.

1525.

ஆறு சடைமேல் அணிந்தருளும்

அண்ணல் வைத்த படிக்காசால் முடிவிலாத பொருளுடைய

இருபெரு மக்களின் திருமடங்களிலும்

தொண்டர்கள் மகிழ்ந்து

நாளும் உண்ண உண்ணக் குறையவில்லை

ஓங்கி வளரும் பெருமையை உலகம் போற்ற

இன்பம் அடைந்திருக்கும் அந்த நாட்களில்-

1526.

காலம் தவறியது தீர்ந்தது

எங்கும் ஒலிக்கும் மேகம்

வானிலிருந்து பொழிந்து புனல் கலந்தது

ஞாலம் எல்லாம் குளிர்ந்து தூங்கியது

உணவு பொருள் பெருகி நலம் சிறந்தது

உலகம் நன்மையடைய மூலகாரணமான அன்பர் இருவர்களும்

மொழி மாலை பல சாத்தி

நீலகண்டரான இறைவர் எழுந்தருளிய

மற்றத் தலங்கள் பிறவும் வணங்க நினைவு கொண்டனர்.

1527.

அரிதில் கிடைக்கப்பெற்ற

திருவீழிமலை மாமணியை வணங்கி

பிரியாவிடை பெற்றுக் கொண்டு

அழகான குளிர் நீரினாலே சூழப்பட்ட

திருவாஞ்சியத்தைப் போற்றித் துதித்து

புனிதரான இறைவர் வெளிப்பட நிலையாய் எழுந்தருளிய

மற்ற தலங்களுக்கும்

அன்பினால் இறைஞ்சி இசையும் வளமும் உடைய தமிழ்கள் புனைந்த பிறகு

எல்லையில்லா பெருமையுடைய இருவரும்

சேர்ந்தனர் செல்வமுடைய திருமறைக் காட்டிற்கு.

1528.

மணம் பொருந்திய மலர்களுடைய

புன்னையின் மணம் கமழும் சோலை உடைய

உப்பளத்தின் முற்றங்கள் எங்கும்

சிறுமியர் முத்துக்களைக் கொழிக்கும்

திருமறைக்காட்டில்

பொன்மேரு மலையை வில்லாகக் கொண்ட இறைவர்

மகிழ்ந்து வீற்றிருக்கும் கோவிலுள் புகுந்து வலமாக வந்து

அழகிய சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் நாவரசரும்

இறைவரின் திருமுன்பு போய் சேர்ந்தனர்.

1529.

கடற்கரையின் நீர்கொண்ட

காழிக்கானலின் பக்கத்தில் நெருங்கியுள்ளஅத்தலத்தில்

பாம்பு ஆடுகின்ற சடையை உடைய மறையவரான சிவபெருமானை

வேதங்கள் எல்லாம் வழிபட்டு

வலிய கதவினைத் திருகாப்பிட்டு மூடிய

அந்நாள் முதல் இந்நாள் வரையிலும்

திறக்கப்படாமல் அடைந்தே நிற்கின்ற

அழகிய நீண்ட வாயிலை வணங்குபவராகி-

1530.

தொன்மையான மறைகள் திருக்காப்பு செய்த வாயிலில்

பூட்டிய நிலையை நீக்க வல்ல அன்பர்கள் வராததால்

அதன் பக்கத்திலுள்ல வாயில் வழி எய்தி

அன்பராகவும் தொழுவார்களாகவும் உள்ள முறைமையைப் பார்த்து

அளவில்லாத பெரும் புகழ் உடைய ஞானசம்பந்தரும் நாவரசரும்

இச்செய்தியை அங்குள்ளவர் கூறக் கேட்டு அறிந்தனர்.

1531.

அப்போது அந்த இயல்பை அவர்கள் அறிந்து

கடல் வெள்ளத்தில் மிதந்த

திருத்தோணிப்புரத்து அரசரான ஆளுடைய பிள்ளையார்

“அப்பரே! ஓங்குகின்ற வேதம் அர்ச்சனை செய்யும்

உம்பர் பிரானை

கோவிலுள் புகுந்து நேர் வாசலில் வணங்குவதற்காக

திரு முன்புள்ள கதவின்

திருக்காப்பு நீங்குவதற்குப் பாடும்”

எனச் சொல்ல

நீடும் திருநாவுக்கரசரும்-

1532.

உள்ளத்தில் பொருந்திய அன்பால்

ஞானசம்பந்தப் பெருமான் இவ்வாறு உரை செய்து அருள

“பண் பொருந்திய மொழியாள்”

என்றெடுத்துப் பாடவும்

அந்தப் பாடலின் பயனை அனுபவிக்கும்பொருட்டு

திருக்காப்பு நீக்க

காலம் தாழ்த்தியதும்

திருக்கடைக் காப்பில்

“எண்ணீர் இரக்கம் ஒன்றில்லீர் “ என்று

நாவுக்கரார் பாடி இறைஞ்சிய அளவில்-

1533.

வேதவனமாகிய திருமறைக்காட்டில் விளங்கும்

மெய்பொருளாகிய

இறைவரின் திருவருளால் விளங்கும் மணிக்கதவானது

பக்தியுடைய அன்பர்களின் முன்

திருகாப்பு நீங்கியது

கலைமொழியின் வேந்தரான

நாயனாரான

ஞான முனிவரான சம்பந்தருடன் தொழுது

விழுந்து பணிந்தார்.

உலகில் கடலோசையை விடத்

தேவர்களின் ஆரவாரமும் வேத ஒலியும் கூடி

மேலே எழுந்தது.

1534.

அடியார்களின் கூட்டம் பெருமகிழ்ச்சி அடைய

சிவக்கன்றான ஞானசம்பந்தரும் நாவரசரும்

பேரின்ப வெள்ளத்திடை மூழ்கி எழுந்து

உள் புகுந்து தம்பெருமான் திருமுன்பு

போற்றித் துதித்துப் பதிகங்களைப் பாடி

எலும்பும் கரைய உள்ளுருகி

அங்கிருந்து அரிதாய் நீங்கி

கோவிலின் வெளியே வந்தனர்.

1535.

கோவிலின் வாயில் பக்கம் அடைந்து நாவுக்கரசர்

இறைவர் அருளால் இக்கதவு திறந்ததும் அடைத்தும்

இயங்கும் நெறியில் திருத்துக என உள்ளத்தில் எண்ணி

மலையாள் ஆகிய உமையின் திருமுலையில் கறந்த

சிவஞானம் குழைத்து உண்ட

சீகாழியில் தோன்றிய ஞானசம்பந்தரைப் பார்த்து

இக்கதவு மூடும் வகையை நீங்கும்படி அருள்க எனக் கூறியதும்-

1536.

சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர்

நாவுக்கரசர் அன்பால் கூறிய சொல்லினால்

பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில்

கண்ணின் அழகு அமைந்த

இறைவரின் அருளால்

உடன் மிகுந்த விரைவுடன்

பதிகம் தொடங்கிய முதல் திருப்பாட்டிலேயே

திண்மையான அழகான கதவு

திருகாப்பு (மூடியது) செய்தது.

1537.

அதனைக் கண்டு ஆளுடைய பிள்ளையார் சம்பந்தரும்

நாவுக்கரசரும் மகிழ்ந்து

நம் பெருமான் இதனை அருள் செய்யப் பெற்றோம் என வணங்கியபின்

பதிகத்தைப் பாடி முடித்து தொழுது நிறைவுற்றார்

இறைவரின் திரு முன்பு உள்ள

அவ்வாயிலின் கதவு

திறக்கவும் மூடவுமான உள்ள நிகழ்ச்சி

அன்று முதலாக என்றும் நிகழ்ந்தது.

1538.

அங்கு நிகழ்ந்த அச்செயல் கண்டு

அடியார் எல்லாம் அதிசயித்துப் பொங்கி

உடல் முழுதும் புளகம் எய்தினர்

கண்களிலிருந்து பொழியும் கண்ணீர் பரந்து வழிய

எங்கும் ஒன்றாலும் நிகர் இல்லாத

இரு பெரு மக்களின் பாதங்களையும் வணங்கினர்

நம் சீகாழித் தலைவரும் திருநாவுக்கரசும் மடத்தில் போய்ச் சேர்ந்தனர்.

1539.

கதவு திறக்குமாறு

மிக அரிதில் முயன்று பாடியதும் கதவு மூடிக் கொண்டது

ஞானசம்பந்தர் பாடிய எளிமை கருதி

இறைவர் திருவுள்ளம் அறியாமல் திகைத்தேன்

எனக் கவலை அடைந்து

பெரிதும் அஞ்சி

திருமடத்தில் ஒரு பக்கத்தில் அணைந்து

கண் மூடிக் கொண்டு

உணர்வுடைய நிலையில் துயில் கொண்டார்

உண்மை நிலையில் வழுவாத வாகீசர்.

1540.

செல்வம் பொருந்திய திருமறைக் காட்டின்

மணி போன்ற இறைவரின் திரு பாதத்தை மனதில் வைத்து

ஊன்றி எண்ணிக் கொண்டு உறங்கும்போது

உமையோர் பாகம் உடையவரான இறைவர்

பொன்னார்ந்த மேனியில்

வெண்ணீறு பூசிய கோலப் பொலிவோடு

தாமே எழுந்தருளி-

“திருவாய் மூரில் இருப்போம் ஆங்கு தொடர்ந்து வா” என்றார்.

1541.

அறிதுயில் நீங்கி அறிவு விழித்ததும்

“என்னை அங்கே வா என்று போனார்

அது என்னவோ”

என்ற கருத்துகொண்ட

திருக்குறுந்தொகைப்பதிகம் பாடினார்

“ இதுவே எம்பெருமான் அருளாகி அமையுமாயின்

யானும் போவேன் “ என எழுந்து

வேதவனம் என்கிற திருமறைக்காடு விட்டு

விரைந்து போனார் அவர்முன்னே

ஆதிமூர்த்தியாகிய இறைவர் தாம் முன்பு காட்டிய

அதே கோலத்துடன் எழுந்தருள —

1542.

சிறந்த அந்தத் தலத்தினின்று புறப்பட்டு எழுந்து

செல்கின்ற திருநாவுக்கரசர் அடங்காத அன்பினால்

நிறைந்த அமுதம் கையில் கிட்டியும் உண்ணப் பெறாதவர் போல்

நீரார் சடையார் எழுந்தருள நெடுந்தொலைவுபின் தொடர்ந்து செல்கின்ற அவர்

பெருமையுடைய அவரை விரைந்து சேர முயல்பவராகியும்

அவரை அடையப் பெறவில்லை.

1543.

அவ்வண்ணமாக சிவபெருமான் எழுந்தருளி

பக்கத்தில் காட்சி தருபவர்போல

பொன்மயமான கோவில் ஒன்றை அவர் எதிரே காட்டி

அதனுள் புகுந்தருளினார்

அவரைத் தேடும் தொண்டரான நாவுக்கரசர்

அவர் அருகில் விரைந்து அவரைத் தொடரும்போது

சீகாழித் தலைவரான வள்ளலார் சம்பந்தரும்

அங்கு வந்து சேர்ந்தார்.

1544.

அருகில் கூட் வருபவர்போலக் காட்டி மறைந்தார் அயர்ந்து

பிழை செய்து வந்து கதவு திறக்கச் செய்த எனக்குப் பக்கமிருந்து

தாங்கள் மறைத்தருளலாமே அல்லாது

திருத்தொண்டின் உறைப்புவிளங்கப்பாடி அக்கதவை அடைப்பித்த

தழைத்த தன்மை கொண்ட ஞானசம்பந்தர் உப்பாலில் உள்ளார்

தாங்கள் இனி மறைவது எப்படி! என்று பாட-

(உப்பால்- தொலைவுக்கும் அருகிற்கும் இடைப்பட்ட இடம்)

– திருவருளால் தொடரும்
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்