சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
ஹரிக்கேன் கரைமதில்
உடைத்தது அந்தக் காலம்!
குப்பைகளை மலையாய் குவித்தது,
ஓடிவந்த ஆற்று வெள்ளம்!
கூடிவிட்ட குளங்கள் போக்கி
நாடு நரகக் கூளங்கள் நீக்கி,
வீடு, கடை, வீதிகளில் ஒட்டிய
நாற்றக் கறைதனை அகற்றி,
போற்றிக் குடிபுகும் புதிய நகரமாய்
மாற்றுவது எந்தக் காலம் ?
‘ஹரிக்கேன் கேட்ரினா நியூ ஆர்லியன்ஸ் நகர்ப் புறங்களில் பேரளவு சூழ்நிலைச் சீர்கேட்டை விளைவிக்கப் போகிறது. நகர்ப் பாதுகாப்புக் கரைமதில் ஏற்பாடுகளைத் [City Levee System] தகர்த்துக் கொண்டு நீர் வெள்ளம் கடல் கீழ்மட்டப் பகுதிகளை நிரப்பி, தெருக்களில் நீர்க்குளங்களை உண்டாக்கிக் குப்பை, நரகல் கழிவுகளுடன் சேர்ந்து, அபாய இரசாயனத் திரவங்களுடன் கலந்து மக்கள் தப்பி வெளியேற முடியாதபடி அடைத்து விடலாம். ‘
இவார் வான் ஹீர்டென் எச்சரிக்கை [Ivor Van Heerden, Marine Scientist, Louisiana State University]
‘கேட்ரினா தாக்கியதால் நியூ ஆர்லின்ஸ் நகரம் வெள்ளத்தில் மூழ்க வில்லை! இராணுவப் படைக் குழு எஞ்சியர்கள் முறையற்ற டிசைனில் திட்டமிட்டுக் குட்டையாக, மோசமாகக் கட்டிய கரைமதில்கள் உடைந்ததால் வெள்ளம் நிரம்பியது. ‘
அமெரிக்கக் கட்டமைப்புக் குழு எஞ்சினியர்கள் [U.S. National Science Foundation & American Society of Civil Engineers]
‘நியூ ஆர்லின்ஸ் நகரம் ஹரிக்கேன் மீட்சி முறைகளைக் கற்றுக் கொள்ளும் ஓர் சம்பிரதாய மாதிரியாகக் கருதப்படாது! அந்த நகரின் சீர்கேடுகள் யுத்தத்தால் சேதமான சிதைவுகளைப் போல் தோற்றம் அளிக்கின்றன! மக்கள் குடியேற அதைச் சீர்ப்படுத்திப் புதுப்பிக்க வேண்டுமானால் குறைந்தது பத்தாண்டுகள் ஆகலாம்! அப்பணிகளை ஈராண்டுகளில் செய்து முடிக்க முடியாது. ‘
ஜிம் ரிச்சர்டுஸன் [Director, Public Administration Institute, Louisiana State University]
ஹரிக்கேன் கேட்ரினா அடித்து மூன்று மாதம் கழித்து …
நியூ ஆர்லின்ஸ் போர்பன் வீதி பிரெஞ்ச் குடிப்பகுதியில் [Bourbon Street, French Quarter] நியான் ஒளி விளக்குகள் பளிச் பளிச்சென்று மின்னிய வண்ணம் கண்களைக் கவர்கின்றன. வீதி பெருக்கும் குழுவினர் குடியும், கூத்தாட்டமும் நிரம்பிய குடிப்பகங்களில் நிரம்பி யுள்ளனர். கடைகளில் மார்டிகிராஸ் மூக்கு மூடிகள் [Mardi-Gras Masks] மலிவு விலைகளில் குவிந்து கிடக்கின்றன! ஆனால் பொஞ்சார்டிரைன் ஏரிக்கு [Pontchartrain Lake] அப்பால் வடபுறம் நோக்கிச் சென்றால், காணும் அருவருப்பான காட்சிகள் முற்றிலும் வேறானவை. அங்கிருக்கும் நகர்த் துடைப்புக் குழுவினர் அணியும் மூக்கு மூடி வேறானது! வீடுகளும், வீதிகளும், தெருக்களும், சந்து, பொந்துகளும் கொண்டுள்ள நாற்றங்கள் மனிதரின் குடல்களை வெளியே தள்ளிவிடும்! துடைப்பாளிகள் அணியும் மூக்கு மூடிகள் தொழிற்துறை சார்ந்த, முற்போக்கான வாயு வடிகட்டிகள். ஹரிக்கேன் ஆண்டு தோறும் அடிக்கும், அமைதி வரும்! இன்னல்கள் வரும், போகும்! துன்பங்கள் நேரும், மறையும்! ஆனால் கேட்ரினா அடித்த பிறகு மூன்று மாதங்கள் ஓடிய பின்னும், நரகமான நியூ ஆர்லின்ஸ் நகரம் இன்னும் மீண்டெழ வில்லை! நகரை விட்டு நகர்ந்த பெரும்பான்மையான [சுமார்: 80%] மாந்தர் திரும்பி வரமுடியாத நிலையில் மற்ற மாநிலங்களிலும், நகரங்களிலும் தங்கி அன்னியராய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்!
வீடுகளில் உடைந்த பண்டங்கள், பாத்திரங்கள், உண்டித் தட்டுகள், கண்ணாடித் தம்ளர்கள், கட்டில்கள், நாற்காலிகள், சோபா மெத்தைகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், சுவர்ப் படங்கள், துணிகள், ஆடைகள் போன்றவை அனைத்தும் தாறுமாறாய்க் கிடப்பதுடன், மாசு படிந்த மலக்கழிவு நீர்க்குளம் நிரம்பிக் காய்ந்துபோய் நாற்றமடிக்கும் நகராய், நியூ ஆர்லின்ஸ் பிசாசுக் கிடங்காய் மாறிக் கிடக்கிறது! இல்லங்களின் உலர்ச் சுவர்கள் [Drywalls] புழுதிநீரை உறிஞ்சிக் குடித்து உப்பிக் காய்ந்து போய் உதிரும் நிலையில் கறை படிந்துள்ளன! குப்பை அள்ளும் மோட்டார் வாகனங்கள் வண்டி, வண்டியாய்க் வீட்டுக் கழிவுக் கூளங்களை அள்ளிக் கொண்டு போய், பல கால்பந்து நீளத் திடல்களில் அம்பாரம், அம்பாரமாய்க் குவித்துள்ளன! அவற்றிலிருந்து எழுந்து குடலைக் குமட்டும் நாற்ற வாயு முகில்கள் வானலாவிப் பரவுகின்றன!
இப்போதும் செத்த உடல்கள் காணப்பட்டு வருகின்றன! சென்ற மாதம் மட்டும் 30 சடலங்கள் மீட்கப் பட்டன! லூஸியானாவில் மாண்டு போனவர் ஆக மொத்தம் 1054 பேராக அறியப்படுகிறது. எண்ணப்படாமல் நீரடித்துப் போனவர் எத்தனை நபரென்று அறிந்து கொள்ள முடியாது! பகல் வேளைகளில் இன்னும் போக்கிரிகள் கொள்ளை அடித்துக் கொண்டுதான் உள்ளார்கள். ஆனால் இரவு நேரங்களில் அங்கே அமைதி காணப் படுகிறது. நகரெங்கும் மாந்தர் தற்கொலை செய்து கொள்வது மிகையாகி உள்ளது. ‘நாசமாகப் போன நகரில் ஒரு வாழ்க்கையும் இல்லை; தங்கி யுள்ளவரும் மனக்குடைவில் [Depression] தவித்துக் கொண்டிருக்கிறார், ‘ என்று இதயநோய் மருத்துவாதி டாக்டர் பாட்டிரிக் புருவா [Cardiologist Dr. Patrick Breaux] கூறுகிறார்.
நாற்றக் கறைநீக்கி நகரைப் புதிப்பிக்க முடியுமா ?
நியூ ஆர்லியன்ஸ் நகருக்குத் திரும்பி வரலாமா, வேண்டாமா என்று திண்டாடும் 300,000 மக்கள் மீண்டும் குடியேறக் குறைந்தது ஐந்து, கூடியது பத்தாண்டுகள் ஆகலாம்! ஆனால் அந்தக் குறிக்கோள் நிறைவேறப் பலதரப்பட்ட இமாலயப் பணிகள் முதலில் முடிக்கப் படவேண்டும்.
1. முதலில் பூதப் பம்புகளை இயக்கி, நகர்ப் புறத்தே தங்கியுள்ள புழுதிக் குளங்களின் நீரைக் கடலில் பம்ப்புகள் மூலமாய்த் தள்ள வேண்டும். அப்பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
2. நகரின் ஏரிகள், ஆறுகள், கடல் ஆகியவற்றின் நீர் வெள்ளம், கடல் மட்டத்துக்குத் தணிவாய்ப் போன நகரை மூழ்காதிருக்க 340 மைல் தூரத்திற்குக் ‘கரைமதில் ஏற்பாடுகள் ‘ [Levee System] கட்டப்பட வேண்டும். உச்ச அளவு [வலுத்தரம்:5 (Category:5)] ஹரிக்கேனைத் தாங்கிக் கொள்ள உறுதியாகவும், உயரமாகவும் அவை கட்டப்பட வேண்டும். மழைத் தண்ணீர் சேர்ந்து தங்கிப் போனால் அல்லது கரைமதில் உடைந்து வெள்ளம் தங்கிப் போனால், வற்றச் செய்ய பூதப் பம்ப்புகள் அமைக்கப் படவேண்டும். அல்லது புதுப்பிக்கப் படவேண்டும். திட்டமிடப் பட்ட புதிய கரைமதிலின் உயரம்: 5 மீடர் [>16 அடி].
3. நகர் வீதிகள், தெருக்கள், வீடுகளின் சிதைந்து போன பொருட்களை, வாகனங்கள் மூலம் கடத்திச் சென்று அப்பால் குவிக்க வேண்டும். பிறகு வீடு, வீடாய், கடை, கடையாய், தெருத் தெருவாய், வீதி, வீதியாய் குப்பை, கூளங்கள் அனைத்தும் நீக்கப் படவேண்டும்.
4. இரசாயனத் திரவங்களைப் பயன்படுத்தி வீடுகள், கடைகள், வீதிகள், தெருக்கள் அனைத்திலும் ஒட்டிக் கொண்டிருக்கும் நாற்றக் கறைகளைச் சுரண்டி நீக்கி தூய நீரால் பலமுறை கழுவப் படவேண்டும்.
5. கழுவிச் சுத்தமான பகுதிகளில் பாக்டாரியா ஒட்டுகள் சோதிக்கப் படவேண்டும்.
மருத்துவ மனை, பள்ளிக்கூடம், நிதியளிப்பு நிலைமை
விளக்குகள் மின்னும் நகர் மையப் பகுதி ஒன்றைத் தவிர்த்து, நியூ ஆர்லின்ஸ் சுற்றுப் புறப்பகுதிகள் அனைத்தும் இன்னும் இருட்டுப் புறங்களாகவே உள்ளன! ஹரிகேன் அடிப்புக்கு முன்பு இயங்கிக் கொண்டிருந்த எட்டு மருத்துவக் கூடங்களில், இப்போது இரண்டு மட்டும் மீட்பாகிப் பகலில் மட்டும் அனுதினம் அணுகும் 150,000 பேருக்கு மருத்துவப் பணியளித்து வருகின்றன. பொதுத்துறைப் பள்ளித் தளங்கள் அனைத்தும் கேட்ரினா தடம்பட்டு முற்றிலும் சீர்கேடாகிப் போயின! மூன்று மாதங்கள் கழித்துத் தற்போது ஒரே ஒரு பொதுத்துறைப் பள்ளி திறக்கப் பட்டிருக்கிறது. அது 500 மாணவ, மாணவிகளுக்கு மட்டும்தான் கல்வி ஊட்டும்!
நியூ ஆர்லியன்ஸ் நகரின் முந்தைய ஆண்டு வருமானம்: 400-500 மில்லியன் டாலர். அத்தொகையில் இப்போது கால் பங்கு கூடக் கிடைப்பது மிகச் சிரமம். நகரின் 3500 சிற்றுண்டிச் சாலைகளில் கால் பங்குக் கடைகள்தான் திறக்கப் பட்டுள்ளன. நகரைக் காண வரும் யாத்திரைப் பயணிகளால், அனுதினம் கிடைக்கும் வருமானம் 1.5 மில்லியன் டாலர் இப்போது பூஜியமாகி விட்டது! அமெரிக்க அரசாங்கம் நகர்ச் சீரமைப்புப் பணிகளுக்கு 62.3 பில்லியன் டாலர் தொகையைத் தருவதாக ஒப்பியது. மற்றும் லூஸியானா மாநிலத்துக்கு வரி நிறுத்தம் [Tax Break], வேறு திட்டங்கள் ஆகியவற்றுக்கு அடுத்து 8.6 பில்லியன் கிடைத்தது. ஆக மொத்தம் 71 பில்லியன் டாலர் தொகை சேர்ந்து, தேச நிவாரணத்தில் நியூ யார்க் 9/11 தாக்குதலுக்குக் கிடைத்த 43.9 பில்லியன் டாலர் தொகையை விட, மிகையாக நியூ ஆர்லின்ஸ் சீரமைப்புக்குக் கிடைத்தது.
மெக்ஸிகோ வளைகுடா பகுதிளைத் தாக்கும் சூறாவளிகள்
சென்ற நூற்றாண்டு 1965 செப்டம்பரில் தீவிரம்: 3-4 [Category: 3-4] கொண்ட ஹரிக்கேன் பெட்ஸி [Hurricane Betsy] கடைசியாக அடித்த சூறாவளிப் பேய்மழையில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் அதிர்ஷ்ட வசமாகப் பெருஞ் சேதத்திலிருந்து தப்பியது. ஆனால் பாதுகாப்பு மதில் தடுப்புகளிலும், சில உள்ளக நகராட்சிப் பகுதிகளிலும் [St. Charles, St. Bernard, Plaquemines Parishes] நீர் மட்டம் 23 அடி வரை உயர்ந்து விட்டது. மிகக் கடுமையான தீவிரம்: (4-5) கொண்டு நியூ ஆர்லியன்ஸ் நகரை மோதப் போகும் ஹரிக்கேன் கேட்ரினாவைப் பாதுகாப்பு மதில்கள் தாங்கிக் கொள்ள மாட்டா வென்று கேட்ரினா தாக்குவதற்கு முன்பே பல நிபுணர்கள் மீண்டும், மீண்டும் தமது எச்சரிக்கையை வெளிட்டனர். மதில்கள் சில மண் மேட்டாலும், சில இரும்புத் தட்டுகளாலும், சில காங்கிரீட் சுவர்களாலும் கட்டப் பட்டவை. ஆனால் அவை யாவும் தீவிரம்: 3 தாக்குதலுக்கே கட்டப் பட்டதால், கேட்ரினாவின் வேங்கை அடியைத் தடுத்துக் கொள்ள ஆற்றல் இல்லாதவை என்று முன்னெச்சரிக்கை செய்தது மெய்யாகவே இம்முறை நிகழ்ந்து விட்டது! புகழ் பெற்ற நியூ ஆர்லியன்ஸ் நகரைக் கடல் வெள்ளமும், புயலும் அடித்துக் கடல் நீரால் மூழ்க்கிப் பேரளவு நாசத்தை விளைவித்து நகரையே முற்றிலும் அழித்து விட்டது!
பெருநரக மாகிய நியூ ஆர்லின்ஸ் எப்போது மீட்சி பெறும் ?
நியூ ஆர்லியன்ஸ் நகரம் சுமார் 480,000 பேர் வாழ்வதற்குரிய இல்லங்களைக் கொண்டது. ஆனால் அதன் வாணிபத் தொழில் துறைகளுக்கு வந்து போகும் மக்கள் தொகையையும் சேர்த்தால் 1.3 மில்லியனுக்கு மேற்பட்டது என்று யூகிக்கப் படுகிறது. வெளியேறிப் போனவரில் திரும்பி வந்தவர் 60,000 பேர் என்று ஊகிக்கப் படுகிறது. வெளிப்பகுதிகளில் வாழும் 300,000 நியூ ஆர்லின்ஸ் மக்கள் நாற்றம் அடித்து நரகமான நகருக்கு மீண்டும் எப்படி வருவது, வாழ்வது என்பதைத் தீர்மானிக்க முடியாது திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ( நவம்பர் 24, 2005) கேட்ரினாவால் லூஷியானாவில் மட்டும் மாண்டவர் 1053 பேர் என்று அறியப் படுகிறது. ஆரம்பத்தில் 80% பரப்பாக இருந்து ஒரு வாரம் கழித்து நீர் மட்டம் குறைந்து தற்போது நகரின் 60% பரப்பில் மாசுகள் படிந்த வெள்ளம் சூழ்ந்து, விஷப் பண்டங்கள் கலந்து, பாக்டாரியா பெருகிப் பாதுகாப்புக்குப் மேல் 45,000 மடங்கு கூடி விட்டது என்று அறிவிக்கப் படுகிறது.
நியூ ஆர்லியன்ஸ் நகர் முழுவதும் நாசமாகிப் பெரும்பான்மையான நகர மக்கள் வெளியேறி விட்டதால், 300,000 பேர்கள் உழைப்பும், ஊதியமும் இழந்து, மாநில அரசாங்கத்தின் வருமானம் பெருத்த அளவில் சிறுத்து விட்டது. நீர்த் தேக்கங்களை வெளியேற்றி, கழிவு நீர் ஏற்பாடுகளைச் சீராக்கி, நகரத்தைச் சுத்தீகரித்துப் புத்துயிர் உண்டாக்கவும் குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, தகவல், வசதிகளைச் செப்பனிடவும் நிதித்தொகை 63 பில்லியன் டாலர் ஆகலாம் என்று தற்போது எதிர்பார்க்கப் படுகிறது. இனிவரும் அடுத்த 10 ஆண்டுகளில் எஞ்சினியர்கள் [Army Corps of Engineers] ஸேலா நீர் தேக்கக் கட்டுப்பாடுத் [Southeast Louisiana Urban Flood Control Unit (SELA)] திட்டத்தில் 430 மில்லியன் டாலர் செலவு செய்து, கரைமதில்களின் உயரம், ஆற்றலை அதிகரிக்கவும், புது பம்ப் நிலையங்கள் கட்டவும் நகராட்சியில் வழிகள் வகுக்கப் பட்டுள்ளன. ஆயினும் உயிரில்லாத நியூ ஆர்லியன்ஸ் நகரம், நடப்பு உள்ளமைப்புகளை [Infrastructure] மீண்டும் உருவாக்கி ஓரளவு இயங்க பத்தாண்டுகள் கூட ஆகலாம் என்று அறியப்படுகிறது.
தகவல்:
1. New Orleans Levees No Match for Katrina By: David Crary [AP National Writer (Aug 31, 2005)]
2. Why the Levee Broke By: Will Bunch, Attytood [www.alternet.org/story/24871/] (Sep 1, 2005)
3. New Orleans Levees Patched, Army Starts Pumping Water, [Update: 2 & 6] (Sep 6, 2005)
4. Law Enforcement May Forcibly Remove New Orleans Residents By: Scott Gold & Lianne Hart [www.Newsday.com] [Times Staff Reporters (September 7, 2005)]
5. When the Levee Breaks By: Bill Diskoch, CTV.ca News Writer (Sep 5, 2005)
6. Mayor of New Orleans Orders Forced Evacuations By: CTV.ca News Staff (Sep 7, 2005)
7. Time Magazine Special Report An American Tragedy, (Sep 2, 2005) Picture Courtesy: Time.
8. Considering the Lessons of Hurricane Katrina, An Interview with Timmons Robert By/: Suzanne Seuratten [Oct 10, 2005]
9. Katrina National Geographic, Special Edition [Oct-Dec 2005]
10 News Week Poverty, Race & Katrina Lessons of A National Shame By: Jonathan Alter [Sep 19, 2005]
11 Maclean ‘s The Drowning of New Orleans [Sep 12, 2005]
12 Time Magazine: Sytem Failure [Sep 19, 2005], Hurrycane Katrina, Following the Money [Sep 26, 2005] Are We Making Hurricanes Worsre ? [Oct 3, 2005]
13 The American Thinker, New Orleans Myths: The Numbers Tell A Different Story [Sep 6, 2005]
14 How Would Our City Evaquate ? By: Bernie Beier [www.FortWayne.com (Oct 9, 2005)]
15 Time Magazine: New Orleans Blue, Three Months After Katrina By: Cathi Booth Thomas (Nov. 28, 2005).
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 24, 2005)]
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VII
- கண்ணாடிகள்
- கீதாஞ்சலி (50) எனது இறுதிக் கானம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- நீரில் மூழ்கிய நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேரும் நெடுநாட் துயர்கள் (3) (New Orleans Aftermath Blues After Katrina Attack)
- நாடோடி மனம் – பிரம்மராஜன்
- புனைவுகளும்,இறையியற் றன்மைகளும்!
- பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் – எமே செசேர் (Aime Cesaire)
- இலக்கியத்தில் பெண்கள்
- தமிழ்க் கவிதையில் பாலியல் இருப்பின் குரல்
- சான்றுகள்
- சோமு தங்கச்சியும் குஷ்புவும்
- வட்டமேசை
- மெல்பேர்ன் தமிழ்ச் சங்கம் – சர்வதேச தமிழ் குறும்பட விழா
- கடிதம் – சுந்தர ராமசாமி குறித்த ஜெயமோகனின் நூல் வெளியீடு
- உலகமயமாதல் சூழ்நிலையில் இந்திய/தமிழ் கலை(!) படைப்பாளிகளின் கவனத்திற்கு சில!
- பெரியபுராணம் – 66 – 31. அப்பூதி அடிகள் நாயனார் புராணம்
- கடிதம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-5)
- கர்த்தரிடம் நோவா செய்துகொண்ட விண்ணப்பம்
- பழமொழியும் பாட்டியும் அம்மாவும்
- இதே கார்த்திகை
- எச்சம்!
- வயதென்ன ?
- உருமாறும் உறவுகள்
- மழை
- கற்பும், கருத்துச்சுதந்திரமும்
- தியா: முஸ்லிம் மடோனா
- போட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 2
- மனித வதை!
- நந்தன் இல்லாமல் நடராஜரா ?
- ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது வழங்கி இந்திய ஜனாதிபதி ஆற்றிய உரை
- அந்த மலர்க் கூட்டம்
- இது எங்கள் கதை