பத்துக் கட்டளைகள்

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

பாரதிராமன்


காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு காதலர் வாரமும் முடிவுக்கு வந்துவிட்டது. இனி குடும்பக் கவலைகள் திரும்பிவிடும், சண்டைகள், கோபதாபங்கள் உட்பட. எப்படி வீட்டையும் குடும்பத்தையும் சந்தோஷமாக வைத்துக்கொள்வது என்ற சிந்தனை மேலோங்கிவிடும். என்ன செய்வது, யாரைக் கேட்பது என்றெல்லாம் மனம் அலைபாயத் துவங்கிவிடும்.

ஆம், உண்மையில் இன்றையக் குடும்ப வாழ்வின் மிகப் பெரிய பிரச்சனை உறவுகள் உடைபட்டுப் போவதுதான், வீடு பிளவு படுவதுதான், சமூக வாழ்வின் புரையோடல்கள் குடும்ப வாழ்வையும் தாக்குவதுதான். இதன் அடிப்படைக் காரணங்களை நாம் கண்டுபிடித்துவிட்டோமானால் குடும்பச் சீரமைப்பு சுலபமாகும். ஏழை எளியவருக்கும் இன்பம் கைகூடப்பெறும்.

தனி ஒருவனானாலும் சரி, ஒரு சமூகமானாலும் சரி எல்லோருமே அமைதியையும் ஆனந்தத்தையுமே விரும்புகிறார்கள். ஆனால் இன்று பெரும்பாலானோர் வாழ்வில் இவை காணாமற்போயுள்ளன. காரணம் ஒருவரையொருவர் சரியாகவும் தெளிவாகவும் புரிந்துகொள்ளாமையே.. கணவன்-மனைவி,பெற்றோர்-பிள்ளைகள், முதலாளி-தொழிலாளி, குரு-சீடன், ஒரு மதம்-இன்னொரு மதம், ஒரு நாடு- இன்னொரு நாடு ஆகியவை பலவாறு பிளவுபட்டு நிற்பதற்குக் காரணம் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளாததுதான். இப்புரிந்துகொள்ளலை முனைந்தறிந்து செயல்படுத்துவோமானால் அனைவருக்கும் வாழ்க்கை அமைதி நிறைந்தும் ஆனந்தம் பொங்கியும் அமையும் என்பது திண்ணம்.

ஒருவர்கொருவர் முற்றிலுமான புரிந்துகொள்ளலை ஒரு சில சுலபமான, எளிதில் கடைப்பிடிக்கக்கூடிய வழிகளின் மூலம் பெற முடியும். தேவை உணர்வு பூர்வமான ஈடுபாடும் செயல்பாடும் மட்டுமே.

சரி, வழி நடக்க ஆரம்பிக்கலாமா ?

1.உங்கள் அடுத்த சண்டையைத் தள்ளிப் போடுங்கள்.

காலையில் பல் துலக்கிவிட்டு வரும் மனைவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கின்றன. எழுந்திருந்தபோது அவள் முகம் இனிமையாகத்தானே இருந்தது ? இப்போதென்ன கோபம் ? அவளிடம் ‘ அம்மணிக்கு என் மேல் ஏதாவது கோபமா ? ‘ என மெதுவாக, மிக மெதுவாகத்தான் கேட்கிறீர்கள். அவளோ வெடிக்கிறாள்:

‘ உங்களுக்கு எத்தனை தரம்தான் சொல்வது ? பற்பசைக் குழலை நடுவில் அழுத்திப் பசையைப் பிதுக்கி எடுக்காதீர்கள், முனையிலிருந்து அமுக்கி எடுங்கள் என்று. சே, கொஞ்சமும் நாகரிகம் தெரியாதவரிடம் மாட்டிக்கொண்டுவிட்டேனே! ‘

அவள் கோபத்தில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பது நமக்குத் தேவையான விஷயம் அல்ல. அவள் கோபத்தை பெரிய சச்சரவு அளவுக்கு வளர்த்திவிடாமல் மெளனம் காத்து அடுத்த நாளிலிருந்து இரண்டு பேருக்கும் தனித் தனிப் பற்பசைக் குழல்கள் வாங்கி வைத்துவிட்டால் அவரவர் நாகரிகம்போல பிதுக்கிகொள்ளலாமல்லவா ? சண்டைக்கேது இடம் ? ஒவ்வொரு காலையும் முகங்கள் மலர்ச்சியுடனே தொடருமல்லவா ? முதல் சண்டையை வேண்டுமானால் தவிர்க்கமுடியாதுபோயிருக்கலாம், அடுத்ததை நிச்சயம் தவிர்க்கமுடியும்தானே ?

2.காது கொடுத்துக் கேளுங்கள்.

இயற்கை மனிதனுக்கு ஒரு வாயை மட்டுமே அளித்துவிட்டு காதுகளை மட்டும் இரண்டாக அளித்திருக்கிறது. இதற்கான காரணம் ‘ கொஞ்சமாகப் பேசுங்கள், நிறையக் கேளுங்கள் ‘ என்பதுதானே ? அதேபோல எல்லோர் சொல்வதையும் காதுகளில் வாங்கிக் கொள்ளுங்கள், வாயால் பதில்களை உறுதிப்படுத்தாதீர்கள். செய்ய முடிந்ததைச் செய்யுங்கள்.மாலையில் நீங்கள் வீடு திரும்பிவரும்போது பூக்காரி உங்களை வழியில் நிறுத்தி உங்கள் தலையில் கட்டிய சில முழப் பூக்களைப் பார்த்து உங்கள் மனைவி ‘ ஆபீஸ் போகிற அவசரத்தில் சொன்னேன், காதில்கூட விழுந்ததோ இல்லையோ, ஆசையோடு மறக்காமல் வாங்கி வந்துவிட்டாரே ‘ என்று பெருமிதப் படுவாள். பூ வாங்க நீங்கள் மறந்து விட்டாலும்

‘அடடா, ஆபீஸ் கிளம்புகிற அவசரத்தில் சொல்லாமல் வேறு சமயத்தில் ஞாபகப்படுத்தியிருந்தோமானால் கட்டாயம் வாங்கிவந்திருப்பார். எனக்குத்தான் மூளையில்லை. களைப்பாக இருக்கிறார், இதைப்போய் கேட்பானேன் ? ‘என்று தன்னை சமாதானப்படுத்திக்கொள்வாள். ஆகவே காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்.

3.பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள் .

அல்ப விஷயமானாலும் ஒருவரையொருவர் மனம் திறந்து, வாய் திறந்து பாராட்டுவதன்மூலம் மனம் உற்சாகமடைகிறது. தொடர்ந்து செய்யப்படும் செயல்கள் மேலும் மெருகேறுகின்றன. ‘பேஷ்1 உன் கை மணமே தனிதான் ‘ என்ற சிறிய பாராட்டு இன்றைய சமையலைவிட நாளைய சமையலை மேலும் ருசியுள்ளதாக ஆக்கும். ‘ பரவாயில்லையே, நான் எதிர் பார்த்ததற்கு மேலாக விரைவாகவே செய்து முடித்துவிட்டாயே! ‘ என்று தொழிலாளியைப் பாராட்டினால் அடுத்தமுறை அவனது செயல் திறன் இன்னும் கூடும். மாறாக எவ்வளவு சிறப்பாக ஒருவன் வேலையை முடித்திருந்தாலும் அவன் கடமையைத்தானே செய்திருக்கிறான் என்று முகத்தை மரக்கட்டைபோல வைத்துக்கொண்டிருந்தால் என்ன பயன் ?எண்பது வயதுக் கிழவர் ஒருவர் தன் வாழ்வில் ஒருநாள்கூடகுடும்பத்தில் சண்டை,சச்சரவுகள் இன்றி சந்தோஷமாகவே இருந்ததில்லையே என வருந்தி ஒரு குருவிடம் சென்று முறையிட்டார். குரு கூறினார்: ‘ ஏழே ஏழு வார்த்தைகள் கொண்ட மந்திரம் ஒன்றைச் சொல்லித்தருகிறேன். அதை உன் மனைவியின் முன் உச்சரி. மறுநாள் என்னிடம் தகவல் சொல். ‘ மறுநாள் துள்ளிக் குதித்துக்கொண்டே

குருவிடம் ஓடி வந்தார் அந்தக் கிழவர். குரு ‘ மந்திரத்தைப் பிரயோகித்தாயா, பலனிருந்ததா ? ‘ என்று கேட்டார். ‘ அற்புதம் குருவே, நேற்றிரவே மந்திரத்தை என் மனைவியின் முன்னே ஓதினேன். முதலில் திடுக்கிட்டாலும் சிறிது நேரத்தில் என்னைக் கட்டிப்பிடித்து அணைத்து ஒரு முத்தம் கொடுத்தாள் பாருங்கள், எங்கள் அறுபது வருஷ தாம்பத்தியத்தில் ஒருமுறைகூட அவ்வளவு இறுக்கமான அணைப்பையும் முத்தத்தையும் நான் அனுபவித்ததில்லை! ‘ என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார் கிழவர். அவர் கற்றுக்கொண்ட சுலபமான அந்த மந்திரம் இதுதான்:

Honey! where would I be without you ? – அன்பே! நீ இல்லாமல் என்னால் எப்படி இருக்க முடியும் ?

வானத்தையே வில்லாக வளைக்கும் சக்தியை ஒரு சிறிய பாராட்டு பெற்றுத்தரும்

என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டாமா ?

4.மன்னிக்கத் தெரிந்துகொள்ளுங்கள்:

மன்னிப்பவன்தான் மனிதன் என்று ஒரு வியாக்கியானம் உண்டு. எல்லா நிலைகளிலும் குற்றமே செய்யாதவன் என்று எவருமே இருக்க முடியாது. தேவர்கள்கூட மனதாலும் உடலாலும் குற்றங்கள் புரிந்து தண்டனைக்குள்ளாகி இருக்கிறார்கள். ஆனால் தேவர்களைவிட மனிதர்களிடம் மன்னிக்கும் குணம் அதிகம். அதை நாம் மறந்து விடுகிறோம் அதனால்தான் வெறுப்புணர்ச்சி கூடி வாழ்க்கை நெருடுகின்றது. சின்னத் திருட்டைச் செய்யும் ஊழியனை அவன் உணரும்படி பேசி மன்னித்துவிடுங்கள். அவன் பெரிய திருடனாவதை நீங்கள் இப்போது தடுத்துவிட்டார்கள். மீண்டும் கெட்ட எண்ணங்கள் தோன்றும்போது அவன் மனதில் பதிந்துவிட்டிருக்கும் உங்கள் மன்னிப்பு அவனைக் காப்பாற்றிவிடும். திருத்துவதற்கும் திருந்துவதற்கும் மன்னிப்பு என்ற சுலபமான வழி இருக்க மிரட்டல், தண்டனை என்ற முட்கள் நிறைந்த பாதையைத் தேர்ந்தெடுப்பானேன் ?

5.பணிவைக் கைப்பிடியுங்கள்:

நீங்கள் மிகப் பெரிய முதலாளியாக இருக்கலாம். உங்கள் கீழ் பல நூறு பேர் வேலை செய்து பிழைக்கலாம். அதனால் அவர்கள்மீது அதிகாரம் செய்யவோ, அவர்களது மரியாதைக்கு இழுக்கு நேரும்படி நடந்துகொள்ளவோ உங்களுக்கு உரிமை கிடையாது. மனிதர் அனைவரும் சமமானவர்கள் வெளியில் காணப்படுகின்ற எந்த வித்தியாசங்களும் அவர்களுடைய சுய மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்திவிட முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனி உலகம் உண்டு. அதற்கு அவனே சர்வாதிகாரி.அதில் மற்றவரின் தலையீட்டுக்கு இடமில்லை ஆகவே தனி மனித மரியாதையை அனைவரும் மதித்துச் செயல்படவேண்டும். ‘ நான் செய்தேன் ‘ என்று சொல்லாமல் ‘ உங்கள் உதவி இல்லாமல் என்னால் முடிந்திருக்காது ‘ என்று சொல்லுங்கள், சர்வாதிகாரி அடிமையாகிப் போவதை நீங்கள் காண்பீர்கள். தொண்டர்களிடம் எந்த அளவுக்குப் பணிவு காட்டுகிறானோ அந்த அளவுக்கு ஒரு தலைவன் உயர்வது நிச்சயம்.தம் பிள்ளைகளிடம் பணிவுள்ள தோழனாகப் பழகும் பெற்றோர்கள் அவர்களையும் பணிவுள்ளவர்களாக்குகிறார்கள். அறுபதடி உயரமுள்ள மாளிகைக்கு நுழை வாயில் என்னவோ ஆறடிதான். வாழ்க்கையில் உயர் மட்டத்தையடைய பணிவே நுழை வாயில்.

6.முழுமையை எதிர்பாராதீர்கள்:

எந்த மனிதனுமே தன்னளவில் பூரணமானவன் அல்ல. தன் வாழ் நாள் முடிந்துபோன நிலையிலும்கூட அவன் முழுமை அடைந்துவிட்டான் என்று சொல்வதற்கில்லை. அப்படியிருக்க தன்னோடு பழகுகிறவர்களோ, தன்னைச் சேர்ந்தவர்களோ நூறு சதம் முழுமையாக இருக்கவேண்டுமென்று எதிர் பார்ப்பது எவ்விதம் நியாயமாகும் ? முற்றிலும் குறைபாடற்ற செயல்களை முற்றிலும் குறைபாடற்றவர்கள் அல்லர் என்பவர்களால் எப்படிச் செய்ய முடியும் ? உங்கள் முதிய பெற்றோர்களை நீங்கள் சிறப்பாகப் பாதுகாக்கிறீர்கள். அதே சமயத்தில், நீங்கள் உங்கள் பெற்றோரைப் பாதுகாப்பதைப்போல உங்கள் மனைவியின் பெற்றோரை உங்கள் மைத்துனன் பாதுகாக்கவில்லையே என்று ஏன் ஆதங்கப்படவேண்டும் ? அவன் நிலையில் அவனால் முடிந்ததைச் செய்கிறான், உங்களால் முடிந்தால் உதவுங்கள், நேரடியாகவோ, மனைவி மூலமாகவோ! உங்களால் முடியாவிட்டால் மைத்துனனைக் குறை கூறாதீர்கள். உங்கள் மனைவியுடனும், தோழனிடமும், வேலக்காரனிடமும்கூட அப்படியே பழகுங்கள்.அவர்களின் குறைகளைப் புரிந்துகொண்டு அவர்களின் உழைப்பை முழு உழைப்பாகக் கருதுங்கள். முழுமை செயலில் இல்லை, உணர்வில்தான் இருக்கிறது. இதை முழுமையாக உணருங்கள்!

7.வாதங்கள் வேண்டாம், ஆலோசனைகள் போதும்:

பெரும்பாலான குடும்பப் பிரச்சனைகளுக்கு கூட்டு முடிவுதான் அனுகூலமாக இருக்கிறது. கூட்டு முடிவு எடுத்தபின்னர் யாரும் யாருக்கும் விட்டுக்

கொடுத்துவிட்டார் என்பதோ தாழ்ந்துபோய்விட்டார் என்பதோ இல்லை. அனைவரது அறிவுத் திறனும் கூட்டு நலனுக்குப் பயன்படுகிறது என்பதே கூட்டு முடிவின் பொருள். இதற்கு மாறாக வாதங்களை வளர்த்துக் கொண்டு பிடிவாதமான முடிவுகளை ஏற்போமானால் அதன் விளைவுகள் விபரீதமாகிப்போய்

முடிவெடுத்தவருக்கு அபகீர்த்தி நேரிடலாம். குடும்பப் பிளவுகள் தீர்வடைவதற்குப் பதில் மேலும் பிளவுபடலாம். தீபாவளிக்கு விலை மிக்க பகட்டான சேலை எடுக்க விரும்பும் மனைவியின் வாதத்தை குடும்பத்துக்கான பொது உபயோகப் பொருளை வாங்கலாமே என்ற சிறிய மகனின் ஆலோசனை வென்றுவிடுவதோடு அனைவரது வருங்காலச் சிந்தனைகளையும் வளப்படுத்தவும் செய்யும். மேலும் வாதங்களை உரத்துச் சொல்லி ஜெயிப்பதென்பது ஓர் இடைக்கால தனிப்பட்ட வெற்றிதான். ஆலோசனைகளைக் கிசுகிசுத்தாலும் கூட்டு நலனை விளைவிக்கின்றன என்ற முறையில் அவை அனைவருக்குமான நிரந்தர வெற்றியே. இது ஒரு நல்ல ஆலோசனைதானே!

8.உங்களால் முடியாததைப் பிறருக்கு உபதேசிக்காதீர்கள்

உலகத்திலேயே மிகவும் சுலபமான தொழில் அறிவுரை கூறுவதுதான் என்பார்கள். ஆளுக்கு ஆள் அறிவுரை கூறிக்கொண்டேயிருந்தால் செயல்படுத்துவது யாராம் ?

நீங்கள் எதைச் செய்யமுடியுமோ அந்த அளவே பிறரிடமும் எதிர்பாருங்கள். நீங்கள் பூமியிலிருந்துகொண்டு அடுத்தவனை ஆகாயத்தில் நிற்கச் சொல்லாதீர்கள், அவனால் சாத்தியமானாலும்கூட. ஆபத்திலிருக்கும் ஒருவனுக்கு உதவ மற்றொருவனை ஏவாதீர்கள். நீங்கள் உதவ முற்படுங்கள், கூட உதவ தாமாகப் பலர் முன் வருவார்கள்.உபதேசம் செய்ய நீங்கள் விருப்பப்படலாம். அதற்குமுன் அவ்வுபதேசத்தை நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா, உங்களாலும் அதைக் கடைப்பிடிக்கமுடியுமா என்பதை உறுதி செய்துகொண்டு வாயைத் திறவுங்கள், அடுத்தவனுக்கும் வாய் இருக்கிறது உபதேசம் செய்ய என்பதை நினைவில் கொண்டவராக. எப்படி இவ்வுபதேசம் ?

9.நகைச்சுவை உணர்வைப் பெருக்குங்கள்:

‘ வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் ‘ என்பது அனுபவ உண்மை.குடும்ப வாழ்வில் மிகத் தேவையான உணர்வு நகைச்சுவை. பொங்கி வருகின்ற கோபத்தை சிரிப்பு போக்கிவிடும். பொத்துக்கொண்டு வரும் துக்கத்தை புன் சிரிப்பு பொய்யாக்கிவிடும். மனைவி செய்த அல்வா கோந்து மாதிரி இருந்தது என்று சொன்னால் அவள் கோபபடாமல் என்ன செய்வாள் ? ‘நீ என்னோடு ஒட்டியிருப்பதுபோல் நீ செய்த அல்வாவும் என் வாயோடு ஒட்டிக்கொள்கிறது ‘ என்று சிரித்துக்கொண்டே சொல்லுங்கள். ஒரு சிணுங்கலுடன் அவளும் உங்களுடன் சேர்ந்து சிரிக்கத்தானே செய்வாள் ? ‘என்னுடைய அம்மாவைத்தான் எப்போதும் தூற்றிக்கொண்டேயிருக்கிறாய். சரி, உன்னுடைய மாமியாரைக் கூடவா தூற்றவேண்டும் ? ‘ என்று விஷமப் புன்னகையோடு மனைவியைக் கேளுங்கள்.புரிந்ததும் அவளும் சிரிப்பாள்! நகைச்சுவை உணர்வை சுய உணர்வாக மாற்றிக்கொள்பவர்களுக்கு வாழ்க்கையின் இன்னல்கள் இன்னல்களாகப் படா; இனியனவாக மாறிப்படும். ‘ இடுக்கண் வருங்கால் நகுக ‘ என்றார் அய்யனும்! குடும்ப வாழ்க்கையில் மிகு துன்பம் அனுபவித்திருப்பார்போல!

10.இறைவனை இட்டு வாருங்கள்:

மனித எத்தனங்கள் எல்லைக்குட்பட்டன. குடும்ப அமைதியையும் ஆனந்தத்தையும் விரும்பி எவ்வளவோ வழிகளைக் கையாண்டாலும் அவை ஓர் எல்லைக்குட்பட்டே செயல்படமுடியும். இறை யருள் இன்றி அவை முழு வெற்றி அடையா.எனவே நம் ஒவ்வொரு செயலும் இறையை நம்மிடம் ஈர்க்கும் வண்ணம் அமையவேண்டும். அவரவர் நம்பிக்கைகளுக்கேற்ப இறையால் தூண்டப்பட்டே நம் செயல்பாடுகள் இயக்கம் கொள்கின்றன என்பதையும், இறை விழைவின்படியே முடிவுகள் அமைகின்றன என்பதையும் உறுதியுற நினைந்தால் வீடும் குடும்ப வாழ்க்கையும் என்றும் இனியனவாய் இருக்கும். கோலாகலங்கள் காதலர் தினத்துடன் நின்றுவிடா. ஒவ்வொரு நாளுமே குதூகலக் குடும்ப நாளாகத் திகழ்ந்து கோலாகலங்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கும்!

நாம் வேண்டுவதெல்லாம் அதைத்தானே ?

——————————————————————————————-

குறிப்பு: கருப்பொருள்: சாது வாஸ்வானி மையத்தின் சென்னைக் கிளை சார்பில் தாதா ஜே.பி.வாஸ்வானி அவர்கள் 1-2-2000 அன்று ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவு.

bharathiraman@vsnl.com

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.