பாலைவனத்து பட்டாம்பூச்சி:

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

அவனி அரவிந்தன்



பார்வைக் குடுவையில்
நிரம்பிச் சரியும் பாலைநிலத்துகள்களை
ஒளிபட்டு மின்னும் தங்க மீன்களெனவும்
கடற்குதிரைக் கூட்டமெனவும் கற்பித்த வண்ணம்
மனோரதங்கள் தரிகெட்டுத் திரிகின்றன…

விருட்சங்கள் வெளியேறிய வனத்தில்
ஒற்றைச் சிறகு மறைக்கும் கதிரே
மற்றைச்சிறகின் மீதான நிழலாகப் படர்கிறது…

கனவுகளின் பாய்மரம் விரித்து
சிறகடித்துச் செல்கிறேன்
வழிநெடுகும் வியர்வைக் கடல் பெருகி
ஏக்கச்சிப்பிகள் மட்டுமே கரையொதுங்குகின்றன..

கரையே கடலாகவும்
கடலே உடலாகவும்
கலந்து கரைந்துருகிக் கிடக்குமிடத்து
எனதுறுபசி ஆற்றும் அமுதம்
எந்த மணல்மேட்டில் வழிகிறதென்றே தேடியலைகிறேன்
நண்டுகள் நடந்த சுவடுகளைப் பின்பற்றி…

Series Navigation

'அவனி அரவிந்தன்

'அவனி அரவிந்தன்