தவறித் தெறித்த சொல்!

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

ஜோதிர்லதா கிரிஜா


இருமனம் கலந்தால் திருமணம் என்பது ன்றோர் வாக்கு
இருப்பினும் என் மகளைக் காதலிப்பவன் – சரியான புறம்போக்கு!
வரதட்சிணை ஈதல் நலம் என்றான் ! ஏனென்றால்,
வெறுங்கை வீசிவரும் மருமகளைத் தன் அன்னை
வரவேற்கமாட்டாள் முழுமனசாய் என்றான் – நொண்டிச்சாக்கு! எனவே,
இருதரப்பிலும் பேசிமுடித்து, என்னாலியன்ற
ஒரு தொகைக்கும் சில நகைக்கும் வேறு வழியின்றி
ஒருமனத்தோடு ஒப்புக்கொண்டேன் – னால்

நகைகளில் மட்டும் கொஞ்சம் வெட்டு விழுந்தது.
பகை யின்றிப் புகுந்த வீட்டில் எங்கள் மகள்
நகை முகத்தொடு வாழவேண்டுமெனில் நாங்கள்
வகை வகையாய்ச் செய்துபோட ஒப்புக்கொண்ட
நகைகளையெல்லாம் போடத்தானே வேண்டும் ? எனவே,
தகைமையும் தன்னலமின்மையும் மிக்க என்
மனையாளைச் சரணடைந்தேன் – அவள் கழுத்து
நகை தன்னைக் கழற்றித் தந்தால் என் மனப்
புகைச்சல் தீருமென்றேன் புன்னகையோடு.

திடுக்கிட்ட பார்வை யொன்றால் தீண்டினாள் என்னையவள்;
வெடுக்கென்று உடனே சொன்னாள்: “இது என் அப்பா எனக்கென்று
எடுத்துக்கொடுத்த நகை என் திருமணத்தின் போது!
கொடுக்கமாட்டேன் கழற்றி இதை நான் ஒரு போதும்!
அடுக்காது இதை நீங்கள் நம் மகளுக்குக் கொடுத்தல்!” என
அடுக்கினாள் வரிசையாய் என் மனையாள் அப்போது.
சிடுக்கு அவளால் தீருமென்று சிந்தை கலங்காதிருந்த நான்
தொடுக்க நேர்ந்தது சொற்போர் அவளோடு.

“முடியவே முடியாது! தரமாட்டேன் என் சங்கிலியை!” என்று
பிடிவாதமாய் எனக்குதவ மறுக்கின்ற இவளை நான்
அடித்தாலும் தப்பில்லை என்றுதான் அக்கணம் தோன்றியது! – அவளைக்
கடிந்து பேசியும் அறிந்திராத நான் அவள் தன்
முடிபற்றி உலுக்க நீண்ட முன்னங்கை தனையே மிகச்
சடுதியில் கட்டுப்படுத்திச் சடக்கென இழுத்துக் கொண்டேன்.
“தடிமனாய் ஒரு வெள்ளிச் சங்கிலியில் தங்கமுலாம் பூசித் தாலிக்
கொடியாய்த் தரவேண்டியதுதான்! வேறு வழியில்லை!” என்றேன் நான்.

இப்படி நான் சொல்லிவிட்டுப் பெருமூச்செறிந்த போது
எப்படித்தான் எனை நோக்கிக் கண்விரித்தாள் என் மனையாள்!
கப்பல் கப்பலாய் அவள் கண்ணில் நான் கண்டறியா அச்சம்!
“அப்படி மட்டும் செய்யவேண்டாம்!” என்றவள் அலறினாள் பலமாக.
“செப்பிடு வித்தை செய்தா பின் அதைப் பெறுவேன் ?” என நானும் இரைந்தேன்.
“தப்பான அதுபோன்ற காரியத்தை என் அப்பாவும் செய்ததால்தான்,
இப்போது அதைக் கழற்றித் தர இயலவில்லை,” என்றாளவள்!
தப்பிப்போய் வந்து விழுந்த தானறியாச் சொல்லாலே பின்
தம்பித்து நின்றாளவள்! நானும்தான்!!

jothigirija@hotmail.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா