தலைவர்களே படிக்காதீர்கள் .. பேசுங்கள்

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

கிரண் பேடி


சில வாரங்களுக்கு முன்னர் நான் கொல்கத்தாவில் இருந்தேன். நிகழ்ச்சி ஒரு விவாதப்போட்டி. இது பிராந்திய விவாதப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவில் போட்டியிட அமைக்கப்பட்ட நிகழ்ச்சி. நான் இந்த விவாதப்போட்டியில் நடுவர்களில் ஒருவராக உட்கார்ந்திருந்தேன்.

மாநிலத்தின் கவர்னர் இதன் முக்கிய விருந்தினராக உட்கார்ந்திருந்தார். விவாதத்தின் தலைப்பு ‘இந்தியா மற்ற நாடுகளுக்காக மனித வளத்தை உருவாக்கித்தந்துகொண்டிருக்கிறதா ? ‘ ( ‘Does India develop human resources for others ? ‘) . இதனை ஒட்டியும் வெட்டியும் மாணவர்கள் பேசவேண்டும்.

கவர்னர் தன் உரையில் இந்த விவாதத்தலைப்பைப் பற்றிய எந்த கருத்தையும் சொல்லவில்லை. பதிலாக, நாட்டுக்கு ஒரு தொலைநோக்கு (vision) வேண்டும் என்பதைப் பற்றி பேசினார். நல்லது என்று நான் நினைத்தேன். கவர்னர் இப்போது இந்த தலைப்பையும், தேசிய மாநில திட்டங்களையும் இணைத்துப் பேசப்போகிறார் என்று நான் நினைத்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. பதிலாக கவர்னர், குழந்தைகளுக்கு வாழ்க்கையை ஒழுக்கத்தோடு வாழ வேண்டிய அவசியத்தைக் கற்றுத்தர வேண்டும் என்பதாக தன்னுடைய பேச்சை மாற்றினார். எல்லாம் நல்லதுதான். ஆனால் தலைப்புக்குச் சம்பந்தமில்லாததாயிற்றே. இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. எனக்குள் தோன்றிய கோபத்தை அடக்க, நான் கவர்னர் என்ன பேசியிருக்க வேண்டும் என்பதாக ஒரு உரையை எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதிக்கொண்டிருக்கும்போது, ஒரு நிகழ்ச்சி நடத்துனர் என்னிடம் வந்து கவர்னரின் உரை எனக்கு வேண்டுமா என்று கேட்டார். நான் ‘நன்றி வேண்டாம், நான் இப்போது கவர்னரின் உரையைத் திருத்தி எழுதிவிட்டேன் ‘ என்று பதில் சொன்னேன். நான் என்ன சொன்னேன் என்பதை அவர் உணர்ந்துகொள்ளவில்லை என்பது தெரிந்தது. நான் அப்போது எழுதியதை என்ன செய்வதென்று கூட எனக்குத் தெரியவில்லை.

விவாதம் ஆரம்பித்தது. இளைஞர்கள் மிக்க தெளிவாக எவ்வாறு இந்தியா உலகத்துக்காக மனித வளத்தை உருவாக்கித்தந்துகொண்டிருக்கிறது என்று வாதித்தார்கள். பணம், தனிமனித முன்னேற்றம், வாய்ப்புகள் இல்லாமை, புகழ், கெளரவம், குடும்ப உறவுகள், வசதி, அதிகாரம், இட ஒதுக்கீட்டுக் கொள்கை போன்றவை காரணமாக எவ்வாறு இந்தியாவிலிருந்து பெரிய அறிவாளிகள்-நகர்வு நடந்துகொண்டிருக்கிறது என்று விளக்கி வாதித்தார்கள். பெரிய செலவு செய்து பல லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்தபின்னர் அவர்களில் மிகச்சிறந்த மாணவர்கள் இந்தியாவிற்கு வெளியே சென்று விடுகிறார்கள் என்பதைக் கூறினார்கள். அவர்கள் பல பில்லியன் டாலர்களை சம்பாதித்தாலும் அவர்கள் இந்தியர்களாகச் சம்பாதித்தார்களே தவிர இந்தியா சம்பாதிக்கவில்லை என்பதை குறிப்பிட்டார்கள். எதிர்தரப்பில் வாதிட்டவர்கள், இந்தியாவில் நடந்த மனித வள வளர்ச்சி காரணமாக இன்று இந்தியாவில் மென்பொருள் துறையில் மிகுந்த வளர்ச்சி நடந்திருப்பதாகவும் ,அது தொடரும் என்றும், ஆகவே எல்லாம் இழந்துவிட்டோம் என்று சொல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார்கள்.

பிறகு நீதிபதிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் பேசும் வாய்ப்பு வந்தது. இப்போது என்னுடைய உள்மனப்போராட்டம் முன்னுக்கு வந்தது. இந்தத் தலைப்பு கொள்கைகளையும் திட்டங்களையும் உருவாக்குபவர்களிடமிருந்து பதில் கோரும் தலைப்பு. ஆனால் பார்வையாளர்களுக்கு பதில் கிடைக்கவில்லை. மாணவர்கள் தெளிவாக நோக்கமற்ற திட்டங்கள் இருப்பதைப் பற்றி பேசினார்கள். இதுவே நான் கவர்னர் பேசிக்கொண்டிருக்கும்போது எழுதியதும்.

பேசுவதற்கு என் முறை வந்தபோது, நான் இன்னும் அதே மனப்போராட்டத்தில் இருந்தேன். பிறகு நான் என் மனத்தில் இருந்தவற்றை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டேன். நமது நோக்கம் இந்தியா இந்தியாவுக்கான மனித வளத்தை உருவாக்கிக்கொள்வதே முதன்மையான விஷயமாக இருக்க வேண்டும் என்று பேசினேன்.

தேசிய நோக்கம் (national vision) என்னவாக இருக்க வேண்டும் என நான் யோசித்ததைப் பேசினேன். ‘ஒவ்வொரு குழந்தைக்கும் அருகாமையிலிருக்கும் பள்ளியில் மிகுந்த தரமுள்ள கல்வி கிடைக்க வேண்டும், ஒவ்வொரு குழந்தைக்கும் அருகாமையிலேயே மிகுந்த தரமுடைய மருத்துவ மனையும் சுகாதார அமைப்பும் கிடைக்க வேண்டும். விளையாட்டு மைதானமும், இன்னும் கற்பனை வளத்தைப் பெருக்கக்கூடிய அமைப்பும் இருக்க வேண்டும் ‘ என்றும் குறிப்பிட்டேன். ஒவ்வொரு விடலைப்பிராயத்து சிறுவன் சிறுமிக்கும் ஒரு தொழில் கற்கும் வாய்ப்பு இருக்க வேண்டும், அது எதிர்காலத்தில் அதன் மூலமாகவே சம்பாத்யத்துக்கும் வழிதரும்படியாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் உயர்கல்விக்கும், உயர் தொழில்கல்விக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் உரிமைகளையும் கடமைகளையும் நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் அளவுக்கு கல்வி இருக்க வேண்டும். ஒவ்வொரு இளைஞனும், இளைஞியும் குறிப்பிட்ட அளவுக்கு சமூக சேவை செய்து சமூகம் எப்படி இயங்குகிறது என்பது பற்றிய புரிதலும், சமூகம் அவர்களுக்குத் தரும் பங்களிப்பும், அவர்கள் திரும்ப சமூகத்திற்கு ஆற்றவேண்டிய கடமை பற்றிய தெளிவும், சமூகத்துக்கான நன்றியும் உள்ளவராக வளரவேண்டும். அவன் (அவள்) வளர்ந்து பெரியவராகி தொழில்நிபுணத்துவம் பெற்று வேலையில் இருக்கும் போது, தன் சம்பாத்தியத்தில் ஒரு பங்கை மீண்டும் தன் நாட்டிற்கே தந்து அந்தப் பங்கு தன் சந்ததியினருக்கும், எதிர்கால இந்தியர்களுக்கும் பயன்படுமாறும் தான் பெற்ற வாய்ப்பு தன் நாட்டின் எதிர்காலத்தினருக்குக் கிடைக்குமாறும் இருக்க வேண்டும். வேலைவாய்ப்புப் பற்றியும், வியாபாரம்பற்றியும், உற்பத்தி பற்றியும், மூலதன வாய்ப்பு பற்றியும் தொழில் துவங்க தேவையான விஷயங்கள் பற்றியும் எல்லா விஷயங்களையும் ஒரே ஒரு அரசாங்க அலுவலகத்திலேயே எளிய முறையில் ஒவ்வொரு இந்திய இளைஞனும், இளைஞியும் பெறும் வழி செய்ய வேண்டும்.

இப்படி என்னுடைய பேச்சை முடிக்கும்போது, நான் தலைமை தாங்கும் முக்கிய விருந்தினர்களுக்கான வரைமுறையையும் கூறினேன். வெறுமே எழுதப்பட்ட பேச்சுக்களை படிக்காமல், பார்வையாளர்களுடன் பேசி, தலைப்பு பற்றிய அவர்கள் கருத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இருவருமே பலன் பெறலாம். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் புதிய விஷயங்களைக் கற்கவும், தங்களது நோக்கங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இதுவரை நடந்த திட்டங்களின் பலன்களைப் பற்றிய நேரடி கருத்துக்களைப் பெறவும் உதவும்.

பார்வையாளர்கள் என்னுடைய தொலைநோக்கு அறிக்கைக்குக் கைதட்டினார்கள். ஆனால் முக்கிய விருந்தினர் நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கவில்லை- நல்ல வேளையாக. அடுத்த நாள் பத்திரிக்கைகளில், இது பற்றி குறிப்பிட இடம் இல்லை. நான் முக்கிய விருந்தினரோடு கைகுலுக்கியது மட்டுமே படமாக வெளிவந்திருந்தது.

என்னுடைய தனிப்பட்ட கருத்துப்படி, தன் குடும்பத்தாரையும், வீட்டையும் விட்டு தொலைதூரம் அந்நிய நாட்டுக்குச் செல்லவேண்டும் என்ற உந்துதலுக்கு, இது போன்ற தொலைநோக்கற்ற அரசாங்கம் உருவாக்கிய சூழ்நிலையே காரணம்.

நம் எல்லோருக்கும், கடந்து செல்லும் இன்னொரு குடியரசு நாள் வாழ்த்துக்கள், ஜெய் ஹிந்த்.

**

பஞ்சாபிலிருந்து வரும் டிர்ப்யூன் பத்திரிக்கையிலிருந்து.

Series Navigation

கிரண் பேடி

கிரண் பேடி