பெரியபுராணம்–119 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

பா.சத்தியமோகன்



3416.

தாம் ஆட்கொண்ட வன்தொண்டரின்

திருமணச்செயல் முடிப்பதற்கு

ஆதிபுரியான

திருவொற்றியூரை உடைய இறைவர்

அன்று இரவே

திருவொற்றியூரில் வாழும் அடியார்களுக்கு

அந்தத் திருமணத்தை செய்வதற்கு

மனதில் தோன்றுமாறு உணர்த்தினார்

3417.

“நம்பி ஆரூரனுக்கு

சங்கிலியார் எனும் மங்கையை

இந்த உலகத்தில்

நம் கட்டளையால் மணம் செய்து

வானுலகினரும் அறியும்படி அளிப்பீராக”

என்று உணர்த்தினார்

தம்பெருமானின் தொண்டர்கள்

அந்த அருள் ஆணையை

தலை மீது தாங்கி எழுந்தனர்.

3418.

உலகம் நிறைந்த பெருஞ்செல்வம் உடைய
திருவொற்றியூரில்

நிலை பெற்று வாழும்

எண்ணிலாத திருத்தொண்டர்கள்

அழகிய அந்தத் திருத்தலத்தில் உள்ளவர்களுடன் கூடிவர

கற்பக விருட்சத்தின் மலர்களை

தேவர்கள்

மழைபோல் பொழிந்திட

கண்கள் மகிழ்வினால் நிறையுமாறு

மிகப்பெரிய சிறப்புகளுடன்

கலியாணம் செய்து அளித்தனர்.

3419.

முன்காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியால்

பசுபதியாகிய சிவபெருமான் அருளாலே

வண்டுகள் மொய்க்கும் மலர்சூடிய கூந்தலுடைய

பூங்குழலியான சங்கிலிஅம்மையாரைத்

திருமணம் புரிந்த நம்பி ஆரூரர்

தாமரையில் வாழும் திருமகளின் அழகையும் வென்ற

சங்கிலியாரது தூய பெண்மை நலத்தினை

பெருவிருப்புடன்

கண்டும்

கேட்டும்

உண்டும்

உற்றும் அனுபவித்திருந்தார்

3420.

யாழினைவிடவும் இனிய மொழி

அழகிய எழில் புன்முறுவல்

இரு செவிகளிலும் அணிந்த குழைகள்

பிறழ்ந்து செல்லும் மாவடு போன்ற கண்களின் பார்வை

சந்தனக் கோலம் அணிந்த கொங்கைகள்

இத்தனையும் கொண்ட சங்கிலியாரின்

அல்குல் தடத்தில் படிந்து வீழ்ந்து

முழுகி அழுந்தும்

நம்பி ஆரூரர் – சங்கிலியார் இருவருக்குமிடையில்

தோன்றி மிகும் புணர்ச்சி

ஒரு கணம் எனினும்

அது

ஊழிக்குச்சமமாக நீளும்

அந்த யுகம் ஒரு கணமாகச் சுருங்கும்.

(குழை – தோடு)

3421.

இத்தகைய நிலையில்

பேரின்பம் நுகர்ந்து

இனிதாய் வீற்றிருக்கும் நம்பி ஆரூரர்

நிலை பெற்ற புகழுடைய திருவொற்றியூரில்

மகிழ்ந்து சிறப்புடன்

தலையில் பிறை சூடும் இறைவரது திருப்பாதம் தொழுது
வாழ்ந்தார்

எண்ணிய காலங்கள் பல

முறையோடு தொடர்ந்து சென்று கொண்டிருந்தது

வந்து அகன்று கொண்டிருந்தது.

3422.

பொங்குதமிழ் வளர்கின்ற இருப்பிடமான

பொதிய மலையில் பிறந்து

பூஞ்சந்தன மரங்களின் மணத்தில் அளவளாவி

குளிர்ந்த

நீர்ச்சாரலில் வளர்ந்த செழுமையான தென்றல்காற்று

திருவொற்றியூர் வந்து சேர்ந்தது.

அழகிய வீதியுடைய திருவாரூர்
விதிவிடங்கப்பெருமான் அழகர்

மங்கலமான திருவிழா நாட்களில்

வசந்தம் எதிர்கொள்ளும் தன்மையை

நம்பி ஆரூரர் நினைத்தார்.

3423.

வெண்மதியின் கொழுந்து அணிந்த வீதிவிடங்கப்
பெருமான்

அழகிய நெற்றியுடைய

பரந்த திருவோலக்கத்தில்

இசையின் தன்மை பெற்ற மொழி கொண்ட

பரவையாரின் பாடலையும் ஆடலையும்

கண்களால் காணவும் கேட்கவும் பெற்றவர் போல

நம்பி ஆரூரர் கருதினார்.

3424.

திருவாரூரின் பூங்கோயிலில்

விரும்பி அமர்ந்தவரை

புற்றினை இடமாகக் கொண்டு இருப்பவரை

நீங்காத பக்தியுடன்

காதலுடன்

தம்மை நினைப்பவரை

தாம் நினைக்கின்ற இறைவரை

முன்நாளில்

பணிந்து பெற்ற பயனாகியசிவானந்தப் பயனை

உணர்ந்து பார்த்தார்

“இங்கு அதெல்லாம் மறந்திருக்கின்றேனே”

என வருந்தி உள்ளம் அழிந்தார்.

3425.

மின் போல் ஒளிர்கின்ற

சிவந்த சடையுடைய இறைவரை

வேதங்களின் முதல்வராக உள்ளவரை

புகழுடைய திருவாரூரில் மகிழ்பவரை

பிரிவாற்றாமையுடன்

மிகவும் நினைத்தார்

“பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்”

எனத்தொடங்கும்

சொல்லும் பொருளும் கொண்ட

இசைத் திருப்பதிகத்தை

பலமுறையும் அடுக்கிய சொற்களால் பாடினார்.

3426.

பிறகு

ஒருநாள்

திருவாரூரை மிகவும் அதிகமாக நினைத்தார்

பெருக உருகினார்

ஆதிபுரியான திருவொற்றியூர் கோயில் புகுந்து
வணங்கிவிட்டு

திருவொற்றியூர் செல்வதற்காக நீங்கினார்

தாம் செய்த சபதத்தினை மீறி

முன்னே செல்ல

அடிவைக்கும்போதே

கண் ஒளி போயிற்று

கண்ணொளி மறைந்தது

மயக்கம் அடைந்தார்.

3427.

தாம் செய்வது இன்னது என அறியாமல் திகைத்து

பெருமூச்சு விட்டார்

“மை பூசிய கண்களையுடைய

சங்கிலியாரிடம் செய்த சூள் மீறியதால்

சபதத்தினை மீறிய காரணத்தால்

இந்த வினை வந்து எய்தியது” என நினைத்தார்

எம்பெருமானை இத்துயர் நீங்கப் பாடுவேன் என
நினைத்தார்

(சூள்- சபதம்)

3428.

“அழுக்கு மெய்கொடு” எனத் தொடங்கும்
திருப்பதிகத்தை

நெடிய ஆதிபுரியாகிய திருவொற்றியூர் அண்ணல் மீது

வாழ்த்தும் நெஞ்சோடு

நிலத்தில் வீழுந்து வணங்கினார்

மாதொரு பாகத்தனார் சிவபெருமானின்

மலர்ப்பாதம் நினைந்தார்

இழுக்கு நீங்கிட வேண்டும் என இரந்தார்

வேண்டினார்

“கொடும் துன்பம் தருகின்றதே

கையறுநிலை ஏற்படுத்திவிட்டதே

நாணம் பழிக்கின்றதே”

எனப் பலப்பலவாக நினைப்பவர் ஆனார்

நல்லிசையினால் துதித்துப் பணிந்தார்

3429.

அங்கு

அப்போது

நாதர் அருள் செய்யவில்லை

அழகிய கைகளைக் தலைமீது குவித்துத் தொழுதார்
சுந்தரர்

திருவாரூருக்குச் சென்று வணங்கும் ஆசை விடவில்லை

பொங்கி எழுந்த காதலினால்

உடன் வருகிறவர்கள் வழிகாட்ட

திங்கள் வேணியாராகிய சிவபெருமானின்

திருமுல்லைவாயில் சென்றார்

துதித்தார் வணங்கினார்

“சங்கிலிக்காக என்கண்களை மறைத்தீரே” எனும்

பெருமை நீண்ட

திருப்பதிகத்தைத்

தன்மையுடன் பாடினார்.

3430.

தொண்டைமானுக்கு

முன்காலத்தில் அருளிய தலம்

பழமையான தலம்

வள்ளல் தன்மையும் புகழும் மிகுந்த தலம்

அத்தகைய

திருமுல்லைவாயில் நாயகரை

சிவனாரை

“வெந்துயர் களைக” எனத் துதித்தார்

காதலினால்

உருகிய எண்ணத்தின் வழியே சென்று

வண்டுகள் உலவும்

சோலைகள் சூழ்ந்த

மாடமாளிகைகள் கொண்ட

திருவெண்பாக்கம் சென்றார்

கண்டனர் தொண்டர்கள்

எதிர்கொண்டு வணங்கினார்

சினமுடைய யானை உரித்த சிவபெருமானின்

திருக்கோயில் அடைந்தார்.

3431.

எதிர்கொண்டு வரவேற்ற தொண்டர்களுடன்

கோவிலை வலமாக வந்தார்

நெற்றி எனும் அங்கத்தில்

கண் உடைய இறைவரான

அங்கண் நாயகரின் கோவில் முன்பு வந்து சேர்ந்தார்

இறைவரின் அருள் குணங்களைப் போற்றி வணங்கினார்

அஞ்சலியால்

கைகளை

தலைக்குமேல் குவித்து நின்று வணங்கி –

“தாங்கள் மகிழ்ந்து கோவிலில் உள்ளீரோ? ” என

வன்தொண்டராகிய நம்பி ஆருரர் வினவியதும்

ஊன்றுகோல் ஒன்றைத் தந்தார்

இணக்கமில்லாத மொழியால்

சொற்களால்

“யாம் உள்ளோம்! நீர் போகீர்” என

அயலார் போல இயம்பினார் சிவபெருமான்

3432.

“பிழையினைப்பொறுத்திடுவர்” எனத் துவங்கி

மழை தவழும்

உயர்ந்த மதிலுடைய

திருநாவலூரின் மன்னர்

நம்பி ஆருரர்

உமை அம்மையை ஒருபாகம் விரும்பிய இறைவரை

திருவெண்பாக்கம் வீற்றிருக்கும் இறைவரை

“சங்கராபரணம்” என அடியார் போற்றிட

பாம்பு அணிந்த இறைவரைப் பாடினார்

3433.

முன்நின்று

முறையிடுவதுபோல மொழிந்தார்

சொல்மாலையாகிய திருப்பதிகத்தை

இசையுடன் பாடியபின்

“ பற்று மிகக்கொண்ட

எனது தலைவனாகிய சிவனுக்கு

அருள்

இங்கு

இத்தனை அளவுதான் போலும்” என நினைந்து

நிலைத்த தொண்டர்களுடன் வணங்கி

வழிபார்த்துச் சென்றார்

3434.

அங்கணராகிய சிவபெருமானின்

அந்தத் தலத்தை விட்டு அகன்று சென்று

அன்பர்களுடன்

தாமரைப்பூக்கள் பூக்கும்

பொய்கைகளும் பணைகளும் சூழ்ந்த

“பழையனூர்” சேர்ந்தார்;

காரைக்கால் அம்மையார் தமது தலையாலே

வலம் வந்த

சந்திரன் சூடிய சிவபெருமானின் திருவாலங்காட்டின்

பக்கத்தில் தங்கினார்

3435.

இறைவர் திருமுன்பு நின்று தொழுதார் வணங்கினார்

“முத்தா” எனத் துவங்கி

இசையுடன் கூடிய திருப்பதிகம் பாடி

மகிழ்ந்து துதித்தார்

அங்கு நின்று வணங்கிய பிறகு

“ திருவூறல்” எனும் பதியை விருப்புடன் வணங்கி

திருமதில்களும்

அழகிய மாடங்களும் உடைய

காஞ்சி மாநகரம் அடைந்தார்

( “முத்தா முத்தி தரவல்ல”
என்பது

பதிகத்தின் தொடக்கம்)

3436.

தேன் வண்டுகள் நிறைந்த

பூஞ்சோலைகள் சூழ்ந்த

காஞ்சி மாநகர் எனப்படும் கச்சியின்

திருக்காமத்தோட்டத்தில்

ஊனும் உயிருமாய் வளர்கின்ற

உயிர்களுக்கெல்லாம்

சிறுகணப்பொழுதும் நீங்காத கருணையினால் ஆகிய

அறங்கள் யாவையும் வளர்த்துக்காக்கின்ற

காமாட்சி அம்மையின் திருக்கோயில் முன்

வானம் வரை உயர்ந்த திருவாசல் முன்

வன்தொண்டரான சுந்தரர் வணங்கினார்

3437.

தொழுதார்

விழுந்து வணங்கினார் எழுந்தார்

அருளால் துதித்தார்.

தொன்மையான உலகம் முழுதும்

அளித்தும்

அழித்தும்

காத்தும் புரிகின்ற முதல்வரின்

திரு ஏகம்பம் எனும் காஞ்சியுள்

குற்றமிலாத அடியார்கள் முன் செல்ல

அவர்களுக்குப் பின்னால் சென்று வணங்குகிறார் சுந்தரர்

“பொய்யானான நான்

தங்கள் திருமுன்பு என்ன மொழிவேன்”

என இறைஞ்சினார்

வணங்கினார்

3438.

வான் உலகு ஆளும் தேவர்கள்

அமுது உண்ணுவதற்கு

மிக்க பெரும் நஞ்சை உண்ட கண்ணாளா ;

கச்சி ஏகம்பனே

கடையவனான நான் எண்ணாது செய்த பிழை பொறுத்து

இங்கு

அடியேன் காண்பதற்கு

அழகிய பவளநிற வண்ணா

கண் அளித்து அருள்வாய்” என வீழ்ந்து வணங்கினார்.

3439.

தாமரை மலர் போன்ற செங்கைத்தளிர்களால்

பனிமலர்களைத் தூவி வழிபட்டுச் சிவந்த

கயல் போன்ற கண்களையுடைய

மலை வல்லியான பார்வதி அம்மையார் திருவடி
நினைத்து

பொங்கிய அன்போடு

பரவித் துதித்தார் நம்பி ஆரூரர்

உமாதேவியார் தழுவக்குழைந்த திருமேனி உடைய
திருஏகம்பர்

சுந்தரர்க்கு

மறைந்துபோன இடக்கண் பார்வை கொடுத்து அருளினார்

3440.

உலகைத் தோண்டிய திருமாலும்

குளிர்ந்த விசும்பு கடந்த நான்முகனும்

முடிவினை அறிவதற்கு அரிதான இறைவர் –

உமை தழுவியதால்

முலை பதிந்த தடம் கொண்ட

திருக்கோலத்தைக் காட்டினார்

குறுகினார்

நிலம் பொருந்த விழுந்து எழுந்து மகிழ்ந்தார் ஆரூரர்

“ஆலந்தான் உகந்து” எனத் தொடங்குகிற

திருப்பதிகம் ஆடிப்பாடினார்.

(விசும்பு – வானம்)

3441.

பாடினார்

மிகவும் பரவசமாகிப் பணிந்தவருக்கு

அம்மையாருடன் கூடிய நீண்ட திருக்கோலம் காட்டினார்

விருப்பம் நிறைந்து வணங்கினார் சுந்தரர்

வணங்கினார்

தலை மீது அஞ்சலி செய்பவராய்த் தொழுதார்

திருக்கோயில் வெளியே வந்து

அன்பில் கூடிய தொண்டர்களுடன் சேர்ந்து வணங்கி

அந்தத் தலத்தில் விரும்பித் தங்கியிருந்தார் ஆரூரர்.

3442.

மாமலை வல்லியாள் காமாட்சி அம்மையின்

முலைச்சுவடும்

வளையல் தழும்பும்

பிறையும்

கொன்றை மலர்களும் கொண்ட

சடையராகிய

சிவபெருமானைப்போற்றிட

அங்கு

அவரே செய்யும் திருவருள் அவ்வளவோடு நிற்க

தேன் பொருந்திய மலர்கள் சூழ்ந்த

காஞ்சித்திருநகரம் கடந்தார்

பாட்டுகளின் தன்மை விரிந்து கிடக்கும் மாலையான

திருப்பதிகத்தை

திருவாரூரின் மேல் பாடியபிறகு

அங்கிருந்து செல்லத் துவங்கினார்.

3443.

“அந்தியும் நண்பகலும்” எனும் திருப்பதிகம்
தொடங்கி

மிக விருப்பத்துடன்

“எம் இறைவரின் திருவாரூர் என்று சென்று சேர்வேன்”
எனும் குறிப்போடு

சந்தம் நிறைந்த இசையோடு பாடிச்சென்று

தாங்க இயலாத பேரன்பு பொருந்திட

அன்பர்களுடன்

மகிழ்ச்சியுடன் வழியில் செல்பவரானார்.

3444.

நிலைத்த திருக்கோயில்கள்தோறும்

வன்னி இலையும் வில்வமும்

தலை மீது சூடிய இறைவர் முன்சென்று வணங்கி

புகழும் தமிழ் மாலைகளான பதிகங்கள் சாத்தி

துதித்துச் சென்றார்

அன்னப்பறவைகள் மிகுந்த வயல்களும்

நீர்மிகுந்த பொய்கைகளும் சூழ்ந்த

திருஆமாத்தூர் சேர்ந்தார்.

3445.

நெற்றி எனும் அங்கத்தில்

கண் உடையவரை

திருஆமாத்தூர் அழகரை

சிவபெருமானின் திருவடியை வணங்கினார்

தங்கும் இசை பொருந்திய திருப்பதிகம் பாடிப்போய்

உலகுக்கெல்லாம் மங்கலமாய் விளங்கும்

பெருமையுடைய

தொண்டை வளநாடு கடந்து சென்று

கோச்செங்கண் சோழர் பிறந்த

நீர்நாடு எனும் சோழநாடு அடைந்தார்

(ஆமாத்தூர் ;- பசுவுக்குத் தாயான ஊர் )

3446.

அந்நாட்டின் ஒரு பக்கத்திலுள்ள

திருநெல்வாயில் அரத்துறை சென்று அடைந்தார்

ஒளியுடைய படையான

மழு உடைய இறைவரின்

தாமரை போன்ற திருவடிகள் பணிந்து எழுந்து

சொல்மாலையான திருப்பதிகத்தை

“கல்வாயகிலும்” எனத் தொடங்கினார்

நிலைத்த ஆர்வமுடைய

திருத்தொண்டர்களுடன் கூடியிருந்தார்.

–இறையருளால் தொடரும்.


pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்