பிடித்த தருணங்கள்

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

சின்னப்பயல்



பிடித்த நபர்களுடன்
விலாவரியாகப்பேசிவிட்டு
ஆசுவாசமாக அமர்ந்திருக்கும் தருணங்கள்

கண்களாலேயே கவிதை
பாடிவிட்டு பிறகு அதை நினைத்து
அசை போடும் தருணங்கள்

நீண்ட பயணத்தில்
முன்பின் அறிமுகமாகதவர்களிடம்
பொதுவான விடயங்களைப்பற்றி மட்டும்
பேசிக்கொள்ள இயலும் தருணங்கள்

மொழி புரியாதவர்களின் கூட்டத்தில்
நினைத்ததை சொல்ல இயலாது
அவர்களிடம் வெறுமனே புன்னகைத்து
மட்டும் வைக்கும் தருணங்கள்

நீண்ட நாள் பிரிந்த உறவை
மீளச்சந்தித்தும் அனைத்தையும் உரையாட
முடியாமல் போகும் தருணங்கள்

உரையாடிக்கொண்டே செல்கையில்
கூட வந்தவர் பின் தங்கிவிட
கூட்டத்தில் தான் மட்டும் தனித்து விடப்படும் தருணங்கள்

கடந்த காலத்தினை நினைத்து
நிகழ் காலத்தில் அசைபோட இயலாமற் போகும்
சூழல் அனுமதியாத தருணங்கள்

ஏதும் நினையாது
அமைதியாய் இருக்க நினைத்து இயலாமலே
போகும் தருணங்கள்

அனைத்தும் அறிந்தவர் போலிருப்பவரிடம்
அடக்கமாகப்பேசிவிட்டு பின் அவரைப்பற்றி
அறிந்த பின் வெறுப்புரும் தருணங்கள்

நினைத்தது அனைத்தையும்
கவிதையாய் வடித்து பத்திரிக்கையில்
வெளிவர எதிர்பார்த்து அவை திரும்பி
வரும் தருணங்கள்

Series Navigation

சின்னப்பயல்

சின்னப்பயல்