பகை போக்கும் பச்சைமயில்வாகனன்

This entry is part [part not set] of 29 in the series 20100402_Issue

முனைவர் மு. பழனியப்பன்


முனைவர் மு. பழனியப்பன்
பேருரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை

மனித வாழ்க்கை புதிரானது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை எவராலும்
அனுமானிக்க முடியாது. அடுத்த நிமிடம் இது நடக்கும் என எண்ணினால் அது
எண்ணியபடியே முடியலாம். அல்லது அதற்கு மாறாக எதிராக முடியலாம்.
முடியாமலே போகலாம். இவ்வளவு புதிர்த் தன்மை வாய்ந்த வாழ்வில் எதிர்கால
நிலையில் பயமின்றி வாழ ஒரு நம்பிக்கை தேவைப்படுகின்றது. இந்த
நம்பிக்கையைப் பக்தியின் வழியாக பெறலாம் என சமயவாதிகள்
வழிகாட்டுகின்றனர். நடப்பதெல்லாம் அவன் செயல் என்று எண்ணிவிட்டால்
நடப்பனவற்றைப் பற்றிய கவலை மனிதரை அணுகாமல் சென்றுவிடும்.
நம்பிக்கை மிக்க பக்தி சார்ந்த மனித வாழ்வில் அவ்வப்போது சோதனைகள்
எதிர்கொள்கின்றன. வேதனைகள் வந்து சூழ்கின்றன. எதிரிகள் நேரம் பார்த்து
வதைக்கத் தயாராக இருக்கிறார்கள். இவற்றைக் கடக்க பக்தி எனும் உணர்வில்,
இறைவன் காப்பான் என்ற நம்பிக்கையில் மிக்க உறுதியாக இருந்து நாள்களை
நகர்த்த வேண்டி இருக்கிறது.
இறைவன் வருவானா, வந்து காப்பானா என்ற சந்தேகத்திற்குத் துளியும் இடம்
இல்லாமல் இறைவன் வருவான், வந்து காப்பான் என்ற சத்தியத்தை இக்காலத்தில்
நல்லோர் பெற்றாக வேண்டும். இதற்குப் பல பக்தியாளர்கள் சான்று. அவர்களின்
வாழ்க்கை வரலாறு சான்று. அவர்களின் தெய்வப் பனுவல்கள் சான்று.
வேலும், மயிலும் வேதனையில் உள்ளோர்க்கு உதவிக்கரம் நீட்ட வரும். கலியுக
தெய்வம் கந்தன் வேதனைப்படும் பக்த உள்ளங்களை நாடி வருவான்.
வந்திருக்கிறான். இவனே எதிரிகளின் வலுவை அழிக்க உரம் தருபவன். இவனிடம்
கொள்ளும் பக்தி பயத்தை நீக்கும். யாமிருக்க பயமேன் என எங்கும் பயமின்மையை
அன்பருக்குத் தந்து இவனின் அருள் நீங்காது நிற்கும். பகை விலக உடன்
அணையவேண்டிய தெய்வம் முருகப் பெருமான். பகைகடியும் பெருந்தகை பச்சைமயில்
வாகனன்தான்.
அன்புடைய, பக்தியுடைய நல்லார்க்கு எதிரிகள் இருப்பார்களா? என்ற கேள்வி
எழலாம். அன்பே வயமாகி விட்டால் எதிரிகள் கூட நண்பர்கள்தானே. இருப்பினும்
நல்லோர்க்கும், அன்பானவர்களுக்கும் பல பகைகள், எதிரிகள் தோன்றலாம் எனக்
குமரகுருபரசுவாமிகள் காட்டுகின்றார்.
“பல்கோடி சன்மப்பகையும் மவமிருந்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் கோடி
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும் அடற்
பூதமும் தீ நீரும் பொருபடையும் தீதகலா
எவ்விடமும் துட்டமும் மிருகமும் முதலாம் எவையும்
எவ்விடம் வந்தெமை எதிர்ந்தாலும் அவ்விடத்தில்
பச்சை மயில் வாகனமும் பன்னிரண்டுத் திண்தோளும்
… எந்தத் திசையும் எதிர் தோன்ற”
(கந்தர்கலிவெண்பா 111116)
1.சன்மப்பகை, 2. விக்கினம் (இடைஞ்சல்) 3. பிணி 4. பாதகம்
(நம்பிக்கெடுத்தல்) 5. செய்வினை 6. பாம்பு 7. பிசாசு 8. பூதம், 9. தீயால்
ஏற்படும் அழிவு 10. நீரால் ஏற்படும் அழிவு 11. படைக்கலன் கொண்டவர்கள் 13.
துன்பம், 14. விலங்குகள் ஆகிய இவற்றால் நல்லவர்க்கும் பகைமை தோன்றலாம்.
அவர்கள் அதனைப் பகையாகக் கொள்ளாவிட்டாலும் எதிர் தரப்பார் அன்புள்ள
பக்தியாளர்களை எதிரியாகக் கருதுவர்.
இந்தச் சூழலில் முருகப் பெருமானை வேண்டினால் அப்பெருமான் எத்திசையும்,
எவ்விடமும் கருதாமல் உடன் வந்துத் தோன்றி அத்தீமையை அழிப்பான் எனக்
குமரகுருபரசாமிகள் அரிதியிட்டு உரைக்கின்றார். இதனையே அவர் கந்தர்
கலிவெண்பாவில் வேண்டுகோளாகவும் வைக்கின்றார்.
அருணகிரிநாதர் இன்னும் பல பகைகளில் இருந்துக் மனிதரைக் காப்பவன்
முருகன் என அருளுகின்றார்.
நாளென் செயும் வினைதான் என் செயும் எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங்கூற்று என்செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்துத் தோன்றிடினே
(கந்தர் அலங்காரம் 38)
இப்பாடலில் நாள் கருதியும், முன் செய்து வினை காரணமாகவும், நம்மை
நடத்தும் கோள்கள் குறித்தும், எமன் பொருட்டும் வரும் தீமைகளை
முருகப்பெருமானின் அழகான பாதங்களைச் சரணடைந்தால் தீர்த்துக் கொள்ளலாம்
என்கிறார் அருணகிரிநாதர். குமரேசர் இருதாளும் நெஞ்சத்தில் தோன்றுதல்
வேண்டும். இது மட்டும் நடந்து விட்டால் வாழ்வில் எப்பகையும் இருக்காது.
பகை விலகப் பாம்பன் சுவாமிகள் பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்.
இதற்குப் பகைகடிதல் என்றே பெயர் தரப் பெற்றுள்ளது. அதிகமான இன்னல்களை
எதிரிகள் வாயிலாகப் பெறும் பக்தர்கள் இப்பதிகத்தைத் தினம் ஓதினால்
எதிரிகள் அழிவர் என்பது மாறாத நம்பிக்கை ஆகும்.
திருவளர் சுடர் உருவே சிவை கரம் அமர் உருவே
அருமறை புகழ் உருவே அறவர்கள் தொழும் உருவே
இருள் தபும் ஔ உருவே என நினை எனது எதிரே
குருகுகன் முதல் மயிலே கொணர்தி உன் இறைவனையே
(பகை கடிதல்)
என்றவாறு பாடப்படும் இப்பதிகம் எதிரிகளை அழிக்க முருகப் பெருமானை உடன்
கொண்டு வர மயிலை வேண்டுவதாகப் பாடப் பெற்றுள்ளது.
தீமைகளை அழிக்கக் கந்தன் எனப் பேர் புனைந்து குழந்தையாக நல்லோரைக்
காக்க வந்தவன் முருகப் பெருமான். இவன் பாலாகனாயினும் வயதாலும்,
அனுபவத்தாலும், வீரத்தாலும், தவத்தாலும் சிறந்தஆனால் கொடுமை மிக்க
சூரபதுமனை வென்றவன். இவன் எதிரிகளை அழிக்க, அருள பன்னிரண்டு கைகளும்
அறுமுகமாகவும் தோன்றும் இயல்பினன். இவ்வாறே வருகை புரிந்து சூரபதுமனின்
அருளினான். இந்த நிகழ்வு மேலும் நம்பிக்கையை ஊட்டுவதாக உள்ளது.
மானிட வாழ்வு பெற்றுள்ள இவ்வுலக உயிர்களுக்கும் பகையால் ஏற்படும்
துயரத்தை மாற்ற பச்சைமயில்வாகனன் அன்றி வேறுயார் துணையாக முடியும்.
muppalam2006@gmaii.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்