சுஜாதா சோமசுந்தரம்
அலைகள் முத்தமிட்டு தண்ணீர் கோர்த்த தரையில் காலடிகளை பதித்து நடந்த ஹாசனின் பார்வை எதிலுமே நிலைத்து நிற்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தது.அவனுடைய உடம்பில் சொல்ல முடியாத அளவுக்கு சோகம் தொற்றியிருந்தது.நடையில் இருந்த கம்பீரமும்,நம்பிக்கையும் தொலைத்திருந்தது.கால் வலிக்கிற உணர்வுகூட தட்டாமல் விட்டேத்தியாக கால் போகிற போக்கில் நடந்துக்கொண்டிருந்தான்.
காற்று வாங்க வந்த மக்களின் சிரிப்பொலி காதுகளில் ஈயத்தை ஊற்றியதை போன்ற வலியையும்,கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கரை காணாத தண்ணீர் வாழ்க்கையின் முடிவை வலுக்கட்டாயமாக உணர்த்துவது போலவும்,கடல் அலையின் இறைச்சல் மன இரைச்சலை அதிகப்படுத்தி மூச்சு காற்றை இழுத்து பிடித்து நிறுத்திவிடும் போலவும் இம்சித்தன.
டேய்….என்னை வரச்சொல்லிட்டு கூப்பிட கூப்பிட காதுல விழாத மாதிரி நடந்தியன்னா என்னடா அர்த்தம்.சர்மா,ஹாசனின் தோளை பிடிக்கவும் சடாரென்று திரும்பினான்.
ஹாசன்,சர்மா இருவருடைய நட்பும் தெளிந்த நீரோடையில் விழுந்த இரண்டு பழங்களைப்போல தடங்களில்லாத ஓரே திசையில் பயணம் செய்து ஓரிடத்தில் ஒதுங்கிய கனிகள்,ஒன்றோடு ஒன்று பின்னி மரமானதை போன்றது.குறுகிய காலத்தில் செழித்து வளர்ந்தாலும் நட்பின் இறுக்கம் ஆழமாக வேர்விட்டு இருந்தது.
என்னடா….வந்ததிலிருந்து திருவிழா கடையில பிள்ளையை தொலைச்சவன் மாதிரி விழிக்கிறே ?உன் மூஞ்சியே சரியில்லையே….நான் ஊருல இல்லாத சமயத்துல எதுலயாவது வம்பு தும்புன்னு மாட்டிக்கிட்டியா என்ன ?
ஹாசனின் பார்வையில் பதிந்திருந்த வெறுமையும்,சவரம் செய்ய மறந்த முகமும் ஏழெட்டு வயதை அதிகப்படுத்தி காட்டியது.
என்னடா…நான் பேச பேச கோவிலுக்கு நேந்துவிட்டவன் மாதிரி உட்கார்ந்திருக்கே.நீ மெளனம் சாதிக்கிறதால எந்த பிரச்சனைக்கும் விடிவு கிடைச்சிடாது.
நண்பனை நேருக்கு நேர் பார்த்தவன், பேச நா எழாமல் வெடுக்கென்று தலையை கவிழ்த்துக்கொண்டான்.ஒரு இடத்தில் நிற்பதற்குகூட நாசூக்கு பார்க்கும் ஹாசன்,சட்டென கால்முட்டியை மண்ணில் ஒருசேர ஊன்றி அப்படியே அமர்ந்தான்.
சர்மா….ஆரம்பிச்சு வந்து அவஸ்தைகளை அள்ளி கொட்டுறதுக்கு வழியே தெரியலடா.என் கனவுல உதிச்சி,நினைவுல உருவாகி பெற்று பேர்வைத்து பார்த்து பார்த்து வளர்த்த கம்பெனியை தொலைச்சிடுவேனோங்கிற பயம் பத்த வைத்த தீயா மனசுக்குள்ள புகைஞ்சிக்கிட்டு இருக்கு.அப்பாக்கிட்ட சவால்விட்டு பணத்தை வாங்கி போட்டு ஆரம்பிச்ச கம்பெனியை இழுத்து மூடிடுவேனோங்கிற உறுத்தல் உறுதியான மாதிரி ஓர் உணர்வு.
என்னடா உளருறே…! போனமாதம் சந்திச்சப்பக்கூட நல்லா போகுதுன்னு சொன்னீயே ?அதுக்குள் எப்படி ?
ஆரம்பத்திலேயே அடித்தளம் சரியா அமையலங்கிற அப்பட்டமான உண்மையை அவசரப்பட்டு சொல்ல விரும்பாததன் விளைவுதான் இது.பணத்தை செலவழித்த அளவுக்கு பாதையை வகுக்க தெரியல.வெற்றிங்கிற அபூர்வமான கனியை விலைக்கொடுத்து வாங்க துடிச்சேன். அதான் வீதியில கொண்டுவந்து நிறுத்தி புலம்ப வைச்சிட்டது.சர்மா…நீ பலமுறை தொழிலை பற்றி கேட்டப்ப,ஒற்றை வார்த்தையில பதில் சொன்னதற்கு காரணம் தோல்வியை நேரடியா ஒப்புக்க முடியாததுதான்.
ஹாசன்…சொந்த தொழில்ல கொடிக்கட்டி பறக்கிறவங்க எல்லாருமே தோல்வியில விழுந்து எழுந்தவங்கதான்.நம் வாழ்க்கையில தோல்விங்கிறது வந்து போகும் விருந்தாளி மாதிரி. அதை நிறுத்தவோ, நிராகரிக்கவோ முடியாது.வெற்றியை கைநீட்டி வரவேற்கிற மனசு தோல்வியை காணும்போது துவளுவது இயற்கை.வெற்றியின் முதல்படியா தோல்வியை மனசுல நிறுத்திக்கிட்டு தவறு நிகழ்ந்த இடத்தை சரிபண்ண முயலுனுமே தவிர வீணா புலம்பிக்கிட்டு இருக்கிறது புரயோசனம் ஆகாது.
என்னால முடியலடா.பெத்தவங்க வைச்சிருந்த நம்பிக்கையை தோண்டி புதைச்சிட்டு எதிரே நின்னு பேசவே வெட்கமாயிருக்கு.மத்தவங்க பார்க்கிற பார்வையில என்னோட இயலாமை மட்டுமே தெரியிறமாதிரி இருக்கு.வீட்ல ஓரே பிள்ளைன்னு இருந்த தனிப்பட்ட மரியாதை தகர்ந்திடுச்சி.அம்மா மட்டும் அனுசரனையா பேசுறாங்க.அக்கா சந்தர்ப்பத்தை சரியா பயன்படுத்தாதற்காக அக்னி வார்த்தையைக்கொண்டு பஞ்சமில்லாம திட்டுறா.அவளுக்கு வாக்கப்பட்டு வந்தவரு என்னான்னா, அவரு வீட்டு பணத்தை வாரிக்கொடுத்த மாதிரி கேள்வி மேல கேள்வி கேட்டு குடையிறாரு.அப்பாவுக்கு நண்பர்கள் வட்டத்துல இருந்த மதிப்பு மரியாதையெல்லாம் போயிட்டதாம்.பாட்டி, எனக்கு பணத்தோட அருமை தெரியலைன்னு பல்லவி பாடறாங்க.திரும்புகிற பக்கமெல்லாம் சொல்லடிகளும்,வெறுப்பான பார்வையும் என்னை கொல்லுதுடா.
ஹாசன்…உங்கிட்ட தவறுகள் நிறைந்து கிடக்கையில பலர் பலவிதமா பேசத்தான் செய்வாங்க..பணம் இருக்குதுங்கிறதுக்காக தொழில் நுணுக்கமோ,அனுபவ அறிவோ,படிச்ச துறைக்கு கொஞ்சம்கூட சம்மந்தமே இல்லாம தொழில் தொடங்கினதும், கையிருப்பு குறைய குறைய வருமானம் வராத காரணத்தை மனசாட்சிக்கிட்ட கேட்காம காலம் தள்ளினதும் உன்மீது கேட்கப்பட்ட கேள்வி கணைகள்.இதுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உனக்கிருக்கு இல்லையா ?
நான் எதையுமே மறுக்கல.அதுக்காக இவுங்க பேசிறதையெல்லாம் ஜீரணிக்க முடியலடா.
ஹாசன்….பிரச்சனைங்கிற பள்ளத்துல தேடிப்போய் விழுந்த பிறகு ஏறி வரமாட்டேன்னு அடம்பிடிக்கிறது முட்டாள்தனம்.வாழ்க்கைங்கிற போர்காலத்துல பிரச்சனைங்கிற ஆயுதத்தை கண்டு பயப்படுறது மனிததன்மைக்கே இழுக்கான விசயம்.தவறு முழுக்க உன்னை சுத்தி இருக்கையில,மத்தவங்க பேசுறதை ஏன் பெரிசா எடுத்துக்கறே ?
என்னால எதையும் உன்னைப்போல யோசிக்க முடியாது.என்னை மீறி நட்டம் ஏற்பட்டதுக்கு நான்தான் பொறுப்புன்னு ஒப்புக்கிட்டு,தவறை சரிகட்ட பணம் கேட்டா,நீ தொழில் செய்து சம்பாதிச்சது போதும்,வீட்லயிருந்து ஓய்வு எடுத்துக்க.கம்பெனி பொறுப்பை ஏத்துக்கிறேன்னு அப்பா சொன்னது என்னை அசிங்கப்படுத்துற மாதிரி இருக்கு.பொறுப்பாயிருக்க வேண்டிய வயசுல ஓய்வும்,ஓய்வு எடுக்க வேண்டிய வயசுல பொறுப்பைப்பற்றியும் பேசுறது நல்லாவா இருக்கு.
ஹாசன்…நான் சொல்லுறதை கோவிக்காம கேள்.அப்பா சொல்றமாதிரி நீ ஏன் கேட்ககூடாது.அவரோட அனுபவமும்,நல்ல வழிக்காட்டலும் உனக்கு படிப்பினையா அமையலாம் இல்லையா ?
சட்டென நண்பன் கோர்த்திருந்த கையை விலக்கிவிட்டு எழுந்தவன்,சுற்றியிருந்தவர்களை பற்றி சற்றும் யோசிக்காமல் என்னடா முட்டாள்தனமா பேசுற.நான் கம்பெனியை இழுத்து மூடினாலோ,என் அப்பா எடுத்து நடத்தினாலோ,என்னோட சுயகெளரவம்தான் பாதிக்கப்படும்.என்னோட தன்மானத்தை அவருக்கிட்ட அடகு வைச்சிட்டு கை கட்டி தலைகுனிந்து வாழ்றது எவ்வளவு பெரிய இழுக்கு தெரியுமா ? ஹாசன்….பெத்தவங்ககிட்டயே சுயகெளரவம் பார்க்கிறீயா ?அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டான் சர்மா.
ஆமாம்.எனக்கு உதவாத பணத்தை கட்டிப்போட்டுக்கிட்டு தூங்குறவங்ககிட்ட சுயகெளரவம் பார்க்கிறதுல என்ன தவறு ?அவன் கைமணலை தட்டிவிட்டு நடக்க நடக்க பின்தொடர்ந்தான் சர்மா.
ஹாசன்…உயிருள்ள மனிதனைவிட உயிரோட்டமில்லாத பணத்துக்கு அதிக மதிப்பு தர்ற காலம்டா இது.நாம எவ்வளவுதான் படிச்சிருந்தாலும் சம்பாத்தியம் இல்லேன்னா துரும்புக்குகூட மதிக்கமாட்டாங்க.
அப்படின்னா….சம்பாத்தியம் இல்லேங்கிறதுக்காக பெத்த பிள்ளையையே ஒதுக்கிடுவாங்களா என்ன ?
ஹாசன் விதண்டவாத பேச்சை முதல்ல நிறுத்து.உலகத்தின் ஒட்டுமொத்த துன்பத்தையும் கடவுள் உன்னை தேடிவந்து கொட்டினமாதிரி புலம்புறதை விட்டுட்டு,நிதானமா பேசுடா.
சர்மா….தோல்வியோட வலியும், வேதனையும் படுத்துறபாடு இருக்கே,ச்சே….இதெல்லாம் அனுபவிக்கிறவனுக்குதான் புரியும்.கண்ணை கட்டி காட்ல விட்மாதிரி வழியும் தெரியாம,
வாழ்க்கையும் புரியாமல் சில நேரங்களில்ல செத்துப்போயிடலாமான்னுக்கூட தோணுதுடா.
அப்படி பார்த்தா,இன்றைக்கு புகழ்பெற்ற கம்பெனில சிஸ்டம் அனெலெஸ்ட்டா இருக்கிற நான் செத்து ஐந்து வருசம் ஆயிருக்கனும்.தோற்றவங்க எல்லாம் சாகனும்னா,இந்த லோகத்துல யாருமே வாழ முடியாது.நானும் சொந்த தொழில்ல தோற்றவன்தான்.
என்னடா….உளருரே…சர்மாவின் தோளை பிடித்து உலுக்கினான் ஹாசன்.
ஹாசன்….! என்னோட நிகழ்காலத்தை வைத்து கடந்தகாலம் சிறப்பா இருந்திருக்கும்னு தப்பு கணக்கு போட்டுடாதே.நான் உன்னை மாதிரி பரம்பரை பணக்காரனான குடும்பத்திலேயோ,படிச்சவுடனே வேலையை உருவாக்கி தருகிற நாட்டுலயோ பிறக்கல.பாதையைக்கூட முறையாக வகுத்து வழிகாட்ட தெரியாத,படிப்பு வாசனையை அறியாத நடுத்தர குடும்பத்துல இரண்டு சகோதரிகளுக்கு தம்பியாக பிறந்தவன். எங்க குடும்பத்துல முதல்முதலா கல்லூரிக்கு போய் பட்டம்பெற்ற பட்டதாரியும் நான்தான். நடுத்தர வர்க்கத்தோட வலி உனக்கு தெரியாது. தண்ணில விழுந்த பந்து எப்படி மேலயும் எழும்ப முடியாம,தண்ணீலயும் அமுங்க முடியாம தவிக்கிற தவிப்புத்தான்.என் அப்பாவுக்கு விருப்பமே இல்லாம பொறியியல் கல்லூரில கணினி துறையில வலுக்கடடாயமாக சேர்ந்தேன்.அந்த நான்கு வருடமும் என் அப்பா என்னோட படிப்பு செலவுக்காக இதே சிங்கப்பூர்லதான் உழைச்சாரு.
நான் பல்கலைக்கழகத்திலிருந்து பொறியியளாராக வெளியே வந்தபொழுது,கணினி துறையில சறுக்கல் விழுந்தது.தேடிவந்த ஏழாயிரம் மாத சம்பளத்து கல்லூரி விரிவுரையாளர் வேலையை நிராகரித்தேன்.எனக்கு நான் படிச்சதை அப்படியே மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதில் உடன்பாடு கிடையாது.அதன்பிறகு ஆயிரத்து இருநூறு ருபாய்க்கு கம்பியூட்டர் சென்டர்க்கு வேலைக்கு போனேன்.பணத்தை கொட்டி படிக்க வைத்த என் அப்பாவால இந்த சம்பளத்தை ஏத்துக்க முடியல.என்னை உடனே சென்னைக்கு அனுப்பினார்.நான்கு மாதங்கள் சென்னையில நான் ஏறாதா சாப்ட்வேர் கம்பெனியே கிடையாது.எல்லாரும் அனுபவம் இல்லாம சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.வேலையில்லாம ஊருக்கு போகவும் பிடிக்காம இருந்த இந்நிலையிலதான் சொந்த தொழில் செய்து கொண்டிருந்த வாசனோட பழக்கம் ஏற்பட்டது.
மூன்று வேளை சாப்பாடு,தங்கிக்க இடமும் தரறேன். என் கம்பூயூட்டர் சென்டர்ல சம்பளமில்லாம வேலை பாருங்க,இலலேன்னா நீங்க ஒரு இலட்சம் பணம் கொடுத்துட்டு பார்ட்னராகிக்கங்க.கம்பெனாயை டிவலப் பண்ணுவோம்னு சொன்னது ரொம்ப பிடிச்சிப்போகவும் சிவாவும், நானும் ஒத்துக்கிட்டோம்.
இதுக்கு உங்கப்பா ஒத்துக்கிட்டாரா ?பணம் கொடுத்தாரா ?வேள்வியை கேட்ட ஹாசன்,சர்மாவின் முகத்தை உற்று நோக்கலானான்.
சொந்த தொழில பத்தி அவருக்கு அக்கு வேறு ஆணிவேறா விவரிச்சப்ப பணம் தர்றதா என்னோட பார்ட்னர் நண்பர்களுக்கு முன்னால ஒப்புக்கிட்டார்.நான்கு பேர் சேர்ந்து ஆரம்பிக்கிறதா அக்ரீமெண்ட்ல கையைழுத்தானது.நாங்க கம்பெனி ஆரம்பிக்க சிறந்த இடமா ஐம்பூதங்களில் ஒன்றான தீ(பத்து)க்கு பெயர் பெற்ற திருவண்ணாமலையை தேர்ந்தெடுத்தோம்.எங்க பிசினெஸ் பார்ட்னரில் ஒருத்தனான வாசன் திருவண்ணாலையை சேர்ந்தவன். பணத்தை வாங்க ஊருக்கு போனப்ப,என் அப்பா..சின்ன பிள்ளை வெள்ளாமை வீடுவந்து சேராதுன்னும்,படிப்புக்கு போட்ட பணத்தையே உன்னால சம்பாதிச்சு கொடுக்கமுடியலன்னு கேவலமா திட்டி பணம் தர மறுத்துட்டாரு.என் கனவுகளோட கலங்கி நின்னப்ப அம்மாவால அழத்தான் முடிந்தது.
அப்புறம்..தன் சோகத்தை மறந்து,பணத்துக்கு என்னடா பண்ணின… ? என்றான் ஹாசன்.
இராஷராஷ சோழனுடைய வரலாற்றுல குந்தவை நாச்சியாரின் பங்கு எந்தளவுக்கு சிறந்ததோ அதேப்போல்,சர்மாவோட வாழ்க்கையிலும் என் சகோதரிகளின்பங்கு அளவிடமுடியாதது.என் சகோதரிகள் இருவரும் அவுங்க கணவன்கிட்டயிருந்து வாங்கி கொடுத்த ஓரு லட்ச ரூபாய் பணத்தை என்னோட மூலதனமா போட்டேன்.இரண்டு இலட்சம் சொந்தபணம்,ஒரு இலட்சம் பேங்க் லோன்,வட்டிக்ககு ஐம்பாதயிரம்னு போட்டு ஐ.டி.பாய்ண்ட்(சாப்ட்வேர் டெக்னாலஜி டிவலப்மென்ட பிரைவேட் லிமிடடெட்)னு பேர் வைத்து நடத்தினோம். அந்தபேரை திருவண்ணாமலை முழுவதும் பரப்ப பட்ட பாட்டை இப்ப நினைச்சாலும் கண்ணுல நீர் கோர்த்துடும்.கஸ்டத்துக்கு பின்னால கிடைக்கிற வெற்றில எவ்வளவு இன்பம் இருக்குதுன்னுஉணர்வுபூர்வமா உணரமுடிந்தது அப்பதான்.
சாப்ட்வேர் லைன் டவுனாயிருந்தப்ப கம்பெனி நல்லா போனதா ?
ஆரம்பத்துல கம்பெனி நல்லா ரன் ஆனது.அந்த ஊருலயிருந்த பெரிய மனுசங்கயெல்லாம் தேடிவந்து எங்கள் திறமையை பாராட்டுனாங்க.என் அப்பா மட்டும் ஊரு முழுவதும் அவன் வயித்த கழுவதான் சம்பாதிக்கிறதா தூற்றுனாறு.என் அப்பாவுக்கு முன்னால சாதிச்சிகாட்டனுங்கிற வெறிலல சாப்பாட்டை மறந்து எத்தனை நாள் உழைச்சிருக்கேன் தெரியுமா ?அன்றைக்கு காய்ந்த வயிற்றுக்கு இன்றைக்கு வைத்தியம் பார்த்துட்டுருக்கேன்.
கம்பெனியை விளம்பரபடுத்த இருந்த கவனத்துல துளியை பணம் விசயத்துல காட்ட மறந்ததுதான் நான் செய்த முதல் தவறு.நாங்க போட்ட பங்கு பணத்தை தவிர மற்ற கடன்களையெல்லாம் கட்டி முடிச்சிட்டோம்ங்கிற திருப்தில இருந்தப்பதான் தலையில மிகப்பெரிய பாரங்கல்லு விழுந்து எழவே முடியாம பண்ணிட்டது.
ஏன்.. ?என்னாச்சி.. ?
நாட்கள் செல்ல செல்ல எங்க பாட்னரில் ஒருத்தனான வாசன், எங்க அனுமதியில்லாம கம்பெனி பேரை பயன்படுத்தி நிறைய கடன் வாங்கியிருக்கான்ங்கிற விசயம் தெரிய வந்தது. கம்பெனியை நல்லநிலைக்கு கொண்டு வந்தப்ப நான்கு பக்கமும் அவன் அரிச்சி வைத்த கடன்கள் மொய்க்க ஆரம்பித்தது.கடன்காரங்க அவுங்க இஸ்டத்துக்கு பொருள்களையும்,கணினிகளையும் ஒவ்வொன்னா எடுத்துட்டு போக ஆரம்பிச்சாங்க.அவன் ஊர்ல அவன்கிட்ட கேள்வி கேட்கமுடியல.அப்படியே கேட்க நினைத்தாலும் அவன் வாங்கிற கடன்ல நாங்களும் மாட்டிப்போங்கிற நிலை.கூண்டுல திட்டம்போட்டு மாட்டப்பட்ட எலிமாதிரி தப்பிக்க வழியே தெரியல.என் அப்பாவை நினைச்சபோது சித்தமே கலங்கிப்போனது.எங்க பார்ட்னர்சிப்ல கடைசி நிமிடம்வரை பணமே தராம தப்பிச்சவன் லோக்கல் அரசியல்வாதியோட பிள்ளை முத்துதான்.
போக போக சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல்,பசியை மறக்க ரமணர் ஆஸ்ரமத்துக்குப்போய் தியானிச்சிட்டு வருவோம்.நாங்க ஆசை ஆசையா ஆரம்பித்த கம்பெனியை ஒரு வருடத்துல இழுத்து மூடினப்ப வாழ்க்கையே முடிஞ்சிட்டததான் நினைத்தேன்.தான் பெத்த பிள்ளையை தனக்கு முன்னால பாடையில ஏத்தி தீயில இறக்கிறப்ப ஏற்பட்ற ரண வேதனையை சொல்லவோ,சத்தம்போட்டு அழவோ முடியாம ஊருக்கு போனபோதுதான் வெளிநாடு போகலாம்ங்கிற எண்ணம் உதித்தது.
தோல்வி என்னை துரத்தினபோது நான் முயற்சியை மட்டும் கைவிடலை.சிங்கப்பூர் வர கிளம்பியபோது மீண்டும் பணம் ஒரு பிரச்சனையா தலைதூக்கியது.அந்த நேரத்துல உறவுகள் எல்லாம் ஒதுங்கினாங்க.என் சகோதரிகளை மீண்டும் நச்சரிக்க மனம் கூசியது.அம்மா அவுங்க கழுத்துல போட்ருந்த சங்கிலியை வித்துட்டு பாதி பணமும், நண்பன் பாதி பணமும் போட்டுதான் இங்கே வந்தேன்.
இருபத்தி நான்கு வயதுக்குள்ள அறுபது வயது வாழ்ந்த அனுபவம் கிடைச்சது.என்னை சுற்றி எழுப்பபட்ட தோல்விங்கிற வியூகத்தை முயற்சி என்ற ஆயுதத்தால உடைச்சிட்டுதான் சிங்கப்பூருக்கு வந்தேன். நான்போன முதல்நேரடித்தேர்வுலேயே வேலை கிடைச்சது.இன்றைக்கு என் பெற்றோர்கள் ஊர்ல கார்,பங்களான்னு சந்தோசமா இருக்கிறதை பார்க்கிறப்ப நான் இழந்த இளமை காலங்கள் பெரிசாவே தெரியலை.ஒரு காலத்துல என்னோட சந்தோசத்துக்காக அவுங்க உழைச்சாங்க.இப்ப அவுங்களுக்காக நான்.நம்ப வாழ்க்கை முறை அன்றையலிருந்து இன்றுவரை ஒருத்தருக்காக ஒருத்தர் வாழ்ற பண்பைதான் உணர்த்திட்டுருக்கு.
சர்மா…நீ தொழில்ல தோற்கல துரத்தப்பட்டுருக்க அவ்வளவுதான்.ஆனால், நான் அப்படியில்லையே…
ஹாசன்.. எந்த பலகலைக்கழகத்திலும் அனுபவம் கத்து தர்ற பாடத்தை படிக்க முடியாது.உன் அப்பா பிரசுரம் ஆகாத சிறந்த புத்தகம்.அவருகிட்ட நீ கத்துக்க வேண்டியது ஏராளமாயிருக்கு.தன்மானம் பார்க்கிறதா நினைச்சி உன்னை தேடிவர்ற வாய்ப்பை தவறவிட்டுடாதே.
எப்படிடா…. ?
ஹாசன்…சம்பாதிக்கணுங்கிற வெறி மனசுல சம்மனம் போட்டு ஏறி உட்காருகிறவரை அப்பாவோட கையை பிடிச்சிட்டு அவரு பாதையில நடக்க கத்துக்க.பணத்தோட மதிப்பை முழுமையா உணர்ப்ப பாதையை மாத்திக்கலாம்.நீ இழந்த பணத்தை ஈடுகட்ட அவரோட சேர்ந்து உழைக்கிறதைவிட்டா வேற வழியே இல்லை.
சர்மா…மனசுல அடிச்சிக்கிட்டுருந்த அலை ஓய்ந்தமாதிரி மனசு இப்பதான் லேசா தெரியுது.எனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்தே தோல்வி என்னை தொட்டது கிடையாது.அதான் சட்டுனு உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.நீ கடந்து வந்த வழியை சற்று கூர்ந்து கவனிச்சாலே எனக்கு வாழ வழி கிடைச்சிடும்டா….இருவரும் கார் நிறுத்துமிடத்தை நோக்கி நடக்கையில், பத்து வயது நிரம்பிய சிறுவன் வேகமாக மிதித்து வந்த சைக்கிலிருந்து சறுக்கி தடாரென்று சாலையில் விழுந்தான்.விழுந்த வேகத்தில் கையில் உரசிய காயத்தை ஒரு பொருட்டாக கருதாமல் எழுந்து மீண்டும் சைக்கிளை மிதித்த விதம் ஹாசனின் மனதிற்குள் இனம்புரியாத சுமையை இறக்கியது.
முற்றும்.
சுஜாதா சோமசுந்தரம்,சிங்கப்பூர்.
- இந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ
- மெய்மையின் மயக்கம்-15
- ஆட்டோகிராஃப் 16-ஒரு கதாநாயகி கதை சொன்னாள்
- சொன்னார்கள் செப்டம்பர் 2, 2004 – தொகுப்பு
- கருணாநிதி, பரத்வாஜ், வைரமுத்து – ஏன் இந்தச் சிரிப்பு
- கடிதம் செப்டம்பர் 2, 2004 – அரவிந்தன் நீலகண்டனுக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும்…
- தென் இலங்கை கவிதை நூல் வெளியீடு
- கடிதம் செப்டம்பர் 2, 2004 – இத்தாலிய மாதா கீ ஜே!
- கடிதம் செப்டம்பர் 2,2004 – சன் டிவியின் சர்வாதிகாரம்
- கடிதம் செப்டம்பர் 2, 2004
- மாணிக்க விநாயகர் கோவில் பாரிஸ்
- கடிதம் செப்டம்பர் 2, 2004
- யேசுமாதா போன்ற முகம்
- சாகர புஷ்பங்கள்
- பெரியபுராணம் – 7
- வேறுபாடு….!
- …. ஒரு நகரத்து ஒப்பாரி ….(ராகம் ஒப்பாரி)
- வலை
- வலை
- வீடு
- அமெரிக்கா…! அமெரிக்கா…!!
- நிலாச் சோறு
- நம்பிக்கை துரோகி
- ஈரடி கவிதைகள்
- துர்நாற்றம்
- ஊரறிய மாலையிட..
- பதவி உயர்வு
- எங்க ஊரு காதல பத்தி…
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 35
- மாறியது நெஞ்சம், மாற்றியவர் யாரோ
- தோல்விக்குப்பின்
- ஊருப்பொண்ணு
- மஞ்சுளா நவநீதனின் தேடலும் இடறலும்
- குடியரசு தலைவர் அப்துல் கலாம் – மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர்
- மாறிவரும் ராஷ்டிரபதி பவன்
- கடவுள் வழிபாடும், தனிநபர் வழிபாடும்
- அன்புடன் இதயம் – 30
- விடியும்
- தவறாக ஒரு அடையாளம்
- வலை
- காதலன்
- வலை
- நூல் வெளீயிடு
- கவிக்கட்டு 23
- உயிரிடம் ஒரு சந்தேகம்….
- பூச்சிகளின் சுய மருத்துவம்
- சென்னை நீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க கடல்நீரைக் குடிநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உருவாகட்டும் [Desalination Plants for Chennai
Thinnai – Weekly Tamil Magazine - பொற்கோவின் ‘திருக்குறள் உரை விளக்கம் ‘ – நூல் மதிப்புரை
- சுந்தர.ராமசாமி தொடர்பான சில அவஸ்தைகள்