பரிமளவல்லி 21. க்ளின்டாமைசின்

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

அமர்நாத்


21. க்ளின்டாமைசின்

பள்ளிசெல்லும் சிறுவர்களுக்கு அந்த திங்கள்காலை நன்றாகவே விடிந்தது. நான்குநாட்களாக வருத்திய குளிர் போதாதென்று தெற்கிலிருந்து வந்த மேகக்கூட்டங்களின் பாதிப்பால் எப்போது வேண்டுமானாலும் பனிமழை பெய்யலாம் என்று வானிலை அறிக்கையில் எச்சரித்ததுதான் தாமதம், எல்லா அரசாங்கப் பள்ளிகளும் மூடப்பட்டன. தனியார் பள்ளிகளும் அன்று வகுப்புகள் இல்லை என அறிவித்தன. தொலைக்காட்சியில் மூடப்பட்ட பள்ளிகளின் பெயர்கள் அகரவரிசைப்படி நகர்ந்தன. அந்த சிறுவர்களை வீட்டிலே வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற யோசனை வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு. சாலைகளில் கோரமான விபத்துகள் நடக்கக்கூடாதே என்ற கவலை போலிஸ{க்கும், மருத்துவமனைகளுக்கும்.
பள்ளிகளுக்குத்தான் விடுமுறை, வான்டர்பில்ட்டிற்குக் கிடையாது. ஆனால், சாமியும் சரவணப்ரியாவும் வேலைபற்றி யோசிக்கும் நிலையில் அப்போது இல்லை. ஞாயிறு மாலையில் இருந்தே பரிமளாவின் உடல்நிலை க்ஷீணிக்கத் தொடங்கியது. முதலில் பிற்பகல் உணவு வயிற்றில் தங்காமல் வாந்தியாக வெளிப்பட்டது. நல்லவேளையாக அவள் படுக்கையிலிருந்து குளியலறைக்கு விரைந்துசெல்ல அவகாசம் கொடுத்தது. பிறகு கம்பிளியையும் தாண்டி நடுங்கவைத்த குளிர். முதுகிலும், தோள்களிலும் ஆழமான வலி. இரவு முழுவதும், தொண்டையின் எரிச்சலைக் குறைக்கும் மருந்தையும் மீறிய இருமல், துப்பத் துப்ப முடிவில்லாத கோழை, ஆஸ்பிரினுக்குத் தணியாத ஜுரம். காலையில் காய்ச்சல் நூற்றிநான்கைத் தொட்டபோது அவள் தலையில் பனிக்கட்டியில் குளிரவைத்த துணியை சுற்றினார்கள். அவள் களைத்துப்போய் சிறிதுநேரம் தூங்கியபோது தான் அவர்களுக்கும் சற்று ஓய்வு. எட்டுமணிக்கு மறுபடி பரிமளாவின் இருமல்.
பனிக்காக இல்லாவிட்டாலும், பரிமளாவுக்காக வீட்டிலேதங்க முடிவுசெய்து அதைத் தெரிவிக்க சரவணப்ரியா ஆய்வுக்கூடத்தை அழைத்தபோது ஐரீன் பதிலளித்தாள்.
“எலிகளைக் கவனிக்க சீக்கிரமே வந்தேன். ஆன்ட்ருவுக்கு பள்ளிக்கூடம் இல்லாததால் ஜேசன் அவனுடன் வீட்டில் இருக்கிறான்.”
“எங்களாலும் வேலைக்கு வரமுடியுமென்று தோன்றவில்லை, ஐரீன்!” என்று வருந்திய குரலில் சரவணப்ரியா தெரிவித்தாள்.
“நான் வந்தபோது ஒன்றிரண்டு துகள்கள்தான். ஒன்பதுமணிக்குப் பிறகு பனி அதிகமாகும் என்று சொல்கிறார்கள். அதனால், முக்கியமான வேலை எதுவும் இல்லையென்றால் நீ வருவது அவசியமில்லை” என்றாள் ஐரீன் ஆதரவாக.
“முக்கியமான வேலை இருக்கிறது. வராததற்கு வேறொரு காரணம். நம்முடைய கூட்டு ப்ராஜெக்டின் புள்ளியியலுக்காக சான்டா க்ளாராவிலிருந்து பரி என்ற ஆசிரியையை வரவழைத்தேன். அவள் திரும்பிப்போவதற்கு முன் இப்படி ஆகிவிட்டது” என்று பரிமளாவின் நிலையைச் சுருக்கமாகச் சொன்னாள்.
“நீ சொல்வதையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் அவளுக்கு நிமோனியா என்று தோன்றுகிறது.”
“நிமோனியாவா?” என்று சரவணப்ரியா அதிர்ந்தாள்.
“போன மார்ச் முதலில் ஆன்ட்ருவுக்கும் இப்படித்தான் ஒருவாரம் இருமல், ஜுரம். எந்த மருந்துக்கும் கேட்கவில்லை. அது நிமோனியாவென்று பிறகு தெரிந்தது. பரிக்கு எவ்வளவு வயது?”
“எங்கள் வயதுதான்.”
“தாமதிக்காமல் இப்போதே நீ அவளை இங்கே அழைத்துவருவது நல்லது.”
“இன்னும் ஒருநாள் பொறுக்கலாம் என்றிருந்தோம்.”
“இன்று பெய்யும் பனி இரவில் உறைந்துவிடும். அதனால், சாலைகள் எல்லாம் நாளைகாலை எப்படி இருக்குமென்று தெரியாது. என்வேலை முடிந்துவிட்டது. நான் டாக்டர்களுடன் பேசி அவர்களை மசிய வைக்கிறேன். அவளுடைய கோழையை ஒரு ‘சாம்பில்-வயலி’ல் எடுத்துவர முடியுமா?”
“நிச்சயமாக.”
ஐரீன் உதவப் போகிறாள் என்றதும் சரவணப்ரியாவுக்கு தேகபலம், மனோதைரியம் இரண்டும் வந்தன.
மாடிக்குச் சென்றாள். பாதிவிழிப்பில் இருந்த பரிமளாவிடம், “நான் எங்களோட வேலைசெய்யற ஐரீனுடன் பேசினேன். உன்னை ஹாஸ்பிடலுக்கு உடனே கூட்டிப்போறது நல்லதுன்னு சொன்னா” என்றாள். நிமோனியாவைப் பற்றிச் சொல்லவில்லை. “அவ வார்த்தைலே எப்பவும் கனமிருக்கும்”
அதை மறுத்துப்பேசக் கூட பரிமளாவுக்குத் தெம்பில்லை.

சாமி பரிமளாவைத் தாங்கியபடி கீழே அழைத்துவந்தான். அதுகூட அவளுக்கு அயர்ச்சியைத் தந்தது. நாற்காலியில் அமர்ந்தாள். சரவணப்ரியா ஒரு தடிபோர்வையால் அவளைச் சுற்றினாள்.
சரவணப்ரியாவும் சாமியும் குளிரில் வெளியேசெல்லத் தயாராக நின்றார்கள்.
“ப்ரியா! போறதுக்கு முன்னாடி ஒரு உதவி” என்று சக்தியைத் திரட்டி கரகரப்பான குரலில் சொன்னாள் பரிமளா.
“என்ன, சொல்!”
அவள் வார்த்தைகளைக் காதில்வாங்க சரவணப்ரியா குனிய வேண்டியிருந்தது.
“என் செக் புஸ்தகத்திலேர்ந்து ஒரு செக்கைக் கிழிச்சு அதிலே இருபத்தைந்தாயிரம் டாலருக்கு ‘கெம்-சேஃப்’ பேர்லே எழுது! அப்புறம் ஒரு காகிதத்திலே, ‘என்னாலே நீங்க கேட்டபடி அட்வைசரா இருக்க முடியும்னு தோணலை. அதுக்கான பணத்தைத் திருப்பிக் கொடுத்துடறேன்’னு எழுதணும்.” இதைச் சொல்வதற்குள் நான்குமுறை இருமினாள்.
“நான் கம்ப்யுட்டர்லே அடிக்கட்டுமா?”
ஒப்புதலாகத் தலையசைத்தாள்.

25 பிப்ரவரி 2008
‘கெம்-சேஃப்’ நிறுவனத்திற்கு,
என் சொந்தக் காரணங்களால் முன்பு நான் ஒப்புக்கொண்டபடி உங்கள் நிறுவனத்திற்கு ஆலோசகராக இருக்க இயலாது என நினைக்கிறேன். இந்த எதிர்பாராத முடிவால் தங்களுக்கு நேரக்கூடிய தடங்கல்களுக்காக வருந்துகிறேன். நீங்கள் அளித்த முழு தொகையையும் இத்துடன் திருப்பி அனுப்புகிறேன். இது கிடைத்ததும் என்னை ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலக்கிவிடுங்கள்.
இப்படிக்கு

(பரிமளா கோலப்பன், பிஎச்.டி.)

சரவணப்ரியா காகிதம், செக் இரண்டையும் பரிமளாவின்முன் ஒரு அட்டையின்மேல் வைத்து அவள் கையில் ஒருபேனாவை செருகினாள். இரண்டிலும் கைநடுக்கத்துடன் கிறுக்கல்கள். அவற்றை ஒரு உறையில் வைத்தாள்.
“மேலே மாதவி பேர் எழுது!”
‘டாக்டர் மாதவி ரங்கனாதன், கம்யுனிகேஷன் டிரெக்டர், கெம்-சேஃப்’ என்று சாமி சொல்ல, அதை சரவணப்ரியா எழுதினாள்.
“இதை அவ வீட்டிலே கொடுக்கணும்” என்றாள் பரிமளா தீனமான ஆனால் உறுதியான குரலில்.
“இப்பவே என்ன அவசரம்? பனி எப்போ வேணும்னாலும் பெய்யும்போல தெரியுது. ஹாஸ்பிடல்லேர்ந்து திரும்பிவந்து பாத்துக்கலாம்.”
“நான் திரும்பி வருவேனோ மாட்டேனோ?”
“என்னடி தத்துபித்துன்னு பேசறே?” என்று ‘டி’ போட்டு அடம்பிடிக்கும் குழந்தையை அதட்டுவதுபோல் சரவணப்ரியா சொன்னாள்.
சனிக்கிழமை ‘வாக்-இன்-க்ளினிக்’கில் விருப்பமில்லாமல் ஒருவரிடம் வாங்கிய பணத்தை எப்படித் திருப்பித் தருவதென்று பரிமளா கேட்டது சாமிக்கு ஞாபகம் வந்தது. “அவ மனநிம்மதிக்கு செஞ்சா தப்பில்லை. எனக்கு மாதவி வீடு தெரியும். ரொம்ப தூரத்திலே இல்லே. நான் போய் அவ மெயில் பாக்ஸ்லே வச்சுட்டு உடனே வந்துடறேன். பத்து நிமிஷம்தான் ஆகும்” என்றான்.
கதவைத்திறந்து வெளியேறுமுன் சரவணப்ரியாவை அருகில் அழைத்து, “இன்னிக்கி நம்மாலே வீட்டுக்குத் திரும்பிவர முடியும்னு தோணலை. ரெண்டுபேருக்கும் எக்ஸ்ட்ரா துணி தனித்தனி பையிலே எடுத்துக்கோ!” என்றான். “அவளோட இன்ஷ{ரன்ஸ் அட்டை என்கிட்டதான் இருக்கு. மறக்காம உன் ஹான்ட்-பாக்லே வச்சுக்கோ!” என்று அதை எடுத்துக்கொடுத்தான்.
“நீ போயிட்டு வரும்போது கார்லே நிறைய ஹீடிங் போட்டுவை!”

கிளம்பியபோது காரின் முன்ஜன்னலில் வெள்ளைத் துணுக்குகள் உதிர்ந்து உடனே உருகின. பின்இருக்கையில் பரிமளாவைத் தாங்கியபடி சரவணப்ரியா அமர்ந்தாள். போகும் வழியிலிருந்த ஆரம்பப்பள்ளியின்முன் கார்கள் இல்லை. அதை கவனித்த பரிமளாவிடம், “பனிக்காக எல்லா ஸ்கூலும் மூடிட்டாங்க” என்றாள். பரிமளாவின் கண்கள் மறுபடி இறுகிக்கொண்டன.
நெடுஞ்சாலையில் சேருவதற்குள் ‘வைபர்’ இயங்கவேண்டி யிருந்தது. சாலையில் முதல்நாளே தெளித்திருந்த உப்புக்கரைசலால் வழுக்கவில்லை. முக்கால் தூரம் சென்றபோது பாதையின் பரப்பில் வெண்மை படியத்தொடங்கியது.
“நல்லவேளை தாமதிக்காம கிளம்பினோம்.”
எதிர்த்திசையில் இடைவெளியின்றி ஊர்திகள் நின்றன. ஊருக்குள் இருக்கும் அலுவலகங்களை மூடியதால் வெளியேறும் கும்பல். சாமி மெதுவாக, ஆனால் எங்கும் நிற்காமல் காரை செலுத்தினான். நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறியதும் சரவணப்ரியா ஐரீனை அழைத்து அதைச்சொன்னாள். மருத்துவமனையை அடைய இன்னொரு இருபது நிமிடங்கள். அதற்குள் காரின் சக்கரங்கள் பலமுறை தாங்கள் விருப்பப்பட்ட திசையில் சறுக்கப்பார்த்தன. அவசர சிகிச்சை வாசலில் காரை நிறுத்தியதும் சாமிக்கு நிம்மதிப் பெருமூச்சு. பாதையோரத்தில் ஐரீன் சக்கர நாற்காலியோடு காத்திருந்தாள். பரிமளாவை இறக்கி அதில் உட்கார்த்தினார்கள். அதற்குள் ஓலமிட்ட ஒரு மருத்துவ-வண்டி அவர்களைக் கடந்துசென்று நின்றது. தயாராகக் காத்திருந்த பணியாளர்கள் அதிலிருந்தவர்களை காலில்லாக் கட்டிலில் தூக்கிச் சென்றார்கள்.
“வடக்கே எக்கச்சக்கமான பனி. அங்கே விபத்து நடந்திருக்கலாம்” என்றாள் ஐரீன். அவளிடம் சரவணப்ரியா ‘சாம்பில்-வயலை’த் தந்தாள்.
காத்திருக்கும் நேரத்தில் சாமி, “ப்ரியா! பரிமளாவோட ஸ்கூல் பேர் ஞாபகமிருக்கா?” என்றான்.
“வில்பர்ட் ஹை, சான்டா க்ளாரா.”
“அவளாலே ரெண்டுவாரம் வேலைக்கு வரமுடியாதுன்னு கூப்பிட்டு சொல்லிடறேன். மெடிகல் ரிபோர்ட்டை அப்புறம் பாத்துக்கலாம்” என்று சாமி காரில் நகர்ந்தான்.
ஐரீன் நாற்காலியைத் தள்ள சரவணப்ரியா பின்சென்றாள். துப்பாக்கியை சோதிக்கும் கதவு வழியாக உள்ளே நுழைந்தார்கள்.
வரவேற்புப்பெண், பரிமளா நினைவை இழக்காமலோ, இரத்தத்தில் மிதக்காமலோ இருப்பதைப் பார்த்து அவளுக்கு மருத்துவ கவனம் உடனே அவசியமில்லை என, “முதலில் பதிவுசெய்ய வேண்டும்” என்று எதிர்ப்புற அறைகளைக் காட்டினாள். ஒன்றில் மேஜைக்கு இந்தப்புறம் காலியாக இருந்ததைக்கண்டு அந்த அறையில் சரவணப்ரியா நுழைந்து நாற்காலியில் அமர்ந்தாள். மேஜைக்கு மறுபுறத்திலிருந்து வந்த முதல்கேள்வி. “நோயாளிக்கு இன்ஷ{ரன்ஸ் இருக்கிறதா?”
சரவணப்ரியா எடுத்துக்கொடுத்த பரிமளாவின் மருத்துவ அட்டையை மற்றவள் இரண்டுமுறை திருப்பிப் பார்த்தாள். பிறகு கணினியில் அதன் எண்களைப் பதித்தாள். திருப்திகரமான பதில் வந்திருக்கும், ஆனால் அது அவள்முகத்தின் கடுமையை மாற்றவில்லை.
“அவசர சிகிச்சைக்கு அழைத்துவரக் காரணம்?”
“ஜுரம் மருந்துக்குக் கேட்கவில்லை.”
“நோயாளிக்கு நெருங்கிய உறவு?”
“அண்ணனின் மகள் மேற்குக் கடற்கரையில் எங்கோ இருக்கிறாள்.”
“எங்கே?”
“தெரியாது.”
“அவள் பெயர்?”
“அதுவும் தெரியாது.”
அத்தனை அக்கறையாக உறவைப் பற்றி கேட்டதன் காரணம் வெளிப்பட்டது. “முதலில் கோ-பேமன்ட் நூறு டாலர். அதுமட்டுமல்ல, இன்ஷ{ரன்ஸ் எல்லா செலவுகளையும் ஏற்காது. உதாரணமாக, மருத்துவமனையில் ஒருவாரம் தங்குவற்கு மட்டும்தான் பணம் தரும். அதையும் தாண்டிப்போனால்…”
“மிஸ் கோலப்பனால் தரமுடியும்.”
“இன்னொருவரும் பணத்திற்கு உறுதி தரவேண்டும்.”
“நான் தருகிறேன்.”
“நீ யார்?”
“அவளுடைய சினேகிதி.”
“அவளை எவ்வளவு காலமாகத் தெரியும்?”
“நாற்பதாண்டுகளுக்கு மேல்.”
“உன் அடையாளம்.”
பையிலிருந்து வான்டர்பில்ட் அடையாள அட்டையை எடுத்துக் கொடுத்தாள். அதைக் கண்டதும் மற்றவள் முகம் கொஞ்சம் சகஜநிலைக்கு வந்ததுபோல் தோன்றியது. “டிரைவர்ஸ் லைசன்ஸ்?”
சரவணப்ரியா அதையும் காட்டினாள்.
“எல்லாம் சரியாக இருக்கின்றன” என்று முடிவுரை கிடைத்தது.
“தாங்க்ஸ்.”
சரவணப்ரியா வெளியே வந்தபோது பரிமளாவின் சக்கரநாற்காலி கண்ணில் படவில்லை.
“உள்ளே சென்றுவிட்டாள்” என்ற விவரம் கிடைத்தது.
ஐரீனுக்குமேல் தான் செய்யக்கூடியது எதுவும் இல்லை என சரவணப்ரியா தன் ஆராய்ச்சி அறையை நோக்கி நடந்தாள். நடைபாதையின் பனிப்படிவுகளைப் பணியாட்கள் ஓரத்தில் தள்ளினார்கள். மனித நடமாட்டம் சாதாரண நாட்களை விட குறைவாக இருந்தது. மருத்துவமையத்தின் நடைவழியில் வேலைக்கு வந்தாகவேண்டிய ஒருசிலர் பள்ளிக்குச் செல்லாத சிறுவர்களோடு நடந்தார்கள்.
சாமியையும் அவளையும் தவிர அவர்கள் பகுதியில் யாரையும் காணோம். அவளிடத்தில் வந்து அமர்ந்ததும் சரவணப்ரியாவுக்கு பரிமளாவின் உடல்நிலைபற்றிய கவலை. அதை மறக்க கையுறை அணிந்து ஹிக்கரி அனுப்பிய சிறுநீர் சாம்பில்களை ‘–80 டிகிரி ஃப்ரீஸரி’லிருந்து எடுத்து உயர்மேஜையில் வைத்தாள். அவை மெதுவாக உருகுவதை வேடிக்கைபார்த்தாள். அவற்றை அளவிட இரண்டுநாட்கள் தேவைப்படும்.

பகல் உணவிற்கு சாமி மருத்துவமையத்தின் உணவகத்திலிருந்து சான்ட்விச் வாங்கிவந்தான். நெடுஞ்சாலைகள் பனியில் மூடியதால், அவசியமின்றி அவற்றில் செல்லவேண்டாம் என செய்திகள் தெரிவித்தன. ஒருமணிக்கு ஐரீன் அழைத்தாள்.
“நான் சந்தேகப்பட்டதுதான், சாரா! மார்பின் ‘எக்ஸ்-ரே’யில் கோழை நிரம்பிய நுரையீரலின் முனை தெரிந்தது. இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை மிக அதிகம். கோழையின் நுண்ணுயிரிகளை சோதனைக்கு அனுப்பி யிருக்கிறார்கள். விரைவில் ஆன்ட்டை-பயாடிக் கொடுக்க ஆரம்பிப்பார்கள். நீ கவலைப்பட வேண்டியதில்லை.”
“தாங்க்ஸ், ஐரீன்! என் வேலை விரைவில் முடிந்துவிடும். பரியை நான் கவனித்துக்கொள்கிறேன். நீ போகலாம், ஆனால் வீட்டிற்கு நீ எப்படிப் போவாய்?”
“என் வீட்டிற்குச் செல்வதாக இல்லை. என் உறவினன் ஒருவன் வெஸ்ட்-என்ட் அவென்யு பக்கத்தில் இருக்கிறான். நடந்தே போய்விடுவேன். நாளை பார்க்கலாம்.”
மூன்றுமணிக்கு, சாமி அவளுடைய அறையில் வைத்திருந்த துணிப்பையை எடுத்துக்கொண்டு அவசரசிகிச்சை பிரிவை நோக்கி நடந்தாள்.
பரிமளாவின் பேரைச் சொல்வதற்குமுன்பே நர்ஸ், “உன் சினேகிதியின் சோதனைகள் முடிந்துவிட்டன. க்ளின்டாமைசினும், அஸித்ரோமைசினும் இரத்தக்குழாய் வழியாக செலுத்த ஆரம்பித்திருக்கிறோம்” என்று சொல்லியபடி ஒரு சோதனைஅறைக்குக் கூட்டிச் சென்றாள். நுழைவதற்கு முன் சரவணப்ரியா கைகளில் கிருமிநாசினியைப் பரப்பிக்கொண்டாள். உள்ளே பரிமளா மயக்கநிலையில் படுத்திருந்தாள். பொழுதைத் தள்ள சரவணப்ரியா பையில் எடுத்துவந்த வார்த்தைப்புதிர்களை விடுவிக்கத் தொடங்கினாள். பொதுவாக பலமணி நேரமெடுக்கும் கடினமான புதிர்களும் அன்று விரைவில் முடிந்துவிட்டன. வேறு என்ன செய்யலாம்?
ஐந்துமணிக்கு மேல் டாக்டர் கதவைத் தட்டிவிட்டு நுழைந்தார்.
“என் பெயர் ஸோஸ். என் அப்பாவே ஸோஸ்நவோஸ்கி என்கிற பெரியபெயரை சுருக்கிவிட்டார்” என்று அறிமுகம் செய்துகொண்டார்.
“எஸ் ஓ எஸ் மருத்துவருக்குப் பொருத்தமான பெயர்தான்” என்றாள் சரவணப்ரியா புன்னகையுடன்.
பரிமளாவை சோதித்து அவளை அழைத்துச்செல்ல அவர் அனுமதி கொடுத்ததும் இருவர் படுக்கையைத் தள்ளத்தொடங்கினர். சரவணப்ரியா பின்தொடர்ந்தாள். மருந்தகத்தின் கீழ்த்தளம் வரை சென்று நீண்ட சுரங்கப்பாதையில் நடை தொடர்ந்தது. மருத்துவமையத்தின் வௌ;வேறு பகுதிகளுக்குச் செல்ல அந்தவழியில் அவள் பலமுறை நடந்திருக்கிறாள். உடலில் பிளாஸ்டிக் குழாய்கள் புகுத்திய நோயாளிகள் சக்கரக்கட்டில்களில் தள்ளப்படுவதைக் கவனித்திருக்கிறாள். முதியவர்கள், கறுப்பு நிறத்தவர்கள், நினைவிழந்தவர்கள், பாதிமயக்கத்தில் இருப்பவர்கள் என்று எத்தனையோ பேர். அவர்களெல்லாம் யார், என்ன காரணத்திற்காக சிகிச்சைக்கு வந்திருக்கிறார்கள், எங்கே எடுத்துச்செல்லப் படுகிறார்கள், அவர்களுக்கு யார் வேண்டப்பட்டவர்கள் என்றெல்லாம் ஆழ்ந்து யோசித்ததில்லை. இன்று தன்னைமறந்து சக்கரக்கட்டிலில் பயணம் செய்கிறவள் அவள் சினேகிதி. தற்போது அவளையும் சாமியையும் தவிர இந்தப்பரந்த உலகில் வேறு யாருடைய ஆதரவும் இல்லாத ஒருத்தி. இதுவரை அவள்வாழ்ந்த வாழ்க்கையில் அர்த்தம் இருந்திருக்கிறது. இனியும் சாதிக்க அவளுக்கு எவ்வளவோ இருக்கிறது.
பாதை முடிந்தபோது ஒரு மின்தூக்கியில் வண்டிக்கும் மூவருக்கும் மட்டும் இடம். மருத்துவமையத்தின் கோடியில் ஒரு வட்டமான கோபுரம். அதன் நான்காவது மாடியில் வெளிவந்து காலியான அறையின்முன் நின்றார்கள்.

பரிமளாவின் கையில் பதிக்கப்பட்ட ஊசிவழியாக உடலுக்குள் வந்த மருந்துகளுக்கும் ஏற்கனவே எதோவொரு வழியில் நுழைந்திருந்த ஸ்ட்ரெப்டோகோக்கஸ் நுண்ணுயிரிகளுக்கும் இரத்தத்தில் பயங்கரப் போராட்டம். அதை உணராமல் அவள் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். படுக்கைக்கு எதிரிலேயே ஒரு ‘சோஃபா’வில் சரவணப்ரியா. நர்ஸ் ஒரு தலையணையும் போர்வையும் தந்திருந்தாள்.
“எதாவது அவசரம் என்றால் என்னை அழைக்கலாம். எதற்கும் நான் நடுவில் ஒருமுறை வந்துபார்ப்பேன்.”
ஜன்னல் திரையை முழுக்க இழுத்துமூடி, அறையின் கதவை சாத்திவிட்டுச் சென்றாள். இயந்திரங்களின் விளக்குகளில் இருந்து வெளிப்பட்ட சிறுஒளியும், எப்போதோ வந்த பரிமளாவின் இருமல் சத்தமும் மிஞ்சின.
சூரன் பிறந்தபோது மட்டுமே அவள் மருந்தகத்தில் தங்கியிருக்கிறாள். உடல் களைத்திருந்தாலும் மனதுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் கொடுத்த அனுபவம். இப்போது அவளுக்காக இல்லாமல் பரிமளாவுக்காகத் தங்கினாலும் தூக்கம் வரவில்லை. ஆறுமணிக்கு சாமியும் அவளும் அருகில் இருந்த ‘பர்nஃபக்ட்-பீட்ஸா’வுக்கு நடந்துசென்று சாப்பிட்டார்கள். கடையில் வழக்கமான கும்பலில் பாதிகூட இல்லை. திரும்பி வந்தபோது சாமியிடம், “நான் பரிமளாவோட தங்கறேன். நீ நம்ம ஆஃபீஸ்லே ஓரு ‘ஸ்லீபிங் பாக்’ இருக்கு. அதிலே படுத்துக்கோ!” என்றாள்.
டாக்டரின் கணிப்பிலிருந்து பரிமளாவின் உடல்நிலை சரியாகிவிடும் என்று உறுதியாகத் தெரிந்தது. அதைப்பற்றிய ஆதங்கம் மறைந்து அவள் எதிர்காலத்தைப் பற்றிய கவலை சரவணப்ரியாவின் மனதை அரித்தது. அதனால் அரைத்தூக்கம்தான். அதுவும் தொடர்ச்சியாக இல்லை. ஒருமுறை விழித்தபோது படுக்கையில் பரிமளா எழுந்து உட்கார்ந்திருப்பது தெரிந்தது. எதாவது வேண்டுமா என்று கேட்பதற்கு அருகில் சென்றாள். அவள் சுயநினைவோடு இருந்ததாகத் தெரியவில்லை. ஏதேதோ வார்த்தைகள். தூக்கத்தின் உளறலென முதலில் நினைத்தாள். பிறகு, சில சொற்றொடர்கள் தெளிவாகக்கூட காதில் விழுந்தன. கேட்பது சரியா?

தொடர்பில்லாத காட்சிகள். பரிமளாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எது நிஜம் எது கனவு என்று மூளைக்கு பிரிக்கத் தெரியவில்லை. காலத்தின் பரிமாணத்தைத் தாண்டிய காட்சிகள், தோற்றங்கள். அவள் பேசுகிறாள், இன்னும் வேறுயாரோ பேசுகிறார்கள்.
— பெங்களுர் அத்தை ஊருக்குப் போயாச்சா?
— ம்ம்.
— அவ பெண்.
— அவளுந்தான்.
— நான் வரச்சே நீ ‘காலங்களில் அவள் வசந்தம்’ பாடினது கேட்டுதே. அவளை நெனைச்சிண்டுதான் பாடினியா?
— இல்லியே, ஏன்?
— சம்பத், பட்டு அத்தைபெண் மைதிலிக்குத்தான்னு எங்காத்திலே எப்பவோ தீர்மானம் பண்ணிட்டா. அதுமாதிரி உனக்கும்…
— சொந்தத்திலே கல்யாணம் என் அப்பாவுக்கு கொஞ்சம்கூடப் பிடிக்காது.
— குட்நியுஸ்.
— ஏன் குட்நியுஸ்?
— இதுகூடவா தெரியலை? அட போடா முட்டாள்!
அலட்சியமாகச் சிரிக்கிறாள். ஆனால், சிரிப்பு அதிகநேரம் நீடிக்கவில்லை.
— இருபத்தைந்தாயிரம் டாலர் செக் எனக்கு எதுக்கு?
— செமினார் கொடுத்தியே.
— அதுக்கு முன்னூறு போதும், மீதி?
— யாரோ எழுதின பேப்பர்லே உன் பேரைப் போடணும்.
— அப்புறம் என்பேர் கெட்டுப்போயிடாதா?
— அறுபது வயசாகப்போகிற உனக்கு எதுக்கு நல்லபேர்?
— இன்னும் நாற்பது வருஷம் இருந்தாலும் இருப்பேன்.
— அதிகப்பணம் வேண்டுமா?
— எதுவும் வேண்டாம், வாங்கிய பணத்தையே திருப்பிதந்து விடுகிறேன்.
— கையெழுத்து போட்டு வாங்கினது வாங்கினதுதான்.
யாரோ அழுகிறார்கள்.
— ஏன் அழுதுவடியறே? பரிட்சை சரியா எழுதலையா?
— நன்னாத்தான் பண்ணினேன்.
— அப்புறம்?
— நேத்து நாடகத்துக்கு வந்திருந்தேன்.
— சீன் மாத்தறச்சே நான்கூட பாத்தேன். ரெண்டாவது வரிசைலே அப்பா அம்மாவுக்கு நடுவிலே உக்காண்டிருந்தியே.
— ரொம்ப இயற்கையா நன்னா நடிச்சே. மேடைலே உனக்கு பயமே இல்லை. எனக்கு நாலுபேர் முன்னாடி நின்னா கைகாலெல்லாம் நடுங்கும்.
— ஓ! ஐயாவுக்கு பொறாமையா இருக்கா? எனக்காகப் பெருமைப்படுவேன்னு நினைச்சேன்.
— நேத்தி நாடகத்திலே நீ வந்து போனப்புறம் எனக்கு அதைப் பாக்கவே பிடிக்கலை. நீ எங்கியோ மேலே போயிட்டமாதிரி தோணித்து. நீ எல்லாத்திலியும் என்னைவிட உசத்தி. எனக்கு செஸ் கத்துக்குடுத்தே. எனக்கு எல்லா காய்களோட ‘மூவை’யும் ஞாபகம் வச்சுக்க முடியலை. சைகிள் கத்துக்க ஆரம்பிச்சு நீ சீட்லே உக்காந்து ஓட்டினப்போ நான் குரங்குப் பெடல்தான் பண்ணினேன். நீ இந்தி இங்க்லீஷ் ரெண்டும் சரளமா பேசறே. எனக்கு வாயடைச்சுப் போயிடறது.
— அத்தைபெண், வாயேதிறக்காம இருக்காளே. அவமாதிரி நானும் இருக்கணுமா?
— ஐயோ, வேண்டாம், அவ சுத்த போர்.
— கவலைப்படாதே! உன்மேலே வைச்சிருக்கிற அன்பு இப்படியே இருக்கும்.
— எப்பவுமா?
— ஆமா, எங்கே சிரி, பார்க்கலாம்!
— சிரிச்சுட்டேன். மாடம்பாக்கம் வரைக்கும் சைகிள்லே போலாமா?
— போயிட்டு யார் முதல்லே திரும்பிவரான்னு பாக்கலாம்.
— அப்பகூட என்னோட போட்டிபோடணுமா?
களைத்துப்போய் பரிமளா படுத்தாள்.

சரவணப்ரியாவும் திரும்பவந்து படுத்தாள். தூக்கத்தை விரட்டிய சிந்தனைகளில் நேரம் சென்றது. பரிமளாவின் வார்த்தைகளிலிருந்து அவள் சிறுவயதில் சாமியின்மேல் வைத்த அன்பு வேர்விடாத காளானைப் போன்றதில்லை எனத் தோன்றியது. அதெல்லாம் நடந்து எவ்வளவோ ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது என்ன செய்யலாம்? என்ன செய்ய முடியும்?

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்