ஞானி ஹகீம் ஸனாயின் ஹதீகா

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

தமிழில் : நாகூர் ரூமி


ஹகீம் ஸனாய் ஒரு அறிமுகம்
======================

இஸ்லாமிய சூஃபி கவிதை உலகின் மும்மூர்த்திகளுள் முதலாமவர் பதினோறு மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹகீம் ஸனாய். இரண்டாமவர் ஃபரீதுத்தீன் அத்தார். மூன்றாமவர் ஜலாலுத்தீன் ரூமி. ரூமியே ஒரு கவிதையில்

அத்தார்தான் ஆத்மா
ஸனாய் அதன் இரு விழிகள்

என்று கூறுகிறார். இஸ்லாமிய கவிதை உலகில் ‘தஸவ்வுஃப் ‘ எனப்படும் ஆன்மீகத்தை முதன்முதலாகப் பாடியவர் ஸனாய்தான் என்று கூறப்படுகிறது. இந்தியாவில், குறிப்பாக டெல்லி, குல்பர்கா, முல்தான் போன்ற ஊர்களில் இருந்த ஆன்மீக மையங்களில் ஸனாயின் கவிதைகள் பாடமாகவே போதிக்கப்பட்டன. அறிஞர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டன. நிஜாமுத்தீன் அவ்லியாவிலிருந்து கவிஞர் அல்லாமா இக்பால் வரை இந்தியாவில் ஸனாயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருக்கிறது. தாங்கள் படித்த புத்தகத்திலேயே மிகச்சிறந்த ஒன்றே ஒன்றைக்கூற முடியுமா என்று ஓஷோவைக் கேட்டபோது அவர் சொன்ன பதில் : ‘ஹகீம் ஸனாயின் ஹதீகா ‘!

ஆப்கனிஸ்தான் இந்த உலகுக்குத் தந்த பல சூஃபி கவிஞர்களுள் முதன்மையானவர் ஸனாய். அவர் கஸ்னா அல்லது கஜ்னா(Ghazna) என்ற ஏரியாவில் தெற்கு ஆப்கனிஸ்தானில் பிறந்தார். கி.பி.1131ல், ஹதீகாவை எழுதி முடித்த பிறகு இறந்து போனார்.

பஹ்ராம் ஷா என்ற மன்னனுடைய அரசவைக் கவிஞராக ஆரம்பத்தில் இருந்தாராம். அரசனைப் புகழ்ந்து கவிதைகள் புனைந்து பாடிக்கொண்டு. ஆனால் திடாரென்று அரசர்களின் அரசனாகியன் இறைவனின் மீது நாட்டம் வந்து, அரசவை துறந்து ஆன்மீகக் கவிஞராகிவிட்டதாகக் கூறுகிறார்கள். அப்படி ஆனதற்குத் தூண்டுகோலாகவும் திருப்பு முனையாகவும் ஒரு நிகழ்ச்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு நாள் தெருவில் ஒரு குடிகாரன் ஸனாயைப் பார்த்து, ‘உம் அரசன் பஹ்ராம் ஒரு முட்டாள் ‘ என்றான். ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று சாகி — மதுவை ஊற்றிக்கொடுத்தவன் — கேட்டதற்கு, ‘பின்னே என்ன, இப்போதுதான் கஸ்னா மீது படையெடுத்துள்ளான். அது முடிவதற்குள் இந்தியாமீது படையெடுக்கிறான். அவன் முட்டாளல்லவா ? அந்த முட்டாளுக்காக இது ‘ என்று சொல்லி முதல் கோப்பையைக் காலி செய்தான்.

பின் இரண்டாவது கோப்பை மதுவை எடுத்து, ‘இது முட்டாள் ஹகீம் ஸனாய்க்காக ‘ என்றான். எப்படிச் சொல்கிறாய் என்று சாகி மறுபடி கேட்க, ‘பின்னே என்ன, ஒரு முட்டாள் அரசனைப் புகழ்ந்து கவிதை எழுதுவதில் தன் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருப்பவன் முட்டாள்தானே ? இறந்து போனபிறகு, இறைவன் எனக்கு என்ன கொண்டு வந்தாய் என்று தீர்ப்பு நாளில் கேட்கும்போது, என்ன பதில் சொல்வான் ? கைசேதப்பட்டுப் போவானல்லவா ? அந்த முட்டாளுக்காக இது ‘ என்று சொல்லி இரண்டாவது கோப்பையைப் பருகினானாம்.

அதைக் கேட்டதிலிருந்து ஸனாயின் மனதில் விவரிக்க முடியாத ஒரு தெளிவும் இறைக்காதலும் பிறந்தது. பின்புதான் மனிதர்களைப் பாடுவதை விட்டுவிட்டு உண்மையைப் பாட ஆரம்பித்தார். அதன் விளைவுதான் அற்புதமான ‘ஹதீகா ‘ நமக்குக் கிடைத்திருக்கிறது.

மெளலானா ஜலாலுத்தீன் ரூமியின் புகழ்பெற்ற ஆன்மீக காவியமான ‘மஸ்னவி ‘க்கு முன்னோடியாகவும் முன் மாதிரியாகவும் இருந்தது ஸனாயின் ‘ஹதீகா ‘தான். காவியத்தின் முழுப்பெயர் ‘ஹதீகதுல் ஹகாயிக் ‘. ‘ஹதீகா ‘ என்று செல்லமாகவும் பரவலாகவும் அறியப்படுகிறது. ‘உண்மையெனும் தோட்டம் ‘
என்று அதற்குப் பொருள். ஸனாய் எழுதிய ஏழு காவியங்களில் இன்றுவரை உயிரோடும் வாழ்ந்துகொண்டும் இருப்பது ‘ஹதீகா ‘ மட்டும்தான். அதன் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து சில கவிதைகளைத் தமிழில் தந்துள்ளேன். ஸனாயின் சுவையை நிச்சயம் அறிந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன்.

1
அதரங்களுக்குள் அசையும்
ஒவ்வொரு நாவும்
உயிர் கொடுக்கப்பட்டது
உன்னைப் புகழ்வதற்கே!

2
உனது மாபெரிய புனிதப் பெயர்கள்
உனதருளின் அத்தாட்சி!
கருணையின் கண்காட்சி!
ஆயிரத்து ஒன்று அவை!
தொன்னூற்று ஒன்பதும் அவையே!
(அல்லாஹ்வின் 99 திருநாமங்களை ‘அஸ்மாவுல் ஹுஸ்னா ‘ என்பர்.)

மனிதனின் ஒவ்வொரு
தேவையோடும்
சம்மந்தப்பட்டுள்ளது
ஒவ்வொரு பெயரும்!
உனது ரகசியங்களில்
யாரெல்லாம் இல்லையோ
உனது பெயர்களிலும்
இல்லையவர்!

3
ஒரே சாலையில் பயணித்தாலும்
தனியன் அவன்!
இணை துணையற்றவன்!
என்கின்றன
நம்பிக்கையும் அவநம்பிக்கையும்!

ஏனிந்தப் பாகுபாடு
நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் ?
புரியவில்லை எனக்கு!
கஃபதுல்லாவுக்கும் கோவிலுக்கும்
ஒளியேற்றுவது
ஒரே விளக்குதான்
என்கிறார் ஒரு ஞானி!

4
அவனது நிறையின் அத்தாட்சி
நமது குறையே!
அவனது எல்லாம் வல்லமையின் பிரதிநிதிகள்
அவனது பெயர்களே!
பேரானந்தத்தின் பெருமாளிகையிலிருந்து
வெறுங்கையோடு திரும்புகின்றன
லா-வும் ஹு-வும்

5
இறைவனை அறிந்தவனுக்கு
இறைவனின் இருக்கை
செருப்பின் கீழ் விரிப்பு!

6
முதன்முதலில் படைக்கப்பட்டது
அறிவுதான் எனினும்
அறிவின் சிறகுகள்
அவிந்து போகின்றன
அவனது நெருப்பில்!
அறிவு கற்றுக்கொள்கிறது
அவனது பள்ளியில் பாலபாடம்!

7
காதல் முழுமையடைகிறது
காதலைக்கொண்டு!
அறிவின் கால்களில்
விலங்கு பூட்டுகிறது அறிவு!
காதல் வளர்கிறது
காதலைக்கொண்டு!
அறிவோ தளர்கிறது
அறிவைக்கொண்டு!

8
ஐம்புலனும் ஆறறிவும்
அப்படியே நின்றுவிட்டன அசையாமல்
அவனது சாலையில்!
அறிவின் அதிகபட்ச சாதனை
ஸ்தம்பித்து நிற்பதுதான்!
அறிவைக் கொண்டும்
அறிய முடியாது அவனை!
அவனை அறிய வேண்டும்
அவனைக் கொண்டே!
அறிவு கொண்டுபோகும் உன்னை
வாசல் வரை!
அருட்கதவு திறந்தால்தான்
உள்ளே போகமுடியும்!

9
தன்னையறிந்தவன் தன் நாயனை அறிவான்
தெரியாதா உனக்கு
தாஹா நபி சொன்னது ?
முதல் படியிலேயே கால்வைக்காமல்
எப்படிப்போவாய் மலையுச்சிக்கு ?

10
அவன் ஒருவன்
எனினும் ஒன்று
எனும் எண் அன்று!
ஒன்றை ஒன்றால் பெருக்கினாலும்
ஒன்றுதான்!
இருமை எப்போதுமே
சிறுமைதான்!
பிழைகளும் பாவங்களும்!
ஒன்றில் இல்லை எப்போதுமே
வேறொன்று!
பல என்றாலே குழப்பம்தான்!
ஒன்று எனினும்
இரண்டு எனினும்
அது ஒன்றுதான்!

11
அவனுக்கென்று ஓரிடம்
சிறியதோ பெரியதோ
எப்படி இருக்க முடியும் ?
அவனைப் பொறுத்தவரை
இடம் என்பதற்கு
இடமே கிடையாது!

இடத்தைப் படைத்தவனை
எந்த இடத்தில் வைப்பது ?!
சுவனம் தந்தவனுக்கு சுவனம் ?
காலம்கூட அவனை
அடையமுடியாது காலமாகிவிடுகிறது!

12
இதயத்தின் கண்ணாடியை
பளபளப்பாக்கு!
உண்மையைச் சென்றடைய
உயிரும் பிரார்த்தனையும் பயணிக்கும்
ராஜபாட்டை அதுதான்!
நம்பிக்கையின்மையும் நயவஞ்சகமும்
துருப்பிடிக்க வைத்துள்ளன
அந்தக் கண்ணாடியை!
துருநீக்கித் தூய்மைப் படுத்துவது எது ?
உன் மார்க்கத்தின் தூய்மையே அது!
உன் மனத்தின் தூய்மையே அது!

13
கண்ணாடியினுள் உன் பிம்பம் தெரியும்
எனினும் நீயல்ல அது!
நீ ஒன்று
கண்ணாடியோ இன்னொன்று!

14
கண்ணாடி அறியாது
பிரதிபலிக்கும் பிம்பங்களை!
ஒளிகொண்டு உள்வாங்குகிறது
உன்னை அது!
ஒளியோ சூரியனிலிருந்து பிரிக்க முடியாதது!
எனில் பிரச்சனை
கண்ணின் கண்ணாடியில்தான்!

15
தெளிவாகத் தெரியவேண்டுமெனில்
நேராகத் தூக்கிப் பிடி!
கண்ணாடியை ஒளியில்!
இல்லையெனில்
வானவரைவிட அழகான
யூசுஃப்கூட தெரியலாம்
அசிங்கமாக!

16
உன்னை நீ தெளிவாகக் காண்பது
இதயத்தின் கண்ணாடியில்தான்!
களிமண்ணின் கண்ணாடியில் அல்ல!
உன்னை நீயே
கட்டிக்கொண்ட தளைதான்
உனது களிமண்!
விடுவித்துக்கொள் உன்னை
உன் களிமண்ணிலிருந்து!
உனது களிமண்ணோ குப்பைத் தொட்டி!
உனது இதயமோ
ரோஜாத்தோட்டம்!

17
இதயத்தின் ஒளியை
எதுவெல்லாம் அதிகரிக்கிறதோ
அதுவெல்லாம் இழுக்கிறது உன்னை
இறைவனை நோக்கி!
எல்லோரிடமும் இறைவன் தன்னை
இயல்பாக வெளிப்படுத்தினாலும்
அபூபக்கரிடமோ
அதிசிறப்பாக வெளிப்படுகிறான்!
என்றாரே அஹ்மது!
அபூபக்கரின் இதயத்தூய்மையும்
அடுத்தவரைவிட
அதி சிறப்பாக இருந்ததால்!

18
உச்சிக்குப் போவதற்கும்
ஓராயிரம் படிகள்!
முதல்படி
முஹம்மது சொன்னபடி!
இறுதிப்படி
ஞானத்தின் உறுதிப்படி!

19
சோம்பேறித் தனத்தைவிட மோசமானதை
அறியமாட்டேன் நான்!
நீ படைக்கப்பட்டிருப்பது பணிக்காகவே!
காத்திருக்கிறது உனக்காக
கெளரவ ஆடை!
ஒட்டுத்துணிக்காக நீயேன்
ஓயாமல் அலைகிறாய் ?

ராஜ்ஜியமும் ராஜபோகமும்
எங்கிருந்து கிடைக்கும் ?
மாதத்துக்கு அறுபது நாட்கள் நீ
அலுப்போடு வாழ்ந்தால் ?!

20
ஹில்ம் இல்லாத இல்ம்
ஏற்றப்படாத மெழுகுவர்த்தி!
விதிக்கப்பட்ட வீட்டுக்குச் செல்ல
குழியை விட்டுக் கிளம்பு!
குழியின் காய்ந்த குப்பைக் குவியலில்
உள்ளதோ கானல்!
அதில் நீரைப்போல் தெரிவதெல்லாம்
நெருப்பாகும்!

21
தூய்மையான இதயமோ
இணைக்கிறது
இரு உலகங்களையும்!

அருஞ்சொற்பொருள்
—————————-
லா – இல்லை
ஹு – அவன்
தாஹா நபி, அஹ்மது – முஹம்மது நபி (ஸல்)
யூசுஃப் – நபிமார்களிலேயே ரொம்ப அழகானவர்
அபூபக்கர் – முஹம்மது நபியின் ஆத்ம நண்பர், மாமனார், இஸ்லாமியக் குடியரசின் முதல் கலீஃபா(ஆட்சியாளர்)
ஹில்ம் – தூய்மை, அமைதி
இல்ம் – அறிவு

——————–
ruminagore@yahoo.com

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி