பஸ் ஸ்டாண்ட்

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

கே.ஜே.அசோக்குமார்


அவன் பெயர் பஸ் ஸ்டாண்ட், ஆனால் அது அவனுடைய உண்மையான பெயரல்ல. சொல்லப்போனால், அவனுடைய உண்மையான பெயர் அவனுக்கே மறந்து போய்விட்டது. சிலர் அவனை கோழி என்பார்கள். சாப்பாட்டை கொத்திக் கொத்தி தின்பதால் அப்பெயரை வைத்து அழைத்தார்கள். இதை தவிர மண்டை, டவுசர், தண்ணிப் பாம்பு முதலியன வேறு பெயர்களும் அவனுக்கு உள்ளன. முதலாளி எப்போதும். ‘கோழிப்பய’ என்று செல்லமாக அழைப்பார்.
திருச்சி பஸ் ஸ்டாண்ட் வந்தபோது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை பெரிய ஊரா? அணைக்கு வரும் தண்ணீரும், மதகுகளை வெளியேறும் தண்ணீரும் போல இத்தனை பேருந்துகள் வருவதும் போவதுமாக இருந்தது முதலில்அவனுக்கு வியப்பாக இருந்தது. அவனிருந்த பேரளத்தில் மிகச் சிறிய பஸ் ஸ்டாண்டே உள்ளது. இரண்டு பேருந்துகள் நிற்க மட்டுமே இடமிருக்கும், இரவு ஒன்பது மணிக்கு மேல் வண்டியே கிடையாது.
இங்கு வந்த புதிதில் சென்னை செல்லும் பேருந்துகள் நிற்குமிடத்தில் கொஞ்ச நேரம் நின்று மக்களை வேடிக்கை பார்ப்பான். அவர்களின் பரபரப்பு, அவர்களின் உடைகள், அவர்கள் அருந்தும் பானங்கள், உணவுப் பொருட்கள் போன்றவைகள் அவனுக்கு மிகவும் உவப்பானதாகவும், விசித்திரமானதாகவும் இருக்கும். பின்பு பயணிகள் தாங்கும் அறைக்கு சென்று சிறிது நேரம் அமர்ந்திருப்பான். பயணிகள், மீதமான வைத்துவிட்டுப்போன உணவுகளை உண்பான். சிலநேரங்களில் அவர்களே அவனுக்கு கொடுப்பார்கள். பின்பு யாரும் இருக்காத தென்மேற்கு மூலையில் மூத்திர அறைகளுக்கு மேலுள்ள மதில் சுவரில் சிறிதுநேரம் அமர்ந்து எல்லாப்பக்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு நாள் சென்னை செல்லும் பேருந்துகள் பகுதியில் அமர்திருந்தபோது இருவர் சிநேகிதமாக அவன் தோளை தொட்டார்கள். பின்பு அவனை ஓரிடத்திற்கு அழைத்து சென்றார்கள். ஓட்டலும், லாட்சுமாய் பேருந்து நிலையத்தை ஒட்டியிருந்த பகுதியது. மூன்று வேலை சாப்பாடும் தங்குவதற்கு இடம் இலவசமாகவும் கொடுத்தார்கள். தினமும் லாட்சிலுள்ள கக்கூஸ்களை கழுவவேண்டும். அதுதான் வேலை அவனுக்கு. நன்றாக செய்தான் என்று சொல்ல முடியாது. ஆனால் ‘கவுரவமாக’ வைத்திருந்தார்கள். கொஞ்சநாளில் முன்னால் உள்ள ஓட்டலுக்கு மாற்றிவிட்டார்கள். அங்கு சாப்பிட்டபின் இலை எடுத்து மேஜையை துடைக்கும் வேலை. ஓட்டல் முதலாளி ஒல்லியாக டிபி வந்த ஆள் மாதிரி கொள்ளு கொள்ளு என்று எப்போதும் இருமிக்கொண்டிருப்பார்.
அவர் மகன் கதிர் இவன் வயதுதான் இருப்பான் அல்லது ஒன்றிரெண்டு வயது பெரியவனாக இருப்பான். கதிர்தான் முதலில் பஸ் ஸ்டாண்ட் என்று அழைக்க ஆரம்பித்தான். பஸ் ஸ்டாண்டில் கண்டெடுக்கப்பட்டதால் இப்பெயர். பிரியமாக வைத்தான் கதிர். ‘டே… பஸ் ஸ்டாண்டே’, ‘டே… பஸ் ஸ்டாண்டே’ என அழைப்பான். வரும் வாடிக்கை கஸ்டர்மர்களிடம் பஸ் ஸ்டாண்டில் கண்டெடுக்கப்பட்ட விவரத்தை கேலியாக கூறி அனைவரையும் சிரிக்க வைப்பான்.
முதலில் எல்லோர் முன்னிலையிலும் அழுதுவிடுவான். நாளாக நாளாக பழகிவிட்டது. இப்போதெல்லாம் அவனும் சிரித்துவிடுவான். அவன் சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்து, வாடிக்கையாளர்கள் சிலர் ‘எந்த ஊரு தம்பி உனக்கு’ என்பார்கள். அவன் கேள்விப்பட்டவரை மதுரைதான் பெரிய ஊர், ஆகவே மதுரைங்க என்று கூறிவிடுவான். ‘எந்த தெரு’ என்றால் அங்கன ஒரு கோயில் அங்கன ஒரு குளம் அங்கன ஒரு தெரு என நீளமாக கூறுவான். பேரளத்தில் அம்மாவும் அப்பாவும் இருக்கிறார்கள். இப்போதும் இருக்கத்தான் வேண்டும். இருவரும் கூலிவேலை செய்பவர்கள். நாலைந்து பிள்ளைகள், அவர்களில் இவனும் ஒருவன். ஊரில் எதாவது பிரச்சனையை என்றால் பிள்ளைகளை போட்டு சாத்துவார்கள். அவர்களுக்குள் பிரச்சனை என்றாலும் இவர்களை போட்டு சாத்துவார்கள்.
அவன் சென்று வந்த பள்ளிக்கூடம் ஊருக்கு வெளியே இருந்தது, பேருந்தின் பின்பக்க ஏணிப்படிக்கட்டில் தொத்திக்கொண்டு பயணம் செய்வது அவனுக்கு ஆனந்தமாக இருக்கும். பள்ளிவரை காலையில் வரும் ராமஜெயத்திலும் வீடுவரை மாலையில் வரும் ஸ்ரீலஷ்மியிலும் தொத்திக்கொண்டு வருவான். ஒருநாள் கொக்கியில் மாட்டிக்கொண்டுவிட்ட புத்தகபையோடு பஸ் பறந்துவிட்டது. இனி பள்ளிகூடம் செல்லமுடியாது, பள்ளிக்கு சென்றால் வாத்தியாரிடம் அடி, வீட்டிற்கு சென்றால் அம்மாவிடம் அடி. என்ன செய்வதென்று தெரியாமல் சிறிதுநேரம் முழித்துவிட்டு வழியில் வந்த ஏதோ ஒரு வண்டியில் கூட்டத்தோடு கூட்டமாக ஏறிக் கொண்டான். சின்னப் பையன்களையெல்லாம் நடத்துனர் பயணச்சிட்டு கேட்க மாட்டார் என்பதை புரிந்துகொண்டான். ஏதோ ஒரு ஊரில் இறக்கி விடப்பட்டான். வழியில் கிடைத்ததெல்லாம் உண்டான். மீண்டும் சந்தோசமாக வேறொரு வண்டியில் ஏறிக்கொண்டான்.
படித்ததென்னவோ இரண்டம் வகுப்பு, ஆனால் எழுத படிக்கவே தெரியாது. அந்த பள்ளியின் லட்சணம் அவ்வளவுதான். படிக்க தெரியாவிட்டாலும், தாண்டி வந்த கொரடாச்சேரி, நன்னிலம், அம்மாபேட்டை போன்ற ஊர்களின் பெயர்கள் நினைவில் உள்ளன. கடைசியாக வந்து சேர்ந்த திருச்சி பஸ் ஸ்டாண்டை பார்த்ததுமே கூட்டத்தோடு கூட்டமாக கரைந்து ஒளிந்து வாழ தனக்கு ஏற்ற ஊர் என நினைத்துக் கொண்டான். ஆரம்பத்தில், தன்னை கண்டுபிடித்து அம்மா அப்பா சேர்ந்து தோலை உரிக்கபோகிறார்கள் என்று தோன்றியது அவனுக்கு. இதற்கு முன்பு ஒருமுறை பள்ளிக்கூடம் செல்லாமல், முதலியார் தோப்பில் பசங்களுடன் ஒளிந்துக் கொண்டிருந்தவனை பெருமாள் கூட்டிச் சென்று அவன் அப்பாவிடம் விட்டு விட்டான். செம மாத்து கிடைத்தது. இந்தமுறை அவனை யாரும் பார்க்கமுடியாமல் போய்விட்டது. அவனுக்கு வருத்தமே. ஒருந்தனை காணாமே என அம்மாவும் அப்பாவும் யோசித்திருப்பார்கள், பின்பு மறந்து, இன்னொன்றை பெற்று அந்த இடத்தை நிரப்பியிருக்க கூடும். இப்போது நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. திரும்பிபோனாலும் அவனை அடையாளமும் தெரியுமா என்பதும் சந்தேகமே.
எந்த ஊர் சென்றாலும் அவ்வூரின் பஸ் ஸ்டாண்டை தாண்டி அவன் சென்றதில்லை. சினிமா பார்ப்பதற்காக வெளியே செல்வான், அதிகபட்சம் அவ்வளவுதான். மீண்டும் வந்துவிடுவான். ஒரு ஊரில் கிடைக்கும் நண்பன் அந்த ஊரோடு சரி. அவன் எந்த ஊர் சென்றாலும் வாழ்விடமாக எப்போதும் நினைப்பது பஸ் ஸ்டாண்டைதான். வாழ்வில் காணும் சுகதுக்கங்கள், ஏற்ற இறக்கங்கள் அனைத்தையும் பஸ் ஸ்டாண்டிலே கண்டுவிட முடியும். ஒரு நல்ல அனுபவத்தை தேடும் ஒருவன் பஸ் ஸ்டாண்டை புறக்கணிப்பதில்லை என்பது அவன் கண்டுபிடிப்பு.
திட்டமிட்டு யாரையும் அவன் ஏமாற்றியதில்லை, திட்டமிடாமல் நிறைய ஏமாற்றி இருக்கிறான். ஒரு முறை வேறு ஏதோ ஊரில், உணவருந்திக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் பக்கத்தில் போய் அமர்த்து கொண்டான். அவனை ஒத்த பையன்களும் அதிலிருந்தார்கள், ‘சாப்பிடுறியா தம்பி’ என ஒரு காகித தட்டில் புளிசாதம் கொடுத்தார்கள். அதில் ஒருவன் அணிந்திருந்த சட்டையும் டவுசரும் அவனுக்கு பிடித்திருந்தது. ‘நாங்க போயிட்டு வர்றவரைக்கும் பாத்துக்க’ பைகளை வைத்துவிட்டு குளிக்க சென்ற போது, அந்த பையன் கழற்றி வைத்த சட்டையும் டவுசரும் மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். வேறொரு ஊரில் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய ஓரிடத்தில் முன்று சீட்டு நடந்து கொண்டிருந்தது. அதை நடத்துபவனின் குரலில் இருந்த தொனி, முகத்தின் வசீகரம், சீட்டுகளை கையாளும் லாவகம் போன்றவைகள் அவனுக்கு பிடித்திருந்தன. இவனிடம் டீ வாங்கி வருவது, பீடி வாங்கி வருவது போன்ற வேலைகளை கொடுத்தான். ஒரு நாள் போலீஸ் ரையிடு வந்த போது அவசர அவசரமாக அவனிடமிருந்த பணத்தை இவனிடம் கொடுத்து விட்டு ஒன்றும் தெரியதவனாக போலீசிடம் பேசிக் கொண்டிருந்தான், இந்த சமயத்தில் இவனும் கிளம்பிவிட்டான்.
இந்த ஓட்டலுக்கு வந்த பிறகு இம்மாதிரி வேலைகளை செய்வது கிடையாது. அவன், புலி, டப்பி மூவரும் புதிய கூட்டாளிகள் ஆனார்கள். வாரத்தின் ஒருநாள் மாலை அவர்களுக்கு விடுமுறை. கிடைக்கும் சொற்ப பணத்தில் சோனமீனா அல்லது மெயின் காட்கேட் போய் விடுவார்கள். டப்பி நிறைய சாகசங்கள் செய்வான். திரைஅரங்குகளில் தம் அடிப்பது, பேருந்தில் நடத்துனரிடன் வம்படிப்பது, மாரியம்மன் கோயில் விழாக்களில் டவுசரை கழற்றி விட்டு டான்ஸ் ஆடுவது என பல இருக்கும். அந்த நிகழ்ச்சிகள் ஒரு வார தினபேச்சுக்களுக்கு தேவையானவையாக இருக்கும்.
அவர்களின் சந்தோசங்களை பொறுக்க முடியாதவனாக இருப்பான் முதலாளி மகன் கதிர். மூவரில் இளையவன் என்பதால் இவனை விரட்டுவது வேலையாக வைத்திருப்பான் கதிர். துடைத்த டேபிளை துடைக்க சொல்வான். மளிகை சாமான்களை மீண்டும் கணக்கு பார்க்க சொல்வான். இப்படி பலவகையில் தொந்தரவு செய்தான்.
வேறு ஓட்டல்களில் தேவை அதிகரிக்கும் போது, நல்ல சம்பளத்திற்கு சொல்லாமல் கொள்ளாமல் போய் விடுவார்கள். அங்கு பிடிக்காத போது வேறு எங்காவது போய் விடுவார்கள், அல்லது திரும்பி வந்துவிடுவார்கள். அது நடந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டன, இப்போது வேறு இடத்திற்கு போவதற்கு கதிர்தான் காரணமென்றாலும் இதை வெளியில் கூறிக் கொள்ளமுடியாது. கதிரின் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒருமுறை மிக அதிகபட்ச அலங்காரத்துடன் ஒய்யாரமாக சிலிப்பிகொண்டு வந்த கதிரின் அம்மாவை, யாரென்று தெரியாமல் மற்ற நண்பர்களுடன் ‘இந்த பட்டற நல்லா இருக்கேடா’ என கூறிக் கொண்டிருந்ததை கதிர் கேட்டுவிட்டான்.
‘வக்காளி, யாரபாத்து என்னடா பேசுற’, என்றான் கதிர்.
சுதாரித்து, நிலைமையை புரிந்து கொண்டவனாக ‘இல்ல ஆளே, யாருன்னு தெரியல, அதான் அப்படி சொல்லிடேன் ஆளே’ என்றான்.
‘உனக்கு சோறு தண்ணி கிடைக்காது, செருப்பு பிஞ்சிடும் பாத்துக்க’, என்றான் இதைவிட அதிகமாகவே பேசினான். ஆனால் பிரச்சனைகளை சமாளிக்க பழகிக்கொண்டுவிட்டான். இருந்தாலும் மற்றொரு சாகசத்திற்காக அவனும் டப்பியும் சொல்லிக்கொள்ளாமல் ‘வெங்கடேஷ்வராவிற்கு’ போய்விட்டார்கள். பெரிய ஓட்டல் அது, நல்லபடியான கவனிப்பு இருந்தது. அங்கு இருப்பது கவுரவமாக இருந்தது. சம்பள தேதி கொஞ்சநாள் முன்பு டப்பி தான் அந்த எண்ணத்தை கூறினான்.
ஓட்டலின் பின்பக்கத்தில் சூப்ரவைசர்கள் சம்பளம் கொடுத்து முடிந்த கொஞ்ச நேரத்தில் சரவணன் ஓடிவந்து ‘என் சம்பளபணத்த காணல சார்’ என்றான். அவன் பேகில் பிளேடால் அடிபக்கத்தை கீறி பணத்தை எடுத்திருந்தார்கள். முதலில் அவர்கள் சந்தேகப்பட்டது அவனையும், டப்பியையும் தான். ‘அவனுவோ பேக் இருக்காபாரு’ என்றார்கள், பிறகு ‘ஆள் இருக்காணுவோலா பாரு’ என்றார்கள்.
பஸ் ஸ்டாண்ட் வந்தபோது ஒரு பஸ்ஸையும் காணவில்லை. பிறகுதான் தெரிந்தது ‘பஸ் ஸ்ட்ரைக்’ என்று. ஆறு மணிவரை பஸ்கள் ஓடாது என தெரிந்ததும் குழம்பிப் போனான். இன்னும் நாலுமணி நேரம் ஓட்டவேண்டும். நடந்து போனால் நிச்சயம் பிடித்துவிடுவார்கள். ஜங்சன் போய்விடலாமென்று யாரும் போகாத, பயன்படுத்தாத சுற்றி போகும் சின்ன சந்துகள் வழியாக ஜங்சன் சென்றுவிட்டான். ரயில் வரும் அறிவிப்புகள் கேட்டபடியே இருந்தது. எந்த பிளாட்பாரத்தில் ஏறவேண்டும் இறங்கவேண்டும் என புரியாமல் தவித்தான். கூட்டமும் அதிகமாக இருந்தது. அங்கிருந்த வடநாட்டு கும்பலோடு அவனும் சிறிது நேரம் படுத்துக்கொண்டான். கடந்து போகும் நபர்களெல்லாம் அவனுக்கு சந்தேகமாக தோன்றியது. பதற்றம் தொற்றிக்கொண்டுவிட, பிறகு ஒரு கழிவறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டான். டப்பி எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை. பஸ்கள் ஓடியிருந்தால் இந்நேரம் பறந்திருக்கலாம். அவன் இருப்பை காட்டுவதற்காக பேக்கை எடுக்காமல் வந்துவிட்டான். அதில் பெரிதாக ஒன்றுமில்லை.
மேலே எட்டிப்பார்க்கும் தலை நிழலொன்று தெரிந்தது. பின் ‘தபதப’ வென்று கதவு தட்டப்பட்டது. அதை திறப்பதற்குள் கம்பி நெளிந்து அதுவே வழி விட்டுவிட்டது. இரண்டு பேர் உள்ளே வந்து என்ன ஏதென்று கேட்காமல் மடேர் மடேர் என்று பிடரியில் அவனை சாத்தினார்கள்.
‘அண்ணே, அண்ணே… சத்தியமா நா எடுக்கலே, நா எடுக்கலேண்ணே…’ என்று சொல்லிக் கொண்டிருந்தான். ஒருவர் மாற்றி ஒருவர் அடித்துக் கொண்டே சட்டையை கழற்றி உதறிப் பார்த்தார்கள். பின்பு டவுரசையும் கழற்றி பார்த்தார்கள். ஒரு கையில் அவனை பிடித்தபடி மறு கையால் தலை, முதுகு, மார்பு என்று மாறிமாறி அடித்தார்கள். அப்படி இருவருமே ஒரே நேரத்தில் செய்து கொண்டே அவனை தள்ளிக் கொண்டு வந்தார்கள். கைகளை விரித்து ஏதேதோ அபிநயம் காட்டி ‘நா செய்யலண்ணே’ என்று கூறிக் கொண்டே வந்தான். பின்பக்கமாக ஒருகையில் டவுசரை பிடித்திக் கொண்டும் மறுகையில் அவர்களின் அடியை முடிந்த மட்டும் தடுத்துக் கொண்டே வந்தான். வழியில் கண்ட சிலர் பதற்றத்துடன் பிளாட்பாரத்தின் மேல் ஏறி அவன் அடிவாங்குவதை பார்த்தார்கள். பின்பு ‘இது சகஜம்தானே’ என்பது மாதிரி பழையமாறி நடக்க ஆரம்பித்தார்கள்.
ஓட்டல் வந்ததும் அங்கிருந்த சூப்ரவைசர்கள் ‘எங்கடா இன்னொருத்தன்’ என்று கேட்டபடி நைய்ய புடைத்தார்கள். சட்டையையும் டவுசரையும் கழற்றி விட்டு, பின்னாலிருந்த சூர்யஒளி தடுப்பிற்காக போடப்பட்டிருந்த கூரையின் ஒரு இரும்பு தூணில் அம்மணமாக கட்டிவைக்கப்பட்டான். கொஞ்ச நேரத்தில் முதலாளி வந்து அவரும் ரெண்டு சாத்து சாத்திவிட்டு போனார். இரவு வரை அப்படியே இருந்தபின், கடைசியாக எடுத்ததை ஒப்புக் கொண்டான். இல்லையெனில் அடித்தே கொன்று விடுவார்கள், யாரும் கேட்கப் போவதில்லை. பஸ் ஸ்டாண்டின் பொதுக் கழிப்பறையின் மூன்றாம் அறையின் தண்ணீர் போகும் குழாய்க்கு சுவற்றின் அடியில் இருந்த பிளவில் சவுத்தாள் பையில் சுருட்டி வைத்திருந்ததை கூறினான். தயாராக இருந்த இரண்டுபேர் ஓடிச்சென்று எடுத்து வந்தார்கள். பணம் 500 சரியாக இருந்தது.
சட்டை, டவுசருடன் அவனின் பேக் ஆகியவற்றோடு அவன் வெளியே தூக்கி எறியப்பட்டான். மிகப் பெரிய அவமானமாகிவிட்டது. எல்லா ஓட்டல்களுக்கும் தெரிந்துவிட்டது. எல்லா இடங்களிலிருந்தும் அவனை நோக்குவது போலிருந்தது. கொஞ்ச நேரம் ரோட்டிலேயே உட்கார்ந்து கிடந்தவன், பின்பு மெதுவாக நடந்து பயணிகள் பகுதிக்கு சென்று அமர்திருந்தான். இரவு அங்கேயே கழித்தவன். ஆரம்ப நாட்களில் இங்கு வந்து அமர்ந்த நினைவுகளில் மூழ்கி அங்கேயே தூங்கிப் போனான்.
மறுநாள் நாள்முழுவதும் கிடந்தான். வலதுகண் பெரிதாக வீங்கியிருந்தது. முதலாளி கையில் இருந்த ஒரு பெரிய மோதிரம் கன்னத்தை கிழித்ததில் ரத்தம் வலிந்து கொண்டிருந்தது. பற்களிலிருந்தும் கைகள் கால்கள் முட்டியிலிருந்தும் ரத்தம் வந்து கொண்டிருந்தது. இரண்டு நாளில் லேசாக சுரம் அடிக்க ஆரம்பித்தது. மெயின் காட்கேட் போனான். அங்கிருந்த கோயில்களில் கிடைத்த பிரசாதத்தை உண்டு அங்கேயே படுத்து கிடந்தான். பல முறை டப்பியுடன் இங்கு வந்திருக்கிறான். ஆனால் இப்போது டப்பி மட்டும் தப்பிவிட்டான். அவனை பார்த்தால் நன்றாக இருக்குமென தோன்றியது. டப்பிக்கு தெரியாத இடமில்லை எல்லா சந்துகளிலும் அவன் நுழைந்து வந்திருக்கிறான். ஒருமுறை அவனை ராணியிடம் அழைத்து சென்றான். அவளை பார்பதற்கே விசித்திரமாக இருந்தது. தலை சற்று பெரியதாக உடலுக்கு பொருத்தமற்று இருந்தது. அவளுக்கு உதடுகளே இல்லை. அந்த இடத்தில் வெறும் தோலே இருந்தது. மூக்குக்கு கீழ் வேர்வை துளிகளுடன் அவள் முகம் வெளிறி இருந்தது. குளோரின் பவுடர்கள் தெளிக்கப்பட்ட ஈரமாக இருந்த ஒரு சந்தில் அவளிடம் தைரியமாக சென்று பேசினான் டப்பி. இவர்களை மேலும் கீழும் பார்த்தபடி பின்னாலிருந்த இருந்த பகுதிக்கு அழைத்து சென்றாள். டப்பி தைரியமாக செயல்பட்டது அவளுக்கு பிடித்திருந்தது. இவனை கண்டுகொள்ளவே இல்லை. கடைசியாக தலையில் நாலு தட்டுதட்டி பணத்தை பிடுங்கிக்கொண்டு அனுப்பிவைத்தாள். இந்த சாகசம் ஒரு மாதத்திற்கு போதுமானதாக இருந்தது.
இப்படியே இந்தப்பக்கம் எதாவது ஒரு பஸ் பிடித்து வேறு பஸ் ஸ்டான்ட் போய்விடலாம் என யோசித்துக் கொண்டிருந்தான். முன்பைவிட அவன் வளர்த்து விட்டிருப்பதினால் நிச்சயம் டிக்கட் கேட்பார்கள். தப்பிக்க முடியாது. வேறு எங்கு சென்றாலும் ஆரம்பத்திலிருந்துதான் மீண்டும் வாழ்கையை தொடங்க வேண்டும். இப்போதைய நிலையில் வேறுவழியில்லை. இல்லையென்றால் இங்கேயே கிடந்தது சாகவேண்டியதுதான். கூட்டமாக வரும் வண்டியை எதிர் பார்த்து காத்து கொண்டிருந்தான். லேசாக மயக்கமும் கண் எரிச்சலுமாக இருந்தது. ஜுரம் அதிகமாகி விட்டிருந்தது. உருகி கொட்டிக் கொண்டிருந்த வெயிலில் இன்னும் சற்று நேரம் நின்றால் விழுந்துவிடுவோம் போல தோன்றியது. திடீரென யோசித்தவனாக நடந்தே மீண்டும் பஸ் ஸ்டாண்டிற்கே திரும்பி வந்தான். மீண்டும் பழைய சாந்தி ஓட்டல் வாசலில் வந்து நின்றான்.
இரண்டு மாதத்தில் பழைய முதலாளி இன்னும் இளைத்து விட்டிருந்தார். இவனை கண்டதும் ‘ஓடிப் போயிடு இங்க வராதே’ என்று கூறிவிட்டுப் போய்விட்டார். ஓட்டலுக்கும் ரோட்டிற்கும் இடையே அமைக்கப்பட்டிருந்த பூங்காவில் இருந்த மரத்தின் அடியில் கொஞ்ச நேரம் கிடந்தான். பசி கொஞ்சம் கொஞ்சமாக கொல்ல ஆரம்பித்தது, போதாதிற்கு இந்த காயங்களின்வலி. கஸ்டமரில்லாத மதிய நேரத்தில் மீண்டும் சென்று முதலாளி முன்நின்றான்.
இவனை பார்த்ததும் கோபம் கொண்டு அங்கிருந்த முனியனிடம், ‘இவனை வெளியே தூக்கி போட்றா’ என்றார். முனியன் அவனை நோக்கி வருவதற்குள், வேறேதும் யோசிக்காதவனாக சட்டென அவர் காலில் விழுந்தான். ‘முதலாளி என்னைய மன்னிச்சுடுங்க முதலாளி, இனிமே இந்த தப்ப பண்ண மாட்டேன் முதலாளி, எங்கேயும் போமாட்டேன் முதலாளி உங்களுக்கு செருப்பா உழைக்கிறேன் முதலாளி’. என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தான். ‘ஏலே.. தூக்கி வெளிய போட்றா இவன’, அதிக சத்தத்துடன் கத்தினார் முனியனை பார்த்து. இனிமே செய்யமாட்டேன் முதலாளி’, என்று மீண்டும் மீண்டும் அதையே கூறினான். ஒரு கட்டத்தில் அது உளறலாகவே இருந்தது. ‘வீட்டு கல்யாணத்துக்கு கூட நா வேல செய்யல முதலாளி இனிமே இத மாதிரி செய்யமாட்டேன் முதலாளி, இந்த ஒரு முறை மன்னிச்சிடுங்க முதலாளி’.
கடைசி வார்த்தையை கேட்டதும் ஒரு விநாடி திரும்பி பார்த்தார். ஒரு ஆழ்ந்த யோசனைக்குபின் ‘சரி போ உள்ள′ என்றவர், முனியனிடம் ‘எலே, இவனுக்கு சாப்பாட போட்ற’, மீண்டும் கண்ணீருடன் காலில் விழுந்தான். ‘உள்ள போ’ என்று கையை வீசிவிட்டு கல்லாவை கவனிக்கபோனார்.
உள்ளே போனதும் தரையில் இலையை விரித்து சோறைபோட்டு அள்ளி அள்ளி சாப்பிட்டான். சாம்பார் ஊசி போயிருந்தது, ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை அவன். சாப்பிட்டு முடிந்ததும் அந்த இடத்தை தண்ணீர் தெளித்து சுத்தமிட்டான். இப்போதுதான் பார்வை தெளிய ஆரம்பித்தது, ஆனால் மயக்கம் அவனை தள்ளிக் கொண்டிருந்தது.
மாலைக்கான அயிட்டங்களின் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அவனை ஒருமுறை பார்த்து விட்டு மீண்டும் வேலையை தொடங்கினர் மற்ற வேலையாட்கள். அவனையும் ராஜாவையும் கூப்பிட்டு டேபிளைஎல்லாம் துடைக்க சொன்னான் முனியன். துடைத்துக் கொண்டிருக்கும்போது, சுற்றும் முற்றும் பார்த்துகொண்டு யாரும் இல்லையென உறுதி செய்துகொண்டபின்னர், ‘உனக்கு விசயமேதெரியாதா, அவரு பொண்ணு கல்யாணம் நடக்கலே’ என்றான் முனியன்.
‘ஏன்?’
மீண்டும் ஒருமுறை பார்த்தபடி, ‘அவரு பொண்டாட்டி யார்கூடையோ ஓடிப்போச்சு’ என்றான்.
‘ஆங்’, கதிரின் முகம் ஒரு நிமிடம் அவன் மனதில் வந்து மறைந்தது.
‘ஆமாண்டா, கல்யாணத்துக்கு இரண்டுநாளு முன்ன, யாரோ எலக்ட்ரிசியன் ஒருத்தன் கூட ஓடிப்போச்சு, அதனால கதிர்கூட ஓட்டலுக்கு வர்றதில்ல, முதலாளியும் ரொம்ப ஒடிஞ்சுபோயிட்டாரு’. ஒன்றும் புரியாமல் முனியனையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவர் பொண்டாட்டி எந்த ஊரில் எந்த லோகத்தில் எந்த பஸ் ஸ்டாண்டில் நிற்கிறாளோ என நினைத்துக்கொண்டான்.

Kuppa.ashok@gmail.com
Kjashokkumar.blogspot.com

Series Navigationஇவர்களது எழுத்து முறை – 1 – லா.ச.ராமாமிர்தம் >>

கே.ஜே. அசோக்குமார்

கே.ஜே. அசோக்குமார்