பரிமளவல்லி (தொடர்கதை) அத்தியாயம் 4. பட்டிமன்றம்

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

அமர்நாத்


பிரசவத்திற்குப் பிறகு ஒருபெண்ணுக்கு வெறுமையாக இருக்குமாம். மருத்துவர்கள் ‘போஸ்ட்-பார்டம் டிப்ரெஷன்’ என்று அதற்கொரு பெயரும் வைத்துவிட்டார்கள். அலிசன் வீட்டிற்குத் திரும்பிச்சென்றதும் அந்தமாதிரி உணர்ச்சி பரிமளாவுக்கு. புத்தகத்தை வெளியேகொண்டுவர அவள் அனுபவித்த இன்பவேதனை முடிந்துவிட்டது. பத்து மாதங்களல்ல, பத்துவருஷங்கள். நூலகங்களிலிருந்து புத்தகங்களை இரவல்வாங்கிவந்து பாடம்போல் கவனமாகப் படித்துக் குறிப்பெடுக்க வேண்டியதில்லை. பாதித்தூக்கத்தில் புது ஐடியா கிடைத்து விழிப்புவந்ததும் அது எதுவென்று தெரியாமல் தவிக்கவேண்டாம். பொருத்தமான வார்த்தைகளைத் ‘திசாரஸி’ல் தேடும் வேலையும் கிடையாது. சங்கடமான வாக்கிய அமைப்பை எளிதாகச்செய்வதில் நேரம் செலவழியாது. நெருடல் இல்லாமல் ஒவ்வொரு வாக்கியமும் அடுத்த வாக்கியத்திற்கு இட்டுச்செல்கிறதா என்று ஆராய வேண்டாம்.
வாரநாட்களின் மாலைவேளைகளிலும், வாரக்கடைசியில் கிடைக்கும் ஓய்வுநேரத்திலும் இனி என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தபோது, பரிமளாவுக்கு சனிஞாயிறுகளில் அவள் முடிக்கவேண்டிய காரியங்களில் மனம் செல்லவில்லை. குளியலறையையும் சமையலுள்ளையும் பெருக்கித் துடைக்கவில்லை. வீட்டில் மற்ற புழங்குமிடங்களில் ‘வாக்குவம் க்ளீனரை’ ஓட்டவில்லை. ஒருவாரம் சேர்ந்துபோன துணிகளைத் தோய்த்து, வரும்வாரத்திற்காக ஐந்தாறு உடைகளுக்கு இஸ்திரி போடவில்லை. கடைக்குச்சென்று மளிகை சாமான்கள் வாங்கிவரவில்லை. அந்தக் காய்களைவைத்து இரண்டுமூன்று நாட்களுக்கு வருமளவில் சமைக்கவில்லை. பரிமளாவுக்கு வேண்டுமானால் உடலும் உள்ளமும் இயங்காமலிருக்கலாம் ஆனால், காலத்திற்கு எப்போதும் ஒரேகதிதான், அவளுக்காகக் காத்திராமல் சாயங்காலம் நகர்ந்துவந்தது.
தொலைக்காட்சியில் பலவிதமான விளையாட்டுகளை ரசிப்பது ஒன்றுதான் பரிமளாவின் பொழுதுபோக்கு. ராத்ரிக்கு சுலபமாக ப்ரெட்டோ, பேகலோ சாப்பிட்டு வயிற்றை நிரப்பலாமென்று கூடத்து சோஃபாவில் காலைநீட்டி உட்கார்ந்து டிவியின் தொலைஇயக்கியால் அதற்கு சக்திகொடுத்தாள். ‘ஈஎஸ்பிஎன்’னில் ஜார்ஜ்டௌன், வெஜ்ட்வர்ஜினியா பல்கலைக்கழகங்களிடையே கூடைப்பந்துப் போட்டி. இடைவேளை முடியும்நேரம், ஒரு பாய்ன்ட்தான் வித்தியாசம். ஜார்ஜ்டௌன் குழுவைச்சேர்ந்த ஒரு கறுப்புச்சட்டைக்காரன் களத்திற்கு வெளியில் நின்று பந்தை இன்னொரு கறுப்புச்சட்டைக்கு தூக்கிப்போட்டதிலிருந்து இரண்டாவது பாதி ஆரம்பித்தது. சுறுசுறுப்பான ஆட்டம் உற்சாகத்தைத் தரும்போல் தோன்றியது.
பக்கத்திலிருந்த தொலைபேசியின் கூவல். ஒலிவாங்கியை எடுத்தபோது ஆரிகன் என்று காட்டியது. அந்த மாநிலத்தில் அவளுக்குத் தெரிந்தவர்கள் யாருமில்லையே.
“ஹலோ, பரிமளா!” என்று பரிச்சயமில்லாத ஒருபெண்ணின் குரல். சரியான உச்சரிப்பு. இந்தியாவிலிருந்து அழைக்கும் விற்பனைமங்கையின் குழைவு அதிலில்லை, நல்லவேளை!
“யார் பேசுவது?”
“சௌந்தர்யா. பல ஆண்டுகளுக்குமுன் க்ரோம்பேட்டையில் உன்வீட்டுக்கு எதிரில்…” என்று அவள் ஆரம்பித்தவுடனேயே பரிமளாவுக்கு ஞாபகம் வந்துவிட்டது.
டிவியை ஊமையாக்கிவிட்டு, “பரிமளா நான்தான்” என்று உரையாடலைத் தமிழில் தொடர்ந்தாள்.
“உங்க ஊர்லே தேசிகள் கும்பல் நிறைய இருக்கும். இங்கே போர்ட்லன்ட்லே தெரிஞ்சவா யாருமில்லை. பேசறதுக்கு யாரைக்கூப்பிடலாம்னு யோசிச்சேன், உன் ஞாபகம் வந்தது. நீ ‘பிசி’யா இல்லியே?” என்று மற்றவள் தயங்கினாள்.
“சும்மா டிவி பாத்திண்டிருக்கேன். அவ்வளவுதான்.”
“கம்ப்யூட்டர்லே பரிமளான்னு தேடினேன், யாரும் கிடைக்கலை. உன் அப்பா பேர் சக்கரவர்த்தி, இல்லாட்டா கோலப்பன்னு ஞாபகம். பி. சக்கரவர்த்திலே பத்மா சக்கரவர்த்தியும், பிரசன்னா சக்கரவர்த்தியும்தான் கிடைச்சா. அதுக்கப்புறம் பி. கோலப்பன்லே தேடினேன். பரிமளாங்கற பேர்லே இந்த நம்பரையும் உன் வீட்டு அட்ரஸையும் குடுத்தது.”
தொலைபேசி எண் தேடிய கதையை அவள் விவரித்தபோது அவளுடைய சிறுவயதுத் தோற்றம் பரிமளாவின் மனதில் உருவானது. சௌந்தர்யா ஐந்தாறு வயதாவது அவளைவிடச் சின்னவள். பெயருக்கேற்ற நல்ல அழகு. பி.ஏ. முடித்து மேலே படிப்பதா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தாள். மாலையில் பரிமளா வேலையிலிருந்து திரும்பும்போது சௌந்தர்யா நன்றாக உடையுடுத்தி ஒப்பனைசெய்து வீட்டுவாசலில் தென்படுவாள். தொலைவிலிருந்தே புன்னகைகளின் பரிமாறல். நவராத்திரிக்கு அழைத்தபோதுதான் பக்கத்திலிருந்து அவளைப் பார்த்தாள். முகம் இன்னும் கவர்ச்சியாக இருந்தது. அதில் வருங்காலத்தை எதிர்நோக்கும் ஆர்வமும், அதைப்பற்றிய கனவுகள் நிரம்பிய கண்களும். பரிமளாவுக்கு அதுபோல் இருந்ததுண்டா? உண்டு, எப்போதோ பதின்மூன்று பதிநான்கு வயதில்…
டில்லியிலிருந்து ஒருவன் ஒரேகல்லில் இரண்டு மாங்காயென அடுத்தடுத்த நாளில் பரிமளாவையும் சௌந்தர்யாவையும் பெண்பார்க்க வந்தான். முதலில் வேலைக்குச் செல்லும்பெண்ணென்று ஆர்வம் காட்டிவிட்டு, பிறகு ‘சம்பளப்பணத்தைக் கையாடிட்டு, அப்புறம் அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிண்டாரே சக்கரவர்த்தி, அவரோட பெண்’ என்று தெரிந்ததும், ‘ஜாதகம் பொருந்தலை’, ‘எங்க கலைக்குள்ளேயே சம்பந்தம் தேடறோம்’, ‘பெண்ணுக்கும் பையனுக்கும் நடுவிலே நாலஞ்சு வயசாவது வித்தியாசம் இருக்கணும்னு ஆத்திலே நினைக்கிறா’ என்கிற சால்ஜாப்புகளைக் கேட்டு அலுத்துப்போன அவள் அண்ணன் சம்பத், “உன் சம்பளம் எவ்வளவுன்னு தெரிஞ்சா உடனே சரின்னுடுவான்” என்றான் நம்பிக்கையோடு. அந்த சம்பளம்தான் எதிர்காலத்தில் அவன் குடும்பத்தைக் காப்பாற்றப்போகிறது என்பதை அப்போது அவன் உணரவில்லை. “இப்பல்லாம் பாங்க்வேலை கிடைக்கறது சுலபமில்லை. கல்யாணத்துக்கப்புறம் வேலையை விட்டுடாம டில்லிக்கு மாத்தல் வாங்கிக்கோ!” என்ற அறிவுரையையும் சேர்த்தான். பரிமளாவுக்கும் டில்லிவாசி மறுநாள் சௌந்தர்யாவைப் பார்க்கப் போகிறானென்று தெரியாததால் பெண்பார்க்கும் படலத்திற்குச் சம்மதித்தாள். இரண்டுபேரையும் பார்த்தபிறகு பரிமளாவைப் தேர்ந்தெடுத்திருந்தால் அவனைக் கண்-டாக்டரிடம் கட்டாயம் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அவனுக்கு சௌந்தர்யாவைப் பிடித்திருந்தாலும் அவள் வீட்டில் உடனே சரியென்று சொல்லிவிடவில்லை. அவர்கள் மறுத்தால் பரிமளாவுக்கு சான்ஸ் என்று சம்பத்துக்கு ஒரு நப்பாசை. அந்தமாதிரி எதுவும் நடக்காமல் கல்யாணமாகி சௌந்தர்யா டில்லிக்குச் சென்றாள். பிறகு பிரசவம், கோடைவெயில் என்று அடிக்கடி பிறந்தகம் வருவதுண்டு. பரிமளா முன்பு காட்டிய புன்னகையை அப்போதும் காட்டினாள். வாழ்க்கையில் ஒருசிறு போட்டி. அதில் வெற்றியென்ன தோல்வியென்ன?
“இங்கே யார்வீட்டுக்கு வந்திருக்கே?”
“என்னோட பையனும் மாட்டுப்பெண்ணும் ‘சாஃப்ட்-பாக்’லே வேலைபண்ணறா.”
“எதாவது விசேஷமா?”
“அவாளுக்குக் கல்யாணமாகி இன்னும் ஒருவருஷம்கூட ஆகலியே.”
இந்தியாவிலிருந்து வந்த ஒருத்தியை வேறென்ன கேட்கலாம். மன்மோகன் சிங் எப்படி? சென்னையில் தண்ணீர்க் கஷ்டம் பரவாயில்லையா? அவள் கணவனுக்கு இப்போது அறுபத்திரண்டாவது இருக்கும். வேலையிலிருந்து ஓய்வுபெற்றிருக்கலாம். அவன் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை. வெறுமனே, ‘மாமா எப்படி இருக்கார், அவருக்கு எப்படி பொழுதுபோறது?’ என்று கேட்க நினைத்தாள். அதற்குள் மற்றவள் முந்திக்கொண்டாள்.
“இங்கே என்ன பண்ணறே?”
“ஹைஸ்கூல்லே டீச்சரா இருக்கேன்.”
“நீ இன்னும் ரிடைராகலை?”
“இந்தூர்லே அறுபத்தைஞ்சு வரைக்கும் வேலை செய்யலாம்.”
“உடம்பு அதுவரைக்கும் தள்ளுமோ?”
“நீ கேட்டதும் எனக்கே சந்தேகமாத்தான் இருக்கு.”
“ரிடைர் ஆனப்புறம் உன்னை யார் பாத்துப்பா?”
“நம்பதான் நம்பளைக் கவனிச்சுக்கணும்.”
“பணத்துக்கு?”
“பென்ஷன் கொஞ்சம் வரும்.”
“இப்போ உனக்கு எவ்வளவு சம்பளம்?”
பரிமளா அந்தக்கேள்வியை எதிர்பார்க்கவில்லை. இந்தியாவைப்போல் மாதக்கணக்கில் சொல்லவேண்டுமோ? அடிப்படை சம்பளமா, இல்லை பிடிமானம்போக கைக்குவரும் பணமா? பரிமளா குழம்பினாள். “வருஷத்துக்கு அறுபதாயிரம்னு வச்சுக்கோயேன்!”
“அவ்வளவுதானா? விஜய் இப்பத்தான் வந்தான். வெறும் பி.டெக்.தான். அவனே எழுபதாயிரம் வாங்கறான். நீ பிஎச்.டி பண்ணியிருக்கே. நீ அமெரிக்கா வந்து இருபது வருஷத்துக்கு மேலேயே இருக்குமே.”
ஒரு வாக்கியத்தில் சொல்லக்கூடிய பதிலில்லை. வேலை, அதற்கு சமுதாயம் தரும் முக்கியத்துவம், தொழிலில் ஒருவருக்குக் கிடைக்கும் திருப்தி, அந்த வேலைக்குப் போட்டியிடும் நபர்களின் எண்ணிக்கை, அந்த ஆளின் வாயளப்பு – இவற்றின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது என்று விளக்க ஒருமணியாவது ஆகும். அதனால், “ஒண்டிக்கட்டைக்கு எவ்வளவு வேணும்?” என்றாள்.
உரையாடலில் மிச்சமில்லாததுபோல் ஒரு நிறுத்தம். சௌந்தர்யா ‘பை’ சொல்வதற்காகக் காத்திருக்கும் நேரத்தில் பரிமளா கூடைப்பந்தாட்டத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினாள். இரண்டு அணிகளும் ‘பாய்ன்ட்’களை மாற்றிமாற்றிச் சேர்க்க போட்டி மிகவேகமாக நகர்ந்தது.
“வேலைலே லீவ் போட்டுட்டு மூணுவாரத்துக்கு முன்னாடிதான் இங்கே வந்தேன்” என்று சௌந்தர்யா மறுபடி ஆரம்பித்ததும் பரிமளாவின் கவனம் திரும்பவும் பேச்சுக்குத் தாவியது.
“என்ன வேலை?”
எதுவென்று சொல்லவில்லை. “அதுகூட இல்லாட்டா இன்னேரம் எனக்குப் பைத்தியமே பிடிச்சிருக்கும்.” முதல்முறையாக அவள் குரலில் ஒருசலிப்பு. அதன் உள்ளர்த்தம் உடனே புரியவில்லை.
“எப்போ திரும்பிப்போறே?”
“மார்ச் மாசம் நடுவிலே போயாகணும்.”
வெஸ்ட்வர்ஜினியா அணியில் ஒருவன் இரண்டுமுறை மூன்றுபுள்ளி கோட்டிற்குத் தள்ளிநின்று கூடைக்குள் பந்தைக் குறிவைத்து வீச அவர்களுக்கு ஏழுபாய்ன்ட் அதிகம். அதுபொறுக்காமல் ஜார்ஜ்டௌன் இரண்டு நிமிட அம்பேல் எடுத்துக்கொண்டது.
“நான் இங்கியே தங்க முடியாதா?” என்று சௌந்தர்யா, விளையாடிவிட்டுத் தருகிறேன் என்றுசொல்லி வாங்கிக்கொண்ட பொம்மையைத் தானே வைத்துக்கொள்ள ஆசைப்படும் குழந்தையைப்போல், கேட்டாள்.
“இம்மிக்ரேஷன் சட்டமெல்லாம் மாறிண்டே இருக்கு. இப்போ எப்படியோ எனக்குத் தெரியாது. உன் பையன் சிடிஸனா இருந்தா அவன் எதாவது செய்யலாம்னு நினைக்கிறேன்.”
“அவன் போன வருஷம்தானே வந்தான். நீ சிடிஸன் ஆயிருப்பியே.”
“பன்னண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்தியா போனப்போ தெரிஞ்சவா ரொம்பபேர் இல்லை. மன்னி க்ரோம்பேட்டை வீட்டை வித்துட்டு பையனோட பெங்களுர் போயிட்டா. புதுசா ஒருஊர்லேபோய் இறங்கினமாதிரி இருந்தது. இங்கே திரும்பிவந்ததும் முதல் காரியமா சிடிஸன் ஆயிட்டேன்.”
“நீ என்னை ஸ்பான்சர் பண்ணேன். நான் உனக்கு தங்கைன்னு சொல்லிக்கறேன்.”
“அதெப்படி முடியும்? என்பேர் கோலப்பன்னு இருக்கு. உன் அப்பா பேர் பார்த்தசாரதி இல்லியோ?” என்றாள்.
இலேசான அழுகுரல்.
‘இதென்ன வம்பு? நிஜத்தைத்தானே சொன்னேன்.’
அழுகையை அவளே நிறுத்திவிட்டு, “ஓப்ரா ஷோலே காலேஜ்லே படிச்சு பட்டம்வாங்கின எண்பதுவயசு பாட்டியைக் காட்டினா. எனக்கு ஐம்பத்திமூணுதானே ஆறது. நான் ஸ்டூடன்ட்டாப் போயிடறேன். பிஎச்.டி.க்கு எடுத்துப்பாளா?”
“அதுக்குக்கூட நீ எப்பவோ படிச்சதையெல்லாம் ஞாபகப்படுத்திக்கணும், ஜிஆர்ஈ எழுதணும்.”
சௌந்தர்யா தன் இயலாமையை ஏற்றுக்கொண்டதுபோல் தோன்றியது. சிறுயோசனைக்குப் பிறகு கரகரத்த குரலில் பேசினாள்.
“விஜய்தான் பெரியவன். ரெண்டாவது சுமிதா. அவளுக்கு நாலுமாசம் இருந்தப்போ பொறந்தாத்துலேர்ந்து டில்லிக்குத் திரும்பிப்போனேன். அப்போ ஆரம்பிச்சுது அவரோட குடிப்பழக்கம். ராத்ரி ஒருபுட்டி போட்டார்னா காலைலே எழுந்துக்கற வரைக்கும் கட்டைமாதிரி தூக்கம். அல்கஹால்னாலே செக்ஸ் ஆசை போயிடுத்தா, இல்லை என்னோட செக்ஸ் பண்ணறதைத் தவிர்க்கத்தான் குடிக்க ஆரம்பிச்சாரான்னு பட்டிமன்றம்தான் நடத்தணும்.”
முன்னறிவிப்பில்லாமல் உரையாடல் சௌந்தர்யாவின் அந்தரங்க வட்டத்திற்குள் புகுந்ததும் பரிமளாவுக்கு திகைப்பும் கூச்சமுமாக இருந்தது. என்ன பேச என்று தெரியவில்லை. ‘இதைப்பத்தியெல்லாம் எனக்கென்ன தெரியும்?’ என்று முணுமுணுத்தாள்.
“அப்போ ஒல்லியா நன்னா இருந்தேன், நீதான் பாத்திருக்கியே. இப்பத்தான் மெனோபாஸ்னாலே உடம்பு குண்டாயிடுத்து.”
“இயற்கையை நாம எப்படி எதிர்க்கமுடியும்?”
“எனக்கு பதிலா துணைக்கு ஒருநாய் வச்சிண்டிருக்கார். சின்ன ஃப்ளாட்லே நாய் என்னத்துக்கு? எனக்குத்தான் வேலை அதிகம். மனுஷாளோட அதையும் கவனிச்சுக்கணும். அது உடம்புலேர்ந்து உதிர்ற மயிரைத் தினம் பெருக்கிவாரணும். அது மகாபொல்லாது. என்னை அலட்சியமா பாக்கும், பக்கத்திலேயே வராது. ஆனா அவரோட ஈஷிக்கும். அந்த பாக்கியம்கூட எனக்குக் கிடைச்சதில்லை.”
“இந்தியாதான் அமெரிக்காமாதிரி ஆயிண்டுவர்றதே. அங்கேயும் மேரேஜ் கௌன்சிலர் இருப்பாளே.”
“இருக்கா, யார் அவரை இழுத்துண்டு போறது? மாமனார் போனப்புறம் மாமியார்வேற கூடவந்து கழுத்தறுக்கறா. பையனை ஒருவார்த்தை சொல்லக்கூடாது. சொன்னா பொலபொலன்னு சண்டை. விரலை அசைக்கமாட்டா. ஆனா, மூணுவேளை சாப்பாடுமட்டும் முன்னாடிவந்து இறங்கணும்.”
“உன் பொண்ணோட போய் இருக்க முடியாதா?”
“அவ தன்னோட மாமனார் மாமியாரோட இருக்கா.”
சௌந்தர்யாவின் பிரச்சினைக்கு வேறு எந்தத்தீர்வும் பரிமளாவுக்குத் தென்படவில்லை.
“நான் விஜயைப் பாக்க ஆறுமாசம் வரேன்னு சொன்னதும் ரெண்டுபேரும் போகக்கூடாதுன்னு ஒத்தைக்கால்லே நின்னா. எங்க கதி என்னாறதுன்னு புலம்பினா. கடைசிலே ரெண்டு மாசத்துக்கு ஒத்துண்டா.”
“இப்போ எப்படி சமாளிக்கறா?”
“யாருக்குத் தெரியும்?” என்றாள் சௌந்தர்யா அலட்சியமாக. “இங்கே ரெண்டுபேரும் கார்த்தாலே எட்டுமணிக்கு வெளிலே போனா சாயந்தரம் ஏழுக்குமேலேதான் திரும்பி வருவா. ஆறுமணிக்கு சமைக்க ஆரம்பிச்சாகூட போரும். யோசிக்கவும், இன்டர்நெட்லே சுத்திப்பாக்கவும் நிறைய நேரம். நான் இதுவரைக்கும் வாழ்ந்தது, இனிமேலே வாழப்போறது எல்லாம் அர்த்தம் இல்லாதமாதிரி தெரியறது.”
“மனசு விசாலப்படத்தான் நாலு இடங்களைப் பார்க்கறோம், நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிக்கறோம்.”
“நீ குடுத்துவச்சவ. ஒரு பிக்கல்பிடுங்கல் கிடையாது. வேலைலேர்ந்து வந்ததும் ஒருநிமிஷம்கூட உக்காராம பம்பரம்மாதிரி சுழலவேண்டாம். ஒருவேளை சமைக்க சோம்பேறித்தனமா இருந்தா ப்ரெட்டையோ பேகலையோ தின்னுக்கலாம். டிவிலே மத்தவா பாக்கற உருப்படாத விஷயங்களை நாமும் பாக்கணுங்கறதில்லை. நீ பாட்டுக்கு வேணுங்கற புஸ்தகங்களை நிதானமா படிக்கலாம். படிச்சு நீயேகூட ஒண்ணு எழுதலாம்.”
‘எழுதியிருக்கேன்’ என்று பெருமைஅடிப்பது உசிதமாகப் படவில்லை.
“திரும்பிப்போனா எப்படி சமாளிக்கப்போறேன்னு தெரியலை.”
ஆட்டத்தின் கடைசிநிமிடம். வெஸ்ட்வர்ஜினியாவுக்கு இரண்டு பாய்ன்ட் அதிகம். எதிராளியிடம் பந்து. ஆறுவினாடி இருக்கும்போது ஜார்ஜ்டௌன் ஆட்டக்காரன் தொலைவிலிருந்து வீசிய பந்து கூடைக்குள் விழ, சிலர் சந்தோஷத்தில் குதிக்க, பலர் நம்பமுடியாமல் தலையில் கைவைக்க…
“நீ போர்ட்லன்ட்லேதானே இருக்கே. விஜய்கிட்ட டிக்கெட் வாங்கித்தரச்சொல்லு! ஒரு சனிஞாயிறு என்னை வந்துபார்! மனசுக்கு ஆறுதலா இருக்கும்.”
“கேட்டுப்பாக்கறேன். நான் என் கஷ்டத்தைச் சொல்லி உன் நேரத்தை வீணடிச்சுட்டேன்.”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று பரிமளா சுறுசுறுப்பாக எழுந்தாள்.

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்