பரபரப்பு விற்பனையில் ஒரு புத்தகம்!

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

புதுவை சரவணன்


தொலைக்காட்சியும், இண்டர்நெட்டும் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கங்களாகிவிட்ட பிறகு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. எங்கள் காலத்தில் கல்லூரி மாணவ,மாணவிகளின் கரங்களில் புத்தகங்கள் தவழ்ந்தன என்று 40தை கடந்தவர்கள் கூறும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. சில இடங்களில் புத்தகக் காட்சிக்கு வரும் கூட்டத்தைப் பார்க்கும்போது(குறிப்பாக சென்னை புத்தகக் காட்சி) புத்தகங்களுக்கு வரவேற்பு இருப்பதுபோல் தோன்கிறது. ஆனால் அதன் பிறகு அடுத்த புத்தகக் காட்சி வரை புத்தகங்கள் பற்றிய பேச்சே எழுவதில்லை. ஒரு சில எழுத்தாளர்களின் புத்தகங்களைத் தவிர.

பதிப்பகங்கள் புத்தகங்களை விற்பதற்கு பகீரத பிரயத்தனம் செய்துவரும் வேளையில் ஒரு புத்தகம் அதுவும் 12 தொகுதிகளைக் கொண்ட ‘ ‘ஸ்ரீகுருஜி சிந்தனைக் களஞ்சியம் ‘ ‘ என்ற நூல் முன்வெளியிட்டுத்திட்டத்தின் கீழ் தயாராகிக் கொண்டிருக்கும்போதே பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா ?

நூற்றாண்டு விழா காணும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர் ஸ்ரீகுருஜி கோல்வல்கரின் சிந்தனைகள் அடங்கிய 12 தொகுதிகள் கொண்ட இந்தி நூலை ஆர்.எஸ்.எஸ்ஸின் நாகபுரி தலைமையகம் கடந்த வருடம் வெளியிட்டது. ‘ ‘ஸ்ரீகுருஜி சமக்ர ‘ ‘ என்ற இந்த நூல் ஆங்கிலத்திலும், சம்ஸ்க்ருதம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. தமிழில் இந்த நூலுக்கு ‘ ‘ஸ்ரீகுருஜி சிந்தனை களஞ்சியம் ‘ ‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. ரூபாய் 2000 மதிப்புள்ள இந்த நூல் முன் வெளியீட்டு திட்டத்தின் கீழ் ஏப்ரல் 14ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்பவர்களுக்கு ருபாய் 1000 விலையிலேயே கிடைக்கும். முன் வெளியீட்டு விற்பனை துவங்கிய ஒரு வாரத்திற்குள் 1000த்திற்கும் அதிகமானவர்கள் பதிவு செய்திருப்பது இப்பணியில் ஈடுபட்டிருப்பவர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த மார்ச் 11,12 தேதிகளில் இந்த நூல் விற்பனைக்காக ஆர்.எஸ்.எஸ்ஸில் மாநில அளவில் பொறுப்பில் உள்ளவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்கள். மார்ச் 11ம் தேதி சென்னை அடையாறு கற்பகம் கார்டனில் உள்ள ஒரு வீட்டில் நடந்த முன்வெளியீட்டு விற்பனை துவக்க விழாவிற்கு தற்செயலாக நான் செல்ல நேர்ந்ததது. பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அந்த வீட்டின் ஒரு அறையில் குழுமியிருந்தனர். அவர்களிடையே ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில பொருளாளரும், மாநில அலுவலகச் செயலாளருமான திரு. ராம.ராஜசேகர் ‘ ‘ஸ்ரீகுருஜி சிந்தனை களஞ்சியம் ‘ ‘ நூல் விற்பனை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அங்கிருந்த ஒவ்வொருவரும் தாங்கள் ருபாய் 1000 கொடுத்து பதிவு செய்ததோடு 10 புத்தகங்கள் விற்பதற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சி முடிந்த பிறகு ராம.ராஜசேகரிடம் இதுபற்றி கேட்டேன். அதற்கு முன்பு அவரை பற்றி சில தகவல்களை கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். திரு.ராம.ராஜசேகர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் மூலம் சமூக பணியாற்றுவதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பிரம்மச்சாரி. ஆர்.எஸ்.எஸ்ஸின் பதிப்பகத் துறையை அவர்தான் கவனித்து வருகிறார். ‘ ‘ ஸ்ரீகுருஜி பற்றிய இந்த நூலின் விற்பனை பொறுப்பை நான் ஆர்வமுடன் ஏற்றுக்கொண்டுள்ளேன். இன்று இங்கு நடந்த விழாவைப்போல மாநிலம் முழுக்க நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ருபாய் 1000 கொடுத்து புத்தகம் வாங்குவார்களா ? என்ற தயக்கம் இருந்தது. ஆனால் முன் வெளியிட்டு விற்பனை துவங்கிய ஒரு வாரத்திற்குள் கிடைத்த வரவேற்பு எங்களின் தயக்கத்தை உடைத்துவிட்டது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தமிழர்கள் வசிக்கும் வெளிநாடுகளிலும், மும்பை, டில்லி, பெங்களூர், கல்கத்தா, திருவனந்தபுரம், ை ?தராபாத் போன்ற நகரங்களிலும் இந்த நூலை விற்க ஏற்பாடு செய்துள்ளோம். ஏப்ரல் 14ம் தேதிக்குள் 5000 புத்தகங்களுக்கான ஆர்டர் கிடைத்துவிடும் என்று நம்புகிறோம். நான் தனிப்பட்ட முறையில் அனுப்பிய எஸ்.எம்.எஸ் மூலமே 50க்கும் அதிகமானவர்கள் புத்தகத்தை பதிவு செய்திருப்பது எங்களின் நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது ‘ ‘ என்றார். விளம்பமின்றி பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஒரு நூலை திண்ணை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இதனை எழுதுகிறேன்.

ஸ்ரீகுருஜி கோல்வல்கரின் சிந்தனைகள் அடங்கிய இந்த நூல் வேண்டுவோர் rsschennai@rediffmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

புதுவை சரவணன்

musaravanan@gmail.com

Series Navigation

புதுவை சரவணன்

புதுவை சரவணன்