நட்பு

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்



விசாலாட்சி அம்மாள், முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு புதிய விதவை. கார் விபத்தில் கணவர் அகால மரணம். 9,12,15 வயதுகளில் மூன்று மகள்கள். கங்கா, யமுனா, காவேரி. அவர்களை வளர்த்து ஆளாக்க ஆவி போக்கினார் விசாலாட்சி. குடித்த நீரெல்லாம் வியர்வையாகின. விரல்களை விறகுகளாகி உலை அரிசியாயின.
விசாலாட்சி அம்மாளின் இன்றைய நிலை. எழுபது வயது. பக்கவாதம் இழுத்த ஒரு பாதி உடல். மொத்தப் பற்களுக்கும் விடுதலை தந்த வாய். அழுத்தி வாயை மூடினால் தாவா மூக்கு முனையோடு கிசுகிசுக்கும். இத்தனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து கொண்டது. மூச்சுத் திணறல் வந்தால் உடனே ஆஸ்துமா பஃப் கொடுக்க வேண்டும். விசாலாட்சியம்மாளின் உயிர் ஆஸ்துமா பஃபில்தான் உலாவிக் கொண்டிருந்தது.
விசாலாசட்சியம்மாளின் மூன்று மகள்கள். கங்கா இன்று ஒரு அழகு சாதன நிறுவனத்தின் முதலாளி. யமுனா ஒரு பெரிய இந்திய உணவகத்தின் காசாளர். காவேரி இசைத்தட்டு மற்றும் வீடியோ நிறுவனத்தின் முதலாளி.
விசாலாட்சியம்மாள் காவேரி வீட்டில்தான் வாசம். மூன்று மகள்களும் மூச்சாகப் பின்னிக் கிடந்தது அந்த அம்மாளின் தியாக வேள்விக்கு அவர்கள் தரும் விலை.
பவானி. சமீபத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதியான பணிப்பெண். அவர் வேலை விசாலாட்சி அம்மாளுக்கு நிழலாகக் கிடப்பது, ஒழிந்து நேரத்தில் சில சில்லரை வேலைகளைச் செய்வது.
காவேரியின் வீடு தோபாயோவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு. அதே தொகுப்பில் மூன்று மாடிக்குக் கீழே இன்னொரு பணிப்பெண் ராணி. ராணியின் முதலாளி ஒரு எழுபது வயதுக் கிழவர். சக்கர நாற்காலி வாசம். ஆழமான ஆஸ்துமாதான் அவருக்கும். ராணியின் முக்கிய வேலை முதலாளிக்கு முதுகுத் தண்டாய் இருப்பது, காலை மாலை வீட்டு நாயை மேய்ப்பது.
காலை எட்டு மணி. அதுதான் பவானியும் ராணியும் சந்தித்துக் கொள்ளும் நேரம். சாமான்கள் வாங்க பவானி இறங்குவாள். நாயோடு ராணியும் இறங்குவாள். அவரவர்கள் வலிக்கு ஒத்தடம் கொடுத்துக் கொள்வார்கள். இந்த சந்திப்பு சில நாட்கள் தொடர்ந்தன.
இது தீபாவளி மாதம். காவேரி நடப்பதை மறந்துவிடுவார். பறப்பதே வேலையாகிவிடும். காவேரி மட்டுமல்ல. மூன்று பேரும்தான். தீபாவளி முடியும் வரை அந்த வேகம் தொடரும். விசாலாட்சியம்மாள் அயர்ந்து தூங்கும்போதுதான் அவர்கள் வந்து பார்ப்பார்கள். காலை எட்டு மணிக்குச் செல்பவர்கள் இரவு பன்னிரெண்டைத் தாண்டிதான் வீடு வருவார்கள்.
அன்று எட்டு மணிக்கு கார்ப் பேட்டை வந்த காவேரியின் கண்கள் பவானியையும் ராணியையும் சேர்ந்து பார்த்ததில் அகல விரிந்தன. ஒரு சூடு உள்ளுக்குள் இறங்கியது. பணிப்பெண்களின் நட்பு முதலாளிக்கு ஆப்பு என்பது காவேரியின் நம்பிக்கை. வீட்டுத் தகவல்கள் வெளியே செல்வது இந்த நட்பின் இன்னொரு முகம் என்பதும் காவேரிக்குத் தெரியும். பவானியிடம் பேச நேரமில்லை. பார்த்துவிட்டு பறந்துவிட்டார் காவேரி. இரவு நெருங்க நெருங்க படபடத்தாள் பவானி. அந்தப் பன்னிரெண்டு மணி வந்தது. காவேரியும் வந்தார்.
‘பவானி, எத்தனை நாட்களாக இந்த சிநேகம்?’
‘ஒரு வாரமாக.’
‘இங்கு யாரோடும் பேசக்கூடாது என்று சொன்னேன்தானே?
உன்னைத் திருப்பி அனுப்ப, இன்னொரு பணிப்பெண்ணை உடனே அமர்த்த
எனக்குத் தேவை மணிகளல்ல, நிமிடங்கள்தான் தெரியுமா?’

‘தெரியுமம்மா.’

‘சரி. மன்னிக்கிறேன். உன்னை நான் மீண்டும் ராணியோடு பார்க்கக் கூடாது. சரியா?’

‘சரியம்மா.’

இங்கு தூக்கம் இல்லாவிட்டாலும் படுக்கவாவது முடிகிறது. ஊருக்குப் போனால் முள்ளில்தான் படுக்கவேண்டும். அந்த வாழ்க்கையை திருப்பிப் போட, நன்றாகப் படிக்கும் தன் தம்பியின் கல்விக்கு கண்ணாயிருக்க, வறுமை வயிற்றுக்கு சமாதானம் சொல்வதை உடனே நிறுத்த எடுத்த முடிவுதான் பவானியை சிங்கப்பூருக்கு இழுத்து வந்தது.

விசாலாட்சியம்மாளின் ஆஸ்துமா பஃப் கிட்டத்தட்ட முடியப் போகும் தருணம். இரண்டு முறைகள் சொல்லியும் மறந்துதான் போய்விட்டார் காவேரி. அன்று மூன்றாம் நாள். அது ஒரு முக்கியமான நாளாகிவிட்டது. ஆஸ்துமா பஃப் சுத்தமாகத் தீர்ந்துவிட்டது. அதே நேரம் விசாலாட்சியம்மாளுக்கு மூச்சு கண்கள் வழி வரப் பார்த்தது. பவானி காவேரியை தொலைபேசியில் அழைத்தாள்.

‘ அம்மா. பாட்டிக்கு மூச்சு முட்டுகிறதம்மா. கருவிழி வெளியே வந்து விழுவதுபோல் இருக்கிறதம்மா. நாக்கும் மொத்தமும் வெளியே தள்ளிவிட்டது. பயமாக இருக்கிறதம்மா. ஆஸ்துமா பஃப் முழுதும் தீர்ந்துவிட்டதம்மா.’

காவேரிக்கு கடையே இடிந்து தலையில் விழுந்ததுபோல் இருந்தது. கடைச் சிப்பந்தி ராஜாவிடம் பஃப் வாங்கிக் கொடுத்து மோட்டார் சைக்கிளில் பறக்கச் சொன்னார் காவேரி. கங்காவுக்கும் யமுனாவுக்கும் தகவல்கள் பறந்தன. கங்கா யமுனா காவேரியோடு அவர்களின் கணவன்மார்களும் விரைந்தனர்.

ஒவ்வொரு நிமிட இடைவெளியில் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். முதலில் வந்தது ராஜாதான். ஆனால் அந்தப் பஃபை பவானி உபயோகிக்கவே இல்லை. விசாலாட்சியம்மாள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். பவானி நெஞ்சைத் தடவிக் கொண்டிருந்தார்.

ஒரு ஆழமான மௌனம் சில விநாடிகள் தொடர்ந்தது. காவேரிதான் பேச்சைத் துவக்கினார்.

‘நீ தொலைபேசியில் சொன்ன சேதிக்கும், இப்போது பார்ப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே. ஏன் இப்படி எங்களை கலங்கடித்தாய்?’

‘நான் சொன்னது உண்மைதானம்மா. சில நிமிடங்களுக்குள் பஃப் கொடுத்தே ஆகவேண்டும். நீங்கள் பறந்தே வந்தாலும் ஒரு மணிநேரமாவது ஆகும். அதனால்தான் உடனே ராணி வீட்டுக்கு ஓடினேன். அங்கு பஃப் இருந்தது. ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் விபரீதமாகியிருக்குமம்மா.’

கண்ணீர்த் துளிகளால் வார்த்தைகளை எண்ணி எண்ணி உதிர்த்தாள் பவானி.
பவானியை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார் காவேரி.

‘எவ்வளவு பெரிய தவறு நான் செய்துவிட்டேன். ராணியுடனான உன் நட்புத்தான் இன்று என் அம்மாவைக் காப்பாற்றியிருக்கிறது. உன் தம்பியின் மேற்படிப்புக்காக நீ கேட்டிருந்த ரூபாய் 25000 நாளையே தருகிறேன் பவானி. அது உன் சம்பளமல்ல. என் அன்பளிப்பு. இனி நீ ராணியோடு எப்போதும்போல் இருந்துகொள்.’

காவேரி பேசி முடித்தார். எல்லாரும் அப்படியே நின்று கொண்டிருந்தார்கள். விசாலாட்சியம்மாள் விழித்துப் பார்த்தார். அம்மாவிடம் பிள்ளைகள் ஓடினார்கள். விசாலாட்சியின் விழிகளோ பவானியைத் தேடியது. அருகே அழைத்தார். அணைத்துக் கொண்டார்.

காரணமின்றி பிறப்பதல்ல நட்பு.
மனிதனால் தேடப்படுவதல்ல நட்பு.
கடவுளால் தரப்படுவதே நட்பு.

Series Navigation

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்