பின்குறிப்பு

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

ஆங்கில மூலம் – ஜோசப் ஹால் தமிழில் – எஸ். ஷங்கரநாராயணன்


உண்மைக்கதை

எக்ஸ்.8 என்கிற போர்க்கப்பல் ஒருமாத நடவடிக்கைகளுக்குப் பிறகு தளவாடத்துக்குத் திரும்பி வந்தது. அதன் லெப்டினன்ட் லுத்விக் குருஸ்லர் அந்த ஒருமாத அவகாசத்தில் வந்து தேங்கிக்கிடந்த கடிதங்களின் பெருங்குவியலில் அவசரமாய்த் துழாவித் தேடினார். குவியலின் அடியில் அவர் எதிர்பார்த்திருந்த அந்தக் கடிதம். அவர் கண்கள் பளிச்சிட்டன. நல்ல மொத்தையான கடிதம்தான். பெண்ணொருத்தியின் கையெழுத்தில் முகவரி. உறைமுத்திரை வாஷிங்டன், டி.சி.யில் கடிதம் தபாலில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்தது.

”தலைவர், ஹிஸ் எக்சலன்சி உங்களைப் பார்க்க விரும்புகிறார் ஐயா…” பணியாள் உள்ளே அமைதியாய் வந்து சுதாரிப்பான விறைப்புடன் நின்றிருந்தான்.

இப்ப என்ன அவசரம் இந்தாளுக்கு, என்கிற சிறு தோள்குலுக்கலுடன் அந்தக் கடிதங்களைத் தன் பையில் போட்டுக்கொண்டார் குருஸ்லர். அறைக்கு வெளியே வந்தார்.

அட்மிரல் வான் ஹெர்பிட்ஸ் கடல் பாதுகாப்பு மேதை. தன் இருக்கையில் அமர்ந்திருந்தவர், இந்த இளைஞனைப் பார்த்தார். அந்த மூத்தவர் எழுச்சியுடன் அவனருகே வந்தார். பொதுவாக அத்தனை மதிப்பு அவர் யாருக்கும் அளிக்கிறதில்லை, என்பதால் அந்த புதிய கௌரவம் இளைஞரை லேசாய் சங்கடப்பட வைத்தது. மூத்த அதிகாரி கிட்ட வந்தார். தன் பரந்த கைகளை இவர்தோளில் வைத்து அந்தக் கண்களை சந்தித்தார்.

”பிரமாதம்….” என்றார்.

அந்த ஒற்றைவார்த்தை எத்தனையோ பக்கங்கள் கொண்ட பாராட்டுப் பத்திரமாய், திருப்தியைச் சொல்வதாய் இருந்தது. அந்த பெரியதிகாரி அதிகம் பேசுகிறவர் இல்லை. கடுகடுவென்று அவரைப் பார்ப்பதே வழக்கம். எதிலும் குற்றங் கண்டுபிடித்துப் பேசுகிறவர். பாராட்டோ கைதட்டலோ ரொம்ப அபூர்வம்.

லெப்டினன்ட்டுக்கு என்னபதில் சொல்ல தெரியவில்லை. எதாவது பதில்சொல்ல வேண்டிய நெருக்கடியில் வார்த்தைவராமல் துவண்டார். அவரும் அதிகம் பேசுகிறவர் அல்ல. வார்த்தைகள் விஷயங்களைக் குழப்பி விடுகின்றன. நினைப்பதைச் சொல்லாதே, செய் என்பது அவர் சித்தாந்தம். ஹெர்பிட்சும் இதே ரகம்தான்.

”நாம் ஆங்கிலேயர்கள்…” என்று மூத்த அட்மிரல் உற்சாகம் கொப்பளிக்கப் பேசினார். ”நாம அவங்களுக்குப் பாடம் கற்பிப்போம். பத்திரிகைகள்லாம் பாத்தீங்களா? செரோனிகா கப்பலைப் பற்றி அமெரிக்காவிலேயும் சிறு பதற்றம்… அதில் மூழ்கிய பயணிகளில் 200 பேர் அமெரிக்கர்கள்.”

மேசைமேல் நிறைய செய்தித்தாள்கள். குருஸ்லர் விறுவிறுவென்று அவற்றை நோட்டமிட்டார். செரோனிகா மூழ்கடிக்கப்பட்டதைக் குறித்து பெர்லின் இதழ்கள் பிரதான செய்தி வெளியிட்டன. கோலாகலமாய் பத்திகள் எழுதப்பட்டிருந்தன. லண்டன், பாரிஸ் மற்றும் சில நியூ யார்க் இதழ்கள் அந்தச் செயலை குற்றம் என்று பறைசாற்றின. வேண்டாத கூட்டுடன் நாசவேலை, என வசைபாடின. ஆனால் எல்லாவற்றிலும் ஒரேமாதிரியான செய்தி வெளிப்பட்டது. எக்ஸ்.8 உலகின் திகிலைக் கிளப்புகிற கடல் கலம் என்று ஆகியிருந்தது! பெர்லின் அந்தக் கப்பலின் கமாண்டரை தோளில் சுமந்து கொக்கரித்தது. அந்த நேரத்தின் கதாநாயகனாக ஆகியிருந்தார் குருஸ்லர்.

”சொந்தநாட்டுக்கான உன் பணியை சிறப்பாக நிறைவேற்றிவிட்டாய்…” லெட்டினென்ட் அறையைவிட்டு வெளியேறுகையில் வான் ஹெர்பிட்ஸ் திரும்பவும் சொன்னார்.

தன் அறைக்குத் திரும்பினார் குருஸ்லர். செரோனிகாவை மறந்தார். எக்ஸ்.8 – அதையும் மறந்தார். வாஷிங்டனில் இருந்து வந்த பெண் கையெழுத்துடனான தபால்… அதுவே அவர் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது.

பெரும் உலகயுத்தம் வெடித்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்த சமயம். வாஷிங்டனில் ஜெர்மானிய தூதரகத்தோடு கடல்பிரிவில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார் குருஸ்லர். அமெரிக்காவின் தலைநகர மேல்குடிகள் மத்தியில் அவர்புகழ் பரவியிருந்தது. மெத்தப் படித்தவர். ஏராளமான விஞ்ஞான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறவர். சுயமான சிந்தனையாளர். விருந்துகளின்போது மிக சகஜமாகவும் சுவாரஸ்யமாகவும் காணப்பட்டார் அவர். ஓர்கன் பகுதி செனேடரின் கடைசிப் புதல்வி டோரதி வாஷ்பேன். குருஸ்லர் தம் இரண்டாவது குளிர்காலத்தைக் கழிக்க வாஷிங்டன் வந்தார். அவளுக்கு அது முதல்பயணம். இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். இருவருமே எதிர் எதிர் துருவங்கள். நெடுநெடுவென்றிருப்பார் அவர். உறுதியான தேகம். மென்நிறம். சதா உள்யோசனையாய் இருப்பார். அவள் குட்டி. கருத்த தேகம். நல்ல துறுதுறு. வாழ்க்கை அவளுக்கு கொந்தளிக்கிற விஷயமாய்த் தெரிந்தது. காதல் அங்கே தவிர்க்க முடியாத விஷயமாய் ஆகிப்போனது.

அந்த மொத்தைக் கடிதமடல் ரொம்ப உணர்ச்சித்தளும்பலாய் இருந்தது. அதன் ஒவ்வொரு வாக்கியமும், வார்த்தையும், பகுதிவிகுதியுமே கூட அந்த அற்புதமான பெண்ணின் அருமையான காதலையே சுவாசித்தன. ஆ, அதில் ஒரு பத்தி அவரை பிரமிப்பில் ஆழ்த்தியது.

”உம்மருகே இருக்க, என் நாதா, எனது கருணைமிக்க சிநேகிதவட்டத்தின் உபகாரத்துடன், நான் ஒரு மருத்துவத் தாதியாக பெர்லினுக்கு வருகிற ஏற்பாடுகளில் இருக்கிறேன். இன்னும் முடிவாகவில்லை என்றாலும், வருவேன் நான்… கவலை வேண்டாம், உம்மருகே நான் வரவே உந்துதல் கொள்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வந்து சேர்கிறேன். எனக்காக ஏக்கமாய் இருக்காதீர்கள். என்னைப் பார்க்கவென்று காத்து கண்பூத்துக் கிடக்காதீர்கள். என பிராண நாதரே, நானும் அப்படியே உமக்கு, அப்படித்தானே! நல்லதையே நினைப்போம்… நாம் சந்திக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. என் அன்பே, இதோ வருகிறேன். ஹா, சின்னதாய் எதும் காயம் பட்டுக் கொள்ளுங்கள்! என் அன்பே, சும்மாங்காட்டியும் இக்கிணியூண்டாய்! அப்புறம் நான் வந்து உங்களை கவனித்துக் கொள்வேன்!….”

அந்தக் கடிதம் மெல்லிய காதல் சமிக்ஞைகளுடன், வரங்களுடன் முடிந்தது. அதன் கடைசிப்பக்கத்தில் ஒரே வார்த்தை – முடிந்தது, என்று மாத்திரம். அதன் பின்பக்கத்தில் அந்தப் பெண்ணின் ஆக பிரதான செய்தி, ஒரு குறிப்பு, இருந்தது.

ஏற்பாடுகள் ஆகிவிட்டன. எல்லாம் முடிவாகி விட்டது. எங்க அப்பாவே நம்ம ஆழமான காதலைப் பார்த்துவிட்டு பச்சைக்கொடி காட்டிவிட்டார். நான் கிளம்பிப்போக சம்மதம் சொல்லிவிட்டார். அடுத்த வாரம் கிளம்புகிறேன்!

அதனடியில் – ஒரு பின்குறிப்பு.

”நான் கிளம்பி வருகிற கப்பல் பெயர் செரோனிகா.”

—-
வாழ்க்கையில் இருந்து கதைகள், (நியூ யார்க் 1916) என்ற நூலில் இருந்து பெறப்பட்டது.

ஜோசப் ஹால் பிரித்தானிய பிஷப். அவரது கதைகள் புரட்சிகரமானவை, விவாதங்கள் கிளப்ப வல்லவை என்று பேர் எடுத்தவை.

(நன்றி யுகமாயினி அக்டோபர் 2010)

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்