பெரியபுராணம்- 42 திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் புராணம்

This entry is part [part not set] of 34 in the series 20050206_Issue

பா. சத்தியமோகன்


25. திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணம்

1078.

பொருந்துமாறு பல உயிர்களுக்கும்

எல்லையற்ற கருணைத்தாய் போற்ற

உமையம்மையார் தனிப்பட்டுள்ள தம் தலைவரைத் தழுவ

நான்கு வேதங்களும் போற்ற நின்று அருந்தவம்புரிய

தூய மாதவம் செய்தது தொண்டை நன்னாடு.

1079.

தொன்மையும் மென்மையும் கொண்ட தொண்டை நாடு

நன்மை மிக்க நடுநிலை ஒழுக்கத்தில் விருப்பம் உடைய

பெருங்குடிகள் தழைத்து ஓங்க

வலிமையில் ஓங்கிய வளம் பெரு நகரங்கள்

பலவற்றைத் தன்னிடம் கொண்டது.

1080.

நல்திறம் விரும்பிய பழையனூர்

வேளார்கள் தம் மீது குற்றம் வந்தபோது

தம் உயிரையும் வணிகன் ஒருவனுக்கு

ஒரு கால் தாம் சொல்லிய உண்மைச் சொல்லை சீர்தூக்கிப் பார்த்து

அச்சொல்லைக் காத்த மேன்மை கொண்ட பெரும் தொண்டைநாடு.

1081

“ஆணையிடுங்கள் அடியேன் அடிச்சேரன்” என

திருநீறு போல வெண்மையான உவர் மண் ஊறிய

உடல் கொண்ட வண்ணானை வணங்கும் குணம்

திருநீறே சிவன் ! திருவருளின் வடிவம் ! என வணங்கும் குணம்

நெடுந்தொலைவு பரந்த புகழ்மிக்க சேரமான் மலைநாடு

ஒளி வீசும் அணிகள் அணிந்த வெற்றி வீரர்கள்

“மைத்துனர்” என முறைமை பாராட்டும் நாடு.

1082.

கறை விளங்கும் கழுத்துடைய சிவபெருமானின்

காதல் செய் முறைமையின் நிறைவை விரும்ப

உமாதேவியார் அறம் புரிந்ததனால்

வான் பிறை தொடுமளவு உயர்ந்த மதில் கொண்ட பெருந்தொண்டை நாடு

சிவநெறியின் நியதி உடையது என உலகத்தினர் போற்றுவர்.

1083.

மலைச்சாரல் என்ற குறிஞ்சியிடங்கள்

அருவியிலும் ஆற்றிலும் செம்மணிகள் இழிந்துவர இடமாகின

புறவம் என்ற முல்லை இடங்கள்

பூவில் வண்டினம் புதுநறவு அருந்த இடமாகின

மருதநீர் நிலைகள் –

நீண்ட கயல்மீன்கள் வரப்பு உடையுமாறு துள்ளுவதற்கு இடமாகின

நெய்தல் இடங்கள் –

பரதப் பெண்கள் முத்துக்களைக் கழுவி உலர்த்த இடமாகின.

1084.

குறவர்கள் பசுமணிகளையும் அரித்து எடுத்துக்

காராமணிகளை விதைக்கும் இடமாயிற்று குறிஞ்சி

கறவையினங்கள் மான்களுடன் பழக இடமாயிற்று காடு

தாமரை மலரிலிருந்து கொணர்ந்த இறால் மீன்களை

பறவைகள் தின்னும் இடமாயிற்று வயல்கள்

சுறாமீனின் முட்களுடைய கொம்புகளை தெய்வமாக வழிபட்டு

விழா எடுக்க இடமாயின நெய்தல் நிலங்கள்.

1085.

மலைகளில் மேகங்கள் வானத்திலிருந்து முத்துக்கள் சொரியும்

முல்லையின் அயல் இடங்களில்

குளிர்க் கொத்துடைய கொன்றை மரங்கள் பொன் சொரியும்

நீர்மிக்க கால்வாய்களின் வயல் வண்டலில்

கடல் தனது முத்துக்கள் சொரியும்

அருகில் உள்ள துறைகளில் கலங்கள்

யானைகளைக் கொணர்ந்து இறங்கும்.

1086.

தேன் நிறைந்த தினைமாவு உடையவை

குறிஞ்சி நிலத்தின் சிறிய ஊர்கள்

பால் நிறைந்த புல் அரிசிச் சோற்றை உடையவை

முல்லை நிலத்தின் ஊர்கள்

தூய நெல்அரிசி அன்னமும் நெய்யும் கரும்பும்

இன்கனிகளும் உடையவை மருத நிலத்தின் ஊர்கள்;

மீன்கள் நிறைந்த பேருணவைக் கொண்டவை

நெய்தல் நிலத்தின் ஊர்கள்.

1087.

குழல்போல் ஒலிக்கும் வண்டினங்கள் குறிஞ்சிப்பண் பாடும்

முழவு வாத்தியங்கள் மேகம்போல் முழங்க

முல்லைக்கொடிகள் அரும்புகள் அரும்பும்

மழலை பேசும் மென்கிளிகள்

மருதமரங்களை தன் உறங்குமிடமாகக் கொள்ளும்

நிழல் அளிக்கும் தாழைகள் சூழ்ந்த நெய்தல் மலர்களோ

நீர்நிலைகளைப் பெற்றிருக்கும்.

1088.

வளம்மிக்க நான்கு பெருநிலங்களில்

மலை சார்ந்த குறிஞ்சியின் இடங்கள் எங்கும்

எல்லை எங்கும் தினைபுனைகளில் எல்லாம்

படரும் இறகும் தோகையும் உடைய மயில்கள் உலவும்

கூறப்படும் அத்தினப் புனங்களைக் காப்பவர்-

சுருண்ட குழல் உடைய மயில் போன்ற மங்கை ஆவார்.

1089.

அழகிய இடம் அகன்ற வானுலகில் வாழும் தேவமங்கையரின்

கருங்கூந்தல் வண்டுகள் –

ஒளி விளங்கும் அணிகள் அணிந்த குறமங்கையர் கூந்தலுள் மூழ்கி

அங்கிருந்து போகாமல்

செங்கண்ணுடைய திருமாலை காளையூர்த்தியாய்க் கொண்ட

திருக்காளத்தி எனும்

மேகம் சூழ்ந்த திருமலையை தன்னுள் நிலவப் பெற்றது

குறிஞ்சி நிலம் சிறப்பு மிக்கதாகும்.

1090.

வேறு தனிப் பேறு எண்ணி வானவர் அரம்பையர் பிறந்து

ஒப்பிலா வேடரும் மாதருமாகப் பிறந்து வணங்கும்

கங்கை சூழ்சடை அண்ணலார் எழுந்தருளிய

திருவிடைச் சரமும் பெற்று

மேன்மையில் மிக்க வாழ்வுடையது குறிஞ்சி நிலம்.

1091.

அழகிய பொன்நிறமலர்க்குழல் உள்ள குறமங்கையருடன் தேவங்கையர்

மணம் கமழும் மலர் உள்ள சுனைகளில் படிந்து

முழுகும் நீண்ட இடங்களுடைய

தேவர் தலைவர் சிவபெருமான் வீற்றிருக்கும்

திருக்கழுக்குன்றம் கொண்டதால்

கொம்புகளின் மலர்களில் வண்டுகள் மொய்க்கும் இடமான

குறிஞ்சிநிலம் தவக்குறைவு உடையதாகுமோ! ஆகாது.

1092.

அழகிய முல்லை நிலத்தையும்

குறிஞ்சி நிலத்தையும் அடுத்துள்ள சில இடங்களில்

கரிய நிறம் கொண்ட வாள் ஏந்திய துர்கையின் கோவில்களும்

பெரும் பொழுதான வேனில்காலத்தின் கடும் பகல்பொழுது என விளங்கி

பாலை நிலம் எனக்கூறும்படி விளங்கின.

1093.

மலர்க் கொத்துகளை அலைத்துக் கொண்டு வருகின்ற

மிக்க நீருடைய காட்டாறுகள் இடையிடையே பரந்து

கொல்லை நிலத்தில் குருந்த மரத்தில் பந்தலாய்ப் படர்ந்த

முல்லைக் கொடிப்புதர்களில் பதுங்கும் முயல்களை துரத்தும்

பின் அடங்கும் !

இப்படியான முல்லை நிலங்கள் எல்லையில் உள்ளன.

1094.

பிளவு கொண்ட குளிர்நிலவு போன்ற நெற்றியுடையவர் இடைச்சியர்

“அவர்தம் பற்களின் அழகைக் களவு கொண்டன இந்த முல்லை அரும்புகள்

என களாச் செடிகள் பழி கூறும்!

இடைச்சியரின் கூந்தல் நீளம் போன்ற அக்களவு அறிந்து

களாப்பழத்திடம் முல்லைகள் சிரித்துக் கூறின:

“தமக்கும் அக்களவு உண்டு”

1095.

மான்குலங்கள் தோற்றன மங்கையரின் விழி கணைகளால்

எங்கும் முல்லைக்கொடிகள் தோல்வி அடைந்தன-

இடைச்சியரின் இடையால் !

முல்லை நிலத்தின் தெய்வமென அருந்தமிழ் கூறுகிற

சிவந்த கண்ணுடைய திருமால் வழிபடும் சிவனார்

மகிழ்ந்து வீற்றிருக்கும் திருமுல்லைவாயில்

தொண்டை நாட்டில் உள்ளது.

1096.

திருநீறு சேர்ந்த திருமேனியர்

நிலவு திகழும் முடிமேல் நிகரற்ற கங்கை

அவர்க்கு திரு மஞ்சன நீர் தரவென்றே சேர்ந்து

ஊறும் நீர் தரும் ஒளி மலர் உடைய “கலிகை மாநகர்” எனும் திருவூறல்

இத்தகு இடத்தை தன் சேமநிதியாகக் கொண்டது முல்லை நிலம்.

1097.

வாசமான மென்மலர்கள் நிறைந்த

முல்லைக்கொடிகள் கொண்ட முல்லை நிலத்தை அடுத்த மருத நிலத்தில்

தெளிந்த அலைகள் வீசும் பல நதிகள் உண்டு

மிக உயர்ந்து ஓடிய பசிய இலைகளுள்ள

பெரும் தாமரைகள் மலர்கின்ற வயல்களில்

பறவைகள் ஒலி மிகுதியாகக் கொண்ட வலிய கரைகளுள்ள குளங்கள்

ஏரியிலும் புகுவதுண்டு.

1098.

உயர்தவ மாதவனாகிய வசிட்ட முனிவனின்

காமதேனு எனும் சுரபியின் திருமுலை சொரிந்த பால்

பொங்கும் தீர்த்தமானது

நந்திமலை விட்டு இறங்கி

அங்குள்ள முத்துக்கள், சந்தனம், அகில்,ஆகியவற்றுடன் மணிகளை

தாமரைக்குளங்களில் நிறைக்குமாறு ஓடிவருவது பாலாறு எனப்படும்.

1099.

குழந்தை –

தனது கையால் தடவ பால்சொரியும் முலைத்தாய் போல

உழவர்கள் வேனில் காலத்தில்

மணல்மேடு பிசைந்து கால்வாய் உண்டாக்கியதும்

ஊறிப்பெருகும் நீர் இருபுறமும் மிதந்து ஏறிச் சென்று

பள்ளமான நீண்ட வயலின்

பருத்த மடைகளை உடைப்பது பாலாறு எனப்படும்.

1100.

அத்தகு இயல்புடைய நதிகள் பரவி

வயல்களின் பக்கங்களில் எல்லாம்

ஒலி செய்கின்ற பெரிய நீர் நிறைந்துவிடும்

திண்ணிய கரையுடைய பெருங்குளங்கள் நிரம்பி

மதகுவாய்களைத் திறந்துவிடும்

பள்ளமான நிலத்தின் நீள் வயல்களில்

பருத்த மடைகள் அதனால் உடைப்பட்டு ஒலியும் நீர் வழங்கும்.

1101.

நிகரில்லாத வளம் அளிக்கும் எருமைக்கடாக்கள் பூட்டிய ஏர்களால்

வயல்களை சேறு செய்பவர்-

செந்நெல்லின் வெண்முளை சிதறி நாற்று விடுபவர்-

நாற்று பறிப்பவர்; நடுபவர் என

பல் வினைகள் செய்பவரின்

பெரிய ஆரவாரம் எங்கும் மிகுந்து காணப்படும்.

1102.

வருகின்ற பெரும் வாய்க்கால் நீரை –

வாளை மீன்கள் மறிக்கும் அதனால்

வாய்க்கால்கள் விலகிச் செல்லும்

வயல்களில் நெருங்கிய சேல் மீன்களின் கூட்டமோ

பள்ளமான வயல்களை –

நீண்ட கரையாக உயர்த்திவிடும்

மதகுகள் வழியே வருகின்ற நீரை-

வரால் மீன்கள் அடைத்துவிடும்.

1103.

நீர்வளமுடைய மருத நிலப்பகுதியில்

வரப்புடன் கூடிய பெரிய வயல்களில்

வளைந்த செந்தாமரைப்பூ என்ற இருக்கையில் சூல்கொண்டு

இளைத்த சங்குகள் உறங்கும் அச்சங்குகள் நிறைமதியாக உள்ளது

பசிய பயிர் நிலம் –

பச்சை வானாக உள்ளது

நிலவைச் சுற்றிய பரிவேடமாக தாமரை உள்ளது.

1104.

ஓங்கி உயர்ந்த செந்நெல்லின் அருகில் உயர்ந்த கழைக்கரும்புகள்

அக்கரும்புகள் அருகே நெருங்கிய பாக்கு மரங்கள்

அப்பாக்கு மரங்கள் அருகே நீண்ட குலைகளுடன் தென்னை மரங்கள்

மற்றும் பலாமரங்கள் , பசிய வாழைமரங்கள், இனிய தீங்கனி மாமரங்கள்

இத்தனையும் பொருந்தியது நீண்ட வேலியுடைய சோலை.

1105.

வளமையுடன் கூடிய பழைய ஊர்கள்

குளிர்ந்த பெரும் வயகளால் சூழப்பட்ட நீண்ட பக்கங்கள் உடையன

நெற்கூடுகள் நெருங்கிய இல்லங்கள் உடையன

விருந்தினரை உபசரிக்கும் பெருமையில் நிலைத்த பெரிய குடிகள்

இல்லறத்தால் விளங்குவதற்கு

மாடங்கள் ஓங்கிய தெருக்கள் உடையன.

1106.

தொன்மையான நான்குமறைகளின்

பெருமைமிகு கலைகளை ஓதுகின்ற ஒலி மிக்க இல்லறம்

ஆங்கு ஆகுதிகளுடன் எழுந்த திடமான புகை –

மழை தரும் முகில் குலத்தைப் பரப்புகின்றதால்

செல்வம் மிக்க செழித்த இடங்களாக விளங்கின.

1107.

தீமை நீங்கிட “தீக்காலி” என்ற அவுணணுக்கு

இறைவன் அருள் செய்ததும்

நல்வினைப்பயன் செய்யும் மாதர் தோன்றிய

மரபுடைய அந்தணரின் ஊரானது “திருச்செல்வம்” என்ற தலம்

சிவச்சின்னமான உருத்திராக்கத்தைப் போற்றிய பெருமையுடையது.

1108.

மருத நிலமானது –

அருகிலிருக்கும் குறிஞ்சி மலைச்சாரல் அருவி தந்த செம்மணிகளும்

முல்லை நிலம் வாரித்தந்த பூக்களும் கலந்து

ஓடைகளில் நிறைந்து பாலாற்றின் கரையில் பொருந்தும்

கங்கை வாழ் சடையுடைய சிவபெருமான் வீற்றிருக்கும்

“திருமாற்பேறு” என்ற ஒப்பிலாத கோவில் உடையது.

– திருவருளால் தொடரும்

sathiyamohan@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்