டாக்டர் ராமதாசும் இசைப்பாடமும்

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

அருளடியான்


டாக்டர் ராமதாஸ் இசையை, பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க கூட்டணியில் சேரும் போது, இதனை ஒரு நிபந்தனையாக வைக்கப்

போவதாகவும் கூறியுள்ளார். இது போன்ற கோரிக்கைகளில் நியாயம் உள்ளதா என்பதை

நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. கலை, இலக்கியம் போன்றவை விருப்பப்

பாடங்களாக இருக்கலாமே தவிர கட்டாயப் பாடமாக இருக்க முடியாது. அப்படி இருக்கவும் கூடாது. ஆனால், தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கட்டாயம் கற்பிக்க வேண்டிய வேறு பாடங்கள் உள்ளன.

1. போக்குவரத்து விதிமுறைகள்

2. சுற்றுச் சூழல் கல்வி

3. வங்கி, அஞ்சல் படிவங்களை பூர்த்தி செய்யும் பயிற்சி

4. போதைப் பொருள் தீமைகளைப் பற்றியும், எயிட்ஸ் பற்றியும் விழிப்புணர்வு

5. பன்மைச் சமுதாயத்தில் பிற மொழியினருடன், பிற மதத்தினருடன் சுமூக உறவைப் பேணுதல்

6. வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளின் போது நிவாரணப் பணி செய்ய பயிற்சி

7. மாணவர்களுக்கு தன்முனைப்பு பயிற்சி

இவற்றையெல்லாம், தனித் தனி பாடங்களாகச் சேர்க்க வேண்டியதில்லை.

சிற்றேடுகளை மாணவர்களுக்கு அளிப்பதன் மூலமும் ஒரு நாள் பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் நடத்துவதன் மூலமும் சிறப்பாகப் பயிற்சி அளிக்க முடியும்.

இயக்குநர் பாலுமகேந்திரா சினிமாவை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்

என முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இப்போது, டாக்டர்

ராமதாஸ் இசையைப் பாடமாக வைக்க வேண்டும் எனக் கேட்டு

இருக்கிறார். இவையெல்லாம் பொறுப்பற்ற கோரிக்கைகள். இவை விருப்பப்

பாடங்களாக இருக்க வேண்டுமே தவிர கட்டாயப் பாடமாக இருக்கக் கூடாது.

அப்படி ஆக்கப் பட்டால், இந்தி மொழிக்கு எதிராக தமிழர்கள் போராடியது போன்று

கட்டாய இசைக்கல்விக்கு எதிராகவும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

டாக்டர் ராமதாஸ், மும்பையின் பால் தாக்கரேவைப் போல, மாறி

வருகிறார். அவரது அறிவிப்புகளையும், போராட்டங்களையும் அலட்சியம் செய்யாமல் நம்

எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய காலம் வந்து விட்டது.


Series Navigation

அருளடியான்

அருளடியான்