தமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

ஜடாயு


தமிழக அரசின் இந்த சமீபத்திய சட்டம் அதீத ஆர்வக் கோளாறின் விளைவு போலவே தெரிகிறது. இல்லையென்றால் பசு வதைத் தடைச் சட்டத்தை வெகு தீவிரமாக நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளையும் தூக்கிச் சாப்பிடுவது போன்ற இந்த ஒரு நடவடிக்கை எதற்காக ?

மாமிசம் உண்போர் என்னும் ஒரு குழு இருக்கும் வரை, எந்த அரசாங்கமும், அதிகார வர்க்கமும் இது போன்ற ஒரு சட்டத்தின் மூலம் மட்டுமே உயிவதையை கட்டுப்படுத்த முடியாது. இப்படிக் கடவுளர்க்குப் படைத்த பலியை பக்தர்கள் பகிர்ந்து உண்ணுகின்றனரே அன்றி வீணாக்குவதுமில்லை.. பசிக்காகவும், ருசிக்காகவும் உயிர்களைக் கொன்று தின்பது தார்மீக அளவில் சரி, ஆனால் ‘பலி ‘ என்ற ஒரு சடங்கில் உயிர்வதை செய்யப் பட்டால் அது தவறு என்ற நிலைப்பாட்டை அரசு எப்படி எடுக்கலாம் ? இந்த சட்டம் நிறைவேறுமானால் இதே போன்ற சமநோக்கு அற்ற பாரபட்சமான பல சட்டங்கள் உருவாக இது அடிகோலி விடும்.

அது மட்டுமல்ல, பல்வேறு வழிபாட்டு முறைகளையும் தன்னகத்தே கொண்ட பரந்த இந்து சமயத்தின் வரலாற்றில், மத உணர்வுகளை முடக்கும் இத்தகைய கட்டாயச் சட்டங்கள் என்றுமே இருந்ததில்லை. புத்த சமயத்தை வெறிகொண்டு பரப்பிய அசோக மன்னரின் காலத்தில் கூட ‘குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட நேரங்களில் மீன் பிடிக்கக் கூடாது ‘ என்பது போன்ற சட்டங்களே இருந்தன. மேலும் அன்பு வழியில் சைவ, வைணவ சமயங்களின் மறுமலர்ச்சிக்கு அடிகோலிய நாயன்மார், ஆழ்வார்களும் இத்தகைய வழிபாட்டு முறைகளை சட்டம் போட்டுத் தடுக்க வகை செய்யவில்லை. சிவனுக்கு ஊன் ஊட்டிய கண்ணப்பரையும், சிறுத்தொண்டரிடம் பிள்ளைக் கறி கேட்ட காளாமுக சிவனடியாரையும் பற்றிய குறிப்பு பெரிய புராணத்தில் உண்டு.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் முழுக்க சைவ உணவு உண்பவராயினும், காளியின் பலிபீடத்தில் படைக்கப் பட்ட மாமிச உணவை ‘பிரசாதம் ‘ எனக் கருதி உண்டார். சுவாமி விவேகானந்தர் ‘பலி ‘ என்னும் சடங்கை தியாக உணர்வின் உருவகமாகவே கண்டார். ‘உனது புகழ், உனது செல்வம், உனது செல்வம், உன் திறமைகள் அனைத்தும் அன்னையின் பலி பீடத்தில் அவளுக்காக அர்ப்பணிக்கப் பட்ட பொருட்களே என்பதை மறவாதே ‘ என்பது அவரது வாசகம். தமிழகக் கோயில்களில் பலியிடும் பெரும்பாலான கிராம மக்கள், இதைத் தங்களது சமய உணர்வின் வெளிப்பாடாகவே கருதுகின்றனர் என்பதில் ஐயமில்லை.. இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.. ஆனால், எந்த சமய சம்பிரதாயத்தில் தான் விதிவிலக்கு இல்லை ?

இந்தக் காரணங்கள் கருதியே, சுத்த சைவ உணவுப் பழக்கத்தை வாழ்க்கை முறையாக ஏற்று, வள்ளுவர்-வள்ளலார்-காந்தியடிகளின் புலால் மறுத்தல் கொள்கைகளைப் பெரிதும் மதிக்கும் என் போன்றவர்களும் முன்வந்து இந்தச் சட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதில் முக்கியமான கேள்வி உயிர்ப் பலி சரியா, தவறா என்பதல்ல. மரபு வழி வந்த, மற்றவர்களைப் பாதிக்காத, தனிமனித சமய நம்பிக்கைகளைப் பற்றி ஒரு தார்மீகத் தீர்ப்பு (moral judgement) கூறும் வகையில் இந்த சட்டம் அமைகிறது என்பது தான்.. இதே போக்கில் தேர் இழுப்பது, பூணூல் அணிவது, பொட்டு வைத்துக் கொள்வது போன்ற விஷயங்கள் பற்றிய அரசாள்வோரின் கொள்கைகள் மக்கள் மேல் திணிக்கப்படுவதற்கான அபாயமும் ஒரு நாள் ஏற்படலாம்.

இந்து மதத்தின் தத்துவங்களை சரியாகப் புரிந்து கொண்டவர்களும், இந்து சமுதாயத்தின் பன்முகத் தன்மையை மனதில் கொண்டு இந்து ஒற்றுமைக்காகப் பாடுபடுபவர்களும் இந்தக் கருத்தினை ஏற்று, தமிழக அரசின் இந்த மக்கள் விரோதச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று நம்புவோம்.

jataayu_b@yahoo.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு