பூசை வைக்கும் தொழில் – உரைவெண்பா

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்


தேவ ஊழியம். நல்ல மேய்ப்பனின் மந்தையிலிருந்து ஆடுகள் வழிதப்பாமல் நல்வழி காட்டிப் போவது. எல்லாம் சரிதான். எங்களையும் மாதச் சம்பளக்காரர்கள் என்று அறிவித்துப் போடுங்களேன்.

இங்கிலாந்தில் பாதிரியார்கள் இப்படிக் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். புராட்டஸ்ட்ண்ட் கிறிஸ்துவ மதம் நான்கு நூறு வருடமாக அரசாங்க மதமாக இருக்கும் இங்கே, இந்தக் கோரிக்கையை விடுத்திருப்பவர்கள் கத்தோலிக்க பாதிரியார்கள். இவர்கள் கூடவே பாப்டிஸ்ட், செவண்த் டே அட்வெண்டிஸ்ட், பெந்தகொஸ்தே என்று இதர குருக்களும் போராட்டக் கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.

பின்னே என்ன ? இந்தப் பங்குத் தந்தைகளுக்கு மேலே அதிகாரம் செலுத்தும் பிஷப்புகளின் தொல்லை தாங்க முடியலை. அதிக நேரம் வேலை பார்க்கச் சொல்லி உயிரை வாங்குகிறார்கள். செய்கிற வேலைக்கு ஏகப்பட்ட நொட்டச் சொல். பிஷப் என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போட வேண்டி இருக்கிறது. இல்லையா, பாதிரி உடையைப் பிடுங்கிக் கொண்டு விரட்டி விடுவேன் என்று மிரட்டுகிறார்கள் (defrocking of the priest என்பதை அதிரடியாக மொழிபெயர்க்க முடியாது).

பாதிரி வேலையை விட்டுப் போகச் சொன்னால், வேறு என்ன வேலை செய்து காலத்தை ஓட்ட முடியும் ? மடாலயம் கொடுத்த வீடு இல்லாவிட்டால் எங்கே போய் ஒண்டுவது ?

இதையெல்லாம் யோசித்து யோசித்து இத்தனை நாள் பொறுமை காத்த பாதிரியார்கள் பொங்கி எழுந்து விட்டார்கள்.

அமிக்கஸ் என்று தொழிற்சங்கம் அமைத்து, ‘பாதிரித் தொழிலையும் ‘ தொழில்துறைச் சட்டத்துக்குள் (Employment Relations Act 1999) கொண்டு வரவேண்டும் என்று போராட்டம். தொழில்துறை அமைச்சரைச் சங்க நிர்வாகிகள் சந்தித்துக் கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்கள். போராட்டம் என்று இன்னும் தெருவில் இறங்கவில்லை.

சட்டம் என்ன சொல்கிறது ? தொழிற்துறைச் சட்டப்படி, இந்த மண்ணில் இருக்கும் ஒரு நிர்வாகிக்கும் அவருக்குக் கீழே வேலை பார்க்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் இடையே இரண்டு பேரும் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தம் இருந்தால்தான் அவர்களைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியுமாம். மடாலயத்தில் வீடு கொடுத்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் வைத்துப் பாதிரியாரைத் தொழிலாளர் என்று சொல்ல முடியாது. (There is no contract that the priest in question will serve a terrestrial employer.).

கடவுள் எங்கும் இருக்கிறார் என்பது எல்லாம் சரிதான். ஆனால் சட்டப்படி அவர் terrestrial employer இல்லையாம்!

‘பாவத்தின் சம்பளம் ‘ பாதியில் வ்ிட்டவர்
‘மீதத்தை நாளைக்கு ஓதலாம் – வேகமாப்
போகணும் போராட்டம் போதலை ஊதியம் ‘
வாகனம் பாதிரியே றுவார்.

அன்புடன்,
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்