புளியன்கொம்புகளின் முள்ளங்கிகள்! அறுவடை செய்யுமா அமுக்கி வாசிக்குமா, காங்கிரஸ் அரசு?

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

B. R. ஹரன்.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வி.சந்திரன் என்பவர் தாக்கல் செய்த ஒரு மனுவில், சுவிட்ஸர்லாந்து மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியப் பெரும்புள்ளிகள் சேமிப்பாக முதலீடு செய்துள்ள பணம் எவ்வளவு என்கிற விவரத்தை வெளியிடக்கோரி, அமலாக்கப் பிரிவு இயக்குநரகத்தைக் கோரியிருந்தார். இயக்குநரகம் மறுக்கவே அவர் மத்திய தகவல் கமிஷனை அணுகினார்.

அவர் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மத்திய தகவல் கமிஷன், அமலாக்கப் பிரிவு இயக்குனரகத்திடம் விவரம் கேட்டிருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என்று பதிலளித்த இயக்குனரகம், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் தகவல்களை அளிக்க இயலாது என்றும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

இதை ஏற்க மறுத்த தகவல் கமிஷன், “சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றியோ, விசாரணையின் தன்மை பற்றியோ தகவல்கள் அளிக்கத் தேவையில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்பதை வெளியிடலாம். எனவே, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மொத்த தொகை குறித்த விவரங்களை வெளியிடவேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்தா? மூச்! – காங்கிரஸ் அரசு

உலகத்தில் இருக்கின்ற கறுப்புப்பணச் சரணாலயங்களை எடுத்துக்கொண்டால் சுவிட்ஸர்லாந்தில்தான் இந்தியப் பெரும்புள்ளிகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அமுக்கி வைத்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சனை போன வருடம் நடந்த பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பா.ஜ.க தலைவர் அத்வானி, தங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைக் கண்டிப்பாக எடுக்கும் என்று பிரசாரம் செய்தார்.

தேர்தல் முடிந்து, மன்மோகன் சிங் இரண்டாம் முறை பிரதமராகப் பதவி ஏற்றபோது, 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் ஒன்றறை வருடம் கழித்து இப்போதுதான் முதல் செய்தி வந்திருக்கிறது. அதுவும் பா.ஜ.க எடுத்த முயற்சியின் விளைவாகத்தான்.

நாங்கள் தயார்! – சுவிட்ஸர்லாந்து

அதாவது, மத்தியத் தகவல் கமிஷனின் உத்தரவு மிகச் சரியான நேரத்தில்தான் வந்துள்ளது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்த மாதம் முதல் வாரத்தில்தான் பா.ஜ.கவின் ராஜ்ய சபா அங்கத்தினர் திரு தருண் விஜய் அவர்கள் தன்னுடைய சுவிட்ஸர்லாந்து பயணத்தின்போது, அந்நாட்டின் வெளியுறவுக் குழுவின் தலைவர் திருமதி கிறிஸ்டா மார்க்வால்டரை சந்தித்து கறுப்புப்பண விவகாரத்தைப் பற்றிப் பேசியுள்ளார். அப்போது கிறிஸ்டா, சமீபத்தில் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீ அவர்களை சந்தித்து இது குறித்துப் பேசி இருநாடுகளும் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாகச் சொல்லியுள்ளார். விவரங்களை வெளியிடத் தங்கள் அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூற்றுப்படி, சென்ற ஆகஸ்டு மாதம் 31-ஆம் தேதி இந்தியா வந்த சுவிட்ஸர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி மிஷெலைன் கால்மி ரே இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜீயுடன் புதிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுவிஸ் வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை அமுக்கிவைத்திருக்கும் பெரும்புள்ளிகள் வெளிச்சத்திற்கு வந்தேயாக வேண்டும். ஆயினும் இதற்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் எப்போது எவ்விதம் தாக்கல் செய்யப்படும் என்கிற விவரத்தை வெளியிடாமல் மத்திய காங்கிரஸ் அரசு மௌனம் சாதிக்கிறது.

இந்த அளவிற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செயல் பட்டதற்குக் காரணமே எதிர்கட்சியான பா.ஜ.க எடுத்த முயற்சியும், பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியும்தான் என்று சொல்லலாம். கோடிக்கணக்கான அளவில் வரி ஏய்ப்பு செய்யும் இந்தியப் பெரும்புள்ளிகளின் கருப்புபணம் சுவிஸ் வங்கிகளில் மட்டுமில்லாமல் ஐரோப்பா மற்றும் பல இடங்களில் உள்ள கறுப்புப்பண சரணாலயங்களிலும் சேமிப்புகளாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கறுப்புப்பணச் சரணாலயம்

மேற்கு ஐரோப்பாவில் “லியெக்டென்ஸ்டெயின்” (Liechtenstein) என்கிற ஒரு குட்டி நாடும் கறுப்புப்பண சரணாலயமே. உலகத்தில் இருக்கின்ற பல நாடுகளைச் சேர்ந்த பெரும்புள்ளிகள் தங்கள் நாட்டில் வரி ஏய்ப்பு செய்து, சட்டத்தை ஏமாற்றி, சம்பாதித்த கறுப்புப் பணத்தையெல்லாம், இந்த நாட்டில் இருக்கின்ற வங்கிகளில் மறைத்து வைக்கின்றார்கள்.

எல்.ஜி.டி.வங்கி

எகனாமிக் டைம்ஸ் (The Economic Times) பத்திரிகை ஒரு கட்டுரையில், பின்வரும் விவரங்களைத் தெரிவிக்கிறது:

“இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே இருக்கின்ற இரட்டை வரி ஏய்ப்புக்கு எதிரான ஒப்பந்தப்படி (DTAA – Double Taxation Avoidance Agreement), ஜெர்மானிய அதிகாரிகள் இந்திய அரசுக்கு லியெக்டென்ஸ்டெயின் நாட்டில் இருக்கின்ற எல்.ஜி.டி வங்கியில் (LGT Bank) கறுப்புப்பண கணக்கு வைத்திருக்கின்ற இந்தியப் பெரும்புள்ளிகள் பற்றிய தகவல்கள் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தியப் பெரும்புள்ளிகள்

அந்தத் தகவல்களின் அடிப்படையில், சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருக்கின்ற பெரும்புள்ளிகளின் வருமான வரிக் கணக்குகளை மீண்டும் தணிக்கைக்குள்ளாக்கிய நிதியமைச்சகம், 18 பெரும்புள்ளிகள் வரி ஏய்ப்பு செய்து சம்பாதித்ததும் கணக்கு காட்டாததுமாக வைத்திருந்த மொத்தம் 43.83 கோடி ரூபாய் பணத்தைக் கண்டுபிடித்திருக்கிறது என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு.பழனி மாணிக்கம் பாராளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் அந்த பெரும்புள்ளிகளிடமிருந்து ரூ. 24.28 கோடிகள் வரியாகக் கட்டவேண்டும் என்று அரசு அதிகாரமாகக் கேட்டிருப்பதாகவும், வருமானத்தை மறைத்ததற்காக அபராதம் விதித்து தண்டனை கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லியிருக்கிறார்.

தேவை ‘தகவல் பரிமாற்றம்’

ஜெர்மனியுடன் போட்ட ஒப்பந்தம் வெற்றிகரமாகச் செயல் பட்டதனால், மற்ற கருப்புப்பணச் சரணாலயங்கள் இருக்கின்ற நாடுகளுடனும் ஒப்பந்தங்கள் செய்துகொள்ள இந்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே 79 நாடுகளுடன் இரட்டை வரி ஏய்ப்பிற்கு எதிரான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தாலும் ஒரு சில நாடுகளுடனான ஒப்பந்தத்தில்தான் ”தகவல் பரிமாற்றம்” என்கிற பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (OECD – Organisation for Economic Cooperation and Development) விதித்துள்ள முறைகளின்படி, “தகவல் பரிமாற்றம்” என்கிற பிரிவை (க்ஷரத்து-26) சேர்த்துக்கொள்ள 65 நாடுகளுக்கு இந்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது.

இதுவரை பெர்முடா, சுவிட்ஸர்லாந்து, பஹாமாஸ் ஆகிய நாடுகளுடனான ஒப்பந்தங்களில் மேற்கண்ட பிரிவைச் சேர்த்துக்கொள்வதாக இந்தியா பேசி முடித்திருக்கிறது.”

காங்கிரஸ் அரசை நம்பலாமா?

விவரமறிந்த பொருளாதார வல்லுனர்கள் இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை போதாது என்று நினைக்கறார்கள். “ஜெர்மனி அதிகாரிகள் கிட்டத்தட்ட 800 பெரும்புள்ளிகளின் பெயர்களைக் கொடுத்திருக்கும்போது, இந்திய அரசு வெறும் 18 நபர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது அரசின் நோக்கம் பற்றிய சந்தேகத்தை எழுப்புவதாக இருக்கிறது. சட்ட விரோதமாக வெளிநாடுகளில் சொத்தும் பணமும் வைத்திருப்பது வெறும் வரி ஏய்ப்பு விஷயம் மட்டும் கிடையாது. அந்தப் பெரும்புள்ளிகள் இத்தனை ஆண்டுகளாக நம் நாட்டின் ஆதாரங்களை ஆண்டு அனுபவித்து கரைத்து அழித்ததை எதில் கொண்டு சேர்ப்பது? இந்திய அரசு அவர்களின் பெயர்களை வெளியிட மறுக்கிறது. ‘துப்பறியும்’ ஊடகங்களும் வாய் மூடி மௌனமாக இருக்கின்றன. அதனால் எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து, அத்தனை கொள்ளைக்காரர்களின் பெயர்களையும் வெளியிடுமாறு அரசாங்கத்தை நிர்பந்திக்கவேண்டும்” என்று பொருளாதார வல்லுனர்கள் தெளிவாக்க் கருத்து தெரிவித்துள்ளனர்.


கோத்தரோச்சியின் போஃபர்ஸ் பீரங்கி ஊழல் முதல் கல்மாடியின் காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வரை, கோடிக்கணக்கான ரூபாய்கள் ஊழலில் மூழ்கியிருக்கின்ற கங்கிரஸ் “ஹை கமாண்ட்”, வரி ஏய்ப்பு செய்து கருப்புப்பணச் சரணாலயங்களில் ஆயிரக்கணக்கான கோடிகளை அமுக்கியிருக்கும் பணமுதலைகளை வெளியே அம்பலப்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகனுக்குப் பரிபூரண சுதந்திரம் வழங்குமா என்பது கேள்விக்குறியாகத்தான் மக்கள் மனதில் இருக்கின்றது.

Series Navigation