பரிமளம்
இலக்கியத் திறனாய்வுகள் அனைத்தும் அபிப்பிராயங்களே. ‘சில திறனாய்வுகள் அபிப்பிராயங்கள்; வேறு சில திறனாய்வுகள் அறிவியல்பூர்வமானவை’ என்பதும் ஒரு அபிப்பிராயமே. ஏனெனில் இலக்கியமும் இலக்கியத்திறனாய்வும் அறிவியலாவதற்கான சாத்தியமே இல்லை. அறிவியலானால் அவை இலக்கியமோ திறனாய்வோ இல்லை. (வெ.சா வின் கருத்துகளையே நான் வழி மொழிகிறேன்.)
ஒரு புத்தகத்துக்கும் வாசகருக்குமிடையே உள்ள உறவு தனித்துவமானது. அமைப்பியல்வாதிகளும் கட்டுடைப்பவர்களும் (இருவரும் ஒன்றா ?) இந்த உறவைக் கடத்திக் கொண்டுபோய் வாசகரை அனாதையாக்கித் துயரத்தில் ஆழ்த்த முயல்கிறார்கள். கடவுளை மறைக்கும் பூசாரிகள் இவர்கள்.
திறனாய்வுக்கு ஆளாவதே படைப்பிலக்கியத்தின் முக்கிய நோக்கம் என்னும் ஒரு தவறான கருத்து தமிழகத் திறனாய்வாளர்களிடமும் படைப்பாளர்களிடமும் நிலவுவதாகத் தோன்றுகிறது. வாசகர்கள் அறவே மறக்கப்பட்டு விட்டார்கள்.
நேற்றைய இலக்கியத் திறனாய்வின் ஏராளமான இசங்கள் இன்று இடம் தெரியாமல் போய்விட்டன. இன்றைய முன், பின் நவீனத்துவங்களுக்கும் நாளை அதே கதிதான் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ரசனை நிலையானது.
ஒரு வாசகர் தன் உணர்வுகளுக்குத் தீனி போடுவதற்காகவே புனைகதைகளைப் படிக்கிறார். ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புகள் அல்லது ஒரு குறிப்பிட்ட வகையான படைப்புகள் அதிகப் பரவசத்தையும் புத்துணர்ச்சியையும் அளித்தால் அவற்றைத் தொடர்ந்து படிக்க அவர் விரும்புகிறார்.
இலக்கியங்களைப் படிக்காமல் இருந்தாலும் குடி ஒன்றும் மூழ்கிப் போகாது.
எழுதும் அத்தனைப் பேரும் எழுத்தாளர்களே. புனைகதைகள் அனைத்தும் இலக்கியமே. இன்னின்ன எழுத்துகளே உயர்ந்தவை, சிறந்தவை என்று கூறுவதற்கான அளவுகோல்கள் எவையுமில்லை. அப்படி அளந்து கூறுவதற்கான பிறப்புரிமையும் எவரிடமும் இல்லை. (மொழிக் காவலர்களைக் கிண்டலடித்த க.நா.சு. வட்டத்தினர் தங்களைத் தாங்களே இலக்கியக் காவலர்களாக நியமனம் செய்துகொண்டதில் உள்ள நகைமுரணை அறியவில்லை.) தனக்குப் பிடித்தவை, சிறந்தவை, உயர்ந்தவை என்று மட்டுமே ஒருவரால் சொல்ல இயலும்.
எழுத்தாளர்களையும் எழுத்துகளையும் போலவே வாசகர்களிலும் உயர்வு தாழ்வு இல்லை. ரமணி சந்திரன், சிவசங்கரி, வாசந்தி போன்றோரின் படைப்புகள் குப்பை என்று ஒருவர் கருதுவது தவறில்லையானால், கி.ராவையும், சு.ராவையும் பாமாவையும் குப்பை என்று மற்றொருவர் கருதுவதும் தவறில்லை.
**
எழுத்தை நம்பி வாழ்க்கையை நடத்த முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தும் எழுதுவதை முழுநேரத் தொழிலாக மேற்கொள்வது எழுத்தாளரின் தவறு. தன் வறுமைக்காக மக்களைச் சாடுவதில் பயனில்லை. ‘எழுதுங்கள்’ என்று அவர்கள் தலையில் எவரும் துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு நிற்கவில்லை.
எழுத்தாளர்கள் முதலில் எழுத்தைத் தவமாக நினைக்கும் மன நிலையிலிருந்து வெளிவந்து அதைத் தொழிலாகவும் (பாரதி சொன்ன பொருளில் அல்ல), வியாபாரமாகவும் கருத வேண்டும். எழுத்தை நம்பி வாழ வேண்டுமென்றால் விற்பனை மதிப்புள்ளவற்றை எழுத வேண்டும். இல்லை, சமூக மேன்மைக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வாசக வட்டத்துக்காகவோ அல்லது புகழுக்காகவோ எழுதுவதாக இருந்தால் பொருளாதார நிலையைப் பற்றிக் கவலை கொள்ளக் கூடாது.
ஒரு நாட்டில் நல்ல இலக்கியங்களோ எழுத்தாளர்களோ இல்லாமல் போவதாலும் குடி ஒன்றும் மூழ்கிப் போகாது.
எழுத்தால் பொருளீட்டாத எழுத்தாளர்கள் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
**
தமிழ் இணைய இதழ்களில் வெளிவரும் பிழை மலிந்த (தமிழ்!)கட்டுரைகளைப் பற்றி என்ன சொல்வது ? தமிழ் தெரியவில்லையென்றால் ஆங்கிலத்தில் எழுதிப் பொருளும் புகழும் சம்பாதிக்காமல் தமிழ் வரி வடிவில் இப்படி எழுதித் தொலைப்பதற்குத் தமிழ் தெரிந்த அளவுக்குக் கூட இவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதைத் தவிர வேறு காரணங்கள் உண்டா ?
பிழையான ஆங்கிலத்தில் எழுதினால் மானம் போகும்; பிழையான தமிழில் எழுதினால் மதிப்புக் கூடும் என்னும் நிலை எவ்வளவு கேவலமானது!
**
இலக்கியம் மொழியால் ஆவது. எனவே ஒரு எழுத்தாளனுக்கு மொழிப்புலமை இல்லையென்றாலும் மொழியறிவு கட்டாயம் தேவை. படைப்பு மனம் இரண்டாவது தேவை. அடிப்படை மொழியறிவு கூட இல்லாத ஒரு எழுத்தாளனிடம் படைப்பு மனம் இருக்கிறது என்பதற்காக உலகில் எந்த நாட்டினரும் எந்த மொழியினரும் அவனைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவதில்லை. (மொழிப் பிழையுடன் கூடிய படைப்புகள் முதலில் அச்சேறுவதேயில்லை. எங்கோ ஒரு சில பிழைதானே என்று கூட விட்டுவிடுவதில்லை.) உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் அனைவரும் தம் மொழியில் பல சோதனைகளை மேற்கொண்டவர்களே. சொல்லப் போனால் அவர்களுடைய மொழியாற்றலும் புதுமைகளுமே நமக்கு அதிக வியப்பை ஏற்படுத்துகின்றன.
ஜாய்சின் புரியாத் தன்மைக்குக் காரணம் அவருக்கு ஆங்கிலம் தெரியாதென்பதல்ல. அவர் தன் மொழியை நன்கு உணர்ந்து அதைக் கடந்து சென்றவர். ஆனால் மெளனியை அவ்வாறு கூற முடியாது. படைப்பு மனம் கொண்டவராக இருந்தாலும் மெளனிக்குத் தமிழ் தெரியாதென்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. தன் எண்ணங்களை வெளியிட மொழிக்கு ஆற்றல் இல்லை எனக் கூறுவது ‘கூடம் கோணல்’ என்பது போன்றது. மொழியை அறிந்து அதில் வண்ணங்களைச் சேர்ப்பவனே சிறந்த படைப்பாளி. மெளனி அப்படிப்பட்டவர் அல்லர். எனவே அவர் சிறந்த படைப்பாளியுமல்லர். (இது அறிவியல்பூர்வமான முடிவென்பது என் அபிப்பிராயம்)
**
திறனாய்வு அறிவியல்பூர்வமானதே என்பதில் உறுதியாக இருப்பவர்கள் ஒரு எளிய சோதனை மூலம் தமது கொள்கையை நிரூபிக்கலாம். (பின் வருவது சோதனைக்கான முன்வரைவு; இறுதி வடிவம் அல்ல)
1. ஒரு ஐந்து அல்லது பத்து ‘அறிவியல் திறனாய்வாளர்களை’ (அல்லது ‘திறனாய்வு விஞ்ஞானிகளை’) ஓரிடத்தில் திரட்டவும்
2. தங்களுக்குள் தொடர்புகொள்ளாத வகையில் இவர்களைத் தனித்தனி அறைகளில் அமரச் செய்யவும்
3. இதுவரை அச்சுக்கு வராத ஒரு சிறுகதையையோ அல்லது குறுநாவலையோ அல்லது இரண்டையுமோ கொடுக்கவும்
4. அதை /அவற்றைப் படித்துத் தனித்தனியாகத் தங்கள் திறனாய்வை எழுதுமாறு கேட்டுக்கொள்ளவும்
5. திறனாய்வுகள் அனைத்தும் ஒன்றுபோலவே இருந்தால் சோதனை வெற்றி என்பதில் ஐயமில்லை.
ஏமாற்றுகளுக்கு இடங்கொடுக்காத வகையில் இச்சோதனையை மேம்படுத்தக் கூடிய ஆலோசனைகளை வழங்குமாறு நண்பர்களை அன்புடன் வேண்டுகிறேன். (தம் ஆய்வில் இன்னின்னவற்றையெல்லாம் எழுதவேண்டும் என்று திறனாய்வாளர்கள் முன் கூட்டியே கூடித்திட்டமிட்டு ஏமாற்றுவதற்கான வாய்ப்புள்ளது)
சவாலை ஏற்பவர்களுக்குப் பரிசுத்தொகை ஏதுமில்லை.
baalakumar@hotmail.com
- அச்சமும் அருவருப்பும் – மலர்மன்னனின் ‘அற்பஜீவிகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 76)
- கணியழகே!
- புலிநகக் கொன்றை.
- நிச்சயமாய் …… நித்தியமாய் …….
- மொழி
- விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி
- விண்கோள் வெள்ளியைச் சுற்றிய மாஜெல்லன் விண்வெளிக் கப்பல் [Magellan Spaceship that Orbited Venus [1989-1996]
- திறனாய்வு, எழுத்தாளர், எழுத்து, மெளனி.
- நியூயார்க் நகரில் இந்திய இலக்கிய மாநாடு
- தமிழே ! தமிழே !
- உதவும் கரங்கள் நிதி திரட்டும் நிகழ்ச்சி
- தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்கள்
- அவளும் மல்லிகையும்…..
- இரண்டு கவிதைகள்
- மகா கவி
- நினைவெல்லாம் பாரதியே
- பாரதி – புதுநெறி காட்டிய புலவன்
- ஞாபகங்கள்
- கண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ்
- மண் பயனுற வேண்டும்
- ‘H1 மாமி ‘
- துபாயில் எழுத்தாளினி மீனா நவநீதகிருஷ்ணன்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து மூன்று
- விடியும்! நாவல் – (13)
- கடிதங்கள்
- மழைநீர் சேகரிப்பு, உயிர்ப்பலித் தடுப்பு சட்டங்கள் யாருக்காக ?
- வாரபலன் (செப்டம்பர் 4, 2003 – இங்கிலீஷ்கார திருடன், வாத்தியார் தினம், வியத்நாம் மிளகு இதர)
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 1 (நெடுங்கதை)
- நிஜ நாடக இயக்கத்தின் கலகக்காரர் தோழர் பெரியார்
- குறிப்புகள் சில-செப்டம்பர் 11 2003- அருந்ததி ராய்-சராய்-செப்டம்பர் 11-இரண்டு நூல்கள்
- குமரிஉலா 2
- இந்த வாரம் இப்படி : செப்டம்பர் 11, 2003 (ஆங்கிலம் என்ற விலங்கு, ஏரியல் ஷரோனும் இடதுசாரிகளும்)
- சென்னை
- சொற்கள்
- எனக்கொரு மரணம் வேண்டுமடா…