எச்.பீர்முஹம்மது
கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் என்ற என் புத்தகத்தின் வெளியீட்டு விழா
05-02-2011 அன்று நாகர்கோவிலில் நடைபெற்றது.அரங்கத்திற்கு ஒத்த பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். எல்லோருமே கடைசி வரை நிகழ்வுகளை அவதானித்தார்கள் என்பது மனநிறைவளித்தது.கூட்டத்திற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட எழுத்தாளர் பொன்னீலன் மற்றும் பேராசிரியர் முத்துமோகன் ஆகியோர் கடைசி நேர சிக்கலில் விழுந்து விட்டார்கள். “நாம் நாம்” அமைப்பினர் அவர்கள் வரக்கூடாது என்று சாலையின் குறுக்கே பெரிய மரத்தடிகளை போட்டது தான் இதற்கு காரணம். இவர்களில் பொன்னீலன் வயதான காரணத்தினால் குறுக்கு தடிக்குள் தான் விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இதை அதற்கான தகுதிப்பாடோடு நாம் தவிர்த்து விடலாம். ஆனால் முத்துமோகன் இதில் தடுக்கி விழுந்து காயம் பட்டது தான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக உள்ளது. சிறந்த பேராசிரியர், கூர்மையான சிந்தனையாளர், எல்லாவித கோட்பாட்டு மோஸ்தர்களையும் தெளிவான பார்வையில் வைக்கக்கூடியவர். அந்த வாசிப்பு அனுபவத்தை எளிமையாக ஸ்பரிசிப்பவர். தமிழ்ச்சூழலில் அ.மார்க்ஸ், தமிழவன் ஆகியோரின் சம வரிசையில் வருபவர். ஒரு கட்டத்தில் தமிழவன் கூட இவரை பார்த்து சின்னதாக நடுங்கியதுண்டு. இப்படியான குணாதிசயத்தை கொண்டவர் என் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருவதாக ஒத்துக்கொண்டு கடைசி நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்று சொல்லி இயக்கத்தார் போட்ட மரத்தடியில் கால்தடுக்கி விழுந்து தன் காலிலும், கையிலும் பலத்த காயத்தை வரவழைத்துக்கொண்டார்.சாலைகளில் திடீர் மறியல் போராட்டம் நடப்பது மாதிரி தான் இதுவும். இவர்கள் இருவரும் என் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என நாம் நாம் இயக்கத்தார் மிரட்டியதன் மூலம் எனக்கு தேவையான முக்கியத்துவத்தை தந்து விட்டார்களோ என்று கருத தோன்றுகிறது. இந்த விஷயத்தை நான் நேர்மறையான மனோபாவத்தோடு தான் அணுகுகிறேன். தமிழ்நாட்டில் வேறு யாருக்காவது இம்மாதிரியான அனுபவம் (சில தவிர்ப்புகளை நீக்கி விட்டு பார்த்தால்)ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. நான் இதில் “நாம் நாம்” என்று குறிப்பிட்டிருப்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுதந்திர இலக்கிய அமைப்பான (சில நேரங்களில் இதில் முதல் எழுத்து ஜம்ப் ஆகி விடும்) தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தை தான்.
தமிழ்ச்சூழலில் நான் உட்பட பலரின் எழுத்து வாழ்க்கை இப்படியான இயக்க பரப்பில் தான் தொடக்கம் பெற்றது. நான், ஜமாலன், அ.மார்க்ஸ், தமிழவன், கோவை ஞானி, பா.கல்யாணி, இராஜேந்திர சோழன், கௌதமசித்தார்த்தன், பெருமாள் முருகன்,சுப்ரபாரதிமணியன், என்.டி.ராஜ்குமார்,விடியல் சிவா போன்ற எல்லோருமே இது மாதிரியான இயக்கங்களின் தொடக்கத்தோடு வந்தவர்கள் தான். இதில் தமிழவன் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தில் இருந்தவர். அவர் அதிலிருந்து வெளிவந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை அவர்கள் அவரை ஒத்துக்கொள்வதோ, பொருட்படுத்துவதோ கிடையாது.அவரும் அதை பொருட்படுத்துவது கிடையாது. இதே மாதிரி தான் மற்றவர்களின் நிலையும். ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை தமிழில் அவர்களுக்கு தெரிந்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன்,தொ.மு.சி ரகுநாதன் ஆகிய இருவர் மட்டுமே.பின்னர் தான் பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி ஆகியோர் இணைந்து கொண்டார்கள். உலகளாவிய நிலையில் கார்க்கி மட்டுமே இடதுசாரி இயக்க வட்டாரங்களுக்கு பரிச்சயமானவர். இம்மாதிரியான இயக்கங்களின் ஒட்டுமொத்த வாசிப்பனுபவமே இதற்குள் தான் சுழன்று கொண்டிருந்தது. இதில் வினவு புகழ் ம.க.இ.க மட்டும் சற்று வித்தியாசம். தங்கள் இயக்கத்தவர்கள் எந்தெந்த நூல்களை மட்டுமே படிக்க வேண்டும் என்ற விபரப்பட்டியலை அவர்களின் கையில் திணித்து விடுவார்கள். அதன் பின்னர் வாசிப்பு என்பது உறுப்பினர்களின் தேர்ந்தெடுப்பை பொறுத்து அமையும்.எல்லாவித இயக்கங்களும் அதன் நிலையில் தனித்த இயங்குமுறையை கொண்டவை. தங்கள் இயக்கத்தில் புதிதாக வரும் இளைஞர்களின் குறிகளை யாரும் சப்பக்கூடாது என்று தீர்மானம் போட்ட காமெடியான இயக்கமும் உண்டு. இதில் கலை,இலக்கியத்தை அடிப்படையாக வைத்து இயங்கும் இயக்கங்கள் சற்று மாறுபட்டவை. தமிழ்நாட்டில் கழகங்கள் உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கான இலக்கிய பிரிவை வைத்திருக்கின்றன.இதில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவை சி.பி.ஐ மற்றும் சி.பி.எம்மிற்கு சொந்தமானவை. இதில் த.மு.எ.ச சமீபகாலம் வரை அதிகமும் கட்சியோடு ஒட்டி தான் இருந்தது. தமிழ்ச்செல்வன் தலைமை ஏற்றபிறகு தான் அதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.(புத்ததேவ் பட்டாச்சார்யாவின் தாக்கமாக இருக்கலாம்.) அவரின் தலைமை அதில் நிறைய இளைஞர்களை ஆகர்சித்திருக்கிறது. அறுபது மற்றும் எழுபதுகள் மாதிரியான வேகமான ஈர்ப்பு தற்போது இல்லாவிட்டாலும் இளைஞர்களின் ஆகர்சம் என்பது இன்றைய கட்டத்தில் சி.பி.எம் யை நோக்கியே இருக்கிறது.அதன் கவர்ச்சிகரமான தலைமையும், இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்த பதிலூட்டமுமே இதற்கு காரணம். இருந்தபோதும் தகுந்த வேகம் இல்லை என்று கடந்த அகில இந்திய மாநாட்டில் அவர்கள் குறைபட்டுக்கொண்டார்கள். ஆனால் சி.பி.ஐ தமிழ்நாட்டு அளவிலும், இந்திய அளவிலும் இந்த குறைபாட்டில் சிக்க காரணம் சி.பி.எம் போன்ற அணுகுமுறையோ, பார்வையோ அதற்குள் இல்லாமல் இருப்பது தான். இன்றளவிலும் சி.பி.ஐயும் அதன் துணை அமைப்புகளும் இதனைப்பற்றி உணராமல் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இதன் இலக்கிய பிரிவை பொறுத்தவரை அதன் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகமும் நிரப்புபவர்கள் அரசு ஊழியர்களே. இவர்கள் திரிபு வாதத்தையே தங்கள் வாழ்நாள் கலாசாரமாக கொண்டவர்கள். கொஞ்சம் இலக்கிய செயல்பாடு, கொஞ்சம் கட்சி செயல்பாடு, கொஞ்சம் தங்களின் சங்க செயல்பாடு இப்படியாக இவர்களின் வேலைத்திட்டம் இருக்கும். இம்மூன்றும் சார்ந்த நிகழ்வுகள், அதன் செயல்திட்டங்கள் ஆகியவை சார்ந்து இவர்களின் ஒட்டுமொத்த பணிக்காலமும் அமையும்.இப்படியான போக்கில் பத்து, இருபது வருடங்கள் என்பவை ஐந்து நிமிடம் போன்று மிகச்சாதாரணமாக இவர்களின் வாழ்வில் கடந்து விடும்.இந்த சிக்கலுக்குள் விழுந்து விடுவதால் சமகால உலகின் போக்கு குறித்த எவ்வித அவதானமோ, பார்வையோ இவர்களிடத்தில் இருப்பது கிடையாது. (ஊதியக்குழு காலகட்டத்தை அவதானிப்பது தவிர)இதன் தர்க்க ரீதியான தொடர்ச்சி தான் ஆறாம் ஊதியக்குழுவில் ” இன்று தனியார் துறையில் கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. ஆகவே அவர்களுக்கு இணையான சம்பளம் எங்களுக்கும் வேண்டும்” என்ற மிக அவலமான வாதம் முன் வைக்கப்பட்ட காரணம். தனியார் துறையின் பணிச்சூழல் குறித்த போதிய அறிவு அவர்களுக்கு இருந்தும் தங்கள் நலனுக்கான திட்டமிட்ட மாயையை அரசு சார்ந்த அமைப்பில் ஏற்படுத்தினார்கள். அவ்வாறு தாங்கள் முன் வைத்ததை சாதித்தும் விட்டார்கள். இன்று தனியார் துறை குறித்த அதீத மோகத்தில் பொதுப்புத்தி கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. கைநிறைய என்பது அங்கு பணிபுரியும் படித்த மத்தியதர வர்க்க இளைஞனின் இடுப்பெலும்பு ஒடிந்த நிலையின் பிரதிபலிப்பு தான். அதுவும் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்தே இது பெரும்பாலும் பேசப்படுகிறது. இன்றைய காலகட்டத்திலும் சென்னை போன்ற பெருநகரங்களில் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் மாதச்சம்பளம் ரூபாய் 5000 க்கு குறைவாக வேலைபார்க்கும் நிறைய மத்தியதர வர்க்க இளைஞர்களை நாம் பார்க்க முடியும்.இப்படியான தனியார்துறையை குறித்து இவர்கள் கண்டு கொள்வதே கிடையாது. இவர்களின் வாதப்படி கைநிறைய என்பது இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் மட்டும் தான். ஆனால் அங்குள்ள பணிச்சூழல் என்பது கரும்பை விட அதிகமாக பிழிந்தெடுக்கப்படும் நிலையே. மேலும் இன்று எந்த தனியார் துறையிலும் 58 வயது வரையான வேலை என்பதே கிடையாது. அதிகபட்சம் பதினைந்து வருடங்களை தாண்டினால் அது பெரும் சாதனை தான். பத்து வருட பணிக்காலம் நிறைவு செய்தவர்களை நீக்கி விட்டு அவர்களின் இடத்தில் புதியவர்களை பணியமர்த்தி சம்பள செலவினத்தை குறைத்துக்கொள்ளலாமா என்று யோசிக்கும் நிறைய தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அவ்வாறே செய்யும் நிறுவனங்களின் நடவடிக்கைகளும் மிகச்சாதாரணமே.
மேலும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மூன்று மாத கால பிரசவ விடுமுறையும் கிடையாது. நேராக வேலையை ராஜினாமா செய்து விட வேண்டியது தான்.ஒரு தனியார் துறை பணியாளன் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு அலுவலகம் சென்ற பிறகு தான் தன்னுடைய அன்றைய பணி உத்தரவாதத்தை உறுதி செய்கிறான். காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு அலுவலகத்திற்கு சென்ற உடன் தங்கள் பணிநீக்க உத்தரவை பெற்ற இளைஞர்கள் ஏராளம். தகவல் தொழில்நுட்பத்துறையில் இது மிகச்சாதாரணம். அங்கு நாளைக்கு வேலை என்பதே கிடையாது. பெரும்பாலான பன்னாட்டு கம்பெனிகளில் “Today is your last working day” (இன்று உனக்கு கடைசி வேலை நாள்) என்ற வாக்கியம் மிக பிரபலமானது. அரசு ஊழியர்களின் ஊதிய கோஷம் எழுந்த சில மாதங்களிலேயே உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு விட்டது. அதன் காரணமாக தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த ஏராளமான இளைஞர்கள் வேலை இழந்தார்கள். இவர்களில் தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. இப்படியான துயரமான, அவலமான சூழல் தற்போது தனியார் துறையில் நிலவி வருகையில் இந்த கோஷம் மூலம் இந்திய, தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கான குழியை தாங்களே தோண்டிக்கொண்டார்கள். (சமீபத்தில் தாங்கள் வறுமையில் வாடுவதாக பாராளுமன்றத்தில் காட்டுக்கூச்சல் எழுப்பி தங்களுக்கு மிக உயர்ந்த சம்பளம் வேண்டும் என்று கேட்டு அவ்வாறே தங்கள் பைகளை நிரப்பிக்கொண்ட எம்.பிக்களின் மனோபாவமும் இந்த அரசு ஊழியர்களின் மனோபாவமும் ஒன்று தான்.) இந்த பிரச்சினையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தந்திர மௌனத்தையே கடைபிடித்தன. மௌனம் கலைப்பதன் மூலம் தங்களின் தொழிற்சங்க பலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பது தான் அதற்கு காரணம். தற்போதைய இந்திய சமூகம் தன் வறுமையோடு மத்திய தரவர்க்கத்தையே அதிகமும் உட்கொண்டிருக்கிறது. இந்த மத்திய தரவர்க்கத்தை அதிகமும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் இந்திய அளவில் அரசு ஊழியர்களே. அவர்களின் வாங்கு திறனே சந்தை பொருளாதாரத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐந்தாம் ஊதியக்குழு காலகட்டத்திற்கு பிந்தைய இந்தியாவில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. பொதுத்துறை ஊழியர்களை தவிர மற்ற அரசு நிர்வாக ஊழியர்கள் (ஆசிரியர்கள் உட்பட) எல்லாம் இன்று காகிதத் தங்கமாக (paper Gold)மாறி விட்டார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய இயக்கமும் இதற்கு விதிவிலக்கானதல்ல. நான் மேற்சொன்ன அம்சங்களின் மனோபாவத்தை உள்ளடக்கியது தான். இதனால் தான் அதில் புதிய தலைமுறை இளைஞர்கள் யாரும் நிலைக்க முடியவில்லை.(சென்னை போன்ற பெருநகரங்களிலும் இதே நிலை தான்) அதில் ஒவ்வாமை காரணமாக மன முறிவு ஏற்பட்டு வெளியேறும் இளைஞர்களை “நீ முகவரியற்று நாசமாக போவாய்” என்ற இவர்களின் சபிப்பு பலரை பாதித்திருக்கிறது.(ஒரு சிலரை தவிர)இவர்களால் சொந்த வாழ்க்கை வீணடிக்கப்பட்டு, நாசமாகி போன இளைஞர்கள் ஏராளம். (ஒரு வேளை பாதிக்கப்பட்டவர்களை வைத்தே அவர்கள் இதை மறுக்கக்கூடும். அதற்கான வலுவை பெற்றிருக்கிறார்கள்) அவர்கள் வாழ்வில் பொருளாதார ரீதியாகவோ, படைப்பு ரீதியாகவோ எவ்வித வளர்ச்சியையும் காண முடியாது. இதில் இணையும் பதின்பருவ இளைஞர்களின் உணர்ச்சிகளையும், பலவீனங்களையும் இந்த அரசு ஊழியர்கள் சரியாக புரிந்து கொள்வதே இதற்கு காரணம். அந்த இளைஞர்களின் அங்க அசைவுகள், நெழிவு சுழிவுகள், குடும்ப பின்னணி, அறிவெல்லை போன்ற அனைத்து அம்சங்களையும் சரியாக உள்வாங்கி கொள்கிறார்கள். இதன் தொடர்ச்சியில் அவர்கள் அணிந்திருக்கும் உள்ளாடையின் நிறம் என்ன என்பது கூட சரியாக தெரிந்து விடும். பதின்பருவ இளைஞர் ஒருவர் கட்டுரை வாசித்தால் அதன் முதல் வரியை வைத்தே இது எந்த புத்தகத்தில் இருந்து எடுத்தாளப்பட்டது என்பதை சரியாக சொல்லி விடுவார்கள். இந்த உள்வாங்கும் திறன் புத்தகத்தை அடிப்படையாக வைத்து அல்ல, மாறாக இளைஞர்களின் மீதான அவர்களின் மதிப்பீட்டை அடிப்படையாக வைத்து தான். மேற்கண்ட அம்சங்கள் அனைத்தும் இலட்சிய கனவுகளை சுமந்திருக்கும் இளைஞர்களின் மீது நனவிலி நிலையில் படிந்திருப்பதால் இவர்களின் சாபம் எளிதாக அவர்களை கொன்று விடுகிறது. இதன் தாக்கத்தில் எதார்த்த வாழ்க்கை பற்றிய எவ்வித பிரக்ஞையும் அற்று தோற்றுப்போன இளைஞர்கள் இந்த இயக்கத்தில் நிறைய இருக்கிறார்கள். அதுவும் குமரி மாவட்ட வட்டாரங்களில் நிறையவே உண்டு.இவர்கள் அந்த இளைஞர்களை எளிதில் கை கழுவி விடுவார்கள்.அவ்வாறு ஒருவர் என்னிடத்தில் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் இந்திய ஆயுட் காப்பீட்டு கழக எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற சமயம் அது. அடுத்து நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று விட்டால் அங்கு வேலையில் சேர்ந்து விடலாம்.இளமைக்காலத்திற்குரிய அசட்டுத்தனத்தோடு அப்போது நாம் நாம் அமைப்பில் இணைந்திருந்த அவர் நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது குறித்து அவர்களிடம் கேட்டார். அதற்கு வழக்கமான “எங்களுக்கு தெரியாது” என்ற பதிலே அவர்களிடமிருந்து கிடைத்தது.இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் இவ்வாறு கேட்ட சமயத்தில் ஆயுட் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இயக்க உறுப்பினர் ஒருவர் பக்கத்தில் மௌனமாக உட்கார்ந்திருந்தார். இளைஞர்களின் மீதான இவர்களின் அணுகுமுறையும் “நாங்கள் எல்லாம் சுனாமியில் சும்மிங் போடக்கூடியவர்கள்” என்ற ஆடுகளம் படத்தின் வசனமும் ஒன்று தான். தள்ளாடி கொண்டிருக்கும் இளைஞர்களை தக்கவைக்க இவர்கள் ஊட்டும் போதைக்கு அளவேயில்லை. திரைப்பட பாடலாசிரியர்களான அறிவுமதி மற்றும் கவிதாபாரதி போன்றவர்களை எங்கள் அமைப்பை சார்ந்தவர்கள் என்பார்கள். நானறிந்த வரையில் அவர்கள் எங்குமே “நாங்கள் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தை சார்ந்தவர்கள்” என்று சொன்னதே இல்லை. இதை அறிவுமதியின் நண்பர்களே என்னிடத்தில் சொன்னார்கள். “தமிழ்நாட்டு பல்கலைகழகங்கள் எல்லாம் எங்கள் கையில் இருக்கின்றன” என்பார்கள். ஏதாவது ஒரு பல்கலைகழகத்தின் பேராசிரியர் ஒருவரை தங்கள் கூட்டத்திற்கு அழைப்பார்கள். அவர் வந்து கலந்து கொண்டால் உடனே உறுப்பினராகி விடுவர். இளைஞர்களை மயக்க இது போன்று இவர்கள் பயன்படுத்தும் உத்திகளை நிறையவே பட்டியலிட முடியும். தங்களின் கை, கால்களை பரதநாட்டியம் போன்று ஆட்டிக்கொண்டே பின்நவீனத்துவம்,பின்காலனியம், பெண்ணியம் போன்றவற்றை பேசுவார்கள். இதில் மிகவும் காமெடி என்னவென்றால் ஒரு சராசரி ஆணை விட ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்கள் இங்கு பெண்ணியம் பேசியது தான்.ஸ்பெக்ட்ரம் போன்றே எண்களுக்கு உச்சபட்ச இலக்கத்தை கண்டறிந்து வரதட்சணை வாங்கியவர்களும் இந்த அமைப்பில் இருக்கிறார்கள். தடுக்கி விழும்போதும், குளிக்க செல்லும் போதும் பின்நவீனத்துவம், பின்காலனியம் பேசிய இளைஞர்களை இவர்கள் கட்டுடைத்த வரலாறும் உண்டு.(இல்லை. நாங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம் என்று அந்த இளைஞர்கள் மறுக்கக்கூடும்)தங்களின் இலக்கிய ரசனை மற்றும் வாசிப்பு சார்ந்து எழுத்தாளர்களை “உள்முகாம், வெளிமுகாம்” என்று வகைப்படுத்துவார்கள். உள்முகாம் என்றால் தங்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள். வெளிமுகாம் என்றால் சிறுபத்திரிகை சார்ந்து இயங்கக்கூடிவர்கள். ஒருகாலத்தில் தங்களுக்கு பிடித்த எழுத்தாளர் “ஜானகிராமன்” என்று இயக்க உறுப்பினர் ஒருவர் சொன்னால் போதும். உடனே ஒன்று அவரை இயக்கத்தை விட்டு நீக்கி விடுவார்கள் அல்லது ஓரங்கட்டி விடுவார்கள்.இவர்களின் மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் நிறப்பிரிகை மற்றும் காலச்சுவடு இதழ்களை வகுப்பறைகளில் மாணவர்கள் மஞ்சள் புத்தகத்தை மறைத்து வைத்து படிப்பது மாதிரி படிப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இன்று நிலைமை மாறி விட்டது. சோவியத் தகர்வுக்கு பின்னரான தேக்கநிலை காரணமாக தங்களுக்கான அங்கீகாரத்தையும், முன்னிலையையும் தேடுவதற்கு வெளிமுகாம் சார்ந்த எழுத்தாளர்கள், இதழ்கள் மற்றும் பதிப்பகங்களே இவர்களுக்கு வேண்டியதிருக்கிறது.1991 க்கு முன் இவர்கள் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை. மாஸ்கோவில் மழைபெய்தால் தி.நகரில் குடைபிடிப்பார்கள். அந்த குடைகள் காற்றில் பறந்து விரிந்து எல்லா பகுதிகளையும் உள்ளடக்கும். இவர்களின் எல்லா கருத்துக்களும் மிதமிஞ்சிய கற்பனாவாதமே. இயக்கத்தில் இருந்து வெளியேறிவர்கள் மீது இவர்கள் பரப்பும் அவதூறுகளும், வதந்திகளும் எவ்வித இலக்கிய மதிப்புமற்றவை. சராசரி சமூக பிரக்ஞையிலிருந்து கீழிறங்கியவை.வலி உணர்ந்த வாழ்க்கையின் நெடியோடு தான் இதனை நான் எழுதுகிறேன். அவர்களின் துரத்தலே என்னை இவ்வளவு விரிவாக எழுதத்தூண்டியது. கருத்துசுதந்திரம் எங்களிடத்தில் மட்டுமே இருக்கிறது என்ற இவர்களின் வாதத்தை அது மட்டுப்படுத்தப்பட்ட அனுபவ பார்வைக்குள் மட்டும் தான் என்பதை அரசியல் செயல்தந்திரம் என்ற பெயரில் இவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டை வைத்தே புரிந்து கொள்ள முடியும். அந்த நிலைபாடு மீதான உள்ளிருந்து எழும் விமர்சன குரல் ஒடுக்கப்படும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு சிப்களை தங்கள் மூளைகளில் மாற்றி மாற்றி பொருத்தி வைப்பார்கள். அதில் ஒன்று கருப்பு சிவப்பு நிறத்திலானது.இன்னொன்று கருப்பு-சிவப்பு-வெள்ளை நிறத்திலானது. கட்சி இது சார்ந்து எடுக்கும் நிலைபாடுகளுக்கு தகுந்தபடி அந்த சிப்களின் பொருத்தப்பாடு இருக்கும். இதனடிப்படையில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைப்பற்றி இந்த அமைப்பை சேர்ந்த இலக்கியவாதி ஒருவர் என்னிடத்தில் விமர்சித்தார். அதற்கு எதிராக பல்வேறு இசங்களை துணைக்கு வரவழைத்தார். அது முடிந்து சரியாக இரு மாதத்தில் அவர் தன் நிலைபாட்டை மாற்றிக்கொண்டார். சமீபத்தில் தானே என்னிடத்தில் வேலைநிறுத்தத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தீர்கள். இப்போது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? என்றேன். அதற்கு அவர் பின்நவீனத்துவத்தை துணைக்கு அழைத்தார். அப்போது தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி இருந்தது. அதன் பிரதிபலிப்பு தான் இது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இரு வடிவங்களிலான சிப்கள் இப்படி தான் இவர்களின் மூளைகளை ஆக்கிரமிக்கின்றன. இவ்வாறு சிப்களால் மாறி மாறி நிரப்படும் செல்போன்களே இவர்களின் மூளைகள். இது பற்றிய எவ்விதமான உரையாடல்களுக்கும் நான் தயாராகவே இருக்கிறேன்.
நாம் நாம் இயக்கம் சார்ந்த அரசு ஊழியர்களின் இம்மாதிரியான சாபத்திலிருந்து மிக சிரமப்பட்டு தப்பித்தவர்கள் ஒரு சிலரே. இதில் நான் மற்றும் கவிஞர் என்.டி ராஜ்குமார் ஆகியோர் மட்டுமே தற்போது உயிர்ப்புடன் இருக்கிறோம். இதில் என்.டி.ராஜ்குமார் இவர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு துரத்தப்பட்டார். கவிதை உலகில் அந்த துரத்தலின் வேகத்திற்கு ஈடுகொடுத்து தப்பித்தவர் அவர். அதன் தொடர்ச்சியாக அவர் தமிழ் இலக்கிய உலகில் தனக்கான இடத்தை வலுவாக வரைந்து கொண்டார். என் தேடல் சார்ந்த வாசிப்பிற்கும், அதன் வெளிப்பாடான சிந்தனைக்கும் இடையே வளையங்களை பொருத்தப் பார்த்தார்கள். அந்த வளையங்கள் என் அங்க அசைவுகள் மற்றும் பலவீனங்கள் வழியாக அவர்களிடத்தில் ஊடுருவி வந்தன. இதன் தொடர்ச்சியில் ஒருவிதமான வெறுமை, போதாமை, ஒவ்வாமை காரணமாக பத்தாண்டுகளுக்கு முன்னரே அதிலிருந்து வெளிவந்து விட்டேன். அதன் பிறகு தான் என் வாசிப்பு, எழுத்து அதிகமும் கூர்மைப்பட்டு தெளிந்தது. வாசிப்பில் விரிந்த தேடலை நிகழ்த்த முடிந்தது. திருப்திகரமான மனோநிலையில் இருந்தேன். இப்போதும் இருக்கிறேன். அதன் தொடர்ச்சியான வெளிப்பாடு தான் தற்போது வெளிவந்திருக்கும் கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் என்ற என் புத்தகம். கீழைத்தேய சிந்தனையாளர்கள் பத்துபேர்கள் குறித்த அறிமுகம், அவர்களின் கருத்தியல் தளம், நேர்காணல் இவற்றை உள்ளடக்கிய ஒன்றாக வெளிவந்திருக்கிறது.இவர்கள் ஒரு சிலரிடத்தில் நானே நேரடியாக நேர்கண்டிருக்கிறேன். மேலும் இந்த வரிசையில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவருமே தமிழுக்கு புதியவர்கள். மிகுந்த சிரமத்திற்கிடையே அடையாளம் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது. அதன் வடிவமைப்பை குறித்து பலரும் சிலாகித்தார்கள். சாதிக் அவரின் பதிப்பு நுட்பத்தோடு இதனை வெளியிட்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே. மனச்சிக்கலின் விளைவாக புத்தகத்தை குறித்த அவதூறுகள் பதிப்பாளருக்கு நேரடியாகச் சென்றன. அதனை பொருட்படுத்தாமல் அவர் வெளிக்கொண்டு வந்தது அதன் நேர்த்திக்கு காரணமாக அமைந்தது. என் புத்தகம் வெளிவராது. அவர்களின் ஒரே சொல்லாடலான “எதோ எழுதிக்கொண்டிருக்கிறான்” என்றே கருதினார்கள். அந்த எதிர்பார்ப்பு மீறப்பட்டதை நெகிழ்ந்துணர்கிறேன்.வாசிப்பிற்கும், சிந்தனைக்கும், விமர்சன கோட்பாட்டு எழுத்து செயல்பாட்டிற்குமான பல்வேறு சாத்தியப்பாடுகள் எனக்கு தற்போது உருவாகி இருக்கின்றது. அதனை உள்வாங்கி நான் எனக்கான தூரத்தை கடந்து கொண்டிருக்கிறேன்.
பொன்னீலன், முத்துமோகன் ஆகியோரின் கடைசி நேர தவிர்ப்பின் இடங்களை குமாரசெல்வா, ஜே.ஆர்.வி எட்வர்ட் ஆகியோர் நிரப்பினார்கள். அந்த நிரப்பல் வெகுவாக சிலாகிப்பதாக இருந்தது. குறிப்பாக குமாரசெல்வா இந்த புத்தகத்தை அதிகம் உள்வாங்கி பேசியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தன்னுடைய உரையில் அவர் எட்வர்ட் செய்த் குறித்த மதிப்பீட்டை தெளிவாக முன்வைத்தார். பாலஸ்தீன் விடுதலை போராட்டத்தில் அவரின் பங்களிப்பு, பல்வேறு பிரச்சினைகளில் அவர் மேற்கத்திய அறிவுஜீவிகளுடன் நடத்திய உரையாடல், ஐரோப்பிய மையவாதம் கீழைக்கோட்பாட்டாளர்களின் அதற்கான எதிர்வினை ஆகியவை குறித்து விரிவாக பேசினார். இதே மாதிரியே ஜே.ஆர்.வி எட்வர்ட் இன் உரையும் அமைந்தது. அவர் கீழைச்சிந்தனைகள் என்ற வகைபாடு சரியானது தானா என்ற கேள்வியையும் இதில் முன்வைத்தார். விழாவுக்கு தலைமையேற்ற மொழிப்போர் தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா தமிழ்ச்சூழலில் இம்மாதிரியான புத்தகம் அதிகம் தேவைப்படுகிறது என்றார். குறிப்பாக எவ்வித அறிவார்ந்த தேடலுமற்ற இஸ்லாமிய தளத்திற்கு இது அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்றார். புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட என்.டி.ராஜ்குமார் என்னுடனான அவரின் இளமைக்கால உறவுகளை விரிவாக எடுத்துரைத்து, புத்தகத்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் வடிவமைப்பு பற்றியும் குறிப்பிட்டு பேசினார். தமிழ்ச்சூழலுக்கு இது அவசியம் என்ற என் உள்ளுணர்வு சரியானது தான் என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை வாசகனிடத்தில் நான் விட்டு விடுகிறேன்.
வெளியீடு: அடையாளம் பதிப்பகம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சிமாவட்டம்
விலை: ரூ 170
- ட்ரோஜனின் உரையாடலொன்று
- காதல் – கனவுகள்- சிதைவுகள் பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”
- பின் துரத்துதலின் அரசியல்
- மனித வாழ்க்கை
- உலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு
- ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை
- பரீக்ஷா (1978லிருந்து அரங்கில்…..) வழங்கும் இரண்டு தமிழ் நாடகங்கள்
- கர்நாடக இசை கற்போருக்கு ஓர் அறிவிப்பு
- கம்பன் கழகம் பிரான்சு – பொங்கல் விழா 2011 அழைப்பிதழ்
- தேனு கவிதைகள்
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதை௧ள்
- அனுதாபத்திற்குரிய அவன்
- ‘’சங்க கால மகளிர் விளையாட்டுக்கள்’’
- எதோவொன்று
- உரோம இழை!
- மரண ஒத்திகை!
- போதைப்பழங்கள் உண்ணுபவர்களின் தீவு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -6)
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- “பண்பின் வழியில்……………..“
- வயிற்றால் வந்தது
- பல்லுயிர் ஓம்புதல் தலை
- திரைகள்
- பொறித்துளி வளர்கிறது
- புதுமைகள் என்றும் அதிசயமே…
- இடமாற்றம்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -19
- கச்சத் தீவு: விவரம் அறியாத வெளியுறவு அமைச்சர் மீண்டும் கைகழுவுகிறார்!
- மீண்டும் மனு ஸ்மிருதி: மேலோட்டமாக ஒரு பார்வை
- எஸ்.பொவுக்கு இயல் விருது
- (2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- வாதத்தின் இறுதிச் சொல்..
- முன்னேற்றம்
- சமத்துவங்களின் மீதான துரத்தல்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -4)
- தமிழ் தாத்தாவிற்காக ஒரு இரங்கல்
- பக்கங்கள்
- தன்னிலை
- ப.மதியழகன் கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- பூஜ்யத்துக்குள்ளே ஒரு பூதம் (HIGG’S BOSON)
- அவதார புருஷர்களின் அக உலகம் அருங்கூத்து- கூத்துக்கலைஞர்களின் தொகைநூல்)
- திருக்குறளின் செம்மொழிக் கூறுகள்
- இவர்களது எழுத்துமுறை – 28 வாசந்தி
- அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962)