நான் கண்ட தன்வந்திரி

This entry is part [part not set] of 39 in the series 20080612_Issue

வெங்கட் சாமிநாதன்


சிறு வயதில் ஏன் நோய்கள் இந்த பாடு படுத்துகின்றனவோ தெரிவதில்லை. அப்படி ஏதும் எல்லா குழந்தைகளையுமே நோய் வருத்துவதாகச் சொல்ல முடியாது. என்னை பால்யத்தில் மிகவும் வருத்தியிருக்கிறது. என்னை வருத்தியது ஒரு புறம் இருக்கட்டும். என்னை விட, ஏற்கனவே சொற்ப வருவாயில் தான் தாங்கும் சக்திக்கு மீறிய பெரிய குடும்பத்தைக் காப்பாற்றும் சுமை அழுத்திக்கொண்டிருக்கும் மாமாவை, என் நோய் அதிகமாகவே வருத்தியது என்று சொல்லவேண்டும். அப்படித்தான் இப்போது அது பற்றி நினைக்கும்போது தோன்றுகிறது. உடம்பு பூராவும் சிரங்கு கொப்பளித்திருக்க என்னைத் தன் இரு கைகளிலும் ஏந்தியவாறு ஆஸ்பத்திரிக்கு மாமா எடுத்துச் செல்லும் காட்சி இப்போதும் அழியாமல் திரையோடுகிறது. அதெல்லாம் பத்து பதினோரு வயது வரையில் தான். அதன் பிறகு வெகு காலத்திற்கு அப்படியான அவஸ்தை எனக்கு ஏதும் ஏற்பட்டதில்லை. அதே அச்சில் தான் என் பையன் கணேசனும் வளர்வதாக எனக்கு ஒவ்வொரு சமயம் தோன்றும். அவனுக்கு அப்போது வயது பத்தோ பதினொன்றோ இருக்கும். மஞ்சள் காமாலை வந்து விட்டது. நிறைய மாதுளம் சாரும் இளநீரும் தான் சாப்பிட்டான். எண்ணெய்ப் பதார்த்தங்களை அறவே ஒதுக்கவேண்டும். அதில் எங்களுக்கு சிரமம் இருக்கவில்லை. சிறுவயதிலிருந்தே அவனுக்கு மனத் திடம் அதிகம். நான் பார்த்து நம்பமுடியாது ஆச்சரியப்படும் அளவுக்கு அதிகம். ஒன்று வேண்டாம் என்றால் வேண்டாம் தான். அவனே ஒதுக்கி விடுவான். மஞ்சள் காமாலையிலிருந்து மீண்டு வந்துவிட்டான். ஆனால் அதற்கு அடுத்து வெகு சீக்கிரமாகவே இன்னோரு பெயர் தெரியாத, என்னவென்று புரியாத ஒரு நோய் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டது.

ஒரு நாள் மேல் தளத்தில் இருந்த வீட்டிற்குச் சென்ற கணேசன் திடீரென்று மூர்ச்சியாகி விழுந்து விட்டான். அவனை அழைக்கச் சென்ற நான், அவன் என் பின்னால் வர வாசல் முன் கதவுத் தாட்பாளைத் திறந்து கொண்டிருக்கும் போது மடேரென்று சப்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தால், கணேசன் தரையில் விழுந்து கிடந்தான். என்னடா இது, கால் இடறி அல்லது தரை வழுக்கி விழுந்து விட்டானா? என்ன என்று குனிந்து அவனைத் தட்டி, உலுக்கி, அசைத்துப் பார்த்தால் அவன் கண்மூடி அசைவற்று விழுந்து கிடக்கிறான். என்ன ஏது என்று அக்கம் பக்கத்தவர்கள் குரல் கேட்டு விசாரித்துக் கொண்டிருக்க, அவனை அப்படியே தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போவதா, இல்லை யாரும் டாக்டரைக் கூப்பிடுவதா என்று கலவரப்பட்டுக்கொண்டிருந்த நான்கு ஐந்து நிமிடங்களில் அவன் ஏதோ தூக்கம் கலைந்து எழுந்தவன் போல எழுந்து நின்றான். “ஏன் இந்தக் கூட்டம், இது என்ன ரகளை?” என்று விசாரிப்பது போல விழித்துப் பார்த்தான். ஒன்றுமே நடக்காதது போல அவன் படியிறங்க நானும் அவனைத் தொடர்ந்து போனேன் கீழ்த் தளத்தில் இருந்த என் வீட்டுக்கு.

அன்று தொடங்கியது பின் அடிக்கடி நிகழ்வதாக ஆகியது. அன்று சாயந்திரமோ அல்லது அடுத்த நாளோ என்னவோ, அவனுடைய பள்ளிக்கூட தோழன் நிலேஷ் வீட்டுக்குச் சென்றிருந்தான். நிலேஷ் வீடு எங்கள் வீட்டுக்குப் பின்னால் இரண்டு மூன்று வரிசை தள்ளி இருந்தது. நிலேஷின் அம்மா அப்பா எல்லோருமே எங்களுக்கு மிக பழக்கமானவர்கள். அப்பா ராஜ்வாடி எனக்கு நண்பர்கள் அதிகம் இருந்த Collected works of Mahatma Gandhi அலுவலகத்தில் உதவி ஆசிரியராக இருந்தார். அங்கிருந்து நிலேஷின் தம்பி ஒடி வந்து, “கணேஷ் மயக்கமாக விழுந்து விட்டான்” என்று சொன்னான். நாங்கள் அவனோடு நிலேஷ் வீட்டுக்கு விரைந்து செல்லும் வழியிலேயே நிலேஷின் அம்மாவும் கணேஷ¤ம் எதிரே வந்து கொண்டிருந்தார்கள். “உடனே சில நிமிஷங்களில் மூர்ச்சை தெளிந்து விட்டது” என்று பரபரப்பும் சந்தோஷமும் முகத்தில் தெறிக்க நிலேஷின் அம்மா சொன்னாள். இந்த இரண்டாவது நிகழ்வு எங்களுக்கு எச்சரிக்கையாயிற்று. எப்போது அப்படி மறுபடியும் மூர்ச்சையற்று விழுவான் என்று சொல்ல முடியாது. அதற்கான எந்த அடையாளமோ எச்சரிக்கையோ இன்றி அது நிகழ்ந்தது. வீட்டில் அவனைத் தனியாக இருக்க விடுவதில்லை. குளிக்க, காலைக் கடன் கழிக்கச் சென்றால் கூட, “கதவை சாத்தியே வை, உள்தாட்பாளைப் போடாதே” என்று சொல்லி வெளியே அவன் வரும் வரை காத்திருப்போம். இரவு நானும் என் மனைவியும் கணேஷ் படுத்திருக்க நாங்கள் அவன் பக்கத்தில் உட்கார்ந்து, அவள் பாதி நான் பாதி நேரம் என்று முறை வைத்து விழித்திருப்போம். தெருவில் போகும் போது, பள்ளிக்குப் போகும் பஸ்ஸில் ஏறும்போது, இறங்கும் போது அவன் நினைவிழந்து விழுந்து விடலாம். அப்படி ஒரு நிச்சயமற்ற நிலையில் அவனை நாங்கள் எங்கும் தனியாக போக, இருக்க விடுவதில்லை. பள்ளிக்கூட வாசல் வரைக்கும் உடன் போவோம். பள்ளி முடியும் போது ஒரு அரை மணி நேரம் முன்னதாகவே நான் அலுவலகத்திலிருந்து கிளம்பி பள்ளிக்குச் சென்று அவனை அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் விட்டு விட்டுப் பின் அலுவலகம் செல்வேன். என் அலுவலகத்தில் எல்லோருக்கும் இது தெரியும். பள்ளியும், அலுவலகமும் வீடும் எல்லாம் ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் வட்டத் தொலைவுக்குள் இருந்ததால் அவன் செல்லுமிடங்களுக் குத் துணையாக இருப்பது சாத்தியமாயிற்று.

எங்கள் குடியிருப்புப் பகுதி, ராமக்ரிஷ்ணபுரம் செக்டார்-3-க்கான CGHS டிஸ்பென்சரியிலிருந்து ஆரம்பித்தது அவனைப் படுத்துவது என்ன, அதற்கான சிகித்சை என்ன என்று அறியும் தேட்டை. எங்கள் பகுதிக்கு என இருக்கும் பெரிய மருத்துவ மனையான ஸ்·ப்தர்ஜங் ஹாஸ்பிடலுக்கு இட்டுச் சென்றது அந்த பயணத்தின் அடுத்த கட்டம். எனக்கு அந்த மருத்துவ மனையில் நம்பிக்கை இல்லை. மூச்சுமுட்டுகிறது என்று சொல்லி வார்டு ஒன்றில் கிடத்தப்பட்ட என்னைப் பரிசோதித்த முதல் டாக்டர், ஆபரேஷன் செய்து பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். இதில் ஏதோ சரியில்லை என்று சந்தேகம் தட்டவே, தனக்குத் தெரிந்த ஒரு டாக்டரை வந்து பரிசோதிக்க அழைத்து வந்தார் என் எதிர்வீட்டு நண்பர். அந்த டாக்டர் பார்த்து, இது ப்ராங்கோ நிமோனியா என்று சற்று நேரம் பரிசோதித்த மாத்திரத்தில் முடிவு செய்யவே முதல் டாக்டரின் ஆபரேஷன் கத்தியிலிருந்து அப்போது நான் தப்பினேன். அந்த டாக்டரும் ச·ப்தர்ஜங்கைச் சேர்ந்தவர் தான். ஆக, யார் கையில் சிக்குகிறோமோ அதைப் பொருத்து இருக்கிறது நம் விதி. அல்லது நம் விதிக்கேற்ப நாம் ஒருவர் கையில் சிக்குவோம் என்றும் சொல்லலாம். என் அவ நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், அரசு விதிகளின் படி எங்கு போகப் பணிக்கப்படுகிறோமோ அங்கு தானே போக வேண்டும்? நம் இஷ்டத்திற்கு மருத்துவ மனையை தேர்ந்து கொள்ள முடியாது. அது விஐபி களுக்கு மாத்திரமே தரப்பட்டுள்ள உரிமை. ச·ப்தர்ஜங் ஹாஸ்பிடல் சிகித்சையில் ஏதும் பலன் இருக்கவில்லை. அடுத்து என் அலுவலக நண்பர் தனக்குத் தெரிந்த ஆல் இண்டியா மெடிகல் இன்ஸ்டிட்யூட் டாக்டரிடம் சொல்லி தகுந்த டாக்டரிடம் அழைத்துச் செல்வதாகச் சொல்லி என்னையும் கணேசனையும் அழைத்துக் கொண்டு டாக்டராக இருக்கும் தன் நண்பரிடம் அழைத்துச் சென்றான். அவர் இன்னொரு டாக்டருக்கு ஒரு கடிதம் கொடுத்தார். அந்த டாக்டர் வெகு தீவிர அக்கறையோடு ஏதேதோ புதிய சோதனைகள் செய்தார். அதை நான் இங்கு விவரிப்பது புரியாது குழப்புவதாகவே இருக்கும். சோதனைகளுக்குப் பிறகு ஏதோ மருந்து கொடுத்து பின் மறுபடியும் வரச் சொன்னார். போனோம். ஏதும் பயனிருக்கவில்லை. இடையில் எப்போதும் ஆபத் பாந்தவனாக நான் தவிக்கும் வேளைகளில் உதவும் என் டைரக்டர் தன் உறவினர் டாக்டராக இருக்கும் பாரா ஹிந்து ராவ் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார், அந்த 25-30 கிலோ மீட்டர் நீண்ட பயணம் மேற்கொள்ள வசதியாக காரையும் கொடுத்து உடன் உதவிக்கு ஒரு ஆளையும் அனுப்பி. இப்படி தகுந்த சிபாரிசோடு சென்றால் நம்மை நன்றாகவே சிரத்தையோடும் கவனித்துக் கொள்கிறார்கள் தான். அந்த டாக்டர் அனுபவம் மிகுந்த மூத்த வயதினர். அன்போடு விசாரித்து கணேசனை பரிசோதிக்க உரிய இடத்திற்கு அனுப்பி, திரும்பும் போது என்னென்னவோ மருந்துகள் நிறைய கொடுத்து அனுப்பி வைத்தார். நாலைந்து நாட்களுக்குப் பிறகு தெரிய வந்தது, அந்த புதிய சிரத்தையிலும் மருந்துகளிலும் எந்த பயனும் இல்லையென.

அப்போது கணேசன் வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்டிருந்தான். வீட்டுக்கே வந்து வாரம் இரண்டு நாள் என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த வானொலி நிலைய வித்வான் ஒருவர் வருவது திடீரென நின்று விடவே என்னவென்று விசாரிக்கப் போக அவர் இறந்து விட்டார் என்று தெரிந்தது. பின் கே.எஸ் சீனிவாசன் (கணையாழியில் காவ்ய ராமாயணம் எழுதியவர்) ஒரு அம்மையாரை சிபாரிசு செய்தார். அந்த அம்மையார் என் வீட்டிலிருந்து சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தூரத்தில் சர்வோதயா என்க்லேவ் என்ற குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர். அவரிடம் நான் கணேசனை அழைத்துச் செல்வேன். பள்ளிக்கூடம் செல்ல துணைபோவது போல வாரம் இரண்டு நாளோ மூன்று நாளோ வயலின் வகுப்புகளுக்கும் அவனை ஒரு ஆட்டோவில் அழைத்துச் செல்வேன். பின் ஆட்டோவில் திரும்புவேன். அப்படி ஒரு நாள் வயலின் வகுப்பு முடிந்ததும் வீட்டுக்குக் கிளம்ப எழுந்து நின்றவன் மடேரென்று தரையில் சாய்ந்தான். அந்த அம்மையார் பயந்து விட்டார். நான் உடன் வருவதற்கான காரணத்தை முன்னாலேயே சொல்லியிருந்தாலும், அதை நேரிலேயே பார்க்க நேரிட்டதும் அவர் பீதியடைந்து விட்டார். அவனிடம் மிகுந்த வாத்ஸல்யத்தோடு பழகியவர். ‘பயப்பட வேண்டாம் கொஞ்ச நேரத்தில் ஒன்றுமே நடக்காத்தது போல எழுந்து விடுவான். எந்த ஹாஸ்பிடலும் எந்த டாக்டரும் இதன் காரணமென்ன, இதற்கு சரியான மருந்து என்ன என்று சொல்ல முடியவில்லை,’ என்று அவருக்கு அன்று விவரமாகச் சொன்னேன். நான் சொல்வதைக் கேட்டு கலவரமடைந்த அந்த அம்மையார், “இதோ எதிர்த்தாற்போல் ஒரு ஆயுர்வேத மருத்துவர் இருக்கிறார். ரொம்ப திறமை சாலி என்று பெயர் வாங்கியவர். அவரிடம் கொண்டு காண்பியுங்கள்” என்று அந்த டாக்டருக்கு டெலிபோன் செய்து எங்களையும் அனுப்பி வைத்தார். அந்த டாக்டரின் வீடு அருகிலேயே ஒரு நூறு அடி தூரத்தில் தான் இருந்தது. கணேசனை படுக்க வைத்து என்னென்னவோ பரிசோனையெல்லாம் செய்தார் அவர். கடைசியில் அவன் வயிற்றை பல இடங்களிலும் அழுத்திப் பார்த்தார். பிறகு ஏதோ மருந்துப் பொட்டலங்களைக் கொடுத்து “இரவு இதைக் கொடுங்கள். அவன் மறுபடியும் மூர்ச்சித்து விழுந்தானானால் இந்த மருந்தைக் கொடுங்கள்” என்று சொல்லி இரண்டு மருந்துகளைக் கொடுத்தார். சரி இதையும் தான் பார்ப்போமே என்று வீடு திரும்பினேன்.

அன்று இரவு கணேஷ¤க்கு அந்த மருந்தைக் கொடுத்தோம். சில மணிகள் கழித்து மறுபடியும் மூர்ச்சையாகி விழுந்தான். அந்த ஆயுவேத டாக்டர் கொடுத்த மருந்தை எப்படிக்கொடுப்பது மூர்ச்சித்து நினைவிழந்து கிடப்பவனிடம்? பின் வரிசை வீடு ஒன்றில் இருந்த எங்கள் அலுவலக நிர்வாக அதிகாரியின் வீட்டிற்கு ஓடி அவர் வீட்டுக் கதவைத் தட்டினேன். அவர் பாவம் பாதி உறக்கத்தில் இருந்தவர் எழுந்து வந்தார். விஷயத்தைச் சொன்னேன். ஆயுர்வேத மருத்துவருக்கு டெலெ·போன் செய்யவேண்டும் என்று சொன்னேன். நான் அந்த மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தது முழுவதையும் கேட்ட அவர், “என்னோடு வாருங்கள் சக்ஸேனா வீட்டுக்குப் போவோம். அவருடைய மகனை அழைத்துக் காண்பிப்போம்” என்று சொன்னார். எங்கள் அலுவலகத்தின் தலைமையகத்தில் வேலை செய்யும் அதிகாரிசக்ஸேனா. என்னோடு சீன மொழி படித்தவர். அந்த பழக்கம். ஆனால் அவர் மகன் டாக்டர் என்பது எனக்குத் தெரியாது. வீடு பக்கத்தில் தான் இருந்தது. அந்த நடு இரவு வேலையில் அவர் வீட்டுக் கதவைத் தட்டினோம். விஷயத்தைக் கேட்டவர், தன் மகனை எங்களுடன் அனுப்பி வைத்தார். அவர் மகன் வீட்டுக்கு வந்த போது கணேஷ எதுவும் நடக்காதது போன்ற பாவனையில் வீட்டு வாசலில் அம்மாவோடு என் வருகைக்காக காத்திருந்தான். டாக்டர் சக்ஸேனா கணேசனோடும் எங்களோடும் பேசி பிரச்சினை என்னவென்று கேட்டுக்கொண்டு, “சரி, நான் எனக்குத் தெரிந்த ஒரு டாக்டருக்கு கடிதம் கொடுக்கிறேன். நானும் அவருடன் நாளைக் காலை பேசி விடுகிறேன். அவர் இருப்பது குரு நானக் தேவ் ஹாஸ்பிடலில். என் கடிதத்துடன் அவரை நாளைக் காலை போய் பாருங்கள், அந்த டாக்டர் அவர் வழியில் சில சோதனைகள் செய்து பார்ப்பார் என்ன பிரசினை என்று தெரிந்து கொள்ள” என்று சொல்லவே, மறு நாள் காலை டாக்டர் சக்ஸேனாவின் அறிமுகக் கடிதத்துடன் குரு நானக் தேவ் ஹாஸ்பிடலுக்குச் சென்றோம்.

அது பழைய டெல்லிக்குப் போகும் தில்லிகேட் அருகே இன்னும் இரண்டு பெரிய ஹாஸ்பிடல்களை ஒட்டி இருந்தது. லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண், மௌலானா அபுல் கலாம் ஆஜாத் இருவரும் குரு நானக் தேவின் அண்டைவீட்டுக்காரர்கள் ஆகியிருந்தார்கள். இது தான் முதன் முறை குரு நானக் தேவ் ஹாஸ்பிடலுக்குள் நான் நுழைவது. சக்ஸேனா அறிமுகப்படுத்திய டாக்டர் இளைஞர். மிக அன்புடன் அக்கறையுடன் எங்களை விசாரித்தார். பின்னர் கணேசனை உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு காட்டப்பட்ட அக்கறையும் சிரத்தையும் பார்த்த பிறகு சக்ஸேனா ஜூனியரை என் மனதில் நன்றியுடன் நினைத்துக் கொண்டேன். காத்திருந்த எங்களை நோக்கி கணேசனும் சக்ஸேனா ஜூனியரும் வந்தார்கள். கூட இன்னொரு டாக்டரும். அவர்கள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். பின்னர், “ஆமாம், கணேஷ் சாதாரணமாகத் தானே இருக்கிறான்? இதற்குள் பலமுறை மூர்ச்சித்து விழுந்து விட்டான் என்கிறீர்கள். ஆனால் அப்படி மடேரென்று விழுந்தால் தலையில் அடி படாதோ?: அப்படி ஒன்றும் காணோமே” என்று கணேசனின் தலையைச் சுற்றி வருடிப் பார்த்தபடியே கேள்வி வந்தது. “ஆமாம். அது எங்களுக்கும் புரியவில்லை தான். எதிர்பாராது, மூச்சிழந்து மடேரென்று விழுந்து விடுகிறான். சில நிமிடங்களில் நினைவு திரும்பி எழுந்து விடுகிறான். அதைத் தவிர அவனுக்கு ஏதும் நோய் இருப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை. எல்லா சோதனைகளும் செய்து பார்த்து விட்டார்கள்” என்று பதில் சொன்னோம். “சரி நாங்கள் குறிப்பு எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் சீனியரையும் கலந்து ஆலோசித்து உங்களுக்குச் சொல்லி யனுப்புகிறோம். இப்போது நீங்கள் கவலைப்படாது வீட்டுக்குச் செல்லுங்கள்” என்று சொல்லி அவர்கள் இருவரும் மிகுந்த அன்போடு எங்களை வழியனுப்பி வைத்தார்கள்.

வீட்டுக்குத் திரும்பினோம். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. “என்னடா இது கணேஷ்? எந்த டாக்டருக்கும் எந்த ஹாஸ்பிடல் சோதனைக்கும் புரியாத ஒன்னைக் கொண்டு வந்திருக்கிறாயே? அவர்களுக்குத் தெரிஞ்ச தலை வலி, வயிற்று வலி காச்சல் இப்படி மருந்து இருக்கிற வியாதியா இருந்தா சமாளிக்கலாம்பா. இதை எப்படி சமாளிக்கிறது? மனுஷனுக்கு வியாதி வரும்தான். சரி. இப்படி யாருக்குமே தெரியாத வியாதியா இருந்தா என்ன செய்யறது சொல்லு? நீ என்னடான்னா புதுசு புதுசா ஒருத்தருக்குமே புரியாததா கொண்டு வரயே! என்று கொஞ்சம் சலிப்பும் வேடிக்கையுமா சொன்னால் விழுந்து விழுந்து சிரிக்கிறான். அந்த சிரிப்பு என் மனதுக்குக் கொஞ்சம் நிம்மத தருவதாக இருந்தது. இப்படித்தான் கஷ்டமான நேரங்களில் நம்மை சந்தோஷப்படுத்திக்கொள்ளவேண்டும் போலும்.

அலுத்துச் சோர்ந்திருந்த நேரத்தில், “சரி, இவர்கள் எல்லோரையும் பார்த்தாயிற்று, அந்த ஆயுர்வேதியைப் போய் பார்க்கலாமே” என்று தோன்றிற்று. வயலின் வகுப்பிற்குப் பிறகு அங்கு போய்ப் பார்க்கலாம் என்று நினைப்பது சுலபமாகவும் இருந்தது. பக்கத்திலும் இருந்தார் அவர். போனேன். அவர் கையில் ஒரு லிட்டர் பிடிக்கும் பெரிய பாட்டில். எங்களைப் பார்த்ததும் இன்னொரு மடக்கு அந்த பாட்டிலிலிருந்து குடித்துப் பின் அதை பக்கத்திலிருந்த ராக்கில் வைத்தார். ஏதோ நாட்டுச் சரக்கு போல தோன்றியது. “என்ன ஆயிற்று?” என்று கேட்டார். “அன்று இரவு என்ன செய்வதென்று தெரியாது ஒரு டாக்டரைப் பார்த்தோம். அவர் இன்னொரு ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றார். அதிலும் ஒன்றும் பயனில்லை” என்று சொன்னேன். அவர் மறுபடியும் கணேசனை படுக்கச் சொல்லி, வயிற்றை அங்கும் இங்கும் தட்டி, கிள்ளி, பிசைந்து என்னென்னமோ செய்தார். பிறகு அவன் எழுந்து உட்கார்ந்ததும், எங்கள் அருகில் உட்கார்ந்து, ஏதோ பிடிவாதம் பிடிக்கும் அறியாப்பையனுக்கு புத்தி சொல்லும் தோரணையில், “சரி இப்போது என்னிடம் அழைத்து வந்துவிட்டீர்கள் இல்லையா? இனி இதைக் குணப்படுத்துவது என் பொறுப்பு. நீங்கள் இனி வேறு எந்த டாக்டரிடமோ, ஹாஸ்பிடலுக்குமோ போகவேண்டாம். தில்லியில் இருக்கும் எல்லா பெரிய பெரிய ஹாஸ்பிடலுக்கெல்லாம் போய்ப் பார்த்தாயிற்று இல்லையா. அவங்களுக்கெல்லாம் நீங்கள் நிறைய சான்ஸ் கொடுத்து விட்டீர்கள். என்னை நம்பி எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடுங்கள். கொடுப்பீர்களா?” என்றார். எங்களுக்கு என்னவோ போல இருந்தது. “சரி நாங்கள் வேறு எங்கும் போக மாட்டோம்” என்று ஒரு அசட்டுச் சிரிப்புடன் பதில் அளித்தோம். வேறு என்ன சொல்வது ஒரு டாக்டரிடம்? உள்ளே போய் கொஞ்ச நேரத்தில் மருந்து எடுத்துக் கொண்டு வந்தார். “இதோ இதை ஒரு வாரத்திற்கு கொடுங்கள். குழந்தை குணம் அடைவது உங்களுக்குத் தெரியும். உங்களுக்கும் நம்பிக்கை வரும். ஒரு வாரம் கழித்து மறுபடியும் வாருங்கள்” என்று சொன்னார். மருந்துக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கேட்டோம். “நானூறு ரூபாய்” என்றார். எங்களுக்குத் திக்கென்றது. இது வரை அரசின் செலவிலேயே மருந்தும் சிகித்சையும் பெற்று வந்திருக்கிறோம். இந்த நானூறு ரூபாயை அரசாங்கத்திடமிருந்து பெற முடியாது. அது போக இது அதிகமாக வேறு பட்டது. இருப்பினும் உடனே தயக்கமின்றி கொடுப்பது போல கொடுத்து வந்தேன். கொடுப்பதைத் தவிர வேறு வழி?

ஆனால் அந்த நானூறு ரூபாயை ஒன்றுமில்லை என்று மறக்கச் செய்தது அவர் கொடுத்த மருந்து. அவர் சொன்னது போல கணேசஷ் மயக்கமடைவது குறைந்து வந்தது. ஒரு வாரத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை அவரிடம் கணேசனை அழைத்துக் கொண்டு சென்றேன். நான் போனதும் எங்கள் காலடி சத்தம் கேட்டு உள்ளே இருந்தவர் லேசாகக் கதவைத் திறந்து எங்களைப் பார்த்ததும், “உட்காருங்கள். கொஞ்சம் நேரம் ஆகும்” என்று சொல்லிப்பின், கதவைச் சார்த்திக் கொண்டார். நாங்கள் வரவேற்பரையில் காத்திருந்தோம். சார்த்தியிருந்த அடுத்த அறையில் இன்னொரு நோயாளியுடன் டாக்டர் ஏதோ மெல்லிய குரலில் அவ்வப்போது ஏதோ சொல்லிக்கொண்டிருந்தது கேட்டது. அரை மணியோ அல்லது நாற்பது நிமிஷமோ கழிந்திருக்கும். அந்த அறையிலிருந்து கதவைத் திறந்து கொண்டு ஒரு இளம் பெண் வெளியே வந்தாள். இருபது இருபத்தைந்து வயதிருக்கும். எங்களைப் பார்த்துக் கொண்டே வெளியே போய்விட்டாள். சில நிமிடங்கள் கழித்து டாக்டர் வெளியே வந்தார்.

மிகவும் சோர்ந்த முகத்துடன் உட்கார்ந்தவர், கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லும் ஜாடையில் எங்களை நோக்கிக் கையமர்த்தி பக்கத்து ராக்கில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து இரண்டு மடக்கு குடித்துப் பாட்டிலை எடுத்த இடத்தில் திரும்ப வைத்துக் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் என்னை ஒரு புன்னகையுடன் பார்த்து, “என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது. அந்தப் பெண்ணிடம் முன்னாலேயே சொல்லியிருந்தேன் இன்னொரு தடவை இந்த மாதிரி செய்து வந்தாயானால் நான் ஒன்றும் செய்யமாட்டேன். உடனேயே வெளியே துரத்தி விடுவேன் என்று சொல்லியிருக்கிறேன். அப்படி இருந்தும் மறுபடியும் நீங்கதான் காப்பாத்தனும், ஏமாந்துட்டேன் என்கிறாள். கோபம் வருகிறது தான். திட்டினேன். ஆனால் என்ன செய்வது? அண்டி வந்தவளை விரட்ட முடிகிறதா? முன்னாலேயே சொன்னேன். இது தான் கடைசித் தடவை. நினைச்ச போதெல்லாம் கற்பத்தைக் கலைக்கமுடியாது. மறுபடியும் எவன் கிட்டயாவது ஏமாந்து வந்தியானா, உன் உயிருக்கே ஆபத்தாயிடும். நான் ஒண்ணும் செய்ய மாட்டேன் இனி இந்தப்பக்கம் வராதே என்று சொல்லி விட்டேன். ஆனால் அவள் திருந்துவாள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.” பின் மறுபடியும் மௌனம். பின், “சரி இது போகட்டும். உங்க விஷயம் என்ன? எப்படி இருக்கே கணேஷ்? நல்லாயிட்டு வரே இல்லியா? என்று அன்புடன் அவனைப் பார்த்துக் கேட்டார். “குணமாகி வருகிறான். நீங்கள் அவனைப் பாருங்கள். இன்னம் எவ்வளவு நாட்களுக்கு மருந்து சாப்பிடவேண்டும். எப்போது நிறுத்தலாம் என்று சொல்லுங்கள் என்றேன். கணேசனை அவர் மறுபடியும் படுக்க வைத்து அவர் வழக்கப்படி வயிற்றைப் பரிசோதித்துப் பார்த்தார். “இன்னம் ஒரு வாரத்துக்கு மருந்து தருகிறேன். பிறகு பார்க்கலாம்” என்று சொல்லி மருந்து கொடுத்தார்.

அந்த பத்து பதினைந்து நாட்களில் கணேஷ் பூரண குணமாகியிருந்தான். நமக்குத் தேவையாக இருக்கும் போது தானே உதவிக்கு அலைவோம். தேவை இல்லை, எல்லாம் நல்லபடியாக இருந்தால் ஒரு சாவதானமும் அலட்சியமும் வந்துவிடுகிறதல்லவா?. அப்படித் தான் நானும், மருந்து முடிந்ததும் அவரைப் பார்க்கவில்லை. இன்னுமொரு காரணம் வயலின் ஆசிரியை கொஞ்ச நாளாக ஊரில் இல்லை. கச்சேரி வாய்ப்புக்கள் கிடைக்கவே வெளியூர் சென்றிருந்தார். வயலின் வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதனாலும் கொஞசம் மெத்தனமாக இருந்துவிட்டேன். பின்னர் இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருந்தால் சரியில்லை. அவரைப் போய் பார்த்து நன்றியாவது சொல்லலாம் என்று. டாக்டர் வீட்டுக்குச் சென்றேன்.

டாக்டர் இல்லை க்ளினிக்கில் இருந்தது அவருடைய மகன். இருபது இருபத்தி ஐந்து வயது போல இருக்கும். நான் முன்னர் பார்த்ததில்லை. அவருடைய அப்பாவைப் பார்க்க வந்தேன். என்று சொல்லி வந்த விஷயத்தைச் சொன்னேன். “மன்னிக்கவும்.
அப்பா இப்போது இந்த உலகில் இல்லை. அவர் மறைந்து பத்து நாட்கள் ஆயிற்று” என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “கேட்க மிக வருத்தமாக இருக்கிறது. வேறு யாரும் செய்யாத காரியத்தை அவர் செய்திருக்கிறார். அவர் இல்லாதது என்னுடைய துரதிர்ஷ்டம்” என்றேன். “எந்த டாக்டரும் செய்யாத காரியத்தைத் தான் அவரும் செய்திருக்கிறார். குடித்துக் குடித்துக் உடலையும் ஈரலையும் கெடுத்துக் கொண்டு விட்டார்,” என்றான் அந்த இளம் டாக்டர்.

ஆயிரம் நவீன சோதனைக் கருவிகள், பெரிய பெரிய படிப்புகள் கண்டறியாததை, தான் அறிந்த பண்டைய வைத்திய முறையிலேயே அவரால் கண்டு கொள்ளமுடிந்திருக்கிறது. இவ்வளவு ஆற்றல் கொண்டவர் என்பதை அவரது தோற்றமும் பழக்கங்களும் நம்மை நம்பத் தூண்டாது. புதிதாக பாண்ட்டும் ஷர்ட்டும் போடக் கற்றுக் கொண்ட கிராமத்தான் போல இருக்கும் அவரைப் பார்த்தால். ஆனால், மற்ற உயிர்களை, உடல்களைக் காக்க முடிந்த அவரால் தன் உடலையும் உயிரையும் காக்க முடியாது போனது பற்றி என்ன சொல்ல? ஆண்டவனின் படைப்புகளில் என்னென்ன விடம்பனங்கள் விந்தைகள் இருக்கின்றனவோ! இப்படித்தான் சில வருஷங்கள் முன்பு மறைந்த தஞ்சை பிரகாஷ¤ம் எனக்கு நிறைய அறிவுரை சொல்வார், பார்க்கும் போதெல்லாம். “நீங்க என் பேச்சைக் கேட்க மாட்டீங்க. தெரியும் எனக்கு. இருந்தாலும் நான் சொல்வதைச் சொல்லி விடுகிறேன். அப்போதான் என் மனசுக்கு நிம்மதி” என்று ஒவ்வொரு முறையும் ஒரு முன்னுரையுடன், நான் என்னென்ன கீரைகள் சாப்பிட வேண்டும். எதை ஒதுக்க வேண்டும். அந்த கீரைகளை எப்படி பதப்படுத்திச் சாப்பிடவேண்டும்” என்று ஒரு நீண்ட பட்டியலோடு விளக்கமும் கொடுப்பார். அந்த அறிவு அவருக்குப் பயன்படவில்லை. அவர் இறப்புக்கும் காரணம் அவரது குடலை, ஈரலை அவர் கெடுத்துக் கொண்டதே.

வெங்கட் சாமிநாதன்/23.5.08


vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்