நினைவெல்லாம் நித்யா !

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

பாலா


ஆத்மா நித்யாவின் திருமணத்திற்கு செல்ல ஆயத்தமானான்.

ஏனோ மனதை சோகம் கவ்வியது, தனிமையுணர்வு அவனை வதைத்தது ! பல வருடங்களாக பத்திரமாக வைத்திருந்த கடிதங்களை கொண்டு செல்வதற்கு தயாராக வைத்திருந்தான். நித்யாவும் அவனும் சம்மந்தப்பட்டதையும், அக்கடிதங்கள் குறித்தும், யாரிடமும் சொல்வதில்லை என்று சமீபத்தில் அவளிடம் சத்தியம் செய்தது அவன் நினைவில் நிழலாடியது ! என்ன செய்வது ? ‘மீறவேண்டிய கட்டாயம் ‘ என்று நினைத்துக் கொண்டான்,

நித்யா அன்போடு வாங்கித் தந்த சந்தன நிறச் சட்டையை அணிந்து கொண்டான். அவனது ஒரு பிறந்த நாளுக்கு நித்யா வாங்கித் தந்த, இதுவரை அவன் அணிந்திராமல் வைத்திருந்த, கைக்கடிகாரத்தை கட்டிக் கொண்டான். ஒரு கோர விபத்தில் தன் தாய் தந்தையரை இழந்து, தற்கொலை வரை சென்ற அவனை மீட்டு, ஆறுதல் கூறி, மெல்லத் தேற்றி, தன்னுடன் இணைத்துக் கொண்ட நித்யாவின் உயர்ந்த குணம் யாருக்கு வரும் ? தான் வாழும் இந்த வாழ்க்கையே அவள் மீட்டுத் தந்தது தானே என்ற ஓர் எண்ணம் எழுந்து, தான் செய்யவிருக்கும் செயல் சரியானதா என்று மனதில் எழுந்த கேள்விக்கு பதிலளிக்க அவன் அப்போது தயாராக இல்லை !

திருமண மண்டபத்தில் ஜேஜே என்று கூட்டம் ! நித்யாவின் நலம் விரும்பிகள் தான் எத்தனை பேர் என்று எண்ணிக் கொண்டான். மணமேடையில் ஒரு தேவதை போல் நித்யா வீற்றிருந்தாள். ‘என்ன ஒரு அற்புதமாக ஜோடிப் பொருத்தம்! ‘ என்று ஆத்மா மலைத்துப் போனான். அவனைப் பார்த்தவுடன், நித்யா, உணர்வை வெளிக்காட்டாமல், ‘உன்னை எதிர்பார்த்தேன், ஆத்மா ! பிரகாஷுக்கு உன்னை அறிமுகப்படுத்த வேண்டும், வா, வா ‘ என்றாள்.

ஆத்மா நிதானமாக தான் எடுத்து வந்த கடிதக்கட்டை புது மாப்பிள்ளையின் கையில் அழுத்தி, ‘இது தான் நான் உங்களுக்கு தரும் மிகச் சிறந்த திருமணப்பரிசு !!! ‘ என்றவுடன், நித்யா அவனை மிகுந்த சங்கடத்துடனும் குழப்பத்துடனும் நோக்குவதை பொருட்படுத்தாமல், ‘பிரகாஷ், நித்யா பணி புரிந்து வரும் மறுவாழ்வு மையத்தில், அவள் தந்த அரவணைப்பாலும், அறிவுரைகளாலும், உந்துதலாலும், தங்கள் வாழ்வின் சோகங்களிலிருந்து மீண்டு புதுவாழ்வு அமைத்துக் கொண்ட பல அபலைப் பெண்கள் எழுதிய நன்றிக் கடிதங்கள் தான் இவை ! பாரதி கண்ட ஒரு புதுமைப் பெண்ணை மனையாளாகப் பெற்றதற்கு என் வாழ்த்துக்கள் ‘ என்றான் !!!!

பின் நித்யாவைப் பார்த்து, ‘என்னை மன்னித்து விடு, நித்யா! உன் நல்ல நண்பனான என்னால் இவ்விஷயத்தை உன் வாழ்க்கைத் துணையாக வருபவரிடம் சொல்லாமல் இருக்க முடியலை ‘ என்று கூறி புன்னகைத்தான் !!!

என்றென்றும் அன்புடன்

பாலா

balaji_ammu@yahoo.com

Series Navigation

பாலா

பாலா