தமிழ்க் கவிதையில் பாலியல் இருப்பின் குரல்

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

வெளி ரெங்கராஜன்


பாலியல் இருப்பு என்பது வாழ்க்கையின் இயல்பான ஒரு பகுதியாய் உரிய முக்கியத்துவமும், மதிப்பும் அளிக்கப்பட்டு கொண்டாடப்பட்ட ஒரு நிலையையே நம்முடைய பண்டைய இலக்கியங்கள் பிரதிபலித்தன. மதங்களின் ஆளுகைக்கு உட்பட்ட பிறகு தான் பெண் உடலையும், பாலியல் ஈடுபாட்டையும் வெறுப்புடனும், அருவருப்புடனும் பார்க்கக் கூடிய ஒரு பார்வை உருவானது. சமூக அளவிலும் ஆண்வழிச் சமூக முறைகள் , பெண்ணை கட்டுப்பாட்டுக்கும், கண்காணிப்புக்கும் உரியவளாக்கி பிறரை சார்ந்து வாழும் நிலைக்கு தாழ்த்தின. பெண் மாதவிடாய் , குழந்தை பெறுதல் ஆகிய இயற்கையான உயிரியல் செயல்பாடுகளால் தத்துவ சிந்தனைக்கும் ஆன்ம விடுதலைக்கும் தகுதியற்றவளாய் வேதமரபு அவளை நிர்ணயம் செய்தது. கோவில் சடங்குகளுடன் இணைந்த நடனம், கூத்து போன்ற கலைகள் பெண்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. இசையும், கூத்தும் காமத்தை மிகுவிப்பது என்ற பொருளில், ‘ கிளை நரம்பு இசையும் கூத்தும் கேய்ந்தெழுந்தீன்ற காம/விளைபயன் இனிதின் துய்த்து வீணை வேந்து உறையும் மாதோ ‘- என்று சமண இலக்கியமான சீவகசிந்தாமணி கூறுகிறது.

இவையெல்லாம் ஒரு மேல் வர்க்க மனப்பான்மை என்றாலும் கூட ஆண்வழிச் சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் வெகுஜனஆழ்மனத்தின் ஊடுருவலை உண்டாக்குவதிலும் இவை பெரும்பங்காற்றின. ஆனால் பெண்கள் , சாதாரண மக்கள், விளிம்புநிலை மக்கள் ஆகியோரின் வாழ்நிிலை சார்ந்த மாற்றுக் குரல்களும் இதே காலகட்டத்தில் சில மாற்று இலக்கியத்தில் எதிரொலித்தன. திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்தாலும் அறம், பொருளுக்கு இணையாக காமத்துக்கும் அதிகாரம் படைத்தார். ராம காதை எழுதிய கம்பர் திருவிடைமருதூரில் வாழ்ந்த தேவதாசிகளின் வாழ்க்கை பற்றியும் சில தனிப் பாடல்கள் எழுதியிருக்கிறார். காப்பிய மரபிலிருந்து – விிலகிய எண்ணற்ர சிற்றிலக்கியங்கள் நடைமுறை வாழ்க்கையில் காணக் கிடைக்கும் ஆண் , பெண் உறவுநிலைகளின் பல்வேறு படிமங்களை வெளிப்படுத்தின. வஞ்சி, மாலை, தூது போன்ற சிற்றிலக்கியங்களில் இறுக்கங்களற்ற நெகிழ்வான பாலியல் நிலைகளும், ஒரு தீர்க்கமான பெண் குரலும் ஒலிப்பதைப் பார்க்க முடியும். குற்றாலக் குறவஞ்சியில் காப்பியப் பெண்களின் வாழ்க்கை மதிப்பீடுகளை கேள்விக்குட்படுத்தி , மாறாக தங்கள் உறவு நிலைகளில் இழையோடும் பரஸ்பர நம்பிக்கையையும், உறுதியையும் வெளிப்படுத்தும் குறவன்ன் குறத்தியின் குரலைப் பார்க்கலாம். நாட்டார் புராணமான அல்லி அரசாணி மாலையில் செவ்வியல் சம்பிரதாயத்துக்கு மாற்றான ஒரு ஆணாதிக்க எதிர்ப்புக் குரல் தீவிரமாக ஒலிக்கிறது.

அல்லி அரசாணிமாலையில் பிரபலமான மகாபாரத காவியத்தின் கதைக் கூறுகள் பல மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு ஒரு தமிழ் நாட்டுப்புற கதையாடல் பின்புலத்தில் பெண்ணின் ஒரு மாறுபட்ட கட்டுமானம் முன்நிறுத்தப்படுகிறது. இதில் அல்லி தன்னுடைய போர்த்திறன் , நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியுடன் தன்னுடைய எதிரிகளான அர்ஜுனன், பீமன், கிருஷ்ணனின் ஆண்மையை திட்டமிட்டுத் தகர்க்கிறாள். சனாதனபாலியல் சமன்பாடு தலைகீழாக்கப்பட்டு, ஒரு தன்னிச்சையான, சுயத்திறன் மிக்க ஒரு பாலியல் பெண் படிமம் இக் கதைப் பாடலில் முன்வைக்கப்படுகிறது. ஆண்மை, பெண்மை தொடர்பான மாறாத கருத்தாக்கங்களை மறுவடிவம் செய்து, அதுவரை பிரபலமாக செல்வாக்கு செலுத்திய ஆண்மையக் கோட்பாடுகளை நாட்டார் கதைப்பாடலான அல்லி அரசாணி மாலை துணிச்சலாக கட்டுடைப்பு செய்தது. மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் வில்லுப்பாட்டு வடிவில் இதுபோன்ற பல பெண்மையப் புராணங்கள் வெளிப்பட்டுள்ளன. பெண்ணடிமையை வலியுறுத்தும் பல செவ்வியல் பெருங்கதையாடலுக்கு மாற்றாக நம்முடைய பல நாட்டுப்புற இலக்கியங்களில் பெண்குரல் என்பது உரிய மதிப்புடனும், கவுரவத்துடனும் எதிரொலிக்கிறது.

‘ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு ‘ என்று அறியப்படும் 17ம் நூற்றாண்டி வாழ்ந்த நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஆவுடையக்காளின் நாட்டுப்புற பாணியில் அமைந்த வாய்மொழிப் பாடல்கள் சாதித் தீட்டு, பெண் தீட்டு ஆகிய ஆண்களின் கருத்தியல் தீட்டுக்கு எதிரான கலகக் குரல் எழுப்புகின்றன. ‘எச்சில் எச்சிலென்று புலம்புகின்றார் மானிடர்கள் / எச்சிலில்லாத இடமில்லை பராபரமே/உலகத்துப் பிள்ளையும் உன் கக்கத்துத் தீட்டன்றோ/ உன்னுடைய வெட்கத்தை யாரோடும் சொல்வேன்/ ‘ என்றும், ‘குறத்தி தொட்ட தீட்டுடனே குளித்து விட்டால் போமோ/ தீட்டென்று மூன்று நாள் வீட்டை விட்டு விலக்கி / நாலாம் நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி / ஆசாரமாச்சுதென்று ஐந்தாம் நாள் முழுகி/ அகத்திலுள்ள பொருள் தொடுவாய் அகத்தீட்டு போச்சோ- ‘ என்றும் பெண் உடலாலும், மனதாலும் துன்புறும் வேளையில் அவளை அவமானப்படுத்தி விலக்கும் ஆணின் கருத்தியலைச் சாடுகிறார். 17ம் நூற்றாண்டுஆவுடையக்காள் நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமல்லாமலாட்டம் , பாட்டம் , உடற்கூறுக்கலைகள் விளையாட்டு ஆகிய பல வடிவங்களில் பெண் உடல் கொண்டாட்டம் என்பது ஒரு முக்கியமான கூறாக இருந்திருக்கிறது.ஆண்கள், பெண்களின் பாலியல் வாழ்க்கையின் தன்மைகள் ஒளிவுமறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ளப்பட்டன.தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியின் போது இளம் பெண்களும், ஆண்களும்பாலியல் தன்மைகள் குறித்த முறையான விளக்கம் பெறுவதற்காக ஒருவகையான உடற்கூற்று அம்சங்கள் குறித்த கல்வி ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு பகுதியாக இருந்தது.தெருக்கூத்திலும் கட்டியங்காரன் வாயிலாகபாலியல் வாழ்க்கையின் கூறுகள் விளக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆண், பெண் சமத்துவம் பற்றிய கோஷங்கள் எல்லாம் ஆங்கிலேயர் வரவுக்குப் பின் உருவான மத்திய தர வர்க்கத்தின் குற்றவுணர்வு மனநிலையின் வெளிப்பாடே. உண்மையில் பெண் என்பவள் ஆணுக்கு மேலானவளோ, கீழானவளோ அல்ல. சமமானவளோ கூட அல்ல. ஆனால், வேறானவள் என்பதையே நம்முடைய வேதம் தவிர்த்த மக்கள் இலக்கியங்களும், வாழ்நிலையும் பிரதிபலித்தன.

இன்றைய தமிழ் நவீனக் கவிதை பெண்களின் இந்த வேறுபாடுகள் கொண்ட வடிவத்தையே முன்நிறுத்துகிறது. உடல் கொண்டாட்டம் என்பது பாலியல் வாழ்க்கையின் இயல்பான சமூகக் கூறாக இருந்த நம்முடைய வேதம் தவிர்த்த தொன்மை மரபின் ஒரு தொடர்ச்சி தான் இது. ஆழ்மனதில் மேல்வர்க்கத்தின் பெண்ணடிமை சனாதனப் பார்வை ஊறியுள்ள ஒரு மத்தியவர்க்கக் கட்டுமானமே இத்தகைய வெளிப்பாடுகளால் அத்ர்ச்சி அடைகிறது. இதே சனாதனக் கட்டுமானத்திலிருந்து தான் ‘என் உடல் விழைவைத் தீர்க்க வா ‘ என்று கடவுளையே அழைத்த ஆண்டாளின் மாற்றுக் குரலும் ஒலித்தது. இத்தகைய தீர்க்கமான மாற்றுக்குரல்களெ பாலியல் குறித்த சனாதன போலிக் கட்டுமானங்களுக்கு அதிர்ச்சி அளிப்பவைகளாக இருந்திருக்கின்றன. நம்முடைய நவீனப் பெண்கவிஞர்களின் கவிதைகளில் வெளிப்படும் உடல் இருப்பின் கவனத்தை இது போன்ற ஒரு எதிர்வினையாகவே பார்க்க முடியும். அர்த்தமற்ர எதிர்ப்புகளையும், தாக்குதல்களையும், அவதூறுகளையும் பொருட்படுத்தாதுபல பெண்கவிஞர்கள் இன்று பலியல் இருப்பு குறித்த சிறப்பான சொல்லாடல்களை உருவாக்கி வருவது மிகுந்த உற்சாகம் அளிக்கும் விஷயமாக உள்ளது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படிப்பட்ட சொல்லாடல்கள் உருவாக்கப்படுகின்றன என்பதே அச்சூழலின் படைப்பு சக்திக்கான அடையாளமாக இருக்கிறது. அவ்வகையில், சுகிர்தராணியின், பின்வரும் கவிதையை தடைகளற்ற, தீர்க்கமும், நெகிழ்வும் கொண்ட ஒரு பெண் மனதின் வெளிப்பாடாகக் கொள்ள முடியும்.

‘தார்ச்சாலையின் காதலி நான்/ இருளின் நிறத்தில் கரைந்து நிற்கும்/அதன் யவ்வனம்/என்னைக் கிளர்வூட்டுகிறது / பிசிறு நீக்கிய ஓவியத்தின் நளினமென / அடர் மரங்களோடு நெளிந்து செல்லும்/ அதன் உயிரோட்டம்/என் பருவங்களை உடைக்கிறது/ தன்னை நகர்த்தாமல் என்னை நகர்த்தும்/ மாயத் தோற்றம்/ கண்களைக் கூசப் பண்ணுகிறது./ /அருகமைந்த அறைக்குள்ளிருந்து / ரசித்துக் கொண்டிருக்கிறேன்/ குளிர்ந்த மழையில்/ அது வெற்றுடம்போடு குளிப்பதை / வெப்பத்தில் உடல் உலர்த்திக் கொள்வதை / உயிர்களை விழுங்குகையில் / ஆண் வாசனை வீசுமதன் நடுக்கமுற்ற மார்பில் முத்தமிடுகிறேன் / அளவு கூடிய மின்கசிவாய் என் உதடுகளில் பரவுகிறது / தார்ச் சாலையின் ஊமைவலி. ‘

இவை சில அடையாளங்கள் மட்டுமே. வெவ்வேறு காலகட்டங்களில் மன எழுச்சியுடனும், படைப்பு வேகத்துடனும் எண்ணற்ற சொல்லாடல்கள் உருவாகும் நிலையிலேயே, பாலியல் இருப்பின் அழகியல் நிலைகள் குறித்த புரிதல்கள் மேம்படுவதற்கான சூழல் ஏற்படும்.

(நன்றி ; தீராநதி அக்டோபர் இதழ்)

Series Navigation

வெளி ரெங்கராஜன்

வெளி ரெங்கராஜன்