புதுமைப்பித்தனின் சமூகப்பார்வை

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

சுந்தர ராமசாமி


புதுமைப்பித்தனின் எழுத்துக்களால், அவரது சமூகப் பார்வைகளால், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற எழுத்தாளன் நான். ஏறத்தாழ, கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பாதிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தில் புதுமைப்பித்தன் பற்றி பேசக் கிடைத்த வாய்ப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

‘அன்னை இட்ட தீ ‘ என்ற தலைப்பில் இன்று வெளியாகியிருக்கும் புத்தகம் புதுமைப்பித்தனுடைய பிரசுரமாகாத மற்றும் தொகுக்கப்படாத எழுத்துகளின் புத்தக வடிவம். இதைப் பதிப்பித்தவர் என் அருமை நண்பர் ஆ.இரா. வேங்கடாசலபதி. அவர், தான் ஏற்றுக் கொண்டிருக்கும் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். மிகச் சிறப்பாக என்றுகூடச் சொல்லலாம்.

புதுமைப்பித்தனின் எழுத்துகள் ஒன்றுகூட விட்டுப்போகாமல் சேர்க்க வேண்டும் என்பதில் அவர் ஆவேச வெறியே கொண்டிருந்தார். அந்தக் குறிக்கோளில் அவர் பெரும்பாலும் வெற்றி பெற்றுவிட்டார் என்றே மதிப்பிட முடியும். முன்னுரையைப் படிக்கின்றபோது பதிப்பாசிரியர் பொறுப்பை எந்த அளவுக்கு நேர்மையாகப் பின்பற்றி வந்துள்ளார் என்பது தெரியும்.

வேங்கடாசலபதியின் பார்வையில் ஒரு எழுத்தாளனின் சிறுகதை, கட்டுரை, கவிதை மட்டுமே முக்கியமானவை அல்ல. மறைந்த எழுத்தாளனின் டைரிக் குறிப்பு, தந்திகள், வீட்டுக்கணக்குப் பக்கங்கள் ஆகியனவும் முக்கியமானவை. இந்த விவரங்கள் இன்று சாதாரணமாகத் தென்பட்டாலும், பின்னாளில் இவை முக்கியமானதாக இருக்கும் சில உண்மைகளைக் காட்டி நிற்கும் என்ற பார்வை கொண்ட பதிப்பாசிரியர் அவர்.

கையில் கிடைத்த எல்லாவற்றையும் காலவரிசைப்படுத்தி, எந்த இதழில் வெளியானவை, எந்தக் காலத்தில் வெளியானவை என்று வரிசைப்படுத்தியுள்ளார். இதற்கு பல நண்பர்கள் உதவி செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு மிகை இல்லாமல் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். ஆராய்ச்சி என்பது கூட்டுப்பொறுப்பு என்ற முன்னுதாரணத்தை அவர் செய்து காட்டியிருக்கிறார்.

ஆராய்ச்சியாளர் பணியில் நேர்மை, தரம், உண்மை, மூலப்பிரதிகளைக் குலைக்கக்கூடாது என்ற உறுதி என எல்லாவற்றையும் அவர் கடைப்பிடித்திருக்கிறார். இன்று பல வார்த்தைகளைப் பயன்படுத்தி – நேர்மை, ஒழுங்கு, உண்மை, மூலம் குலையாது பேணுதல், கூட்டுமுயற்சி, பொறுப்புணர்ச்சி என்று சொல்கிறபோது, இந்த வார்த்தைகளை நீங்கள் ஏற்பீர்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எந்தச் சொற்களைச் சொல்லி நான் இன்று இப்புத்தகத்தைப் பாராட்டினேனோ, இதே சொற்களைப் பயன்படுத்தி, மூன்றாம் தரமான, மிகையாகக் கூறுவதென்றால் முப்பதாம் தரமான நூல்களையும் எண்ணற்ற மேடைகளில் பலர் பாராட்டியிருக்கிறார்கள்.

இந்தச் சொற்களுக்கான மதிப்புகளை இழந்து வருகிறோம். எண்ணற்ற சொற்களை இழந்து வருகிறோம். பல சொற்களுக்குப் படைப்பாளியைப் பொறுத்தவரை அர்த்தம் என்பதே இல்லை. புரட்சி, புரட்சிக்கனல், புரட்சி மன்னன், புரட்சித் தென்றல் (அற்புதமான இணைப்பு!) புரட்சி மன்னன், மேதை, மாமேதை என எண்ணற்ற சொற்கள் படைப்பாளியின் கருவூலத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் படைப்பாளி அவனுடைய பெரும் சொத்தான சொற்களில் ஏழையாகி வருகிறான். ஏழையாக மாறுவது தெரியாமலேயே ஏழையாகி வருகிறான். மாற்றுச் சொற்களை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

ஆராய்ச்சியாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தவே இன்று எனக்குத் தயக்கமாக இருக்கிறது. இன்று அந்தச் சொல்லில் சேறுபடிந்துள்ளது. நான் ஆராய்ச்சிக்கு வெளியே இருப்பவன். மிகப்பெரிய கட்டடங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த கட்டடங்களின் முகப்பு மண்டபத்தைப் பார்த்து வியப்புற்று, கட்டடத்தின் வெளியே நிற்பவன் நான். அந்தக் கட்டடங்களில் உள்ள ஆராய்ச்சி மையங்கள் வெளியிட்ட ஒரு புத்தகத்தை வாங்கிப் படித்து, என் சிற்றறிவுக்கு ஏற்ப மதிப்பிட முயன்றபோது என் நண்பர் ஒருவர் குறுக்கிட்டு, அந்த நூலில் குறிப்பிட்டிருக்கும் ஆராய்ச்சியாளர் அந்த நூலை எழுதவில்லை என்றும், அவருடைய மாணவர் எழுதியது என்றும், மாணவரிடமிருந்து திருடிய ஆராய்ச்சிக்கு வெட்கமில்லாமல் தன் பெயரை போட்டுக் கொண்டதாகவும் சொல்கிறபோது ஆராய்ச்சியாளர் ஆராய்ச்சிக் கட்டடங்கள் எனக்குள்ளாக சுக்குநூறாகச் சிதைந்து போகின்றன.

இது மட்டுமல்ல. இத்தகைய நூல்களால் எனக்கு இன்னொரு பொறுப்பும் வந்துசேருகிறது. எந்தவொரு ஆராய்ச்சி நூலை எடுத்தாலும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆசிரியர்தான் அந்த ஆராய்ச்சி நூலை உருவாக்கினாரா அல்லது வேறு யாராவது எழுதியதா என்று அறிந்துகொள்ளும் பொறுப்பும் எனக்கு வந்து சேர்ந்து விடுகிறது.

ஆராய்ச்சி என்று சொன்னாலே நேர்மைதான். ஆனால் இப்போது நேர்மை, உழைப்பு, தெளிவு, புதிய கண்டுபிடிப்புகள் இணைந்து நிற்கும் நூலைக்கூட ஆராய்ச்சி என்று குறிப்பிடத் தயக்கமாகிவிடுகிறது. இப்படி படைப்பாளிகள் சொற்களை இழந்து கொண்டு போகிறார்கள்.

மொழியின் தன்மை வலுவானதும் அல்ல; வலுவற்றதும் அல்ல. மொழியில் நம்முடைய கூர்மையை ஏற்றுகிறபோது, நுட்பத்தை ஏற்றுகிறபோது அந்த மொழி யதார்த்த உண்மைகளை அள்ளிக்கொண்டு வரும். அத்தகைய மொழி ஆற்றலை இன்று நம் மொழி இழந்து வருகிறது. ஆராய்ச்சித் துறையின் அவலத்தைச் சொன்னேன். ஆராய்ச்சித் துறையில் மட்டுமின்றி, எண்ணற்ற பிற துறைகளிலும் இதே காரியங்கள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. ஆராய்ச்சித் துறையிலிருந்து அரசியலுக்கு வரலாம். பின்னர் திரையுலகத்திற்கு வரலாம். அதன் பின்னர் மதவாதிகளின் கூத்தடிப்புக்கு வரலாம். ஒவ்வொரு இடத்திலும் மதிப்பீடுகள் அழுகிக்கொண்டிருக்கின்றன. அழுகிக் கொண்டிருக்கும் மதிப்பீடுகளை மறைக்கத்தான் இன்று மொழி பயன்பட்டு வருகிறது. அதனால்தான் மொழியில் பொய்மை இந்த அளவுக்கு இருக்கிறது. நாக்கு நுனியில் கவித்துவம் பட்டுத்தெறிக்கும் சொற்களாக வந்து கொட்டுகின்றன.

இப்போது புதுமைப்பித்தனுக்கு வருவோம். அவர், தான் இருந்த சூழலின் யதார்த்தங்களைக் கூச்சமின்றி, தயக்கமின்றி மதிப்பிட முயன்றார். யதார்த்தத்தில் நுட்பங்கள் இருக்கின்றன; பல ரகசியங்கள் இருக்கின்றன. இதை நாம் திடமாக உணரும்படி, அதை ஸ்பரிசிக்கும்படி மாற்றித் தந்தவர் புதுமைப்பித்தன். இது முக்கியமான சாதனை. அவர் படைப்புகளில், குடிமகன் முதல் கடவுள் வரை எல்லாரையும் சமூகப்பார்வை என்கிற மறுபரிசீலனைக்கு ஆளாக்கினார். இது மிக முக்கியமானது. அவரது பார்வையில் சமூக அடுக்குகளை மாற்றி அமைக்கிறார். புதிய பார்வை ஒன்றை உருவாக்கிக் கொண்டே வருகிறார். இதுவும் முக்கியமான செயல்பாடு.

அவர் வாழ்ந்த காலத்தில் நம்பிக்கை கொள்ள, பிடிப்புகொள்ள ஏதும் அவருக்கு இருக்கவில்லை. நம்பிக்கை கொள்வதைவிட அவநம்பிக்கை கொள்வதற்கான விஷயங்கள்தான் இருந்தன. தனது அவநம்பிக்கையை வெளிப்படையாக அவர் வைத்தார். புதுமைப்பித்தன் நகைச்சுவை உணர்வு உள்ளவர். அதனால்தான் பாதியில் முறிந்துபோன வாழ்க்கையை மறுபாதி வரை சகித்துக்கொள்ள முடிந்தது.

அவருடைய சமூகப்பார்வை இன்றைய மாணவர்களுக்கு, படைப்பாளிகளுக்கு, திரையுலகத்தவர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டிருக்குமானால் புதுமைப்பித்தனின் சமூகப்பார்வையிலிருந்து அவர்கள் போதிய பாதிப்புப் பெற்றிருந்தால் நம் சமூகம் இன்று இருப்பதைவிட மேம்பட்ட ஒன்றாக இருக்கும்.

நீண்ட கவித்துவ மரபிலிருந்து தொற்றிக் கொண்ட அதீதக் கற்பனைப் பார்வை; புராணங்களில் இருந்து பெற்ற பார்வை; இப் பார்வைகளை எல்லாம் தன்னால் முடிந்தவரை நிர்தாட்சண்யமாகத் தாக்கினார் புதுமைப்பித்தன். அவர் வாழ்ந்த 45 ஆண்டுகளில் சுமார் 20 ஆண்டுகள் இதைத்தான் அவர் செய்து வந்திருக்கிறார்.

அவர் மரணமடைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது அவருக்கு, இந்நூலின் மூலமாக, இரண்டாவது பிறப்பு கிடைத்துள்ளது. இப்போதாகிலும் புதுமைப்பித்தனைப் பொருட்படுத்தி, மதிப்பளித்து, அவரது பார்வை சார்ந்த விவாதத்தை நடத்தினால் அது புதுமைப்பித்தனைப் பாராட்டுவதாக இருக்கும்.

சென்னையில் ‘அன்னை இட்ட தீ ‘ நூல் வெளியீட்டு விழாவில் நிகழ்த்திய உரை – 27.12.1998 (தினமணி, 28.12.1998)

யுகம் மாறும் (தொ-ர் : ஆர். பத்மநாப ஐயர், லண்டன்) 1999

Series Navigation

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி