தன் முலைக்காம்பை கிள்ளி எறிந்த மூதாயி

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

ஹெச்.ஜி.ரசூல்


என்னிடம் தொலைவிலிருந்து பேசிய குரல்
ஆணா பெண்ணாவென தெரியவில்லை.
என் கைவசமுள்ள ஓலைச்சுவடி ஒன்றை
முன்னூறு வருடங்களாக தேடித் திரிந்ததாகவும்
தற்போது அதன்விவரம் தெரியவந்ததாகவும்
மிகவும் தணிந்தகுரலில் சொல்லி
அதை கொடுத்துதவ வேண்டியது.
அந்த ஓலைச் சுவடியில் வாழ்ந்து கொண்டிருந்த
மூதாயிடமிருந்து தெரியவேண்டிய
கதைகள் மிச்சமிருப்பதாகவும்
என்னிடமிருந்து மூதாயை மீட்க உத்தேசித்தே
இதை கேட்பதாகவும்
திரும்பவும் சொன்னது அந்தகுரல்.
எனது பரண்களில் கேட்பாரற்று போட்டிருந்த
அந்த ஓலைச் சுவடி கட்டுகளிலிருந்து
அர்த்த ஜாமங்களில் எழுந்துவந்த
ஒப்பாரி அழுகையைக் கேட்டுப் பதறிப் போனதை
முன்பொருநாள் சொன்னபோது
எனக்கு பேய்பிடித்துவிட்டதாக சந்தேகித்தார்கள்.
நான் இல்லாமல் போவதில்
எல்லோருக்கும் சந்தோசம்.
மூதாயின் விசித்திர உலகம்
என்னை வெகுவாய் ஈர்த்தது.
தன் முலைக்காம்பை கிள்ளி வீசினாள்
கடற்பறவையொன்று
அலைகளில் மூழ்கிச் சென்றது.
எங்கிருந்தோ வந்த வனதேவதை
என்னையும் சிறகில் சுமந்து
தன் ஆதிமாய உலகத்திற்கு
கடத்திச் சென்றபோது
இருள்கவியத் தொடங்கியிருந்தது.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்