அமர்நாத்
13. ‘கவர்னர்ஸ் க்ளப்’
பாதிக்கப்பட்ட மார்க்ஸ் தொழிலாளிகள், அவர்களின் உறவினர்கள் ஆகியோரின் இரத்தமும் சிறுநீரும் ‘nஃபட்-எக்ஸி’ல் அனுப்பப்பட்டனவென்று முதல்நாள் மாலை ஹிக்கரி தெரிவித்திருந்தான். காலை ஒன்பதுமணிக்கு கார்பன்-டை-ஆக்ஸைட் கட்டிகளுடன் அவை ஆய்வுக்கூடத்திற்கு வந்துவிடும். தான் கண்டுபிடித்த வழிமுறைகளைப் பின்பற்றி அவற்றை உடனே சோதிக்க விரும்பினாள் சரவணப்ரியா. “நீ கிளம்பிப்போ! பரிமளாவை நான் பாத்துக்கறேன்” என்றான் சாமி.
“ஒருமணிக்கு கண் டாக்டர்கிட்டே அபான்ட்மென்ட், மறந்துடாதே!”
“அதுக்கு முன்னாடியே மாதவி வீட்டில் அவளை விட்டுடுவேன்.”
மிஞ்சிய இட்லிமாவில் சாமி பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் பச்சைமிளகாயையும் போட்டு கரண்டியால் கலக்கி, “ஆளுக்கிரண்டு தேறும்” என்று சரவணப்ரியா அறிவித்தபோது பரிமளா இறங்கிவந்தாள்.
“சத்தம்போட்டு உன்னை எழுப்பிட்டோமா?”
“இல்லை, வெங்காயத்தோட வாசனைலே எழுந்தேன்.”
ஊத்தப்பம் தயாராகும் நேரத்தில் சாமி வீட்டுவாசலில் கிடந்த செய்தித்தாளை எடுத்துவந்து பரிமளாவிடம் நீட்டினான். அவள் சூபர்மார்கெட் விளம்பரங்களைப் பார்த்தாள்.
“இங்கே சாமானெல்லாம் எங்க ஊரைவிட மலிவா இருக்கே.”
காலை உணவு முடிந்ததும் சரவணப்ரியா வேலைக்குச்செல்லத் தயாரானள். பரிமளாவைக் கட்டிக்கொண்டு, “ரெண்டுநாள் பழக்கத்திலேயே உன்னைப் பிரியறது கஷ்டமா இருக்கு, பரிமளா!” என்று விடைபெற்றாள்.
“ரொம்ப உபசாரம் பண்ணாதே! மறுபடி வந்தாலும் வந்துடுவேன், ஜாக்கிரதை!” என்று பரிமளா பயமுறுத்தினாள்.
“தாராளமா வரலாம்.”
கராஜின் கதவு திறக்கும் சத்தம், பிறகு கார் கிளம்பி வெளியேசெல்லும் சத்தம், கடைசியில் கராஜின் கதவு இறங்கும் சத்தம். அது அடங்கியதும் வந்த நிசப்தத்தை பரிமளா கலைத்தாள். “நீங்க ரெண்டுபேரும் ரொம்ப சுமுகமா இருக்கேள். என்கிட்டே ஒருத்தரை ஒருத்தர் குறைசொல்லலை. கார், வீடுன்னு விலையுயர்ந்த பொருள்களைப் பத்தியோ, பையனோட சாதனைகளைப் பத்தியோ பெருமையடிச்சு என்னை போரடிக்கலை. டிவிலே கணவன் தொப்பை போட்டு குண்டாவும், மனைவி ஒல்லியாவும் இருக்குறமாதிரி காட்டுவாளே, அந்தமாதிரி இல்லை. கிட்டத்தட்ட ‘ஐடியல் கப்ல்’னு சொல்லாம்.”
“கிட்டத்தட்டதானா?” என்று சாமி போலி ஏக்கத்துடன் கேட்டான்.
“நான் பழங்கால டீச்சர், முழு மார்க் கொடுக்க மனசுவராது.”
“எங்க ஒத்துமைக்கு என்ன காரணம்னு பிரிச்சுப்பாத்தா, எங்களுக்கு ஒரேவயசு. சின்ன வயசிலே எனக்குப்பிடித்த சினிமா பாட்டுகளையும், நாவல்களையும்தான் அவளும் ரசிச்சிருக்கா. குழந்தை பிறக்க காத்திருந்த பன்னண்டுவருஷத்திலே ஒருத்தருக்கு இன்னொருத்தர் மட்டும்தான்னு ஒரு தீர்மானம். அமெரிக்காலே எனக்குத் தெரிஞ்ச கணவன் மனைவிகளோட ஒப்பிடும்போது எங்களுக்கு அதிகமான பிரச்சினைகள்னு நினைக்கிறேன். பத்மநாபன் மாதிரி படிப்பு, படிப்பு முடியறதுக்கு முன்னாடியே கையிலே வேலை, வேலைலே சேர்ந்ததும் விசான்னு காலநேரப்படி நடக்கலை. என்னோட படிச்சவங்க என்னைவிட நாலுமடங்கு பணம் பண்ணறாங்க. குறையா இதைச் சொல்லலை. அதையெல்லாம் மனசுதளர விடாம சந்தித்ததினாலதான் நெருக்கமா இருக்கோம்னு சொல்லவந்தேன்.”
அனுபவபூர்வமான அவன் வார்த்தைகள் பரிமளாவை சிந்திக்கவைத்தன.
அவளுடன் சிலமணி நேரத்தை எப்படிச் செலவிடுவதென சாமி யோசித்தான். “பேப்பர் எடுக்கப்போனப்பவே கவனிச்சேன். குளிர் அதிகமா இல்லை. வெளிலே நடக்கப் போகலாமா?”
“ம்ம்!”
“வந்து குளிக்கலாம். போறதுக்கு முன்னாடி மெஷின்லே ப்ரெட்டுக்கு மாவு போட்டுட்டு வரேன். ரெண்டுமணிலே ஆயிடும். மத்தியானத்துக்கு சாப்பிடலாம். க்ரான்பெர்ரி போட்ட ப்ரெட் நன்னா வரும். பண்ணட்டுமா?”
“நீ சொன்னா சரி.”
“எதுக்கும் இதைப்போட்டுக்கோ! ஆரம்பத்திலே குளிரா இருக்கும்” என்று சரவணப்ரியாவின் தடி மேல்-ஜாக்கெட்டை எடுத்துக்கொடுத்தான்.
அருகில் இருந்த உயர்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சாமி காரை நிறுத்தினான். களத்தைச் சுற்றிநடக்கத் தொடங்கினார்கள். ஏற்கனவே பலதரப்பட்ட மனிதர்கள் வௌ;வேறு கதியில் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் நீள்வட்டத்தின் உட்புற ஓரத்தில் இருவரும் நடந்தார்கள். அங்கிருந்து பள்ளிக்கூடத்தின் கட்டடங்கள் தெரிந்தன.
“பாக்கறதுக்கு எல்லாம் புதுசா இருக்கே. எங்க ஊர்லே பாதி ஒடைஞ்சிருக்கும். கண்தெரியற இடத்திலெல்லாம் சிவப்பு மையிலே கோலம்போட்ட மாதிரி எழுதியிருப்பா.”
“இந்த ஸ்கூலைக் கட்டி நாலைஞ்சு வருஷம்தான் ஆறது. இது பணக்கார ஊர்.”
முதல்சுற்றின் முடிவில் பரிமளா மேல்-ஜாக்கெட்டைக் கழற்றி பாதையின் ஓரத்தில் வைத்ததும் நடையைத் தொடர்ந்தார்கள். சரவணப்ரியா ஏற்கனவே பரிமளாவிடம் சொல்லியிருப்பாள் என்றாலும் தானும் விளக்கம்தருவது அவசியம் என சாமி நினைத்தான்.
“ப்ரியாவோட ப்ரசன்டேஷனைப் பாத்தப்போ எனக்கும் க்ரான்ட் கிடைச்சுடும்னு நம்பிக்கை இருந்தது. தகராறு வரும்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா உன்னை அனாவசியமா அலையவச்சிருக்க மாட்டோம்” என்று ஆரம்பித்தான்.
“கிடைக்காததிலே எனக்கு ரொம்ப ஏமாத்தம்தான்” என்றாள் பரிமளா குறைசொல்வதுபோல். உடனே, புன்னகைக்கு மாற்றிக்கொண்டு, “க்ரான்ட்டை சாக்கிட்டு உங்களோட ஐந்து வருஷம் பழகலாம்னு நினைச்சேன், இப்போ அது இல்லை” என்றாள்.
“அதுதான் குறைன்னா, க்ரான்ட் இல்லாட்டாகூட நாம சந்திச்சா போறது.”
“நிஜமாவா?” என்று நம்பிக்கையுடன் கேட்டாள்.
“எங்க பையன் எப்படியும் இன்னும் நாலைஞ்சு வருஷம் பெர்க்கிலிலேதான் இருக்கப்போறான். அவனைப் பார்க்க வரும்போது உன்வீட்டுக்கும் வரோம். நீ எப்ப வேணும்னாலும் இங்கே வரலாம்.”
“நீ இப்படிச்சொன்னது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குன்னு உனக்குத் தெரியாது. ரிடைர்மென்ட் பணத்தின் மதிப்பு பாதியாக் குறைஞ்சுடுத்து. இந்த சம்மர்லே எனக்கு வேலையும் இல்லை. சம்பளத்திலே வெட்டு வரலாம்னு ஒருசெய்தி அடிபடறது. ஒருவீட்டையும், ‘சோஷியல் செகுரிடி’ பணத்தையும் வச்சிண்டு இன்னும் நாப்பதுவருஷம் எப்படி சமாளிக்கப்போறேன்னு ரெண்டுமூணுவாரமா கொஞ்சம் டிப்ரெஷன்லே இருந்தேன்.”
“நம்ம ஊர்லேதான் பிள்ளையா குட்டியா, தனியாளுக்கு என்ன கவலைன்னு சொல்வா. உண்மைலே தனியா இருக்கும்போதுதான் கவலை அதிகம். பிரச்சினையை முழுவதுமா சந்திக்கணும். ஒருதடவை எனக்கு சம்பளம் குறைஞ்சப்போ ப்ரியாவோட சம்பளம் இருந்தது. இப்போ இந்த கிரான்ட் கிடைக்காட்டாலும் ரெண்டுபேரா இருக்கறதனாலே என்ன செய்யறதுன்னு கவலை வராது.”
“நீ சொல்றது ரொம்ப சரி. பண நெருக்கடிலே என்னோட வேலைசெய்யற ஒருத்தியை வாடகைக்கு வச்சுண்டேன். எனக்கும் அவளுக்கும் ஒத்துப்போகும்னு தோணலை. ‘வின்டர் ப்ரேக்’லே அவளோட ஒருவாரம் க்ரூஸ் போறதா இருந்தது. எனக்கு போகப்பிடிக்கலை. நல்லவேளை! இதை சாக்காவச்சு தப்பிச்சிண்டேன்.”
“க்ரூஸ்லேந்து அவ திரும்பிவந்தப்புறம்?’
“அப்போ பாத்துக்கலாம்.”
“அவ இல்லாட்டா பணத்துக்கு என்ன பண்ணப்போறே?”
“வேறவழி எதாவது யோசிக்கணும்.”
சிலநிமிடங்கள் மௌனமாக நடந்தார்கள்.
“இது சூரன் பிறக்கறதுக்கு முன்னாடி நடந்தது. ப்ரியா ஊர்லே இல்லை. வீட்டிலே நான் மட்டும்தான். டிவிலே குற்றவாளிகள் எப்படி தனியா வாழற பெண்களைக் குறிவச்சு தாக்கறாங்கன்னு ஒரு செய்திப்படம். எலிவேட்டர்லே ஒருத்தி தனியா போகும்போது கண்ணாடியைத் தட்டிவிட்டு, அவ தடுமாறும்போது ஹான்ட்-பாகைத் திருடறாங்க. கராஜ்லே கார் நிறுத்தற நேரத்திலே வீட்டுக்குள்ள புகுந்து இன்னொருத்தியைப் பயமுறுத்தறாங்க. இப்படியெல்லாம் பாத்ததும் நான் போயிட்டா ப்ரியாக்கு என்ன ஆகும்னு ஒரு கவலை. என்வீட்டிலே போய் இருக்க முடியாது. காரணம் உனக்கே தெரியும். அவளுடைய அக்காவும் ஒரு குழந்தைகள் ஆசிரமத்திலே அடைக்கலமா இருந்தா. அவளோடயும் வாழமுடியாது. கடைசிவரைக்கும் தனியா இங்கேதானே வாழ்ந்தாகணும்.”
“அவ மறுபடி கல்யாணம் பண்ணிக்கலாமே!”
“அதைப்பத்திகூட நாங்க பேசியிருக்கோம். அவ மாட்டேன்னுட்டா. ‘நான் கல்யாணம் பண்ணிக்கிறதாகவே இல்லை. நீ கேட்டதாலேதான் சம்மதிச்சேன். நீ போனப்புறம் எதுக்கு நான் அதை யோசிக்கணும்’னு கண்டிப்பா சொல்லிட்டா. மனசுமாறி இன்னொருத்தனோட துணைலே இருக்கப்போறாள்னா கவலையே இல்லையே. அப்படி நடக்காம தனியா இருக்கவேண்டி வந்தா, எப்படி சமாளிப்போன்னு அன்னிக்கி ராத்ரி முழுக்க நான் தூங்கலை.” பரிமளாவின் பக்கம் திரும்பி, “நீ இத்தனை வருஷம் தனியா, தைரியமா வாழ்ந்திருக்கே” என்று பாராட்டினான்.
“இதுவரைக்கும் எப்படியோ காலம் ஓடிப்போயிடுத்து. இப்பத்தான் ரயில் நிக்கும்போது எதுக்கோ இறங்கி நான் திரும்ப ஏர்றதுக்குள்ள அது போயிட்டமாதிரி ஒரு ஃபீலிங். தெரிஞ்சவா யாருமில்லாத ஸ்டேஷன்லே என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கறேன்.”
பந்தயங்கள் ஆரம்பிக்கும் கோட்டை நெருங்கியபோது, “பன்னண்டு சுத்து முடிக்கப்போறோம்” என்றான்.
“கணக்கு வச்சிருக்கியா?”
“நீ கவனிக்கலை. ஒவ்வொரு தடவை ஆரம்பக்கோட்டைத் தாண்டும்போதும் ஒரு பென்னியை இடது பாக்கெட்டிலிருந்து வலது பக்கத்துக்கு மாத்துவேன். இல்லாட்டா கணக்கு தப்பிடும்.”
“மூணு மைலா நடந்திருக்கோம்? நம்பமுடியலியே.”
“பேசிண்டே நடந்ததிலே தெரியலை. நிறுத்திக்கலாமா?”
சுற்றுப்பாதையில் இப்போது அவர்கள் மட்டும். பேசுவதற்கு விஷயம் பாக்கியிருந்ததுபோல் பரிமளா, “இன்னுமொரு மைல் நடக்கலாம். மாதவிவீட்டிலே சும்மாத்தானே இருக்கப்போறேன்” என்றாள்.
“இங்கே வராம இந்தியாவிலேயே இருந்திருந்தா உன் வாழ்க்கை எப்படி போயிருக்கும்?” என்று உரையாடல் தொடர்ந்தது.
“பாங்க்லே பெரிய பதவிலேர்ந்து ரிடைர் ஆயிருப்பேன். நான் கோபப்பட்டாலும், சின்ன தப்பு செஞ்சாலும் கல்யாணம் ஆகலை, அதனாலதான் இப்படி இருக்காள் என்கிற வார்த்தையை கேட்டுக்கணும். இங்கே அப்படி யாரும் சொன்னதில்லை. அண்ணா குழந்தைகள் நன்றி காட்டாதது பெரிசா தெரிஞ்சிருக்கும். ஒருவேளை அவா தயவு வேண்டியிருக்கலாம். இங்கே நான் அதை யோசிக்கறதுகூட கிடையாது. பையன் பெங்களுர்லே இருக்கான். எப்பவாவது அமெரிக்கா வருவான், ஆனா என்னைக் கூப்பிடமாட்டான். பெண் சியாட்டில்லே இருந்தாலும் ரெண்டுவருஷத்துக்கு ஒருதடவை தலையைக் காட்டுவோ, அவ்வளவுதான்.”
“ரிடைர் ஆனப்புறம் என்ன பண்ணறதா இருக்கே?”
“இன்னும் அதைப்பத்தி யோசிக்கலை.”
“இதுவரை செய்யாதது எதாவது இருக்கா?”
“நான் இன்னும் நண்பர்களை சேத்திருக்கலாம்னு தோணறது. ஆனா தப்பு முழுக்க என்மேலே இல்லை. வயசானப்புறம் இங்கே வந்து பிஎச்.டி. பண்ணினதோட பலன். அப்போ எல்லாருமே என்னைவிட ரொம்பச் சின்னவா. நெருங்கிப்பழகின ஒருவனும் திரும்பிப்பாக்காம ஓடிட்டான். நட்பு குழந்தைகள் மூலமா உண்டாகும்னு சொல்ல கேட்டிருக்கேன். எனக்கு அந்த வழியில்லை.”
“உண்மைதான். சூரன்வழியா எங்களுக்கு அறிமுகம் ஆனவா ரொம்பப்பேர்.”
“போனவாரம் இந்தியாவிலே எனக்குத் தெரிஞ்ச ஒருத்தி ஆரிகன் வந்து என்னைக்கூப்பிட்டு அவகஷ்டத்தைச் சொல்லி அழுதா. இப்போ அதையே நான் உன்கிட்டே செய்யறேன்.”
“பரவாயில்லை. உன்னைப் புரிஞ்சிக்கப் பாக்கறேன். உறவுகள் இல்லாட்டா அப்புறம் சமுதாயம் எதுக்கு?”
பரிமளா நடைக்கு ஒவ்வொரு பெட்டியாக மாடியிலிருந்து இறக்கிவந்து கராஜிற்கு செல்லும் கதவருகில் வைத்துவிட்டு சாமிக்குக் காத்திருந்தாள்.
குளித்து வெளியேசெல்லும் உடையில் கீழேவந்த சாமி, “நான் எடுத்துண்டு வந்திருப்பேனே” என்றான்.
“இந்த ரெண்டுநாளிலே புதுசக்தி வந்தமாதிரி இருக்கு.”
சிவப்பு கப்ரியிலும் பிரகாசமான ஆரஞ்சுநிற சட்டையிலும் அவள் தோற்றத்தைப் பார்த்த அவன் அதை சந்தேகிக்கவில்லை.
ப்ரெட்டை நீண்ட கத்தியால் வெட்டி ஆளுக்கு இரண்டு துண்டுகளை டோஸ்டரில் சுட்டான்.
“வெண்ணெய் போடலாமா?”
“கொஞ்சம்.”
பரிமளாவின் பங்கை அவள்முன் வைத்ததும், “தாங்க்ஸ்” என்றாள். பிறகு அவளே, “பழக்கதோஷம், நமக்குள்ள இந்த சம்பிரதாயம் எதுக்கு?” என்று சிரித்தாள்.
“ஜாம் வேணுமா?”
“இதுவே நன்னா இருக்கு.”
வீட்டிலிருந்து வெளியே வருவதற்குமுன், “எதுவும் மறக்கலையே?” என்றான்.
“ஏர்போர்ட்லே உன்னைப் பாத்ததிலேர்ந்து எல்லாம் ஞாபகம் இருக்கு.”
“நீ வரப்போறேன்னு தெரிஞ்சப்போ எனக்குக்கூட சின்ன வயசிலே நடந்ததெல்லாம் ஞாபகம் வந்தது.”
“திரும்பிப்போனதும் அனிடாகிட்டே நிறைய விஷயம் சொல்லலாம்.”
சாமி பெட்டிகளைக் காரின் பின்னால் வைத்தான்.
“மாதவி வீடு ‘கவர்னர்ஸ் க்ளப்’லே இருக்கு. பத்துநிமிஷம்தான் ஆகும். வழி பாத்து வச்சிருக்கேன்.”
“மாதவியே நாளைகாலைலே ஏர்போர்ட்டுக்குக் கூட்டிண்டு போயிடுவோ, உனக்கொரு வேலைமிச்சம்.”
“வெரி குட்!”
கார் கிளம்புவதற்குமுன் பரிமளாவின் செல்பேசியில் அழைப்பு.
“என்ன மாதவி?”
“கிளம்பிட்டேளா?”
“இப்பத்தான்.”
“ஒருமணிக்கு முன்னால் வீட்டில் இருப்பேன் என்று நினைத்தேன். வேலையில் சிறிதுநேரமாகும் போல் தெரிகிறது. அதுவரைக்கும் நீங்கள் வீட்டிற்குள்ளேயே காத்திருக்கலாம். நீங்கள் என்ன காரில் வருகிறீர்கள்?”
“ஓல்ட்ஸ்மொபில், மணல்நிறம்.”
“நுழையுமிடத்து கேட்டில் ஒரு ஆள் இருப்பான். அவனிடம் சொல்கிறேன். வீட்டிற்கு வந்ததும் கூப்பிடுங்கள்! பை!”
“அவ வர்றதுக்கு நாழியாகுமாம். நான் அங்கேபோய் காத்திண்டிருக்கேன்.”
மாதவி சொன்னதுபோல் ‘கவர்னர்ஸ் க்ளப்’ நுழைவிடத்துக் காவல்காரன் அவர்கள் காரை அடையாளம்செய்த பிறகே உள்ளேசெல்ல அனுமதித்தான். பிறகு கார் கால்ஃப் பச்சைவெளிகளைத் தாண்டிச்சென்றது. பிப்ரவரியின் சூடான நாளை வீணாக்காமல் பலர் கால்ஃப் பந்தை அடித்துவிட்டு அதை ஒருவண்டியில் தொடர்ந்தார்கள்.
தெருவின் வளைவில் வீடு. அப்போதுதான் கட்டிமுடித்திருந்த தோற்றம். அடுத்து இருந்த வீடுகள் முடியும்தறுவாயில் இருந்தன. சாமி தெருவிலேயே காரை நிறுத்தினான். பரிமளாவின் பெட்டிகளை ஆளுக்கு ஒன்றாக நீண்ட வீட்டுப்பாதையில் இழுத்துச்சென்று கராஜிற்கு அருகில் வைத்துவிட்டு நின்றார்கள். தெற்குக்காற்று இதமாக அடித்தது. பரிமளா மாதவியை அழைத்தாள்.
“கராஜுக்கு பக்கத்திலே வந்திருக்கோம்.”
“கதவுக்கு இடதுபக்க சுவரில் ஒருபெட்டி. அதைத் திறந்து இந்த எண்களைப் பதிக்க வேண்டும். ரெண்டு, எட்டு, ஒண்ணு, அஞ்சு.”
பரிமளா பெட்டிக்கருகில் சென்று அப்படியே செய்தாள்.
கராஜின் கதவு மேலே நகரும் சத்தம் நின்றபிறகு அடுத்த தகவல். “உள்ளே இடதுபக்க அலமாரியின் மேல்தட்டில் டென்னிஸ் பந்துவைக்கும் வில்சன் டப்பா.”
“தெரிகிறது.”
“அதற்குள் வீட்டு சாவி இருக்கும். நான் வந்துகொண்டே இருக்கிறேன்.”
“அவசரப்படாதே!”
பேசி முடித்ததும் சாமியை நெருங்கிவந்து, “நீ அப்பாய்ன்ட்மென்ட் போயாணும். கிளம்பு!” என்றாள்.
“அப்புறம் எங்களைக் கூப்பிடு, பரிமளா!”
“நீங்க ரெண்டுநாள் உபசாரம் பண்ணினமாதிரி நானும் உங்களுக்குச் செய்வேன்.”
“நிச்சயம் உன்னை வந்துபாக்கறோம். பை!”
சாமி கையை நீட்டினான். பரிமளா அதை எடுத்து அணைத்துக்கொண்டாள். அவனும் அவள் தோள்களைப் பற்றிக் கட்டிக்கொண்டான். பிறகு எதுவும் பேசாமல் பிரிந்தார்கள். அவன் மிகநிதானமாக பாதையில் நெடுகநடந்து காரில் ஏறி அதைக் கிளப்பினான். அவள்பக்கம் கையசைத்துவிட்டு மெதுவாக வட்டமடித்து வந்தவழியிலே திரும்பிச்சென்றான்.
கண்ணிலிருந்து கார் மறைந்தபின்னும் பரிமளா அதுசென்ற திசையில் பார்வையை வைத்தாள். வீட்டிற்குள் சென்றால் அந்தக்காட்சி மறைந்துவிடுமோ என்கிற பயத்தில் அங்கேயே நின்றிருந்தாள்.
கடந்த இரண்டு நாட்களில் சாமியுடன் எவ்வளவு பேசியிருக்கிறாள்? மனதில் பலவருஷங்களாகப் புதைந்துகிடந்த எதைப்பற்றியெல்லாமோ சொல்லிவிட்டாள். இப்படி வேறு யாருடனாவது சம்பாஷித்ததுண்டா? சக ஆசிரியர்களிடம் மாணவர்கள், பள்ளக்கூடம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். விருந்துகளில் சந்திக்கும் இந்திய ஆண்களுடன் மேலோட்டமாக, ‘ஹில்லரிக்கு பொதுத்தேர்தலில் ஓட்டு விழாது’ என்றோ, ‘சூபர் போலில் நியு இங்க்லன்ட் படுத்துவிடும்’ என்றோ யாரையும் பாதிக்காத சமாசாரங்கள். நெருங்கிப் பேசினால் அவர்களின் மனைவிகளுக்கு பொறாமையாக இருக்குமோ என்று அடிமனதில் ஒரு ஜாக்கிரதை உணர்ச்சி. மிக அதிகமாகப் பேசியது ஸ்ரீஹரிராவுடன். எண்களைத்தவிர வாழ்க்கையைப் பற்றியும் விவாதித்தது உண்டு. ஆனால், அவருடன் உரையாடுவது அடுத்த வீட்டுத்தோட்டத்தில் நிற்கும் ஒருவருடன் தன் வீட்டில் நின்றபடியே பேசுவது போலிருக்கும். சாமியை அவள் தன் வீட்டிற்குள்ளே அழைத்துவந்து அருகில் உட்காரச்சொல்லி அவனுடன் உரையாடியதுபோல் தோன்றியது. பேசிமுடித்து இப்போது அவன் வெளியே போய்விட்டான், இல்லையா? இல்லை, அவன் இன்னும் அங்கேதான் இருக்கிறான்.
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13
- 2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)
- கவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்!
- கவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14
- சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா
- ஏமாளிகள்
- தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.
- இவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்
- புறத்தில் அகம்
- தோழர் சிவம் நினைவுக்கூட்டம்
- பூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை
- தஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6
- காதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை
- தனிமரத்து பூக்கள்
- இனிக்கும் கழக இலக்கியம்
- திருந்தாத கேஸ்
- பச்சை ரிப்பன்
- முகம் நக
- முற்றுப்புள்ளி
- முத்தப்பிழை !
- ஒற்றைப் பேனாவின் மை
- மேடை ஏறாத கலைவண்ணம் …!
- மழைக்கு பிந்தைய கணங்கள்
- மாமிசக்கடை
- மௌனத்தின் பழுப்பு நிறம்..
- பணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி
- நாட்டுப்புற(ர)ம்
- பரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’
- முள்பாதை 48
- க்ருஷ்ண லீலை
- ஆட்டோக்கள் உரசுகின்றன