பாவண்ணன்
ஒரு பக்கத்தில் அழகான படமும் மறுபக்கத்தில் கவிதையையும் கொண்டிருக்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிற இத்தொகுப்பில் நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் பல கவிதைகள் உள்ளன. தொகுப்பில் உள்ள எழுபதுக்கும் மேற்பட்ட கவிதைகளை தலைப்பில்லாமலேயே எழுதியுள்ளார் சண்முகம் சரவணன். வெவ்வேறு கோணங்களில் நம் கவனத்தைத் திருப்பி, அசைபோட இந்த சுதந்திரம் உதவியாக உள்ளது.
புங்கை மரநிழலைப்பற்றிய சித்தரிப்பைக் கொண்ட கவிதை படித்த கணத்திலேயே மனத்தில் பதியக்கூடிய ஒன்று. கவிதையிலிருந்து வாழ்வைநோக்கித் தாவிப் பறக்கிற நுட்பம் சரவணனுக்கு இக்கவிதையில் சாத்தியப்பட்டிருக்கிறது. கவிதையில் மூன்று குறிப்புகள் அடுத்தடுத்து முன்வைக்கப்படுகின்றன. புராதனமான புங்கைமரம் குளிர்ச்சியான நிழல்பரப்பி நிற்கிறது என்பது ஒரு குறிப்பு. அதன் பூக்களின் நறுமணத்தை காற்று எங்கெங்கும் சுமந்து திரிகிறது என்பது இரண்டாவது குறிப்பு. எந்தக் காலத்திலோ புங்கைமரத்தடியில் செதுக்கி நிறுத்தப்பட்ட பழைய சிற்பம் காலத்தின் சாட்சியாக நிற்கிறது என்பதுவும் அச்சிற்பத்தின் வழியாக, அதைச் செதுக்கிய சிற்பியின் கனவு காலத்தைக் கடந்தபடி தொடர்கிறது என்பதுவும் மூன்றாவது குறிப்பு. அம்மரத்தைநோக்கி ஒரு வேடன் வருகிறான். எங்கெங்கோ அலைந்து திரிந்து களைத்துப்போன வேடன். நிழல்கண்டு ஆவலாக வருகிறான். மலர்கள் மிதிபடுவதை அவன் பாதங்கள் உணர்வதில்லை. களைப்பு நீங்கும்வகையில் சிறிதுநேரம் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டு புத்துணர்ச்சியோடு எழுந்து செல்கிறான் அவ்வேடன். அவன் புறப்பாடோடு கவிதை முடிந்துவிடுகிறது. மலர்களின் நறுமணம், குளிர்ச்சியான நிழல், கலைநுட்பம்கூடிய சிற்பம் என மூன்று ஈர்ப்புடைய அம்சங்கள் கொண்ட புங்கைமரம் வாழ்வின் படிமமாகவும் அம்மரத்தடியை நிழல்மட்டுமே கொண்ட ஓரிடமாகக் கண்டு இளைப்பாறிவிட்டுச் செல்கிற வேடன் மானுடகுல இச்சையின் படிமமாகவும் திரண்டெழுவதை உணரலாம். வாழ்வில் ஈடுபாடு கொள்ள எத்தனையோ அம்சங்கள் இருந்தாலும் நம் மனம் ஏதோ ஒன்றைமட்டுமே தேர்ந்தெடுத்துத் துய்ப்பதற்கான விழைவோடு இருக்கிறது. ஆளாளுக்கு வேறுபடும் மனத்தேர்வின் விசித்திரம் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாத பெரும்புதிர். நிழல்வேண்டி மரத்தடியை நெருங்குகிற வேடன் எந்த அளவுக்கு உண்மையோ, நிழல், மணம், கலைநுட்பம் எதையுமே பொருட்படுத்தாமல் புங்கைமரத்தைத் தாண்டிச் சென்றுவிடுகிற வேடனும் உண்மையாக இருக்கக்கூடும். மனத்தேர்வில் அப்படிப்பட்ட நிலைக்கும் சாத்தியமிருக்கிறது.
மனத்தேர்வின் பன்மைத்தன்மையை முன்வைக்கும் இன்னொரு கவிதையும் தொகுப்பில் உள்ளது. வெவ்வேறு பறவைகள் இடம்பெறுகிற அக்கவிதையும் சரவணனின் கவியாளுமைக்குச் சான்றாக உள்ளது. சின்னஞ்சிறிய இக்கவிதையிலும் மூன்று தனித்தனிக் குறிப்புகள் அழகாக இணைக்கப்படுகின்றன. இரை தேடிச் சென்ற சிட்டுக்குருவிகளின் கூடுகள் சிதறிக்கிடப்பதைக் காட்டுகிறது முதல்குறிப்பு. கரைந்துருகி அழுவதைப்போல மைனாக்கள் எழுப்புகிற குரல்களைப் படம்பிடிக்கிறது இரண்டாவது குறிப்பு. எங்கிருந்தோ பறந்துவரும் பறவை காற்றிடையே புகுந்து இலவங்கொட்டைகளை எச்சமிட்டுச் செல்வது மூன்றாவது குறிப்பு. பறவை என்கிற ஒரு சொல் பறக்கும் எல்லாவிதப் பறவைகளைப்பற்றிய ஒரு பொதுவான சொல். பறவைகளில் நூறு இனங்கள் உண்டு. பறவை என்பதாலேயே ஒரு பறவைக்கும் இன்னொரு பறவைக்கும் இயல்பான உறவு இருப்பதில்லை. உறவு கொள்வதற்கும் பிரிந்து நிற்பதற்கும் ஒன்றைப்பற்றி ஒன்று பொருட்படுத்தாமல் செல்வதற்கும் ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கக்கூடும். வாழும் முறை என்பது ஒவ்வொரு இனத்தினுடைய தேர்வு. சிட்டுக்குருவிகளின் கூடுகள் சிதைந்து சிதறிக்கிடப்பதைப்பற்றி, தன் துக்கத்தில் மூழ்கி அழுகிற மைனாக்களுக்கு கவலையில்லை. சிதைந்த கூடுகளைப்பற்றியோ அல்லது அழுகிற மைனாக்களைப்பற்றியோ, தற்செயலாக அம்மரத்தடியை நாடுகிற இன்னொரு பறவைக்கும் கவலையில்லை. எச்சமிட்டுவிட்டு தன் பாட்டுக்கு பறந்து செல்கிறது. பாராமுகம் என்பது பறவையினத்தின் மனத்தேர்வு. வாழ்வில் மனிதர்கள் பாராமுகத்தோடு இருப்பதை யாரும் விரும்புவதில்லை. உடுக்கை இழந்தவன் கைபோல ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம் பண்பாடு ஒருவரையொருவர் உளமாரத் தாங்கிக்கொண்டும் ஒருவருக்கொருவர் கொடுத்துதவிக்கொண்டும் வாழ்கிற வாழ்வின் அவசியத்தையும் மதிப்பையும் காலமெல்லாம் வலியறுத்தி வந்திருக்கிறது. கூடி வாழ்ந்தால் வரக்கூடிய கோடி நன்மைகளை எடுத்துச் சொல்லி நம் பண்புகளை அதற்குத்தகுந்தபடி தகவமைத்து வந்திருக்கிறது. இருந்தபோதும், இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் முற்றிலுமான அத்தகு வாழ்க்கை மனிதகுலத்தில் சாத்தியமாகியிருக்கிறதா என்கிற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. பாராமுகம் என்பது மனிதகுலத்தின் ஒரு மனத்தேர்வாக இன்னும் எஞ்சியிருப்பதுதான் அதற்குக் காரணம். அந்த உண்மையை நோக்கி நம் மனத்தை சற்றே நகர்த்துகிறது சரவணனின் இக்கவிதை.
ஒரு பல்லியைப்பற்றிய சித்திரமாகத் தொடங்கி பாராமுகத்தை அடையாளப்படுத்துகிற கவிதையொன்று இத்தொகுப்பில் உள்ளது. ஓர் அறை. அதில் ஒருவன் வசிக்கிறான். அவ்வறையில் அவனோடு ஒரு பல்லியும் வசிக்கிறது. அறைமூலையில் இருக்கிற மின்விளக்கின் ஓரத்தில் வாயைப் பிளந்துகொண்டு அமைதியாகக் காத்திருக்கிறது. விளக்கின் அருகே பறந்துவரும் பூச்சிகளைத் தாவிப் பிடித்து இரையாக்கிக்கொள்கிறது. முயற்சியில் அது சிற்சில முறைகள் தோற்றுவிடுகிறது. ஆனாலும் அது கவலைப்பட்டு சோர்ந்து நிற்பதாகத் தெரிவதில்லை. தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டபடி இருக்கிறது. ஒரு நாள் மின்விசிறியின் வேகம் தாங்காமல் பிடி தளர்ந்து கீழே விழுந்துவிடுகிறது பல்லி. அதிர்ச்சியில் உறைந்துபோய் அசைவற்றுக் கிடந்த பல்லியை, அறையில் வசிக்கிற மனிதன் தன் கையில் எடுத்து நீர் தெளித்து மயக்கத்திலிருந்து விடுவிக்கிறான். சுயநினைவு பெற்றதுமே கையிலிருந்து தாவிச் சுவரைப்பற்றி குடுகுடுவென்று ஓடி அறையின் மூலையில் இருக்கிற மின்விளக்கின் அருகே தன் இரைக்காக வாயைப் பிளந்துகொண்டு காத்திருக்கிறது. தன்னோடு அறையில் வசிக்கிறவன், தன்னைக் காப்பாற்றியவன் என்று ஒருநாளும் அந்தப் பல்லி காட்டிக்கொள்வதே இல்லை. இது எப்போதும் இப்படித்தான் என்று சலித்துக்கொள்கிறான் மனிதன். அறிமுகவிழைவு என்பது எப்படி ஒரு தேர்வோ, அதே அளவுக்கு பாராமுகமும் ஒரு தேர்வு. ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு தேர்வு முறை. ஒவ்வொரு தனிவழி.
அ·றிணை உயிரின் தனிவழியைக் கண்டு மனம்வெதும்பும் உயர்திணை மனிதனின் ஆற்றாமையென மேற்சொன்ன கவிதையை எடுத்துக்கொண்டால், அ·றிணை உயிரின் தனிவழியில் விருப்பமிருந்தும் தன்னால் பின்பற்ற முடியாமையின் வலியைச் சொல்கிறது இன்னொரு கவிதை. இக்கவிதையில் இடம்பெறுவது மீன். சுற்றியலையும் திசையெங்கும் சலசலத்தோடுகிறது நதி. சிறுமீன்கள் நதிவழி புரண்டு நகைப்புற்று நகர்கின்றன. கரையில் அமர்ந்திருக்கும் மனிதனுக்கு மீனைப்போல நதியில் வளையவளைய நீந்தவேண்டும் என்கிற ஆசை எழுகிறது. நீச்சலறியாமல் நீருக்குள் எப்படி இறங்குவது என்னும் உண்மை உறைக்க, உடலெங்கும் இனம்புரியாத பயம் பரவுகிறது. மீன் நகரும் வழியில் செல்லவியலாத இயலாமையின் வலியோடு தன்வழியே செல்கிறான் மனிதன்.
இயலாமையின் வலியை அழுத்தமாகச் சொல்கிற ஒரு கவிதை மறக்கமுடியாத அனுபவத்தைத் தருகிறது. ஒரு மயானம். முட்களும் புதர்களும் வளர்ந்து அடர்ந்து வழியின் இருப்பையே மறைத்துக்கொண்டிருக்கிற ஒற்றையடிப்பாதையைக் கொண்ட மயானம். அம்மயானம் முழுவதும் மண்டையோடுகள். தோண்டுவதற்கு ஓரடி இடம்கூட இல்லை. செய்வதறியாத திகைப்போடும் தவிப்போடும் இயலாமையின் வலியோடும் சிறுகுழந்தையின் உடலற்ற உயிரோடு மயானத்தில் நிற்கிறான் ஒருவன். இந்த வாழ்வே அந்த மயானமோ, நிராசைகளின் தொகுப்பே அந்த சிறுகுழந்தையின் உடலோ என கற்பனை விரிவடையும்போது கவிதையின் தளம் மாறுபட்டுவிடுகிறது.
“பனியும் நெருப்பும் பழகினால் தெரியுமோ அதனதன் இயல்பு எதுவென்று?” என்றொரு வரி சரவணனின் கவிதையொன்றில் இடம்பெறுகிறது. தொகுப்பை வாசித்து முடிக்கும் தருணத்தில் இவ்வரியே மனத்தில் மிதந்துவருகிறது. அனைத்தும் ஒன்றல்ல, வேறுவேறாக இருக்கிற ஒன்று, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வழி எனக் கண்டடைகிற உண்மையே இத்தொகுப்பின் மையம் என்று தோன்றுகிறது. உயிர்களிடம் அடங்கியிருக்கிற பன்மைத்தன்மையை அறிந்துணர்வது, அவற்றிலிருந்து விலகுவதற்காக அல்ல, பன்மைகளைத் தக்கவைத்தபடி உறவாடவல்ல ஒருமையை வகுத்துக்கொள்ளும் முயற்சி என்பது அக்கவிதைமையத்திலிருந்து பொங்கிவழியும் வெளிச்சம். இவ்வெளிச்சத்துக்கும் என் சுயம் இழக்காமல் சகமனிதனை நேசித்து அவன் துயர்துடைக்க முயல்வதே உண்மையான வாழ்வு எனக் கருதுகிறேன் என்னும் சரவணன் எழுதும் முன்னுரைக் குறிப்புக்கும் உள்ள தொடர்பை தொகுப்பை வாசித்து முடியும் கணத்தில் நம்மால் உணரமுடிகிறது.
( துறவியின் இசைக்குறிப்புகள்- கவிதைகள். சண்முகம் சரவணன். பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14. விலை.ரூ60)
- என் விழியில் நீ இருந்தாய் !
- என் காப்டன் !
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நிலவின் துணை இல்லாமல் பூமியில் நீடிக்குமா உயிரினம் ? (கட்டுரை: 57)
- மே தினம்
- ஹனிஃபாவின் “அழைக்கின்றார் அண்ணா’
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -34 << காதல் பெண்டிர் >>
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – முதல் அத்தியாயம்
- மே 2009 வார்த்தை இதழில்…
- ‘ருது வனம்’ நூல் வெளியீட்டு விழா
- அதிகாரி ஸார்
- பனியும் நெருப்பும் : சண்முகம் சரவணனின் “துறவியின் இசைக்குறிப்புகள்”
- சங்கச் சுரங்கம் – 12 ; முல்லைப் பாட்டு
- இந்தி நடிகருடன் ஒரு இரயில் பயணம்
- கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன
- அம்மம்மா கிழவி
- குன்னிமுத்துகளின் தவிப்பு
- விரும்பாதவை…
- ஒற்றைகை பிள்ளையாரும் ஒரு முதியவர் உயிரும்
- இடறிய விரல்கள்
- “தும்மலுக்கு நன்றி”
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திமூணு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< கவிஞன் யார் ? >> (தொடர்ச்சி) கவிதை -6 பாகம் -2
- சைதாப்பேட்டையிலிருந்து நீலாங்கரை வரை
- “காப்புரிமை”