தஞ்சைப் பெரியகோயில் 1000 ஆண்டு: த சன்டே இந்தியன் சிறப்பிதழ் வெளியீடு

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue

ராகுலன்


தஞ்சைப் பெரிய கோயில் 1000வது ஆண்டையொட்டி த சன்டே இந்தியன் இதழ் கல்லில் எழுந்த கனவு என்ற தலைப்பில் ஒரு சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. கடந்த சனியன்று (செப். 18) மாலை தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் நடந்த விழாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் வெளியிட முதல் பிரதியை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நல். இராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியம், கல்வெட்டு ஆய்வாளர் சி. இராமச்சந்திரன், ஓய்வுபெற்ற இந்திய தொல்லியல்துறை தலைமை கண்காணிப்பாளர் டி. சத்தியமூர்த்தி, ஓய்வுபெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் ஆர்.சம்பகலட்சுமி, மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகியோர் எழுதிய கட்டுரைகள் சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன. சிற்பத்திற்கென தேசிய விருதுபெற்ற சிற்பி வித்யாஷங்கர் ஸ்தபதி, கலை விமர்சகர் தேனுகா, வெங்கட்சாமிநாதன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்மும், சுற்றுலாத்துறை இயக்குநர் மோகன்தாஸ் ஆகியோரின் கருத்துக்களும் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளன.

த சன்டே இந்தியன் சிறப்பிதழை வெளியிட்டுப் பேசிய மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.¢பழனிமாணிக்கம், “தஞ்சாவூர்க்காரர்கள் எந்த ஊருக்குச் சென¢றாலும் ஏதாவது பிரச்னை என்றால், நான் யாரு தெரியுமில்ல. தஞ்சாவூர்க்காரன் என்று சொல்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார்கள். தஞ்சாவூரில் வசிப்பவர்களேகூட எத்தனை முறை பெரிய கோயிலைச் சென்று பார்த்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது. யாரிடமாவது கேட்டால், ஓன்று இரண்டு முறை போயிருப்பேன். ஞாபகமில்லை என¢று சொல்வார்கள். த சன்டே இந்தியன் இதழை தொடர்ந்த படித்துவருகிறவன் என்கிறமுறையில், நாம் செய்ய வேண்டியது இந்தப் பத்திரிகையை ஒருமுறை சேர்த்துவிட்டால் போதும். அதற்குப்பிறகு வாசகன் விரும்பி வாங்கிக்கொள்வான். முந்தைய இதழ்களைவிட தஞ்சைப் பெரியகோயில் 1000வது ஆண்டு சிறப்பிதழ் கட்டுரைகள் சுவையானதாக இருக்கின்றன. முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால் தஞ்சாவூர் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. நாம் காலம் முழுவதும் பெருமைப்படக்கூடிய கலைப்பொக்கிசத்தைப் பெற்றிருக்கிறோம்” என்றார்.

“முதன்முதலில் நிலவரியை முறைப்படுத்திய மாமன்னன் ராஜராஜ சோழன்தான். அவன்தான் முதன்முதலி¢ல் வரி வசூலிப்பததை அறிமுகப்படுத்தி இருக்கிறான். இம்மியளவு என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் அளவுக்கும்கூட அளந்துவைத்திருக்கிறான். த சன்டே இந்தியன் இதழ் மிக்சசிறப்பான ஒரு சிற்றிதழை கொண்டுவந்திருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் பெரிய கோயில் வளர்ச்சிக்காக நிதியைப் பெற்றிருக்கிறான் ராஜராஜன்” என்று பெரிய கோயிலில் கல்வெட்டுச் சான்றுகளைச் சுட்டிகாட்டி விரிவாகப் பேசினார் குடவாயில் பாலசுப்ரமணியம்.

கலை விமர்சகர் தேனுகா பேசும்போது, ஒலிம்பிக் போட்டியைப் பற்றிய டிவி நிகழ்ச்சியில் அங்குள்ள பழமையான டெல்பி கோயில்களைத்தான் காட்டுகிறார்கள். அதுபோல நாம் 1000 ஆண்டு பழமையான பெரிய கோயிலைப் பெற்றிருக்கிறோம் என்றார். அடுத்துப் பேசவந்த தமிழ்ப் பல்கலைக்கழக கட்டடக்கலைத்துறைத் தலைவர் முனைவர் ஜி. தெய்வநாயகம், பெரிய கோயிலை உலகின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக தஞ்சை பெரிய கோயில் இடம்பெற்றது பற்றி பேசினார். எந்த பிரம்மாண்டம் மனிதனால் மீண்டும் உருவாக்க முடியாது என்ற நிலையில் இருக்கிறதோ அதுதான் அதிசயமாக போற்றப்படுகிறது. அந்தவகையில் தமிழர்கள் கட்டடக்கலையில், சிற்பம் மற்றும் ஓவியக்கலையில் சிறந்திருந்தார்கள் என்பதற்கு பெரிய கோயில் வாழும் உதாரணமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது என்று மேற்கத்திய ஆய்வாளர்களின் மேற்கோள்களையும் சுட்டிக்காட்டினார்.

இறுதியாகப் பேசிய பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நல். இராமச்சந்திரன், பெரிய கோயில் குறித்த போலியான கற்பிதங்களை மறுத்தார். பிறகு அரண்மனை குறித்த முனைவர் பட்ட ஆய்வை விரிவாக எடுத்துரைத்த அவர், ஆய்வுப்பணிக்காக தஞ்சைப் பெரிய கோயில் உச்சிக்குச் சென்றுவந்த சிலிர்ப்பான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

வெற்றித்தமிழர் பேரவையின் மாநில இணை பொதுச்செயலாளர் இரா. செழியன் வரவேற்றார். நன்றியுரையில் எழுத்தாளர் ம.செந்தமிழன், ராஜராஜ சோழன் பற்றி மக்களிடம் பரவியுள்ள பொய்யான கருத்துக்களை குறித்துப் பேசினார். விழாவின் தொடக்கத்தில் த சன்டே இந்தியன் இதழின் முதன்மை ஆசிரியர் என். அசோகன், தஞ்சைப் பெரியகோயில் 1000 வது ஆண்டு சிறப்பிதழின் முக்கியத்துவத்தை மிகச்சுருக்கமாக அறிமுகம் செய்தார். விழா நிகழ்ச்சிகளை சுந்தரபுத்தன் தொகுத்து வழங்கினார்.

ராகுலன்

A

Series Navigation

ராகுலன்

ராகுலன்