நினைவுகளின் தடங்கள் -(11)

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

வெங்கட் சாமிநாதன்


முத்துசாமி ஐயர் என்ற முதியவரிடமிருந்து அடுத்தடுத்து இருந்த மூன்று வீடுகளை அனந்தய்யர் குடும்பத்தவர் வாங்கியது பற்றிச் சொன்னேன். அதன் பிறகு தான் அந்த வீடுகளில் ஒன்றிற்கு நாங்கள் முன்பு பேட்டைக்கு எதிரிலிருந்த வீட்டிலிருந்து மாறி இந்த புதிய வீட்டுக்குக் குடிபுகுந்தோம். ஒரு பெரிய வீடு வடக்கே பார்த்து இருக்கும். அதை அடுத்து ட வடிவிலான அந்தத் தெருவில் இரு கோடுகள் இணையும் புள்ளியில் நாங்கள் புதிதாகக் குடிவந்த வீடு இருந்தது. அதற்கு அடுத்த வீட்டில் முத்து சாமி அய்யர் கொஞ்ச நாளைக்கு இருந்தார். அவர் தனிக்கட்டை. அவர் குடும்பத்தையோ அவர் மனைவியையோ பார்த்த ஞாபகமே எனக்கு இல்லை. வயதானவர். அப்போது அவருக்கு வயது 60-65 இருக்கும். சட்டையோ பனியனோ போடாத பஞ்சகச்சம் கட்டிய சர்தார் படேலை மனத்தில் கற்பித்துக் கொள்ள முடியுமானால் அவர்தான் முத்துசாமி ஐயர். அவர் என்ன செய்தார், வீட்டை விற்று எங்கே போனார், அந்த பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்தார்? என்பதெல்லாம் வெட்டிப் பொழுதில் குருட்டு யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது தோன்ற வேண்டிய கேள்விகள். அப்போது நடந்த பல விஷயங்கள் இப்போது நினைத்துப் பார்க்கும் போது புதிர்களாக உருமாறி சிரிக்கின்றன.

முத்துசாமி ஐயர் அந்த வீட்டை விற்றுவிட்டு நிலக்கோட்டையை விட்டுப் போனதும் நாங்கள் அடுத்து இருந்த அவர் காலி செய்த வீட்டுக்கு மாறினோம். அதில் சில சௌகரியங்கள் இருந்தன. பின்னால் பெரிய தோட்டம். மேலே பெரிய மொட்டை மாடி. அதில் மூன்றில் ஒரு பங்கு கூரை வேய்ந்திருக்கும். முன்னிருந்த வீட்டில் திண்ணைக்கு மேலே தகரம் வேய்ந்திருந்தது. இந்த வீட்டிம் கூரைக்கு மங்களூர் ஓடு. அது சூட்டைக் கொஞ்சம் தணிக்கும் கடைசியாக பெரிய லாபம், அங்கு பின்னால் போரிங் பம்ப் இருந்தது. கோடை காலங்களில் அங்கு தண்ணீருக்கு பஞ்சம். குளம் வற்றி விடும். எங்கள் வீட்டுக்கும் குளத்துக்கும் இடையே இருந்த இடத்தில் ஒரு கிணறு இருந்தது. அந்தத் தெரு வாசிகளுக்கு பொதுவான கிணறு அது. குளத்தில் நீர் வற்றி விட்டால், கிணற்றிலும் தண்ணீர் வற்றி விடும். போரிங் பம்பிலும் தண்ணீர் வராது தான். அதுவும் வற்றி விடும். ஆனால் மற்ற நாட்களில் குடிக்கவும் சமையலுக்கும் மாத்திரம் கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்து வந்தால் போதும். அதையும் பாட்டி தான் செய்வாள். அவளால் முடியாது. இருப்பினும் தன் ஆசாரத்தை விட்டுக் கொடுக்க இஷ்டம் இல்லை அவளுக்கு. கடும் கோடை காலங்களில் கிணற்றில் நீர் வெகு ஆழத்தில் ஒரு சிறு குட்டையாக சிறுத்து விடும். குடத்தை இறக்கி நீர் மொள்ள முடியாது. ஒரு செம்பைத் தான் தாம்பு கயிற்றில் இறக்கி நீர் மொள்ள வேண்டியிருக்கும். சில நாட்கள் காலை நாலு மணிக்கு எல்லோருக்கும் முன் எழுந்து கிணற்றில் ஊறியிருக்கும் நீரை எடுத்து வந்துவிடுவோம். ஒரு குடம் நிரம்பும். வீட்டில் இருக்கும் செம்பு, டபரா, டம்ளர் எல்லாத்திலேயும் நீர் நிரப்புவோம். நாங்கள் குளிக்க பேட்டைக் கிணறுக்கோ அல்லது சத்திரத்துக் கிணறு ஒன்று ஒரு ·பர்லாங்கு தூரத்தில் இருக்கும். அதற்கோ போவோம். நாங்கள் காலை நாலு மணிக்கே எழுந்து கிணற்றில் ஊறியிருந்த தண்ணீரை எடுத்து வந்துவிட்டோம் என்று பார்த்த மற்றவர்கள், மறு நாள் காலை மூன்றரை மணிக்கு எங்களுக்கு முன் எழுந்து கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கப் போய்விடுவார்கள். எங்களுக்குத் தண்ணீர் இராது. மாமா, நான், சின்ன மாமா எல்லோரும் ஆளுக்கு ஒரு குடத்தை எடுத்துக்கொண்டு சத்திரத்துக் கிணற்றுக்கு ஓடுவோம். அந்தக் கஷ்டத்தில் எல்லாம் பாட்டி ஒரு தடவை கூட தன் சுவாமிமலை நாட்களைச் சொல்லி இப்போதைய வாழ்க்கையைப் பழித்தது கிடையாது. தஞ்சை ஜில்லாவில் ஆற்றில் நீர் வந்து விட்டால், எந்த வீட்டுக் கிணற்றிலும் தண்ணீர் மட்டம் மேலெழுந்து விடும். ஐந்தடி அல்லது ஆறடி ஆழத்துக்கு மேல் தாம்புக் கயிறு கிணற்றுக்குள் இறங்க வேண்டியிராது. ‘கைக்கு எட்டறாப்பலேன்னா இருக்கு” என்று சொல்லி சந்தோஷப்படுவார்கள். அதெல்லாம் இப்போது முற்றாக மாறிவிட்டது. தஞ்சை ஜில்லா உடையாளூரும் நிலக்கோட்டை ஆகிவிட்டது.

புதிதாகக் குடி மாறிய வீட்டில் மேலே இருந்த மொட்டை மாடி எங்களுக்குப் பிரியமான இடம்.(அது ஒன்றும் தனியாகக் கட்டப்பட்ட வீடு இல்லை. ஒரே வீட்டின் குறுக்கே தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு இரண்டு வீடுகளாக ஆக்கப்பட்டிருந்தது). அந்த மொட்டை மாடி இப்போது எங்களுக்கே யானது. அந்த மொட்டை மாடியின் கூரை வேய்ந்திருந்த பாதி எங்களுக்கு அவ்வப்போது விளையாட்டிடமாகியது. அதில் என்னென்னவோ பழைய சாமான்கள் எல்லாம் ஒர் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அது எங்களது இல்லை. முத்துசாமி ஐயர் காலி செய்யும் போது ‘இதெல்லாம் என்னத்துக்கு” என்று விட்டு விட்டுச் சென்றவை. திறந்து கிடக்கும் மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் நாலா பக்கமும் விரிந்திருந்த நிலக்கோட்டையின் அந்தப் பகுதியைக் காணலாம். நிலக்கோட்டைக்கு பெயர் தந்த இடிந்த சுற்றுச் சுவர் கொண்ட கோட்டை அதன் நடுவில் தெரியும் உயர்ந்த ஜமீந்தார் மாளிகை. இன்னொரு பக்கம் பிள்ளையார் கோவில். அதை ஒட்டிய பேட்டை அதன் சுற்றுச் சுவர். இன்னொரு பக்கம் குளம். பெரியகுளம்- மதுரை ரோடு. அணைப்பட்டி ரோடில் இருக்கும் சனிக்கிழமைச் சந்தை. பின் பஸ் ஸ்டாண்ட். டிவிஎஸ் பஸ் நிறுத்தப்பட்டிருக்கும் கொட்டகையை மறைத்து நிற்கும் கொடைக்கானல் மோட்டர் யூனியன் பஸ் ஒன்றின் முன் நின்று ஒரு கம்பியை நுழைத்து அதை பலமாகச் சுற்றினால்தான் என்சின் ஸ்டார்ட் ஆகும். கரி வண்டி தான் அந்நாட்களில். பெட்ரோல் கிடைப்பது அரிது. இதெல்லாம் மாடியிலிருந்து காணும் காட்சிகள். மாடியிலிருந்து கீழே இறங்கினால், மாமி கேட்பாள்: “மதுரை வண்டி கிளம்பிடுத்தாடா,” என்று. மாடியிலிருந்தே பெரிய குளம், மதுரை போகும் எந்த வண்டி தயாராக இருக்கிறது, எது போய் விட்டது, மதுரை வண்டியானால், அது சோழவந்தான் போய் போகும் வண்டியா?, இல்லை, கொடைரோடு போய் போகும் வண்டியா? போன்ற உபரி தகவல்கள் எல்லாம் மாமிக்கு வேணும். மாமி மதுரை போகிறாள் என்றால், வண்டி வந்துவிட்டதா, கிளம்பப் போகிறா என்ற விஷயங்களை மாமி எங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள் என்றால் அது எனக்குப் பெருமையாக இருக்கும்.

அந்த மாடி கீற்றுக் கொட்டகையடியில் எனக்கு இன்னும் சில அதிசயங்கள் காத்திருந்தன. அது பின்னர், முத்துசாமி ஐயர் நிலக்கோட்டை விட்டுப் போய் ஓரிரண்டு வருஷங்கள் ஆனபிறகு தான் தெரிந்தது. ஒரு நாள் யதேச்சையாக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தவற்றைக் குடைந்த போது சில புத்தகங்கள் கிடைத்தன. அவற்றைப் புரட்டியதில் அவற்றை நானும் படிக்கலாம் போலவும் தோன்றியது. எனக்கேற்ப எளிமையாக, சுவாரஸ்யமாக இருந்த புத்தகங்கள் அவை. அப்போது எனக்கு பதினொன்று அல்லது பன்னிரண்டு வயது இருக்கும். ஒன்று வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம். இரண்டாவது ஆர். கே.நாராயணனின் சுவாமியும் சினேகிதர்களும். அப்போது அவை எனக்கு சுவாரஸ்யமான, வேடிக்கையான கதைகள். பின்னால் தான் இவை பெரிய தலைகள் எழுதியவை என்று தெரிந்து கொண்டேன். பிரதாப முதலியார் சரித்திரத்தில் சிரிப்பூட்டும் நிறைய உப கதைகள் இருந்தன. ஒன்று, “ஏண்டா பாவம் அந்த வாயில்லா ஜீவனை இப்படி அடிக்கிறாய்,? என்று வழியில் போகிறவர் கேட்க, “அது என் மாடோ, கழுதையோ என்னது, நான் என்னவெல்லாம் செய்வேன். நீ யார் கேட்பதற்கு?” என்று பதில் வரும். கேட்டவருக்கு கோபம் வரும். மாட்டை அடித்தவனை இவர் ஒரு கழியால் நாலு சாத்து சாத்துவார். ‘”இது என் கழி. என் கை. இதை நான் என்ன வேணுமானாலும் செய்வேன். நீ யார் கேட்பதற்கு?” என்று சொல்வார். சுவாமியும் சினேகிதர்களும் புத்தகத்தில், சுவாமிநாதன் தன் சினேகிதனை விளையாடக் கூப்பிடுவதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் போய் கூப்பிடுவான். இன்ஸ்பெக்டர் பையனுக்கு உடனே ஓடி சுவாமிநாதனோடு விளையாடப் போகணும் என்று ஆசை தான். ஆனாலும் தன் அப்பா தன் வீட்டுக்கு வருகிறவர்களைக் காக்க வைப்பது போல, தானும் செய்து பெரிய மனுஷனாக வேண்டும் என்று ஒரு ஆசை. கதவுக்கு பின்னால் நின்றுகொண்டுகொள்வான். அப்படிக் காக்கவைக்க அவனுக்கே பொறுமை யிராது. நகத்தைக் கடித்துக் கொண்டு நிற்பான். அப்பா மாதிரி செய்யவேண்டுமே.

என் சின்ன மாமா, அவர் பெயரும் சுவாமிநாதன் தான். எங்கிருந்தோ கல்கி, ஆனந்த விகடன் எல்லாம் கொண்டு வருவார். வீட்டில் அதுவெல்லாம் வாங்குவது கிடையாது. கட்டி வராது. படிப்பது நானும் சின்ன மாமாவும் தான். இடையில் அம்பி வாத்தியார் வந்து சின்ன மாமாவிடம் என்ன பத்திரிகை இருக்கு? என்று கேட்டு அவரும் வாங்கிப் போவார். அவரும் தான் வாங்கி வந்ததை சின்ன மாமாவுக்குக் கொடுப்பார். நான் இப்படி வருவதையெல்லாம் படித்து விடுவேன். அப்போது கல்கியில் பார்த்திபன் கனவு தொடராக வந்து கொண்டிருந்தது. சின்ன மாமாவும் அம்பி வாத்தியாரும் ரொம்ப சுவாரஸ்யமாக கல்கி கதையைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள். நான் அவர்களோடு சேரமுடியாது. சின்ன பையன். ஆனந்த விகடனில் எஸ்.வி.வி. எழுதிக்கொண்டிருந்தார். ‘குருவிக்காரிச்சி’ என்றோ என்னவோ ஒரு கதை இருந்தது. தலைப்பு தான் நினைவில் இருக்கிறது. கதை நினைவில் இருப்பது ஒரு வயதான தம்பதிகள் சென்னை கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர். இருவருக்கிடையே ஒரு ஒட்டுதல். அந்த வயதில் ஒட்டுதலுக்கு என்ன காரணம் என்று கேட்டுக்கொண்டு இரண்டு பேரும் இவ்வளவு வருஷமாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்களே, பழகியிருக்கிறார்களே, அது போதாதா? என்றோ என்னவோ எஸ்.வி.வி இடையில் சொல்லிக்கொண்டிருப்பார். இப்படி நினைவுகள். இதெல்லாம் சரிதானா என்று சரிபார்க்கவோ திரும்ப படிக்கவோ நேர்ந்ததில்லை.

ஆனந்த விகடன் தீபாவளி மலர் ஒன்றில் மாலியின் கேலிச்சித்திரம் பக்கம் முழுதையும் அடைத்துக்கொண்டு பெரிதாக இருந்தது நினைவில் இருக்கிறது. ஒரு பெஞ்சில் பெரியவர் உட்கார்ந்து கொண்டு வெற்றிலை போட்டுக் கொண்டு இருப்பார். பக்கத்தில் அவர் மனைவி நின்றுகொண்டிருப்பாள். ஒரு பிச்சைக்காரன் அவர் முன்னால் பாடுவான்: “ஈசனை சிவகாமி நேசனை, நினைந்து கொல்லுவாய் மனமே” என்று பாடுவான் என்று நினைக்கிறேன். அதற்கு பெஞ்சில் உட்கார்ந்திருப்பவர் அட்டகாசமாகச் சிரிப்பார். “அப்பா நீ நல்லாச் சொன்னே. முதல்லே அவனை கொன்னு போட்டியானா, அப்புறம் ஒரு வம்பிருக்காது பாத்துக்க” என்று சொல்லிக் கடகடவென்று சிரிப்பதாக இருக்கும் அந்த சித்திரம்.

நிலக்கோட்டையில் ஓடையைத் தாண்டினால் ஒரு பார்க் இருக்கும். அதில் ஒரு ரேடியோவும் ஒலிபெருக்கியும் இருந்தது. சாயந்திரம் அங்கு போனால் திருச்சி வானொலியிருந்து வருவதையெல்லாம் கேட்கலாம். மாலை நேரம் மாத்திரம் தான். அத்தோடு அடுத்து அதை ஒட்டியிருந்த ஒரு வட்ட அறையில் பத்திரிகைகள் ஒரு மேஜையில் பரப்பியிருக்கும். என்ன பத்திரிகைகள் வரும் என்று எனக்கு நினைவில் இல்லை. அப்போதெல்லாம் தினசரி செய்திப் பத்திரிகைகள் படிக்கவேண்டுமென்று எனக்குத் தோன்றியதில்லை, ஆனால் வேறு என்னென்னவோ பத்திரிகைகள் எல்லாம் இருக்கும் அவற்றில் நிறைய படங்கள் இருக்கும். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலம். அந்த பத்திரிகைகளில் ஒரே போட்டோக்களாக இருக்கும். சிப்பாய்கள், டாங்கிகள், ஏரோப்ளேன்கள் என்று. படங்களைப் பார்ப்பேன். வேறு ஒன்றும் படிக்க எனக்கு சுவாரஸ்யமாக எதுவும் இராது. ரேடியோவில் பாட்டு கேட்கலாம். ஒரு சமயம் தியாக ராஜ பாகவதரின் ரேடியோ நாடகம் ஒன்று ஒலிபரப்பாகியது. சில சமயங்களில் ஒரு குள்ள ஜப்பானியனின் சித்திரம் வரைந்திருந்த போஸ்டர் ஒட்டியிருக்கும். “இவன் நம் எதிரி. இவனிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்றோ என்னவோ தமிழில் எழுதியிருக்கும். அவன் நிலக்கோட்டைக்கு வருவானா என்று யோசனை தோன்றும் எனக்கு. “எங்கேடா சுத்திட்டு வரே” என்று பாட்டி சில சமயம் கோவித்துக்கொள்வாள். “பார்க்குக்கு போய் ரேடியோ கேட்டுட்டு படிச்சுட்டு வரேன்” என்பேன். பாட்டி சமாதானம் அடைந்து விடுவாள்.

பாட்டிக்கு நாங்கள் எல்லாம் நன்றாகப் படிக்கவேண்டும். பெரிய சர்க்கார் வேலைக்குப் போகவேண்டும் என்று ஆசை. ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் வாத்தியாராகப் போய்விடக்கூடாது என்பதில் அவள் வெகு தீர்மானமாக இருந்தாள். அதை அடிக்கடி சொல்லுவாள். பாட்டி படித்ததில்லை. பள்ளிக்குப் போனதே இல்லை. தமிழ் கூடப் படிக்கத் தெரியாது. பாட்டி ஆசைப் பட்டாளே தவிர அது என்னவோ நடப்பதாக இல்லை. சின்ன மாமா வத்தலக்குண்டு போய் அங்கு தான் ஒரு ஹைஸ்கூலில் படித்து வந்தார். நிலக்கோட்டையில் எட்டாவது வரை தான் படிக்கமுடியும். மேலே படிக்க கிட்ட இருந்த ஹைஸ்கூல் ஆறு மைல் தூரத்திலிருந்த வத்தலக்குண்டு தான். ஆனால் மாமா ஸ்கூல் ·பைனலில் பாஸாகவில்லை. மறு படியும் படித்து பரிட்சை எழுத வேண்டும். எல்லாரும் சின்ன பையன்களாக இருக்கிறார்கள். நான் வேறு எங்காவது தான் படிப்பேன். வத்தலக்குண்டு க்குப் போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். வீட்டில் ஒரே ரகளை. மாமாவால் அம்மாதிரியெல்லாம் செலவு செய்ய முடியாது. இருந்தாலும், கடைசியில் மதுரையில் சின்ன மாமாவையும் என்னையும் சேதுபதி ஹைஸ்கூலில் சேர்த்தார்கள். நான் ஒன்பதாவது வகுப்பில். சின்ன மாமா பதினொன்றாவது வகுப்பில். சிம்மக்கல்லில் வைகை ஆற்றுக்குப் போகும் வழியில் ஒரு சின்ன அறை வாடகைக்கு எடுத்து எங்களுக்குப் பாட்டி சமைத்துப் போட நாங்கள் ஒரு வருஷம் மதுரையில் படித்தோம்.

இடையில் ஓரிரு மாதங்கள் தான். கோடை விடுமுறையில் என்று நினைக்கிறேன். சின்ன மாமாவுக்கு ஒரு சர்க்கார் உத்தியோகம் கிடைத்தது. நிலக்கோட்டையில் இருந்த ஒரு அக்ரிகல்சர் இன்ஸ்பெக்டர் ஆபீஸில் அட்டெண்டர் வேலை. அது என்ன வேலை என்று இன்னமும் எனக்குப் புரிந்ததில்லை. சின்ன மாமாவுக்கு சர்க்கார் வேலை கிடைத்ததில் பாட்டிக்கு பரம சந்தோஷம். வேலைக்குச் சேர்ந்த அன்றோ அல்லது மறுநாளோ, தன் பிள்ளை சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதைப் பார்க்க வேண்டும் என்று பாட்டிக்கு ஆசை. ஆனால் அப்படியெல்லாம் பாட்டி ஆபீஸ¤க்கெல்லாம் போக முடியுமா என்ன? அதற்கு அடுத்த உபாயம், என்னைக் கூப்பிட்டு, “உனக்கு ஆபீஸ் தெரியுமோல்யோடா. போய் சாமா என்ன பண்றான்னு பாத்துட்டு வாடா,” என்று சொன்னாள் பாட்டி. நானும் போனேன். ஆபீசுக்குள் எல்லாம் நுழைய முடியுமா என்ன? ரோடில் நின்று கொண்டே பார்த்தேன். வாசலைப் பார்த்த முன் அறையில் ஜன்னல் வழியாக சின்ன மாமா உட்கார்ந்திருந்தது தெரிந்தது. ஓடிப் போய் பாட்டியிடம் சொன்னேன். ‘சரிடா என்னடா பண்றான்னு பாக்கலையா? என்று கேட்டாள் பாட்டி. “அதெப்படிம்மா தெரியும்? வாசல்லே பாத்தேன். வேலை பண்ணீண்டு இருக்கா மாமா? என்றேன். பாட்டிக்கு திருப்தியாயில்லை. “போடா, ஒரு காரியத்துக்கு துப்பில்லை உனக்கு?” என்று சலித்துக் கொண்டாள்.

எனக்கு துப்பில்லை என்று பாட்டி சலித்துக் கொண்ட இன்னொரு சம்பவமும் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. மாமாவுக்கு ஒரு தபால் கார்டு வந்தது ஒரு நாள். மாமா வீட்டில் இல்லை. பாட்டிக்கு தெரிந்து கொள்ள வேண்டுமென்று பல விஷயங்கள் இருந்தன. “கார்டிலே என்ன எழுதியிருக்கு?” என்று கேட்டாள். படித்துச் சொன்னேன். “இங்கிலீஷ்லே எழுதியிருந்தா படிக்கத் தெரியுமாடா? என்று கேட்டாள். “‘ஊம் படிப்பேனே, இதிலேயே அட்ரஸ் இங்கிலீஷிலே தானே எழுதியிருக்கு,” என்றேன். ‘அப்படியா’, என்று பாட்டிக்கு சந்தோஷம். “அப்போ படிடா. பாக்கலாம்” என்றாள் நான் படித்தேன். “எஸ். ஆர். சுப்பிரமணிய அய்யர், ஹெட் மாஸ்டர், சௌராஷ்டிரா ஹையர் எலிமெண்டரி ஸ்கூல், நிலக்கோட்டை” இங்கிலீஷ்லே படிடான்ன, தமிழ்லேன்னாடா படிக்கறே” என்று பாட்டி கோபித்துக் கொண்டாள். பாட்டி ஹெட் மாஸ்டர், ஹையர் எலிமெண்டரி ஸ்கூல்” என்றெல்லாம் தான் எல்லோரும் சொல்லக் கேட்டு வந்ததால் அதெல்லாம் தமிழ் தான் என்று நினைத்துக் கொண்டாள். வேறு எவ்விதமாகவும் யாரும் சொல்லி அவள் கேட்டதில்லை.

வெங்கட் சாமிநாதன்/24.10.07


vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்