பாம்பு பற்றிய பயங்கள்.

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

கலாப்ரியா.


அம்பறாத்தூணியில்
அரவம் அஸ்திரமாய்
ஒளிந்திருக்கிறதெனினும்

தன் கவசம்
தானம் வழங்கி
சற்றே கலங்கியிருக்கும்
கர்ணனின் மார்பில்,
புதுக்காமம்
துய்க்கலாம்
அவன் மனைவி.

*** ***
சிதலமான
மதில்ச்சுவருக்குள்
தீர்மானமாய்க்
கட்டமிடப்பட்ட வெளி,
முன்னரே மொழிந்த
மெளனத்துடன்.

வரலாற்றுச் சுவடி
சுற்றிக்கட்டிய
கயிற்றின் மீதமென
பாம்புச் சட்டையொன்று
மதில்ச் செங்கல்
வரிகள் மேல்.
*** ***
பக்கத்து வளவில்
பிடாரன்
மகுடியூதிப் பிச்சை கேட்கும்
சத்தம் கேட்டுத்
தம் வீட்டுத் தலைவாசல்க்
கதவைச் சாத்த
குழந்தைகளை
அவசரப் படுத்துவார்
படை நடுங்கும்
பழக்கதோஷம்
பாலியத்திலேயே பதிய.
*** ***
உன் பார்வை
என் வரிகளுக்கிடையே
ஊர்ந்து வருமெனில்
கேட்டுக் கொள்கிறேன்,
தொன்மத்தை
தொலைத்து விட்டு
சுகித்திரு
கொசுவர்த்திச் சுருளின்
நெளியும் புகைக்கிடையே.

tksomasundaram@yahoo.com

Series Navigation

கலாப்ரியா

கலாப்ரியா