பாரதிராமன்.
எழுத்தாளர் கஜானனன் பிள்ளை வீட்டு வரவேற்பறை. குமுதாவும் விருட்சனும் நுழைகிறார்கள். பிள்ளையைப் பார்த்ததும்
குமுதா: வணக்கம் ஐயா!
விருட்சன்: வணக்கம் ஐயா!
கஜானனன் பிள்ளை: வணக்கம், வாருங்கள், வாருங்கள் தயவு செய்து அமருங்கள்.அமர்ந்த பின்பு உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.
( மூவரும் அமர )
குமுதா: சரி ஐயா; என் பெயர் குமுதா.ஜனரஞ்சகத் தமிழ்ப் பத்திரிக்கைகளின் கூட்டுப் பிரதிநிதியாக தங்களைப் பேட்டிகாண வந்திருக்கிறேன்.
விருட்சன்: நான் விருட்சன். தமிழ்ச் சிற்றிதழ்கள் சிலவற்றின் சார்பில் உங்களுடைய ‘ எழுதாத கதை ‘ மூலம் தமிழர்களைத் தலை நிமிரச்செய்த சாதனை படைத்திருக்கும் உங்களை நேரில் பாராட்டவும் எங்கள் இதழ்களில் உங்கள் கருத்துக்களைப் பெற்று வெளியிடவும் ஆவல்கொண்டு வந்துள்ளோம். கருத்துப் பரிமாற்றங்களுக்கான கேள்விகளைத் தொடுக்க ஆரம்பிக்கட்டுமா ?
கஜானனன் பிள்ளை: சற்று இருங்கள், சிறிது நேரமாகவே வெளியில் காத்திருந்தீர்கள் போலும். முதலில் கொஞ்சம் சிற்றுணவுப் பரிமாற்றங்களைச் சுவைத்துக்கொண்டே தொடர்வோம்.
(பணியாளர் ஒருவர் சிறு தட்டுகளில் ஹார்லிக்ஸ் பிஸ்கட்டுகள், பாதம் சாக்லெட்டுகள், உருளைக்கிழங்கு சிப்ஸ், முந்திரி, மற்றும் டம்ப்ளர்களில் எலுமிச்சை ரசம் ஆகியவற்றைக் கொண்டுவந்து நடுவிலிருந்த டாபாயின்மீது வைத்துவிட்டுச் செல்கிறார்.)
குமுதா: மிக்க நன்றி ஐயா! இந்த உணவு வகைகளைப் பார்த்தால் எழுத்தாளர் ஒருவரைப் பேட்டிகாண வந்ததுபோல் இல்லை, ஏதோ ஒரு தொழிலதிபர் வீட்டுக்கு வந்துவிட்டோமோ என்று தோன்றுகிறது!
கஜானனன் பிள்ளை: எழுத்தும் ஒரு தொழில்தானே அம்மா; சிலருக்கு ஹாபியாகவும் இருக்கும். எப்படியும் யாரும் பொறாமைபடக்கூடிய தொழிலோ ஹாபியோ அல்ல.
விருட்சன்: அப்படி இல்லை ஐயா, தொழில் என்றால் லாபத்திற்காக நடத்துவது. நஷ்டம் வந்தால்நிறுத்தப்படக்கூடியது. எழுதுவதை ஒரு ஹாபியாக நினைக்க எங்களால் முடியாது. எழுத்து என்பது எப்போதும் முனைப்புடன் இருக்கவேண்டிய ஓர் ஈடுபடுதல்- வணிகம் அல்ல.
கஜானனன் பிள்ளை: சரி, விருட்சன்!
இந்த சர்ச்சைகளை நாம் பின்னால் வைத்துக்கொள்ளலாம். இப்போது இந்த பிஸ்கட்டுகளை சாப்பிடுங்கள். ஹார்லிக்ஸ் கலந்து செய்யப்பட்டது. ஹார்லிக்ஸ் நமக்கு அறிமுகமானது இங்கிலாந்திலிருந்து, தெரியுமில்லையா ? இந்த பாதம் சாக்லெட்டுகள் பஹ்ரைனிலிருந்து என் வாசகர் ஒருவர் அனுப்பியவை. சுவை மிக்கவை. ‘ விம் பவுடர் ‘ போன்ற இந்த குழல் பெட்டியில் உருளைக்கிழங்கு வறுவல்கள்- ஒன்றுபோலவே மற்றவை, பார்வையில், அளவில், ருசியில், பக்குவத்தில், எப்படித்தான் இவற்றைத் தயாரிக்கிறார்களோ ? அரை அங்குல உயரத்தில் பத்து சிப்ஸ் என்றால் பத்து அங்குல இந்தக்குழலில் நீங்கள் இருநூறு சரியாக எண்ணிவிடலாம். இதுவும் பர்மா பஜாரில் வாங்கிய வெளிநாட்டுப் பொருள்தான். இதைத் தயாரிக்கும்போது அளவிலும் ருசியிலும் குறைந்த அல்லது மிகுந்த எத்தனை கிழங்குகளைக் கழித்து விட்டிருப்பார்கலோ என்று நினைக்கத் தோன்றுகிறதில்லையா ?
விருட்சன்: ஆம் ஐயா! இந்த முந்திரியும் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதியானதுதானே ?
கஜானனன் பிள்ளை: ஆமாம், ஆனால் கொல்லத்தில் பக்குவப்படுத்தப்பட்டது. அடுத்து எலுமிச்சையைப் பற்றி கேட்டுவிடப்போகிறீர்கள்!
அது என் வீட்டுத் தோட்டத்தில் விளைந்தது. இந்த பாதம் சாக்லெட்டுகள்கூட வெளிநாட்டுத் தோற்றத்தை ஏற்படுத்தலாம். உண்மையில் அவை ஏற்றுமதிக்கென்றே நம் நாட்டில் தயாரிக்கப்பட்டவைதான். திருட்டுத்தனமாக இங்கு வரவழைத்துச் சாப்பிடவேண்டியிருக்கிறது.
( மூவரும் சிற்றுண்டி அருந்திக்கொண்டே பேச்சில் ஈடுபடுகிறார்கள் )
குமுதா: உங்கள் விவரணங்களைப் பார்த்தால் உணவிலக்கணத்தையே உலக இலக்கியத்தோடு பொருத்திவிடுவீர்கள் போலிருக்கிறதே!
கஜானனன் பிள்ளை: நீங்கள் நினைப்பது சரியே. வயிற்றுக்கில்லாதபோது செவிக்கு எதற்கு உணவு என்பதுதான் என் கட்சி. நல்ல எழுத்தும் பேச்சும் பசியாறிய பிறகு பிறப்பதுதான்.
விருட்சன்: அப்படியானால் பசியிலும் வறுமையிலும் கலை பிறக்காது என்கிறீர்களா ?
கஜானனன் பிள்ளை: அப்படி அல்ல. தர்மகீர்த்தி அவர்கள் மெளனி தம்மிடம்
சொன்னதாகக் கூறியதுபோல ‘ அடிமட்ட வறுமையைக் கலை ஆக்க முடியாது. நடுத்தர வர்க்கத்தின் நாசுக்கான வறுமையையே கலை ஆக்க முடியும் ‘ அ.மார்க்ஸ் மெளனியின் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன், மெளனியையே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை
விருட்சன்: ஏன் ஐயா, சிறுகதை உலகில் புதுமைப்பித்தன், விந்தன், அழகிரிசாமி, ஜெயகாந்தன் போன்றோர் வறுமையைப் பல கோனங்களில் கண்டு எழுதி வளம் சேர்க்கவில்லையா ?
கஜானனன் பிள்ளை: நான் அதைச் சொல்லவில்லை. பண்டைய இலக்கியங்களிலேயேகூட வறுமையை சித்தரித்து கலையாக்க முயன்றிருக்கிறார்கள். ஏதோ சிலதான் காலம் கடந்து நின்றிருக்கின்றன, சத்திமுற்றப்புலவரின் ‘ நாரைவிடு தூது ‘ மாதிரி, தருமி, பாணன் கதைகள் மாதிரி. இவை விதிவிலக்குகள். உண்மையில் அடிமட்ட வறுமையிலிருப்போர் இலக்கியத்தின் பக்கம் வர வழியில்லை. மிக மேல்மட்டத்திலிருப்பவர்களுக்கும் இலக்கியம் எட்டில்லாய். அவர்கள் ருசிக்க வேறு பல இருக்கும். நடுமட்டத்தில் இருப்பவர்கள்தான் தங்கள் வறுமையையும் வளமையையும் ஒன்றாக நேசிப்பார்கள், ஒன்றாக பார்ப்பார்கள், ஒன்றாக அனுபவித்து ஒன்றியும் போவார்கள். எனவே கலையும் இலக்கியமும் அங்கேதான் ஒன்றுகின்றன, ஒண்டுகின்றனகூடவும்.
மேலும் வறுமை என்பது பொருளாதாரத்தில் என்று மட்டுமல்ல மன இயல்புகளிலும் உண்டு. இந்த இயல்பு வறுமைகளை வைத்துத்தான் கு.ப.ரா., மெளனி, சண்முகசுந்தரம் மற்றும் நீங்கள் கூறியவர்கள் இலக்கியம் படைத்திருக்கிறார்கள். இந்த வறுமைகளில்கூட இவர்கள் மிக அடிமட்டத்துக்குப் போகவில்லை. ஒரு பாதிக்ககூடியதான இலக்கியப்போக்கான அளவிற்கே போயிருக்கிறார்கள். இந்த எழுத்தாளர்களில் பலர் தம் வாழ்க்கையிலேயே வறுமையை சந்தித்திருந்தாலும் அடிமட்ட வறியர்கள் அல்ல.
விருட்சன்: அப்படியானால் இலக்கியம் பிறப்பதும் பாராட்டப்படுவதும் நடுத்தர மக்களால்தான் என்பது உங்கள் கணிப்பா ? உங்கள் வெற்றியை நாங்கள் பாராட்டுவதை எந்த வகையிலையா சேர்ப்பீர்கள் ?
கஜானனன் பிள்ள: பாராட்டுகளைப் பாராட்டுபவன் இல்லை நான். பாராட்டாவிட்டாலும் பாராட்டாதவன்தான்
நான். எனினும் உங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். ஞானபீடப் பரிசு பெற்ற பின்னரே என்னைப் பாராட்டத் தோன்றியதென்றால் பாராட்டு உண்மையில் ஞான பீடக்காரர்களுக்கே அன்றி என் படைப்புகளுக்கில்லையா என்று தோன்றுகிறது. இந்த மூட்டத்திலிருந்து தமிழ் மீளும்போது எல்லாப் பரிசுகளையும் பெற அது வாய்ப்ப பெற்றுவிடும் என்று நான் கருதுகிறேன்.
குமுதா: ஐயா! இது அனுமனுக்கு அவன் சக்தியை அடிக்கடி நினைவூட்ட வேண்டியிருந்ததைப்போல இருக்கிறது. தமிழில் எல்லாம் இருக்கிறது. ஆனால் இருக்கிறது என்பதை இருக்கிற இடத்திலேயேகூட சொல்லமுடியாமல் இருக்கிறது. இதற்காகத்தான் இலக்கியம் பரவலாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறோம். ரஞ்சகமாக, நேயர் விருப்பத்துக்கு ஈடுகொடுக்கும்படி இருக்கவேண்டும். இந்தப் பரவல்தான் பரிசுக் குழுவின் காதுவரை பரவி நம் முன்னுரிமையை நிலைநாட்டிக்கொள்ள உதவும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால்தான் தீவிர இலக்கிய ஏடுகளிலேயே எழுதுபவர்களைக்கூட எங்கள் விசேஷ இதழ்களில் எழுதவைத்து நல்ல சன்மானமும் அளிக்கிறோம். அப்படியிருந்தும் தமிழுக்கு இதுவரை——-
கஜானனன் பிள்ளை: அம்மா நீங்கள் கொஞ்சம் அவசரப்படுகிறீர்கள்போல. ஒரு நல்ல எழுத்தாளன் உருவாகும்போதே அவனை நாம் இனம் காணவேண்டும். அவன் எழுத்துக்களை அவன் எழுத்துக்களாகவே மக்களிடம் எடுத்துச் செல்ல பத்திரிக்கைகள் முயற்சிக்கவேண்டும். சிறு பத்திரிகைகளுக்கு இதில் உள்ள ஈடுபாடு ஜனரஞ்சக பத்திரிகைகளுக்கு இருப்பதாய்த் தெரியவில்லை. உதாரணமாக என் எழுத்தையேஎடுத்துக்கொள்ளுங்களேன் கொஞ்ச நாட்கள்முன்பு ஒருபக்கக் கதைகளையே ஓர் ஏடு பிரசுரிக்க ஆரம்பித்து தொடர்ந்தும் வந்தது. எந்தக் கொம்பன் எவ்வளவு நீளத்துக்கு எழுதி அனுப்பினாலும் கதையை சின்னதாக்கி ஒரு பக்கத்தில்தான் பிரசுரிக்கும். அசோகமித்திரன்கூட சொல்லியிருக்கிறார் எடிடிங் கலையில் அந்தப் பத்திரிக்கையை யாரும் மிஞ்சமுடியாதென்று. எனக்குள் ஓர் அரிப்பு. நாமே சின்னதாய் எழுதி அனுப்பலாமே என்று நினைத்து ஒன்றரைப் பக்கங்களில் மூறு கதைகள் எழுதி அனுப்பிவைத்தேன். அதாவது முதல் கதை முக்கால் பக்கம், இரண்டாவது அரைப் பக்கம், மூன்றாவது கால் பக்கம் வரும்படியாக மொத்தம் ஒன்றரைப் பக்கங்களில் மூன்று சிறுகதைகள். அந்த ஏடு செய்த காரியத்தைக் கேளுங்கள்! என் முதலிரண்டு கதைகளையும் தவிர்த்துவிட்டு கால்பக்கக் கதையைத் தேர்ந்தெடுத்து தலைப்பொன்று கொடுத்து படமும் வரைந்து ஒருபக்கக் கதையாக பிரசுத்துவிட்டது! நான் பரிசு பெறுவதற்கு முன்பு நடந்தது இது. இது எைதைக் காட்டுகிறது ? இந்த வர்த்தகத்தனம் எழுத்தை எப்படி பரிசுக்குரியதாக ஆக்கமுடியும் ?
குமுதா: நீங்கள் தெரிந்தே அனுப்பிவிட்டு இப்போது ஏன் குறைபட்டுக்கொள்கிறீர்கள் ஐயா ?
கஜானனன் பிள்ளை: இல்லை அம்மா, என் மூன்று கதைகளுமே திரும்பி வந்திருந்தால் நான் தவறாகஎண்ணியிருக்கமாட்டேன். எடிட்டரின் உரிமை என்ற பாதுகாப்பில் அதைக் குலைத்துப் பிரசுரம் செய்தது எனக்கு வேதனையாக இருந்தது.
குமுதா: ஐயா, இதையே ஒரு சிற்றிதழ் செய்திருந்தாள் ?
கஜானனன் பிள்ளை: அதற்கு சாத்திக்கூறுகள் இங்கு இல்லை. சிற்றிதழ் எழுத்தாளர்கள் தனிப்பட்ட முறையில் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக்கொண்டிருந்தாலும் அவர்களது சார்பிதழ்கள் அவர்களை அரவணைத்துச் செல்கின்றன. சமீபத்தில்கூட ‘ அறுவையான சிறுகதை எழுதுவது எப்படி ? ‘ என்ற படைப்பு பிரசுரமானதையொட்டி கோவை எழுத்தாள வாசகர் கேட்கிறார்: கோபிகிருஷ்ணன் போன்றவர்கள் எதை செய்தாலும் புதுமைதான்!!! எல்லாப் பத்திரிக்களும் இப்படித்தானோ ? ‘ என்று. நான் எழுதி இன்னும் பிரசுரிக்கப்படாத ‘ ஒரு சினிமாத்தனமான கதை ‘ ஒன்று இரண்டு ஜனரஞ்சகபத்திரிக்கைகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. இன்னொரு பத்திரிக்கையின் பரிசீலனையில் நீண்ட நாட்களாக முடிவெடுக்கப்படாமல்
இருப்பதாக அறிந்தேன். பேசாமல் ஒரு சிற்றிதழுக்கு அனுப்பி இருந்தால் இந்நேரம் பிரசுரமாகி ‘ அ.சி.க.எ.எ ‘ யைவிட பிரபலமாகி அலசப்பட்டிருக்கும். இந்த மாதிரித் தவறுகளும்கூட நம்மைப் பரிசுகளிலிருந்து விலக்கிவிடுகின்றன என்பதற்காக இதைக் கூறினேன்.
விருட்சன்: ஜனரஞ்சகப்பத்திரிக்கைகள், சிற்றிதழ்கள் இவற்றின் வித்தியாசங்கள் பரிசுகளைப் பெறுவதிலோ, பெறத் தடையாக இருப்பதிலோ எவ்வளவு தூரம் பொறுப்பேற்கவேண்டும் ?
கஜானனன் பிள்ளை: ஜனரஞ்சக பத்திரிக்கைகளும், சர்க்குலேஷன் குறைவான ஜனரஞ்சக பத்திரிக்கைகளும் இன்று சிறு பத்திரிக்கைகளிலிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டப்படுவது பெரும்பாலும் அவைகளின் உள்ளடக்க வேறுபாடுகளால்தானே ?
சிறுபத்திரிக்கைகளின் உள்ளடக்கமே சிறந்தது, மக்களுக்குத் தேவையானது என்று விமர்சகனின் எண்ணம் பரவி நாளைக்கு இந்த மாதிரி உள்ளடக்கங்களே பெரும் பத்திரிக்கைகளாக உருவாகும்போது, அதாவது இன்றைய சிறுபத்திரிக்கைகளே நாளைக்கு பெரும் பத்திரிக்ககளாகமாறி ஜனரஞ்சகம் பெறும்போது அவைகளுக்கு என்ன பெயர் வைப்பது ?
இன்றைய விமரிசகர்கள் எல்லோரும் திருப்தி அடையும்படி எல்லாப் பத்திரிக்கைகளும் அமைந்துவிட்டால் அவர்கள் தொழில் என்னாவது ? அப்போது அவர்களுடைய சிபாரிசு நேற்றைய ஜனரஞ்சகப் பத்திரிக்ககளின் உள்ளடக்கங்களை மறுபடியும் உள்ளடக்கமாகக் கொண்டுவரும் சிறு பத்திரிக்ககளை புதிதாக தோற்றுவிக்க முனையுமோ ? ஜனரஞ்சகம் என்பது முதலில் பெருத்துப்போய் , பிறகு சிறுத்த்ப்போனது பெருத்துப்போகும்போது, தன்னை மாற்றிக்கொள்வதுதானே ? மாறாமல் இருப்பது ரஞ்சகம் என்ற குணம் மட்டும்தானே ? அதாவது இலக்கியம் என்பது ரசிப்பதற்கே என்ற ஆதாரமான உண்மை இங்கு வெளிப்படுகிறதல்லவா ? இந்தக் கருத்து பல இலக்கியவாதிகளுக்கு உடன்பாடற்றதாக இருக்கலாம். ஆனால் உண்மையை யாரும் மறைக்க முடியாது. இந்தக் கருத்தின் உடன்பாடு அல்லது எதிர்பாடுகளைப் பொருத்தே உங்கள் வினாக்களுக்கு விடை தேடமுடியும். இந்த சமயத்தில் இயற்கையின் வெளிப்பாடக இருக்கும் அலுப்பு என்ற குணம் பற்றிச் சொல்லவேண்டும். ‘ நீண்ட பரிச்சயம் வெறுப்பை வளர்க்கும் ‘ என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. உணர்வு சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும் சலிப்பு ஏற்படுவது இயற்கை. இலக்கிய ரஞ்சகத்தில் அலுப்பு தட்டும்போது இலக்கியம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கிறது. பிடாரன் சொல்லி பாம்பு தோலை உரித்துக் கொள்வதில்லை. விமரிசனத்தின் வீச்சுக்குப் பயந்து இலக்கியம் தன்னை மாற்றிக்கொள்வதில்லை. சமூகச் சூழ்நிலைக்கேற்பவே அது தன்னை அலங்கரித்துக்கொள்கிறது அல்லது நிர்வாணப்படுத்திக்கொள்கிறது. இலக்கியம் மனிதனால் மனிதனுக்காக செய்யப்படுவது. மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பதால் இலக்கியம் சமுதாயச் சூழ்நிலைகளின் பாதிப்புக்கு உட்பட்டதுதான். இதில் விமர்சகளின் பணியோ, அல்லது சாகித்ய அகாடமி, ஞானபீடம் அல்லது வேறு பல இலக்க்யக் குழுக்களின் ஊக்கப் பரிசுகளின் பணியோ வெளிச்சம்போட்டு லட்சியங்களையும் வெற்றி தோல்விகளையும் அடையாளம் காட்டுவதோடு சரி, அறைகூவி அவைகளை மாற்ற முனைவதல்ல. அந்தப் பணியைச் செய்ய அரசியல்வாதிகளும் அவதார புருஷர்களும் தோன்றுவார்கள்.
குமுதா: ஐயா, மாறாமல் இருப்பது ரஞ்சகம் என்ற குணம் மட்டும்தான் என்கிறீர்களே, இந்தக் குணம் பாமரருக்கும் பண்டிதருக்குமிடையே மாறுபட்டிருக்காதோ ?
கஜானனன் பிள்ளை: அம்மா, ஒரு கதையோ கவிதையோ மேலோட்டமாக படிக்கும்போது ஒரு பொருள் தோன்றுகிறது. அதையே ஊன்றிப் படிக்கும்போது வேறு ஒரு புதிய உட்பொருளும் அதனூடே இருப்பது தெரியவரலாம். இது ஆரம்பத்தில் எல்லோருக்கும் புரியாமல் போகும்போது விமரிசனங்கள் அவற்றை விளக்க
வருகின்றன.
சொற்கட்டும் அலங்காரமும் நன்றாக இருக்கலாம். இவையே கதையோ கவிதையோ ஆகாதென வாதிடலாம். ஆனால் அவை கதையாகவோ கவிதையாகவோ இருக்கக்கூடாது என்று கூற முடியாதல்லவா ? இவற்றை விமரிசகர் வெளிப்படுத்தலாம். பண்டிதர் பாமரர் என்ற வர்க்க பேதத்தை இது உணர்த்தாதா, வளர்க்காதா என்று நீங்கள் கேட்ககூடும். எல்லோரும் அவரவர் மொழிகளில் சிறந்த கல்வியைப் பெறும் வாய்ப்பு சமூகத்தில் வரும்வரையில், அப்படியே வந்தாலும் மூளை வளர்ச்சியில் எல்லோருக்கும் ஒரே அளவு புத்தி சாதுரியம்-I.Q.-என்ற நிலை வரும்வரையில் பண்டிதர் பாமரர் என்ற வித்தியாசங்கள் இலக்கிய ரசனையைப் பொருத்தஅளவில் இருக்கவே செய்யும். ஆனால் இது பாமரர்மீது பண்டிதர் கோலோச்சும் அளவுக்கு உயரவிடக்கூடாது. ஏனெனில் இம்மாதிரி விஷயங்களில் பாமரர்களின் பலத்தை எடைபோட முடியாது. இது சரியா தவறா என்ற ஆராய்ச்சியில் இறங்காது இது யுகதர்மம் என்று புரிந்துகொள்ளவேண்டும். விருட்சன் அவர்களே! கட்டுடைக்கப்பட்ட கவிதைகளைப் பற்றி நீங்கள் அறிவீர்கள்.
இரட்டை இயக்கம்கொண்ட பிரதியில் ஒன்று படைப்பாக்கம், இன்னொன்று சிதைத்தல்.கவிதை வெட்டி ஒட்டப்படுகிறது, பன்முக வாசிப்பு என்று விமர்சிக்கப்படுகிறது.உரையாசிரியர்கள் இன்றி இவற்றைப் பாமரர் புரிந்துகொள்வது கடினம். இந்த இலக்கணம் தமிழிலும் வடமொழியிலும் தொன்றுதொட்டே இருந்துவந்திருக்கிறது. எதோ புதிது என்று மலைக்கவேண்டாம். பண்டைய மூல
நூல்களுக்கு ஏற்பட்ட உரையாசிரியர்களின் எண்ணிக்கையே இதற்குச் சான்று. நீலமலை அரசப் பிரம்மத்தைப் புரிந்துகொள்ள அர்ஜுன நாகம் பக்கத்தில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கட்டுடைத்டலிலும் சிதைத்தலிலும் பாமரர் திண்டாடிப்போவர். பண்டிதர்களிடையேயும் வர்க்கங்கள் தோன்றிவிடும். மூலவர்களே வியக்கும் அளவுக்கு உற்சவர்கள் ஊர்வலம் வருவார்கள். உற்சவர்கள் ஊர்வலம் வரும்போது எந்த மூலவரைச் சேர்ந்தவர்கள் இவர்கள் அல்லது இவர்களே மூலவர்களோ என்ற ஐயப்பாடுகூட சில சமயங்களில் தோன்றக்கூடும். இதிலிருந்தெல்லாம்கூட தமிழ் இலக்கியம் மீட்சி பெற்று நாளடைவில் ஞானபீடம், அ.ஞானபீடம், எதிர்ஞானபீடம் எல்லாவற்றிலிருந்தும் நமக்கு பரிசுகள் கிட்டவும் கூடும்.
விருட்சன்: எழுத்தாளர்களின் பரஸ்பர காழ்ப்புணர்ச்சியும் பகைமையும்தான் தமிழ் இலக்கியத்தை ஞானபீடப் பரிசு போன்றவைகளிலிருந்து தொலைதூரத்துக்குத் துரத்தி அடிக்கின்றன என்று நீங்கள் கருதுகிறீர்களா ? அத்தகைய பரிசுகளைத் தமிழ் எழுத்து பெற என்ன செய்யேவேண்டும் ? விரிவாகக் கூறுவீர்களா ஐயா ?
கஜானன பிள்ளை: உங்கள் கேள்வி தமிழ் இலக்கியம் பரிசுபெறாத தாழ்வு நிலையில் இருப்பதைப் பொறுக்காத ஆதங்கத்தையும் எப்படியாவது அத அந்தஸ்து உயரப் பெறுவதைக் காணத்துடிக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறது. உண்மையில் வல்லிக்கண்ணன் அவர்கள் கூறுவதுபோல ‘ தமிழில் நல்ல படைப்பிலக்கியங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.தரமான படைப்புகளை உருவாக்கும் படைப்பாளிகளுக்கும் தமிழ் நாட்டில் குறைவில்லை. ‘ தமிழின் சிறந்த படைப்புகள் உரிய கவனிப்பைப் பெறாமை, சொந்த ஆதாயத்துக்கு தமிழைப் பயன்படுத்துதல், சரியான விமரிசனமின்மை, இதர மொழி பேசுவோர் அறியும் வண்ணம் நேரடியாகவோ ஆங்கிலம் மூலமாகவோ மொழிபெயர்ப்பின்மை, தமிழ் எழுத்தளரிடையே உள்ள குழுமனப் பண்பும், புலமைக் காய்ச்சலும், மற்றும் செல்வாக்குடைய உயர்மட்டத்தினர் இல்லாமை- இவை சில முக்கிய குறைகளாக அவரால் சுட்டிக்காட்டப்படுகின்றன. அவை உண்மையும்கூட ஆனால் இக்குறைபாடுகளின் நீக்கம் மட்டுமே தமிழுக்கு ஞானபீடப் பரிசுகளைப் பெற்றுத்தந்துவிடுமா ? தமிழ் இலக்கியத்தின் உள்ளடக்கத்திலும் வெலிப்பார்வையிலலும் இன்னும் என்ன மாறுதல்களைச் செய்யவேண்டும் ? இந்த விஷயத்தில் அண்டை மொழிக்காரர்களை நாம் எவ்வளவு விரைவில் மிஞ்சமுடியும் என்றெல்லாம் சிந்திக்கவேண்டும். உங்களைப் போன்ற இளைஞர்கள் இந்த வேள்வியில் தங்களை முழுதுமாக ஈடுபடுத்திக்கொண்டால் இலக்கை நெருங்குவது சீக்கிரம் சுலபமாகிப்போகும்.
குமுதா }
விருட்சன்}: ஐயா, நாங்கள் தயார்! எங்களுக்கு வழிகாட்டப்போவது யார் ?
கஜானனன் பிள்ளை: வழிகாட்டிகளை நம்பாதீர்கள். ஜே.கே. சொல்வதைப்போல உங்களுக்கு நீங்களே குரு. நீண்ட காலமாக சுய சிந்தனை இன்றி, எதிர்ப்பின்றி குருமார்களிடம் அடிமைப்பட்டதன் விளைவுதான் இன்றைய நிலை.
குமுதா: ஐயா, மாதா, பிதா, குரு இவர்கள் தெய்வம் அல்லவா ?
கஜானனன் பிள்ளை: ஆம் குரு தெய்வம் தான். ஆனால் குரு நீங்களே. இப்போது நீங்கள் படைக்க ஆரம்பியுங்கள். தெய்வீகம் வரும், வெற்றி வரும். தன்னம்பிக்கை இன்றித்தான் தமிழன் கெட்டான்.இனிமேலும் கெடக்கூடாது.
விருட்சன்: அந்த மேலான தன்னம்பிக்கையால்தான் உங்கள் படைப்புகள் வெற்றி பெற்றன என்று கூறுகிறீகள், இங்கே விமர்சகர்கள் வேறு விதமாகக் கூறுகிறார்களே!
கஜானனன் பிள்ளை: விமர்சகர்கள் என்ன கூறுகிறார்கள், விருட்சன் ?
விருட்சன்: நீங்கள் உங்கள் படைப்பில் உள்ளடக்கத்தில் கவனம் காட்டியதுடன் நிற்காமல் மேலை இலக்கியங்களில் கணிக்கப்பட்டுவரும் சிறப்பான உத்திகளையும் கையாண்டதால்தான் உங்கள் படைப்புகள் பேசப்படுகின்றன என்கிறார்கள். உதாரணமாக நிஜ வாழ்வியல் நோக்குடன் அதற்கு எதிரான எதிர்மனிதநேயக் கோட்பாடு சார்ந்த அமைப்புமைய வாதம், பின் அமைப்புமைய வாதத்தையும் கூடவே அடிமனப் பிரக்ஞை நிலை இயல் போன்றவைகளையும் கையாண்டு சிறப்புச் சேர்த்திருக்கிறீகள் என்கிறார்கள்.
கஜானனன் பிள்ளை: இது தவறான கணிப்பு. எனக்கு ‘இஸ ‘ங்களைப் பற்றித் தெரியாது. என் உணர்வு பூர்வமான எதார்த்தங்களையே நான் எழுதுகிறேன். ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் என் உள்ளத்தில் ஏற்படுத்திய பிரதிபலிப்பின் பிரதிபலிப்புதான். அதை எந்த ‘இஸ ‘க் கண்ணோடு யார் பார்த்தாலும் எனக்குச் சரியே, மறுக்கப்போவதில்லை. ஆனால் அந்த ‘இஸ ‘ங்களை அனதில்கொண்டுதான் நான் எழுதினேன் என்பதை நான் கட்டாயம் மறுத்துத்தான் ஆகவேண்டும். ஒன்றை ஒப்புக்கொள்கிறேன்.எனக்கு அங்கதம் பிடிக்கும். என் எழுத்துகளில் இது சற்று மேலோங்கி இருக்கலாம். அனாலும் இங்கிதம் பிசகாது.
நான் எதார்த்தமானவன். என் வீட்டைச் சுற்றி தோட்டம் இருக்கிறது. நான் ‘குரோட்டன்களோடு கொஞ்ச நேரம் ‘ கழிக்க விரும்புபவன். அவாற்றைத் திருடுவேன், தானம் பெறுவேன், தானமும் கொடுப்பேன், அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றுவேன், களை எடுத்து பூச்சி மருந்து தெளித்து எரு இடுவேன். அவற்றில் தளிர் துளிர்த்து நிறம் மாறும்போது மகிழ்ச்சி கொள்வேன். குரோட்டன்களைப் பிரியும்போது சாவென்று பழகிக்கொள்வேன். இந்த எதார்த்தங்களைத்தான் எனக்கு ரசிக்கத் தெரி+வீட்டுத்யும். அதன்றி கோவைக்குப் போய் ‘ குரோட்டன் வளர்த்து இயற்கையைக் காப்பாற்றமுடியாது. குரோட்டன் வளர்ப்பது நகரியத்தோடு ஒத்துச் செல்லும் கலைரசனை ‘ இது ‘உடைமை உணர்வால் இறுக்கப்பட்ட, அதிகாரத்தால் இறுகிப்போன, ஆணவத்தால் இறுகிவருகிற ‘ எதார்த்தத்தைச் சேர்ந்தது என்று சந்தத்தை மாற்றி ‘ வேல மரத்தினடியில் வேண்டிய நேரம் ‘ என்று காட்டூர் காளீஸ்வரர் கோவில் குளக்கரையில் உட்கார்ந்து வேறு ஒரு பாட்டை, வேறுபாட்டை ரசிக்க எனக்குத் தெரியாது. என்வீட்டுத் தோட்டத்தில் குரோட்டன்களோடுகூட மா, பலா, வாழை, எலுமிச்சை, தென்னைகூட உண்டு. பழமலய்யுடன் நானும் சேர்ந்து ‘கொஞ்ச நேரம் ‘ எழுதியிருந்தால் கூடவே ஒரு அனுபந்தமும் வந்திருக்கும். கோவைக்காரர்ருக்கும் பாட்டின்மீது ஒரு பந்தம் வந்திருக்கும், இயற்கை காப்பாற்றப்பட்டதென்று. ஒரு வேண்டுகோள். எப்போதுமே விமரிசனம் செகிறேன் பேர்வழி என்று பிணப் பரிசோதனையில் இறங்கிவிடாதீர்கள். சினிமா விமரிசனமாகவும் இலக்கிய விமரிசனத்தை ஆக்கிவிடாதீர்கள். சினிமா அதி சக்தி வாய்ந்ததுதான். ஆனால் இலக்கியத்தின் நோக்கில் அது ஆபத்தானது. புதுமைப்பித்தன், விந்தன், கங்கைகொண்டான், ஜெயகாந்தன் போன்றவர்களையே கவர்ந்திழுத்து கபளீகரம் செய்துவிட்ட சாதனம். முழுமூச்சுடன் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மேத்தாக்களையும் மற்றும் பலரையும் சினிமா அமுக்கிவைக்கப் பார்க்கிறது. எல்லாருக்கும் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒருகால். வயிற்றுப்பாட்டுக்கும் வெகுஜனப் புகழ்ச்சிக்கும் இவை தோதாக இருக்கலாம். இவற்றை விரும்புவது தவறு என்று நான் சொல்லவில்லை. எழுத்திலக்கியத்தை சினிமாவிலிருந்து பிரிப்பதுதான் இரண்டுக்குமே நல்லது என்கிறேன். இன்றைய பத்திரிக்கைகள் இதைக் கவனிக்கவேண்டும். ‘ அட்டை-டு-அட்டை ‘ சினிமா செய்திகள் இலக்கியத்தை வளர்க்க முடியாது. சிற்றிதழ்களில்கூட இத்தாலிய சினிமா, ?ப்பானியப்படம், ெ ?ர்மன் டாகுமெண்டரி என்று சினிமா தாக்கம் இலக்கியத்தின் நடுவே நடைபோடுகிறது.
விருட்சன்: சினிமாவுக்கென்றே தனிப் பத்திரிக்கைகள் நடத்துவதில் உங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லையே ?
கஜானனன் பிள்ளை: முற்றிலும் இல்லை. இந்நாளைய மனித வாழ்வில் சினிமாவின் தாக்கல் சூழ்நிலையில் இது அவசியமாகக்கூட இருக்கலாம். அப்படி இல்லாமற்போவது சில பிரச்சனைகளைக்கூட – மருத்துவம் உள்பட – உண்டாக்ககூடும். நான் சொலவதெல்லாம் அவற்றைத் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் தினசரிகள் வெளியிடும் வாரமலர்களைக்கூட கதம்பமாக்காதீர்கள். சிறப்பிதழ்களாக வெளியிடுங்கள். தனித்தனி கலைகளுக்கு தனித்தனி பத்திரிக்கைகள் நடத்துங்கள். கிச்சடிக் கச்சேரி வேண்டாம். ஆர்வமும் முனைப்பும் இலக்கியம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு துறையினருக்கும் இருக்குமானால் தமிழ் இலக்கியம் அரசவை ஏற்ம் நாள் எட்டிப் போகாது.
விருட்சன்: ஐயா, நீங்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ சில பெயர்களை இப்போது கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். சிலரைப் புகழ்ந்திருக்கிறீகள். இது உங்கள் காழ்ப்புணர்ச்சியையும் குழுமனப் பண்பையும் காட்டவில்லையா ?
கஜானனன் பிள்ளை: என் எண்ணத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை நீங்கள் என்று நினைக்கிறேன். எப்படி சிலர் காழ்ப்புணர்ச்சி உண்டாகக் காரணமாக இருக்கிறார்கள், அவர்களுடைய எதிரொலிப்புகள் எப்படி ஒரு விரோத மனப்பான்மையில் அமைகின்றன என்பதைக் காட்டவே அவைகளைக் கூறினேனே தவிர ந்னக்கு அவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி என்று நீங்கள் கருதக்கூடாதென நான் கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய உணர்ச்சிகள் சில விமரிசகர்கள் தங்களை ‘இலக்கிய மதிப்பீட்டாளர்கள் ‘ என்று நவீன நாமகரணம் செய்துகொள்வதால்தான் ஏற்படுகின்றன. ப்ரீட்சை எழுதிவிட்டுக் காத்திருக்கும் மாணவர்களைப்போல படைப்பாளிகள் இவர்களின் மதிப்பீட்டு குட்டுகளுக்காகக் குனிந்துகொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. கருத்து வேறுபாடுகளைக் காட்டிக்கொள்வதிலொரு நாகரிகத்தை சம்பப்தப்பட்டவர்கள் கடைப்பிடித்தால் இந்த சிறிய கொந்தளிப்புகளின் பாதிப்பு குறையக்கூடும். சில புகழ் பெற்ற எழுத்தாளர்கள் பேட்டி கொடுக்கத் தயங்குவதற்குக்கூட இந்த மதிப்பீட்டாளர்களின் போக்கு சில சமயங்களில் காரணமாக இருக்கிறது. நீங்கள் இருவரும்கூட வெவ்வேறு அணிகளைச் சார்ந்தவர்களாக இருப்பதால் என் கருத்துகளை எப்படி வியாக்கியானம் செய்வீர்களோ என்று அறிந்துகொள்ள ஒரு பக்கம் ஆவலாகவும் இன்னொரு பக்கம் பயம் கலந்த ஓர் உணர் ச்சியாகவும் இருக்கிறது. ஒரு படைப்பாளி விமரிசனத்தை வெறுக்கலாம், நிராகரிக்கலாம்,- செல்வி குமுதாவின் முன்னிலையில் முடி சம்பந்தப்பட்ட ஒரு தமிழ்ப் பிரயோகத்தை இங்கே தவிர்க்க விரும்புகிறேன் -ஆனால் இந்தச் சூழ்நிலையில் Don ‘t Care என்ற மனப்பான்மை வராமலிருக்கச்செய்கிறதே அதுதான் விமரிசனத்தின் வெற்றி, விமரிடனத்துக்கு எழுத்தின்மேலுள்ள பிடியின் பலம்.
சிலரைப் புகழ்ந்ததுகூட நான் முன் கூறியதுபோல நல்ல எழுத்தை ஆரம்பத்திலேயே இனம் கண்டு ஆதரிக்கவேண்டும் என்ற கருத்தின்படியே தவிர குழு சேர்க்கும் எண்ணத்தினால் அல்ல.
குமுதா: ஐயா, இலக்கியத்தில் முற்போக்கு, தலித் என்றெல்லாம் வகைப்படுத்துகிறார்களே அவை தமிழுக்கு பரிசு வாங்கித் தருமா ?
கஜானனன் பிள்ளை: ஜனரஞ்சகம் என்பது எவ்வளவு மாயையோ அதற்குச் சற்றும் குறைந்தவை அல்ல இப்போது நீங்கள் கூறியவையும் இலக்கியம் மனிதனைச் சுற்றி அமைவது, ஏனெனில் இலக்கியம் மனித மொழியில் செய்யப்படுவது. மனித மொழி மனிதனை மட்டுமே சேர்ந்தது.எனவே மனித மேம்பாட்டுக்கான ஆசைகளிலும், அளவைகளிலும்,அமைப்புக்களிலும், செயல்பாடுகளிலும் மாற்றங்கள் நிகழும்போது சுற்றுச் சூழலும் அதன் பிரதிபலிப்பாகிய எழுத்தும் மாறுபடுவதில் என்ன விந்தை ?
இலக்கியத்தில் முற்போகு பிற்போக்கு என்பதெல்லாம் கல்பித பேதங்கள் நதியின் ஓட்டம் எப்போதும் முன்னோக்கித்தான். நதி சில சமயங்களில் வளைந்து பின் திரும்பிச் சென்றாலும் நீரோட்டம் முன்னோக்கியேதான். இலக்கியமும் அவ்வாறே. எப்போதும் முன்னோக்கிய பார்வை உடையது. விமர்சகர்களின் பார்வையில்தான் பின்னோட்டங்கள் பிற்பட்டவையாகக் காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வங்காளத்தையும் கேரளத்தையும் பாருங்கள்.அந்த மக்கள் சற்றுத் துடிப்பானவர்கள். எழுச்சிகளும் மாற்றங்களும் அடிக்கடி நிகழும்.இலக்கியத்திலும் தடாலடிப் பரிசோதனைகள்.ஆனால் வங்காளத்தை அடுத்துள்ளபீஹாரும் ஒரிசாவும் வித்தியாசமாய் இருக்கின்றன. அவ்வாறே கேரளாவை அடுத்த கர்நாடகமும் வித்தியாசப்படுகிறது. அமைதியான மாநிலத்தில் இலக்கியம் தேங்கிவிட்டது என்று சொல்லலாமா ? என் வீட்டில் கோபக்காரர்களே இல்லை; பக்கத்துவீட்டில் தினமும் சண்டையும் கூச்சலும்; இனி நானும் என் வீட்டில் சண்டை கிளப்ப வேண்டும், அப்போதுதான் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்னை தங்களுக்கு சமமாக நினைப்பார்கள் என்று முடிவு செய்து என் அமைதியை நான் ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும் ? என் வீட்டு அமைதி பாதிக்கப்படாதவரையில் அண்டைவீட்டு சச்சரவுகள் எனக்கு முக்கியமல்ல. வெளியார் தலையீடு எதையும் நான் விரும்பவில்லை. விருந்தாளிகள் எங்கு வேண்டுமானாலும் தங்கிச் செல்லட்டும். எங்கு தங்கினாலும் அவர்கள் நம்மவர்களே என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக்கொள்வோம்.
குமுதா: ஐயா, ஒரு நல்ல எழுத்தாளன் என்று ஒருவனை எப்படி இனம் கண்டுகொள்வது ?
கஜானனன் பிள்ளை: சாதி, மத, இன, சமுதாய அந்தஸ்து, கல்விப்பட்டங்கள் போன்ற அடையாளங்களோடு தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டுதான் ஒருவர் இலக்கியம் படைக்கவேண்டும் என்பதில்லை. மனிதகுல மேம்பாட்டுக்கான வழிமுறைகளைக்காணும் வகையிலும் அதனிடையே குறுக்கிடும் தடைகளை நீக்குவதிலும் தன்னையும் தன் எழுத்தையும் ஈடுபடுத்திக்கொள்பவனே இலக்கியம் மெச்சக்கூடிய எழுத்தாளனாக உருவாக முடியும். அப்படிப்பட்ட எழுத்தாளனுக்கு அடையாளம் காட்டப்பெற பெயர்கூட அவசியமில்லை என்பேன். ‘ எழுதா கதை ‘ எழுதியவர் இவர் என்று என்னை அடையாளம் காட்டினால் போதும். பெயர் முக்கியமில்லை.
விருட்சன்: மன்னிக்கவேண்டும் ஐயா. சாதி மத அடையாள அறிமுகங்கள் கூடாதென்று கூறும் தங்கள் பெயரிலேயே சாதி ஒட்டிக்கொண்டிருக்கிறதே! தாங்கள் சைவப் பிள்ளைமார் வகுப்பைச் சார்ந்தவரா ?
கஜானனன் பிள்ளை: இந்தக் கேள்வியை நான் ஆரம்பத்திலேய்யே எதிர்பார்த்தேன்.தாமதமாகவேனும் இப்போது கேட்கப்பட்டுவிட்டது. வெளிப்படையாகக் கேட்கத் தயங்குபவர்களுக்குகூட உள் மனதில் இந்தக் கேள்வி இருக்கும். இத்தகைய கேள்விகளைக் கேட்பதை நிறுத்தும்வரை நாம் பரிசுகளை நெருங்கமுடியாது. இருந்தாலும் என் விஷயத்தில் இப்போது இக்கேள்வி கேட்கப்பட்டுவிட்டதால் சொல்கிறேன். உங்களுக்கு ஆச்சரியமாகக்கூட இருக்கலாம். எனக்கு சொந்தமாக ஒரு பெயரும் கிடையாது. என் தகப்பனார் பெயர்தான் கஜானனன். நான் அவரது பிள்ளை. அதாவது கஜானனன் பிள்ளை. ஆறாம் வேற்றுமைத்தொகை!
வட நாட்டில் கணவன் மனைவி ஒருவரியொருவர் அழைப்பதில் ஒரு பழக்கம் இருக்கிறது. கணவன் மனைவியைத் தன் மகனின் பெயரைச் சொல்லி இன்னாரின் தாயே என்றும் அவ்விதமே மனைவி கணவனை இன்னாரின் தந்தையே என்றும் விளிப்பார்கள். உதாரணமாக சேகரின் தாய் தன் கணவனை ‘சேகர் அப்பாவே ‘ என்றும், சேகரின் அப்பா தன் மனைவியை ‘சேகர் அம்மாவே ‘ என்றும் அழைத்துக்கொள்வார்கள்- அம்பை, ராஜம் கிருஷ்ணன் போன்றோர்களுடைய அபிலாஷைகளோடு ஒத்துப்போகாத பழக்கம், தங்கள் முக்கியத்துவத்தை விட்டுக்கொடுக்கும் பழக்கம்.
வேண்டுமானால் என்னை கஜானனன் மகன் என்று கூப்பிட்டுவிட்டுப்போங்கள்! அந்நிய மாநிலங்களில் இப்போதே ஒரு மலையாளிப் பிள்ளைக்குப்போய் தமிழ் இலக்கியப் பரிசைக் கொடுத்திருக்கிறார்களே என்று அதிசயப்படுகிறார்கள். அந்த சந்தேகமாவது தீர்ந்துபோகும் , பிள்ளைக்குப் பதில் மகன் எம்று கூப்பிட்டால். பாலகாண்டம் போதுமென்று நினைக்கிறேன்!
( சிரிக்கிறார் )
குமுதா: ஐயா, எவ்வளவு முறைகள் பரிசுகள்பெற்றாலும்எந்தமொழியிலாகட்டும், இன்றைய வேகமான பல்நோக்குப்
பல்முனை வளர்ச்சியில் இந்த படைப்புக்கள் எவ்வளவு காலம் ஒருசமூகத்தில் ஊன்றி நிற்க முடியும் ?
கஜானனன்பிள்ளை; அம்மா, நல்ல கேள்விதான். ஆனால் இதற்கான விடையைத் தெரிந்துகொண்டுதான் எந்தபடைப்பாளியும் இயங்குவது இல்லை. சாவு உறுதி என்று தெரிந்தும் வாழ்வுப் போராட்டங்களை யாரும் கைவிடுவதில்லை. காலம் எல்லாவற்ரையும் அழித்துவிடும் என்பதால் காலம் பூராவும் சும்மாவே கிடப்பதா ? இது பிரபஞ்சத்தின் நியதிக்கே விரோதமானது. அழிவில் ஆக்கமும், ஆக்கியது அழிவதும் இயற்கை நம்மைக் கட்டிப்போட்டிருக்கும் செயல்கள். இதை எப்போதும் ஞாபகப்படுத்திக்கொண்டே காலத்தை வீணாக்குவதில் பயனில்லை.அது ஓர் உள்ளுணர்வாக எப்போதுமே நம்கூட
இருக்கும்.
குமுதா: ஐயா, ஓர் இலக்கியவிசாரத்தை உணவருந்திக்கொண்டே செய்தோம். எல்லப்பசியும் அடங்கிவிட்டது. கேள்விகளும் அனேகமாக முடிந்துவிட்டன. நீங்கள் கூறுவதிலிருந்து வரும் நாட்களில் தமிழ் இலக்கியம் பிரமாதப்படுத்தப்போகிறதென்று படுகிறது.
கஜானனன் பிள்ளை: அம்மா, உரையாடலை உணவில் ஆரம்பித்தோம். அந்த உணவு சொல்லும் கதையையும் உணர்ந்துகொள்வது இலக்கியச் சாதனைக்கு நல்லது.
முன்பு நம்மை அடிமைப்படுத்தியவர்கள் அறிமுகப்படுத்திய ஹார்லிக்ஸ் மாவை நம் ஊர் பிஸ்கட்டில் சேர்த்து
நம்முடையதாக்கிக்கொண்டோம். பாதம் தனியாகவே சாப்பிடலாம், சாக்லெட்டையும்கூட. பாதமை நெய்யில் வறுத்து, சாக்லெட்டில் உருட்டி நாம் வெளிநாட்டுக்கு அனுப்புகிறோம். நம் கடைகளில் அரிசி மிட்டாய் என்று விற்கிறார்கள். உள்ளே சீரகம் இருக்கும். பிடிக்காத குழந்தைகள் மிட்டாயைச் சப்பிவிட்டு சீரகத்தைத் துப்பிவிடுவார்கள். ஆனால் யாரும் சீரகத்துக்காக அரிசிமிட்டாயை வாங்கமாட்டார்கள். நம் தமிழ் இளைஞர்கள் ஆங்கிலத்தைத் தின்றுவிட்டு தமிழைத் துப்பிவிட்டு அயல்நாடு சென்று அந்நாட்டினருக்கு தொண்டு புரிகிறார்கள்.தமிழ் தேர்ந்து பேசி, எழுதி தம் ஆற்றலை இலக்கிய படைப்பில் கொஞ்சமாவது செலவழிப்பார்களேயானால் தமிழ் இலக்கியத்தை மிஞ்ச யார் இருப்பார் ?
பல பரிசுகளின் விதிமுறைகள் மாற்றப்பட்டு தமிழ் இலக்கியம் மலேசியா, சிங்கை, இலங்கை, பிலிப்பைன்ஸ், தென் ஆப்பிரிக்கா என்று எங்கு தோன்றினாலும் வெற்றிவாய்ப்பு தமிழுக்கே என்றாகுமல்லவா ? பாதம் சாக்லெட்டுகள் இங்கேயே கிடைக்குமே!முந்திரியின் கதையும் அதுபோலத்தான். நம் நாட்டிலும் விளைகிறது. கோட்டைகள் சிறியன, பக்குவம் பெரியது.வெளி மொழிக் கருத்துகளை நம் தமிழ் மொழிக் கையாளுகையில்வைத்து பரிசு இலக்கியம் புரியலாமே!
உருளைக்கிழங்கு நம் நாட்டில் கிடைக்கிறது.பக்குவம் வெளிநாட்டைச் சேர்ந்தது. நம் கருத்துக்களை வெளி மொழி உத்திகளில் உடுத்தி அழகு பார்க்கலாமே! இதில் கொஞ்சம் ராணுவ முறைக் கண்டிப்பும் இருக்கிறது. நீங்கள் தலித், முற்போக்கு என்று பெயர் சூட்டும் படைப்புக்கள் இதில் அடங்கக்கூடும். உருளைக்கிழங்குக்குப் பதிலாக சர்க்கரை வள்ளியையோ மரவள்ளியையோ நான் வறுத்துத் தந்திருந்தால் சுலபமாய்ப் புரிந்திருக்கும்.
கடைசியாக எலுமிச்சை ரசம், இவை எல்லாவற்றையும் ஜீரணம் செய்ய வசதியாக, முழுவதும் உள்ளூர் சரக்கு! நீங்கள் புகுந்து விளையாடலாமே,இலக்கிய தாகம் தீரும்வரை அருந்தலாமே!
விருட்சன்: ஐயா, தாங்கள் உணவுப் பரிமாற்றங்கள் பற்றிக் கூறியவிதமே
‘ எழுதாத கதை ‘ க்கு ஞானபீடப் பரிசு ஏன் கொடுக்கப்பட்டது என்பதை ஒருவாறு விளக்கிவிட்டது. செல்வி குமுதா நினைப்பதுபோல தமிழ் இனி மெல்லவாவது வாழும்!
விருட்சனும் குமுதாவும்: நன்றி, ஐயா! வருகிறோம்!
கஜானனன் பிள்ளை: நன்றி! வெல்க தமிழ்!
—————முற்றும்——————
kalyanar@md3.vsnl.net.in
- வரம்
- உதிர்தலும் உருமாற்றமும் -அ.செ.முருகானந்ததனின் ‘பழையதும் புதியதும் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 59)
- நவீன எழுத்தாளனின் தலைவிதி
- இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை
- அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 2 – மாக்ஸ் டெல்பர்க்
- அறிவியல் துளிகள்-24
- ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்
- இந்தியக் கனநீர் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட தீவிர நிகழ்ச்சிகள் [Incidents at the Indian Pressurized Heavy Water Reactors]
- ‘மே-தை மாதம் ‘
- செந்தமிழ்ப் பாட்டன்
- ‘கவிதையும் கழுதையும் ‘
- நானும்…. நீயும்
- தொடக்கம்
- படுகை
- வேண்டும், வேண்டும்…
- மழை
- அர்ஜெண்டினா ஆகிவிடுமா இந்தியா ?
- இந்தியா- சீனா நட்பு மலர்கள்
- ஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்
- வாழ்க புவனேஸ்வரி!! ஒழிக விஜயகாந்த் !!!
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 1
- எதிர்பாராத அடி – நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு
- ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளருடன் ஒரு நேர்காணல்.
- கடிதங்கள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நான்கு
- தற்காப்புக்காக
- போதை