மு பிரகாஷ்
ஒரே வயதில் பள்ளியில் நுழையும் குழந்தைகள் வேறுபாடான கல்வியைப் பெறுகின்ற சூழலைத் தவிர்க்கும் பொருட்டு 08.09.2006 அரசாணை (நிலை) எண்:159இன் படி அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர்க் கல்வி அமுல்படுத்தக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அதற்கான அறிக்கையை 24.07.2007 இல் சமர்பித்தது. 2005ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கலைத்திட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டத்தினைப் பாடநூல் குழுவினர் உருவாக்கியுள்ளனர். இதன் அடிப்படையில் சமச்சீர்க்; கல்விக்கான பாடநூல்கள் இந்த ஆண்டு, முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு வெளிவந்துள்ளன. ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல் பிழைகளுடன் வெளிவந்துள்ளது. கணினிப்பிழைகளைத் திருத்தம் செய்யாது அச்சிட்டிருந்தனர். (உ.ம்). இளiமையில் (இளமையில்) பெரியார் கேட்ட கேள்வி (பக்:56), காப்பாற்ற்றக்nகோள்ள (காப்பாற்றிக்கொள்ள) (பக்:72), தவறை என்ற சொல் உரையாடல் பகுதியில் கதைமாந்தர் பெயர் இடம்பெறுகின்ற பகுதியில் இடம் பெற்றிருந்தது (பக்:62). சந்திப்பிழைகள், மயங்கொலிப்பிழைகள், வாக்கிய தொடரமைப்பு முதலிய பிழைகளுடன் பாடநூல் அச்சிடப்பட்டிருந்தது.
இப்பிழைகளோடு ‘நாட்டுப்புரம்’ என்ற சொல்லும் பிழையாக அச்சிடப்பட்டிருக்கும் என்று எண்ணிருந்தேன். ஆனால் இதுவரை வழங்கி வந்த நாட்டுப்புறம் என்னும் சொல்தான் பிழையானது என்ற விளக்கத்தினை இந்நூலில் இடம்பெற்ற மேற்கோள் கூறமுயல்கின்றது. “புரம் என்னும் சொல் சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும். ஆதியில் காஞ்சி என்று பெயர் பெற்ற ஊர் பின்னர் புரம் என்பது சேர்ந்து காஞ்சிபுரம் ஆயிற்று. பல்லவபுரம், கங்கை கொண்ட சோழபுரம், தருமபுரம் போன்றவை மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும்.” ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘ஊரும் பேரும்’ எனும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்ட பகுதி இடம் பெற்றிருந்தது
நாம் இதுவரை வழங்கி வந்த நாட்டுப்புறம் என்னும் சொல் இலக்கியத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே பயின்று வந்துள்ளது. பெருங்கதையில் கொங்கவேளிர் உஞ்ஞைக்காண்டத்தில் ஊர்தீயிட்டது என்னும் பகுதியில் நாட்டுப்புற மாக்களும் வேட்டுவத் தலைவரும் (பெருங்கதை – 43.54) எனப் பயன்படுத்தியுள்ளார். பெருங்கதையின் காலத்தை அறியும் போது சிலம்பு, மேகலைக்கு அடுத்துத் தமிழில் தோன்றிய காப்பியம் பெருங்கதை இது கி.பி 2 முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டது என்று து.சீனிசாமி தமிழில் காப்பியக்கொள்கை என்ற நூலில் குறிப்பிடுகிறார். மு.அருணாசலம் கி.பி 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்கிறார். நாம் கி.பி 8ஆம் நூற்றாண்டு என்றே வைத்துக்கொள்வோம். இந்நூற்றாண்டு;க்குப் பின்னர் நாட்டுப்புறம் என்னும் சொல் 19ஆம் நூற்றாண்டு வரை வேறு எந்த இலக்கியங்களிலும்; பயன்படுத்தப்படவே இல்லை என்பதை அகராதிகளின் (பார்;க்க: வரலாற்று முறைத் தமிழ்ப் பேரகராதி) வழியாகவும் நிகண்டுகளின் வழியாகவும் அறியமுடிகிறது.
நாட்டுப்புறம் என்னும் சொல் பெருங்கதையில்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி மூலம் அறியலாகிறது. நாட்டுப்புறம் என்பதற்கு இந்த அகராதி ‘பட்டிக்காடு’ என்ற பொருளைத் தருகிறது. தஞ்சைப்பல்கலைக்கழக அருஞ்சொல் அகரமுதலி, புதுச்சேரி கிராமியத் தமிழ் அகராதி, வின்சுலோவின் தமிழ்-ஆங்கில அகராதி, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி முதலிய பெரும்பான்மையான அகராதிகளில் நாட்டுப்புறம் என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது. 1910இல் வெளியான அபிதான சிந்தாமணி நாட்டான் என்பதற்கு நாட்டுப்புரத்தான் எனப் பொருள் கூறுகிறது. இதைப்போலவே 1911ஆம் ஆண்டு வெளிவந்த ந.கதிரைவேற்;பிள்ளை தமது தமிழ் மொழியகராதியில் நாட்டுப்புரம் என்பதற்கு பட்டிக்காடு எனப் பொருள் தருகிறார். இந்த இரண்டு அகராதிகள் மட்டும் விதிவிலக்காக நாட்டுப்புரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டுப்புரம் என்ற சொல் இலக்கியங்களின் ஊடாக எந்தவொரு இடத்திலும் பயன்படுத்தப்படவேயில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. இப்படியொரு சூழலில் நாட்டுப்புரம் எனப் பாடநூலில் இடம்பெற்றிருப்பதற்குப் பாடநூல்குழுவினர் அபிதான சிந்தாமணி (தொலைபேசி செய்தி) மற்றும் ரா.பி.சேதுபிள்ளையின் தரவுகளை முன்வைத்திருப்பது சரியல்ல.
நாடு+புற(ர)ம் என்னும் இரண்டு சொற்கள் சேர்ந்துதான் நாட்டுப்புற(ர)ம் என்ற சொல்லுருவாகியிருக்கிறது. இங்கு நாடு என்பதில் பிரச்சனையில்லை. பின்னொட்டாக வருகின்ற புறம், புரம் சொற்களில்தான் பிரச்சனை. புறம், புரம் சொற்களுக்கு இலக்கியங்கள், நிகண்டுகள், அகராதிகள் தரும் விளக்கத்தினைக் காணவேண்டியுள்ளது. கொங்குவேளிர் நாட்டுப்புறம் என்ற சொல்லை எப்பகுதியில் வசிக்கின்ற மக்களைக் குறிக்கக் கையாண்டுள்ளார் அம்மக்கள் எத்தன்மையுடையவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை இவ்வரிகள் தெளிவுபடுத்துகின்றன.
“ஐந்நூற் றோடுத லாற்றா தாயினும்
முந்நூற் றெழுபது முப்பது மோடி
வீழினும் வீழ்க வேதனை யில்லைக்”
கூழினு முடையினுங் குறிப்பினராகிய
நாட்டுப்புற மாக்களும் வேட்டுவத் தலைவரும்
(பெருங்கதை: 43:50-54)
நாட்டுப்புறமக்கள் எப்பகுதியில் வசித்தனர் என்பதற்கு உச்சைனி நகரத்தலிருந்து ஐநூறு (இங்கு ஐநூறு என்பது காதம், யோசனை, கவ்வியூதி, அம்புவீழெல்லை, புரோசம், முதலிய நீட்டலளவைகளில் இன்னதென விளங்கவில்லை என்கிறார் பெருங்கதை பதிப்பாசிரியர் உ.வே.சா.) எல்லையில் நானூற்றெல்லையாவது சென்று வீழ்ந்தலும் வீழ்க வேதனையில்லை என்று கூறுகிறார். இதன் மூலம் அம்மக்கள் நகரத்தின் வெளிப்பகுதியில் வாழ்;ந்துள்ளனர் என்றறிய முடிகிறது. மேலும் உண்ணும் கூழிற்கும் உடுத்தும் உடைக்குமே நல்கூர்ந்து அவற்றைப் பெறுதலே குறிக்கோளாயக் கொண்டவர்கள் நாட்டுப்புற மாக்கள் என அம்மக்களின் தன்மையைக் கூறுகிறார். இத்தரவு புறம் என்பதற்கு வெளிப்பக்கம் (அ) வெளியிடம் எனப் பொருள் தருகிறது.
புன்கால் நாவல்பொதிப் புறயிருங்கனி (நற்றிணை:35..2)
இங்கும் புறம் என்பது வெளிப்பக்கத்தைக் குறிப்பதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. புறஞ்சேரி, புறநகர், புறவழி போன்ற சொற்களில் புறம் என்பது வெளிப்பக்கம் (அ) வெளியிடம் என்ற பொருளையே தருகிறது. மேலும் புறம் என்பதற்கு அலர்மொழி, வீரம், இடம், முதுகு, காலம், இறையிலி, நிலம் (சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி) முதலிய பொருள்களும் உள்ளன. நாட்டுப்புறமென்பதில் புறம் என்பதற்கு வெளியே என்பது மிகச்சரியாக பொருந்தியிருக்கிறது. இப்பின்புலத்தில் நாட்டுப்புறம் என்ற சொல்லாட்சியில் எந்தப் பிழையுமில்லை என்பதை அவதானிக்க முடிகிறது.
நாட்டுப்புரம் என்ற சொல்லில் புரம் குறித்து ஆராயும் பொழுது சூடாமணி நிகண்டு புரம் என்பதற்கு நகரம் என பொருள் தருகிறது. திவாகர நிகண்டு வழியாகவும் புரம் என்பது நகரப்பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.
பாடியும் புரமும் நகரப்பகுதியே (திவாகர நிகண்டு 5.97)
பிங்கல நிகண்டு நகரப்பொதுப்பெயரைக் குறிக்க புரம் என்னும் சொல்லை முன்னோர்கள் பயன்படுத்;திருக்கின்றனர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
ஆலயம் நிகாயம் புரி ஆவாசம் புரமே நகரப்பொதுப்பெயராகும்
(பிங்கலம் 5.269)
இவற்றோடு அபிதான சிந்தாமணியும் புரம் என்பதற்கு இரும்பு மிதி;ல், வெள்ளி மிதில், பொன் மிதில்களாலான அரண்கள் இவையே திரிபுரம் என்று கூறுகிறது. திரிபுரம் என்பது இரும்பு, வெள்ளி, பொன், அரண்களையுடைய மூன்று நகரங்களாகும். பூக்கள் சேரி புரம் முட்டம் பூண்டி… இருபத்தேழும் நாடில் ஊரென நவின்றிசினோரே (திவாகர நிகண்டு:5.125) ஊர் என்னும் சொல்லைக் குறிக்கும் 27 சொற்களில் புரம் என்னும் சொல்லும் இருப்பதை அறியமுடிகிறது. மேற்கண்ட தரவுகளின் படி புரம் என்பது பெரும்பான்iமாக நகரப்பகுதியைக் குறிப்பதாக உள்ளது. நாட்டுப்புரம் என்பது இங்கு நகரத்தையே மையப்படுத்தும் பொருளைத்தான் தருகிறது. ஆக இச்சொல் (நாட்டுப்புரம்) அடிப்படையில் எப்பகுதி (அ) யாரைக் குறிக்க பயன்படுத்த முன்வந்ததோ அவர்களைக் குறிக்காது அதற்கு எதிரான நிலையில் உள்ளவர்களைக் குறிக்கும் சொல்லாக இருப்பதன் ஊடாக இச்சொல்தான் பிழையானது என உணரமுடிகிறது.
மேலும் இச்சொல் (நாட்டுப்புரம்) பிழையென்று கூறக்காரணம் பாடநூல்குழுவினர் எடுத்துக்காட்டும் மேற்கோள்தான். ரா.பி.சேதுபிள்ளையின் கூற்றினையும், நிகண்டுகள், அகராதிகள் தரும் விளக்கத்தினையும் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. அவர் புரம் என்னும் சொல் சிறந்த ஊர்களைக் குறிப்பது என்கிறார். ஆனால் இலக்கியமோ, நிகண்டோ, அகராதியோ இதுபோன்ற விளக்கத்தினைத் தரவேயில்லை. மேலும் ஆதியில் காஞ்சி என்று பெயர் பெற்ற ஊர் பின்னர் புரம் என்பது சேர்ந்து காஞ்சிபுரம் ஆயிற்று என்கிறார். இதில் புரம் என்பது சிறப்புப்பெயராகச் சொல்கிறார். ஆனால் நாம் நிகண்டுகளின் வழி புரம் என்பது நகரப்பொதுப்பெயரைக் குறிப்பது என்றே அறிகிறோம். காஞ்சிபுhம் என்பது ஒரு நகரம். இதில் காஞ்சி என்பது சிறப்புப்பெயர்;;;;;;;;;, புரம் என்பது பொதுப்பெயர்; என அனைவரும் அறிந்ததே. இலக்கிய வழக்கில் பயன்படுத்தப்பட்ட நாட்டுப்புறம் என்ற சொல் தவறு என்றும் இலக்கிய வழக்கில் பயன்படுத்தப்படாத நாட்டுப்புரம் என்ற சொல் சரி எனக் கூறமுயல்வது சரியல்ல.
தமிழ்மொழியில் ண-ன, ர-ற, ல-ழ-ள ஆகிய எழுத்துக்களைக் கவனமாகக் கையாளவில்லையெனில் பொருள் மாறிவிடு;ம் என்பது அறிந்ததுதான். அப்படியிருக்கும் நிலையை உணராது மயங்கொலிப்பிழையில் மயங்கிய பாடநூல் குழுவினர் முரண்பாடான கூற்றுக்களை மேற்கோள்காட்டி சரியான சொல்லைத் தவறு என முடிவு செய்து தமிழ் ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் பெருங்குழப்பத்தினை ஏற்படுத்தி விட்டனர். செம்மொழியான தமிழ்மொழியே! என்று போற்றப்படுகின்ற இச்சூழலில் மொழியைப் பிழைபட பயன்படுத்துவதும,; பிழைகளோடு அச்சிடுவதும் மொழிக்கு ஊறு விளைவிப்பதாகும். இனிவருகின்ற கல்வியாண்டிலாவது இது போன்று பிழைகளில்லாமல் பாடநூல்கள் அச்சிடப்படுவது நலம் பயக்கும்.
மு.பிரகாஷ்
ஆசிரியர் – நாமக்கல்
பயன்படுத்திய நூல்கள்
அபிதான சிந்தாமணி சாரதா பதிப்பகம் 1981
அருணாசலம். மு., தமிழ்; இலக்கிய வரலாறு பார்க்கர் பதிப்பகம் 2005
ஆறாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல் தமிழ்ப்பாடநூல் கழகம் 2010
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி காவ்யா பதிப்பகம் 2008
கொங்குவேளிர் பெருங்கதை உ.வே.சாமிநாதய்யர் நூல் நிலையம் (ஆறாம் பதிப்பு) 2000
சீனிசாமி. து., தமிழில் காப்பியக்கொள்கை தமிழ்ப் பல்கலைக்கழகம் 1994
தஞ்சை அருஞ்சொல் அகரமுதலி தமிழ்ப் பல்கலைக்கழகம் 1988
தமிழ் மொழியகராதி
தமிழ் லெக்சிகன்; பேரகராதி சென்னைப் பல்கலைக்கழகம் 1982
புதுச்சேரி கிராமியத் தமிழ் அகராதி புதுச்சேரிப் பல்கலைக்கழகம்
வரலாற்றுமுறைத் தமிழ்ப் பேரகராதி சாந்தி சாதனா 2002
வின்சுலோவின் தமிழ்-ஆங்கில அகராதி Asian Educational Services New Delhi (பதினோராம் பதிப்பு) 1998
prakash16tamil@gmail.com
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 13
- 2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)
- கவிதைக்கோர் வேந்தரான வித்துவான் வேந்தனார்!
- கவியரசு கண்ணதாசன் பாட்டுத்திறன் போட்டி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -14
- சிவகாசியில் திலகபாமாவின் கழுவேற்றப் பட்ட மீன்கள் நாவல் விமரிசன விழா
- ஏமாளிகள்
- தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது பௌர்ணமி இரவு.
- இவர்களது எழுத்துமுறை – 8 கி.ராஜநாராயணன்
- புறத்தில் அகம்
- தோழர் சிவம் நினைவுக்கூட்டம்
- பூங்காவனம் சஞ்சகையின் இதழ் மூன்றுக்கான ஆக்கங்களைக் கோரல்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை
- தஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -6
- காதல் கருவுறுதல் பற்றிய ஒத்திகை
- தனிமரத்து பூக்கள்
- இனிக்கும் கழக இலக்கியம்
- திருந்தாத கேஸ்
- பச்சை ரிப்பன்
- முகம் நக
- முற்றுப்புள்ளி
- முத்தப்பிழை !
- ஒற்றைப் பேனாவின் மை
- மேடை ஏறாத கலைவண்ணம் …!
- மழைக்கு பிந்தைய கணங்கள்
- மாமிசக்கடை
- மௌனத்தின் பழுப்பு நிறம்..
- பணக்கார ஊரில் தொடங்கிய ஒரு ஏழைக்கட்சி
- நாட்டுப்புற(ர)ம்
- பரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’
- முள்பாதை 48
- க்ருஷ்ண லீலை
- ஆட்டோக்கள் உரசுகின்றன