தேவகோட்டை – சிவகங்கை

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

மாம்பலம் கவிராயர்


சருகணிக்கு நாலுசீட்டு வீரசோழம் மூணரை
சேந்திஉடை நாதபுரம் ஏழுபேர் பாகனேரி
ஏறியது ஆறுகூடப் போலீசு பாஸொண்ணு
எண்ணிக்கும் செக்கரே முப்பது.

என்னப்பா தம்பி பலாச்சுளை வாசனையே
ஏறுமா றாவருதே நேத்து அறுத்ததா
வெள்ளரிப் பிஞ்சும் கருவாடு போலாச்சே
நல்லவெயில் காலமில்லே அப்பு.

சூனாபா னாதேவர் வீட்டிலே கேதமின்னு
சாமாஞ்செட் டோடுபோய்க் கொல்லையிலே தோசைசுட
ஆறப் பொறுக்காம ஆவூன்னு தின்னுபோட்டு
வீடியோ போட்டு விடியுமட்டும் பாத்தாங்க.

கண்ணாத்தா க்ஷப்பத்தான் உண்டா யிருக்காளா
காளையார் கோவில் திருவிளாலே பார்த்தப்போ
அத்தாச்சி சும்மா சிரிச்சாஹ ஆனாலும்
மொத்தமுமே உங்கசனம் தானே.

உரம்வாங்க பேங்கில் கடன்கேட்டா தண்டவட்டி
உடனேதான் கட்டுன்னு தாக்கீது தாறாங்க
வெள்ளாமை செத்துடும்னா யார்கேக்கப் போறாங்க
நாடார்ம ரக்கடையில் பத்தெழுதி வாங்கியாறேன்.

பூட்டான் பதினஞ்சு ரூபாங்க சிக்கிம்
பத்துரூபா பம்பர் தமிழ்நாடு அம்பது
பஞ்சாப் குலுக்கலில் ராவுத்தர் பேரனுக்குப்
பத்தா யிரமாம் பணமெப்போக் கிட்டுமோ ?

ஏறிவாங்க சீக்கிரம் வண்டி எடுக்கணும்
ஏத்துப்பா பூக்கூடை ஆகட்டும் மேலே
கருவாடு ஏத்தாதே கம்ளெயின் பண்ணுவாக
காலை நகர்த்தய்யா போலாம்ரைட்.

Series Navigation

மாம்பலம் கவிராயர்

மாம்பலம் கவிராயர்