நந்தன் இல்லாமல் நடராஜரா ?

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

மலர் மன்னன்


பிரபஞ்ச வெளியின் இடையறாத, இம்மியளவும் பிசகாத இயக்கத்தை உருவகப்படுத்தும் நடராஜப் பெருமான் நடமாடும் திருத்தலம் சிதம்பரம். பொதுவாக மற்ற சிவாலயங்களின் கருவறைகளில் அருவுருவ லிங்கமாகவே காட்சிதரும் சிவபெருமான், நடன சபாபதியாகக் காட்சி தந்து ஆறுகால பூஜைகளையும் ஏற்றுக் கொள்வது தில்லையிலேதான்.

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் ஆலயத்திற்கு இருக்கும் தனித் தன்மை அது ஆலயத்தை நிர்வகித்துவரும் தீட்சிதர்களின் தனிச் சொத்தாக அனுபவிக்கப்பட்டு வருவது. அதனால்தான் மிக அதிக வருவாய் பெறும் ஆலயமாக இருந்துங்கூட மாநில அரசின் ?ிந்து அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து தீட்சிதர்களின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே அது இருந்து வருகிறது.

மதச்சார்பின்மை என்ற முகமூடியை அணிந்துகொண்டு ?ிந்து சமயத்திற்கும் ?ிந்து சமூகத்திற்கும் பாதகமாகவே செயல்பட்டுவரும் அரசுகளின் ஆதிக்கத்தில் ?ிந்துக்களின் ஆலயங்கள் இல்லமல் தனித்து இயங்வது ஒருவிதத்தில் நல்லதுதான் என்றாலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் தனிச் சொத்தாக அவை முடங்கிப் போய்விடுவதும் சரியில்லைதான்.

தில்லையம்பலப் பெருவெளியில் கூத்தாடும் பெருமானின் ஆலயத்தைத் தில்லை மூவாயிரவர் எனப் பெருமை பெற்ற தீட்சிதப் பெருமக்கள் தனிச் சொத்தாக உரிமை

கொண்டாடியதால்தான் அங்கு சைவத் திருமுறைகளுங்கூடப் பூட்டிய அறையினுள்ளே சிறைப்பட்டுக் கிடந்தன என்பதும் ராஜ ராஜ சோழனின் புத்திசாலித்தனத்தால்தான் அவற்றை வெளிக் கொணர முடிந்தது என்பதும் செவிவழிச் செய்தியாக வந்த வரலாறு.

‘தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர் ‘ என தீட்சிதர்கள் அறியப்பட்டதற்கும் வரலாற்றுச் சான்றுகள் தமிழிலக்கியங்களில் உண்டு. ஆனால் இன்று முன்னூறுபேராவது இருப்பார்களா என்பதே சந்தேகம். தம்மைச் சுற்றி வட்டம் போட்டுக் கொண்டு அதற்குள்ளேயே உறவுகளைக் குறுக்கிக்கொண்டு அவர்கள் சுருங்கிப் போனார்கள்.

சிதம்பரம் ஆலயத்தின் இன்னொரு தனிச் சிறப்பு, தீண்டத் தகாதவர் எனப் பிற்கால ?ிந்து சமுதாயம் தன் மூடத் தனத்தால் ஒதுக்கிவைத்த மாபெரும் உழைப்பாளிகள் சமூகத்தைச் சேர்ந்த திரு நாளைப் போவார் என்னும் சிவனடியார் வெள்ளப்பெருக்கைப் போன்ற தமது பக்தி வேகத்தால் ஆலயத்துள் புகுந்து ஆடும் கூத்தனை தரிசனம் செய்து சிலிர்த்தது. இந்த திரு நாளைப் போவார்தான் நம் கலாசாரக் கலையழகியலில் ‘ நந்தனாரா ‘கத் தோற்றம் கொள்கிறார். ஆக, தீண்டாதாரின் ஆலயப் பிரவேசம் வெகு காலம் முன்பே நடந்துவிட்ட ஒன்றுதான் அதன் பின் விளைவு என்னவாக இருந்தாலும்.

நந்தனார் கற்பனைப் பாத்திரமல்ல. நிஜமாக வாழ்ந்திருந்த ஒரு பெரியாரின் காவிய நயம் மிகுந்த மறு உருவாக்கம்தான். வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர்களை முக்கிய பாத்திரமாக வைத்துக் கதை சொல்வது அழகியல் சார்ந்த விஷயம். அது கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் உரித்தான பிரத்தியேக சுதந்திரம். அவர்கள் எடுத்தாள்வதால் வரலாற்று மாந்தர் பெருமை பெறுவார்களேயன்றி வெறும் கற்பனைப் பாத்திரங்களாக மாறி முக்கியத்துவம் இழந்துவிட மாட்டார்கள்.

‘ராமா, ராமா ‘ என்று உருகி, நம்மையும் உருகவைக்கும் கீர்த்தனைகளை இயற்றிய தியாகையரின் சமகாலத்தவரான கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனார் சரிதத்தை அருமையான கீர்த்தனங்களாக இயற்றியது நாம் அறிந்த செய்தி மட்டுமல்ல, அவற்றைப் பலரும் பாடக் கேட்டு மகிழ்ந்துமிருக்கிறோம். கோபால கிருஷ்ண பாரதியார் பற்றி மகா மகோபாத்தியாய உ. வே. சாமிநாத அய்யரவர்கள் ஒரு நூல் எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து சில பகுதிகளை அப்படியே தருகிறேன்:

‘சிதம்பரத்தில் இருக்குங்கால் கோபால கிருஷ்ண பாரதியார் நடராஜர் ஆலயம் சென்று, பொன்னம்பலத்துக்குத் தெற்கேயுள்ளதும், கிழக்கு நோக்கி ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி எழுந்தருளியிருப்பதுமாகிய நிருத்த சபையின் வெளி மண்டபத்தில் ஜபம் செய்வார்.

சில சமயங்களில் அதன் தெற்குச் சுவர் ஓரமாக உள்ள நந்தனார் உருவத்துக்கு அருகில் இருந்து பாடிக்கொண்டிருப்பார்.

நடராஜ மூர்த்திக்கு நேரே அம்மூர்த்தியைத் தரிசித்த வண்ணமாக அத்திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வுருவத்தின் கையில் கடப்பாரையும், தோளில் மண் வெட்டியும் உள்ளன. பாரதியார் நந்தனாருடைய சிறந்த பக்தியை நினைந்து நினைந்து உருகுவதற்கு அந்த உருவம் (நந்தனாரின் சிலை) ஒரு தூண்டுகோலாக இருந்தது. ‘

(பக்கம் 23)

கோபால கிருஷ்ண பாரதியாருக்கு நந்தனார் சரிதத்தைப் பன்ணமைத்துப் பாடத்தக்க பாடல்களாக இயற்றும் எண்ணம் எவ்வாறு தோன்றியது என்பதை அய்யரவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:

‘ சிதம்பரம் சென்ற காலங்களில் ஆலயத்தில் நந்தனார் பிம்பத்துக்கு அருகில் இருந்து சிவத்தியானாதிகள் செய்து வந்த பழக்கத்தால் இவருக்கு நந்தனாருடைய நினைவு வந்தது. ‘

(பக்கம் 33)

அய்யரவர்கள் மேலும் உறுதி செய்கிறார்கள்:

‘ இவருக்கு (கோபால கிருஷ்ண பாரதியாருக்கு) நந்தனார் சரித்திரத்திலே மனம் சென்றதற்கு முக்கிய காரணம் சிதம்பர ஆலயத்தி லுள்ள நந்தனாருடைய பிம்பமென்று முன்பு தெரிவித்தேன். ‘ (பக்கம் 74)

சாமிநாத அய்யரவர்கள் குறிப்பிடும் நந்தனார் உருவத்தைக் காண ஆவலுடன் சிதம்பரம் நடராஜர் ஆலயம் செல்பவர்களுக்கு ஆலயத்தில் எங்கு தேடினாலும் அதனைக் காண இயலாது என்பதுதான் இன்றுள்ள நிலைமை. நந்தனாரின் திருவுருவம் இன்றல்ல, என்றோ அப்புறப்படுத்தப்பட்டு விட்டிருக்கிறது.

இதுபற்றி தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்த பேராசிரியர்

சு. மகாதேவன் ஒரு தகவலைத் தந்துள்ளார்.

‘1935ல் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது உறவினருடன் தில்லைப் பெருங் கோயிலுள் சென்று கல்லுருவில் நடமிடும் நடனசபை நடராஜரைக் காணும் நல்வாய்ப்பினை முதன் முதலாகப் பெற்றதாக ‘க் குறிப்பிடும் மகாதேவன், அங்கு ‘சற்றுத் தென்புறம் உள்ள தூணை அடுத்து, திரு நாளைப்போவாரும் கும்பிடும் கோலத்தில் ஆளுயரக் கற்சிலையாக நின்று கொண்டிருந்தார் ‘ என்று தெரிவிக்கிறார். ‘அனைத்துச் சிவன் கோயில்களிலும் அறுபத்து மூவர் வரிசையில் நந்தனார் இடம் பெற்றிருப்பினும், திருவரங்கத்தில் நம்மாழ்வாருக்கு உள்ளது போன்ற சிறப்பிடம் தில்லையரங்கத்தில் நந்தனாருக்கு இருப்பது தெளிவாகத் தெரிந்தது ‘ என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார், மகாதேவன்.

மகாதேவன் மீண்டும் 1943ல் சிதம்பரம் ஆலயத்திற்குச் செல்கிறார். இப்பொழுது அங்கு

நந்தனாரைக் காணவில்லை! இதுபற்றி மகாதேவன் மனம் நொந்து எழுதுகிறார்:

‘1943ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பட்டப் படிப்பு மாணவனாகத் திருக்கோயிலுள் திரும்பவும் நுழைந்தபோது அடியார் இல்லாத நிலையில் ஆடாது அசையாது நின்றுகொண்டிருந்த அருள்மிகு அம்பலவாணனைக் கண்டு அதிர்ச்சியுற நேர்ந்தது! ஆம், நந்தனார் இருந்த புனித இடம் போவாரும் வருவாரும் அடிவைத்து நடக்கும் பொது இடமாக, வெறும் வெளியாக இருந்தது! ‘

நந்தனார் சிலையுருவில் நின்றிருந்த இடம் கால்களால் மிதிபடும் இடமாகிவிட்டிருந்தது.

நடராஜர் நடையில் நந்தனைக் காணாத ஆதங்கத்தில் அதுபற்றி அங்கிருந்த கண்காணிப்பாளரிடம் விசாரித்திருக்கிறார் மகாதேவன்:

‘ ‘இங்கிருந்த நந்தனார் சிலை என்ன ஆயிற்று ? ‘ ‘ என வினவ, ‘ ‘ஓ, அதுவா ? அது நந்தனார் சிலை அல்ல. நந்தனார் என்று நினைத்துக்கொண்டு கோயிலுக்கு வருபவர்கள் மாலை மரியாதை செய்யத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் அதை அப்புறப்படுத்திவிட்டோம் ‘ ‘ எனக் குறுநகை தவழ அவர் கூறி முடித்தார்! ‘

ஆனால் நடராஜர் திருவுருவிற்கு அணிவிக்கப் படும் மலர் மாலைகள் மறுநாள் நந்தனார் சிலைக்கு அணிவிக்கப்பட்டு நந்தனாருக்கு மரியாதை செய்யும் வழக்கமும் இருந்து வந்துள்ளதை மகாதேவன் கட்டுரை தெரிவிக்கிறது.

அந்தச் சிலையைத்தான் திடாரென அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். கேட்டதற்கு அது நந்தனார் சிலை அல்ல என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்கள். அது நந்தன் அல்லவென்றால் அத்தனை காலமும் அது அங்கு இருந்து வந்தது ஏன் ? கடப்பாரையும் மண்வெட்டியுமாக நடராஜப் பெருமானுக்கு எதிரிலேயே நின்ற அந்த எளிய சிவனடியான்

நந்தனன்றி வேறு யார் ?

நந்தன் சிலை நடராஜர் சன்னதியிலிருந்து அகற்றப்பட்டதற்காக மிகவும் மனம் வருந்தியிருக்கிறார், மகாதேவன். கோபால கிருஷ்ண பாரதியாரும் சாமிநாத அய்யரும் இன்றைக்கு இருந்தால் அவர்களும் இதற்காக வருந்தவே செய்வார்கள்.

நடராஜப் பெருமானின் மெய்யன்பர்கள் மனம் வருந்தச் செய்வது தகாத செயல் என்பதை சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைத் தங்கள் பொறுப்பில் வைத்துள்ள தீட்சிதப் பெருமக்கள் உணரவேண்டும். உணர்ந்து, அப்புறப்படுத்தப் பட்ட நந்தனார் சிலை எங்குள்ளது என்பதைக் கண்டறிந்து மீண்டும் அதனை நடராஜர் சன்னதியில் நிறுவி கூத்தபிரானும் அவருடைய அடியார்களும் மனம் மகிழச் செய்ய வேண்டும். முன்பிருந்த சிலை கிடைக்காது போனால் அதன் அமைப்பிலேயே புதிய சிலை செய்து நிறுவி விடலாம்.

1935 வரை இருந்து வந்த சிலையை, கோபால கிருஷ்ண பாரதியாரும், ஊ.வே. சாமிநாத அய்யரும், மகாதேவனைப் போன்ற பல அன்பர்களும் தரிசித்து மகிழ்ந்த நந்தனார் சிலையை, அல்லது அதனைப் போன்ற சிலையைத்தான் மீண்டும் நிறுவ விழைவதால் இதில் சம்பிரதாயச் சிக்கல் எதற்கும் இடமில்லை.

நந்தனார் சிலையை நடராஜப் பெருமான் சன்னதியில் நிறுவ தீட்சிதப் பெருமக்கள் தாமகவே முன் வருவார்களேயானால் அது அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும். அவ்வாறு இல்லையேல் நடராஜப் பெருமானைத் தொழுது மகிழ்வோர் அனைவரும் தில்லை வாழ் அந்தணர்களுக்கு நந்தனாரின் திருவுருவச் சிலையை ஆலயத்துள் நிறுவுமாறு கடிதம், தந்திகள் வாயிலாக விண்ணப்பம் செய்ய வேண்டும். சிலையினை உருவாக்கவும் நிறுவவும் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்குமாயின் அன்பர்கள் அனைவரும் நன்கொடை வழங்கி அந்தத் தடையைக் களைய முன்வரவேண்டும். இக்கருத்திற்கு உடன்படும் உலகெங்கிலும் உள்ள அன்பர்கள், பொது தீட்சிதர்கள், சிதம்பரம் நடராஜர் ஆலயம், சிதம்பரம், தமிழ் நாடு என்ற முகவரிக்கு இவ்வாறான விண்ணப்பத்தைத் தெரிவிக்கவேண்டும்.

இக்கட்டுரையை எழுத எனக்குத் தூண்டுதலாக இருந்தது பேராசிரியர் தி. வ. மெய்கண்டார் ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் உள்ள ‘இளந் தமிழன் ‘ என்ற சிற்றிதழின் செப்டம்பர் 2005 இதழில் வெளியாகியுள்ள தகவல்களே.

—-

malarmannan97@yahoo.co.uk

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்