பித்தர்களுக்குள் பிச்சைக்காரன்

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

சத்தி சக்திதாசன்


பித்தன்தான் பிழையான உலகில் சரியாக வாழ முயலும் நானொரு
பித்தன் தான்
சித்தத்திலே ஊறிய தூறல்களை ஒவ்வொன்றாக அள்ள முயலும் நானொரு
பித்தன் தான்
பத்தியெறியும் பாசத்தீயின் மத்தியிலே உறவு எனும் பஞ்சைத் தேடும் நானொரு
பித்தன் தான்
கத்தியோடு யுத்தமிடும் கூட்டத்தின் முன்னே புத்தி விளக்கேற்ற முயலும் நானொரு
பித்தன் தான்
சத்தியத்திற்கு பூட்டுப் போட்ட சமுதாயச் சந்தையில் உண்மை எனும் சாவி தேடும் நானொரு
பித்தன் தான்
நித்தியமானது உலகினிலே வஞ்சகமற்ற அன்பு என நம்பி ஏமாந்து போன நானொரு
பித்தன் தான்
வத்தி வைக்கும் கூட்டம் நிச்சயமாக வகையற்று போகுமென திடமாக எண்ணிய நானொரு
பித்தன் தான்
சுற்றிச்சுழலும் அறியாமை எனும் புயலில் சிக்கித் தவிக்க மறுக்கும் நானொரு
பித்தன் தான்
குத்திக்கரணம் போடும் முட்டாள்கள் மத்தியில் கொள்கை பேசும் நானொரு
பித்தன் தான்
தத்தித் தடுமாறும் தனிமனித சுதந்திரத்தை அதன் விலையறியா கூட்டத்திற்கு விளக்க முயலும் நானொரு
பித்தன் தான்
பித்தர்களின் கூட்டத்திலே கூட சுயநலமெனும் பச்சை நோட்டு எதுவுமற்ற முட்டாள் நானொரு
பிச்சைக்காரன் தான்

sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்