ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

இகாரஸ் பிரகாஷ்


தமிழில் மட்டும்தான் பேச்சுத்தமிழ் ஒன்றாகவும் , எழுத்துத் தமிழ் ஒன்றாகவும் இருக்கிறது என்றும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் அளவில்லாதது என்று அண்மையில் பொதுமடல் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. இது உண்மைதான். இதன் சிக்கல்களை நானும் உணர்ந்திருக்கிறேன். ஸ்பெஷல் மசாலா தமிழில் எழுதப்பட்ட ஒரு சங்கப்பாடலைப் படிக்க,

ஸ்பெஷல் சாதா அல்லது சாதா தமிழில் புரிந்து கொள்ள ஒரு யத்தனம் தேவைப்படுகிறது. அல்லது மிக எளிதான ஒரு வழி இருக்கிறது. அது தான் சங்கப் பாடல்களில் பரிச்சயம் உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது.

அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல், பரணி என்று விரியும் சங்கத்தமிழ்ப்பாடல்களில் சொல்லப்படாத உணர்ச்சிகளே இல்லை என்று வேறு எங்காவது படிக்க நேரிடும் போது, வீராவேசமாக, என்னிடம் உள்ள , அக்கக்காக கிழிந்திருக்கும் ஒரே நூலை எடுத்துப் படிக்க முற்பட்டு, பின் அதன் கரட்டு முரட்டுத் தமிழில் சோர்வடைந்து, கையில் இருப்பதை தூக்கிப் போட்டுவிட்டு official polish joke book ஐ முப்பத்து ஐந்தாவது தரம் படிக்க உட்கார்ந்துவிடுவது வழக்கம்.

எப்போதாவது சில சமயம் புத்தகக் கடைகளில், புறநானூறு அல்லது அகநானூறு விளக்க உரை என்று யாராவது எம்ஏ பிஎச்டி ஆசாமி எழுதிய நூல் கண்ணில்பட்டு ஆவலாக எடுப்பேன். முதல் பக்கத்தை படிக்கும் போதே, இதை முழுதாகப் படித்தால் நிச்சயம் ஒரு பாட்டில் மில்க் ஆஃப் மெக்னீஷியா தேவைப் படும் என்று தெரிந்து விடும்.:-)

என்னுடைய இந்த தமிழ் ஆர்வக்கோளாறு அவஸ்தைகள் எப்படியோ எழுத்தாளர் ஜெயமோகனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். சமீபத்தில் அவர் எழுதி கவிதா பதிப்பகம்

வெளியிட்ட சங்கச் சித்திரங்கள் என்னும் நடைச் சித்திரத் தொகுப்பினை, எனக்காகவே எழுதினார் என்பதுஎன் தீராத நம்பிக்கை.

ஆனந்த விகடனில் வெளியானபோதே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய தொடர் இது என்று அறிந்திருக்கிறேன். தேர்ந்தெடுத்த சில சங்கப் பாடல்களை பற்றிய illustration ( பிரயோகம் சரிதானா ? ) தான் இந்த நூல். பாடல், அந்தப் பாடல் நினைவுபடுத்தும் ஒரு சம்பவக் கோவை, முடிவில் அந்த பாடலின் புதுக்கவிதை வடிவம் என்று வித்தியாசமான வடிவம், பத்திரிக்கையில் படிக்கும் போதே என்னை மிகவும் ஈர்த்தது.

இது பற்றி சங்கப்பாடல்களிலும் , நவீனத் தமிழ் இலக்கியத்திலும் பரிச்சயம் உள்ள சில நண்பர்களிடம் உரையாட நேர்ந்த போது, சில பின் தகவல்கள் கிடைக்கப் பெற்றேன். அவற்றில் முதன்மையானது, நூலில் உள்ளதாகச் சொல்லப் பட்ட சில குறைகள். சில பாடல்கள் தப்பர்த்தம் பண்ணிக் கொள்ளபட்டதாகவும், பாடல்களின் திணை, துறை தவறாகக் குறிப்பிடப்பட்டதாகவும் கேள்விப் பட்டபோது எனக்கு அது அதிர்ச்சியாக இல்லை. ஏனெனில் அவை எனக்கு ( the stress being on the word ‘எனக்கு ‘ ) பொருட்டாகத் தெரியவில்லை. திணை என்பது என்னைப் பொறுத்தவரை, தினையின் டைப்போ. துறை என்றால் டிபார்ட்மெண்ட். அந்தப் பாடல்களின் அடிக்குறிப்பாக இடப்பட்டிருந்த திணை துறை விவரங்களால் எனக்கு, குறைந்த பட்சம் தற்போதைக்கு, பைசா பிரயோசனமில்லை. இந்த நூலில் என்னை முற்றுமுழுதாக ஈர்த்தது, அந்த நடைச்சித்திர வடிவம்தான். இந்த இலக்கணம் மீதான இந்த அலட்சிய மனோபாவம் குறித்து என்மீது எனக்கே சற்று வருத்தம் உண்டு. இருப்பினும், அவற்றை முறையாகக் கற்றுத் தேறும் வரை, வேறு மார்க்கமில்லை.

பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த

பெருங்களிறு இழந்த பைதற்பாகன்

அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை

வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்குக்

கலங்கினே அல்லனோ யானே பொலந்தார்த்

தேரவண் கிள்ளி போகிய

பேரிசை மூதூர் மன்றங் கண்டே

என்கிற ஒரு பொதுவியல் திணை புறநானூற்றுப் பாடலை,

பெரிய சோற்றுருண்டை தந்து

வெகுநாள் வளர்த்த

ஓங்கிய யானை

இறந்த பின்பு

அது நிறைந்து ஆடி நின்றிருந்த

காலியான கொட்டில் கண்டு

கண்ணீர் மல்கும் பாகனைப்

போல

பெற்தேர் கிள்ளி இருந்த

உறையூர் மாமன்றத்தை கண்டு

நானும் இதோ கலங்கி நிற்கிறேன்.

என்று எழுத முடிகிற அவரது எக்ஸ்பர்டிஸ் தான் முதலில் நம்மை தாக்குகிறது. இதற்கு துணையாக அவர் அழைக்கும் சம்பவமும் ஒண்ணாங்கிளாஸ். ( பிறந்து சில நாட்களில் இறந்து போகும் குழந்தையின் தகப்பனது துயரத்தை சொல்லும் சம்பவம் அது. அந்த குழந்தையின் உடல் காற்றில் குடைந்து எடுத்துக் கொண்ட இடம் குறைவுதான், ஆனால்

அதன் மரணம் ஏற்படுத்துகிற காலியிடம், பல மடங்கு அதிகம் ) .

முதல் வரி, பெருஞ்சோறு பல்யாண்டு … ஒன்றும் புரியவில்லை. பின் பெருங்களிறு இழந்த பைதற்பாகன்…. களிறு என்றால் யானை என்று தெரியும், பாகன் தெரியும். பைதற்பாகன் என்றால்…என்ன ? ஏதோ ஒரு உரிச்சொல்லாக இருக்க வேண்டும். அதற்கடுத்து வரும் வரிகள் புரியவில்லை என்றாலும், ஏதோ ஒரு இழப்பை பற்றி சொல்கிறார் என்பது போல சற்று குழப்பமாகத் தெரிகிறது. அப்பாடலைத் தாண்டி உள்ளே நுழைந்தால், குழந்தையை இழந்து விட்டு, மாதேஸ்வரன் நிற்கிறான். புரிகிறது. ஒன்றுக் கொன்று ஒட்டாமல் மனதில் ஏற்பட்டிருக்கும் அந்தக் கொலாஜ் வடிவத்தின் மேக மூட்டம் கலைந்து தெளிவாகிறது. கிள்ளி இருந்த உறையூரைக் கண்டு கலங்கி நிற்கும் போது, என் வாசிப்பு அனுபவம், அந்த ஒரு அத்தியாயத்தை பொறுத்த மட்டில் முற்றுப் பெறுகிறது.

இது போலவே, சுமாராக நாற்பது பாடல்களை தேர்ந்தெடுத்து இத்தகைய விளக்க்ம் தருகிறார். தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுக்கு பொருத்தமாக பாடல்களை தேர்ந்தெடுத்தாரா, அல்லது பாடல்களை தேர்ந்தெடுத்து, அதற்குப் பொருத்தமான சம்பவங்களை கற்பனை கலந்து வடித்தாரா என்பதை கண்டு பிடிக்க இயலாது. அந்தரங்கமான விஷயங்கள் கூட அவருடைய கட்டுரையின் மையமாக இருக்கிறது. பெரும்பாலும், அண்டை அயல், நண்பர்களின் வாழ்க்கையில் நிகழும் பல சம்பவங்களும் இடம் பெறுகின்றன.

நூலில் இருந்து ஒரு சாம்பிளோடு முடித்துக் கொள்கிறேன்.

இது

வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்

தன்னோர் அன்ன இளையோர் இருப்பப்

பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக்

கால்கழி கட்டிலிற் கிடப்பித்

தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே

என்கிற ஒளவை எழுதிய புறநானூற்றுப் பாடல் பற்றிய சித்திரம்.

இலங்கையில் இருந்து எழுத்தாளர் சென்னை வந்திருக்கிறார். அவர் ஹாலந்து நாட்டிற்கு புலம் பெயர்ந்தவர். இலங்கையில் உள்ளது போல விஸ்தாரமான செம்பருத்தி பூக்கும் வீடு ஹாலந்தில் இல்லை என்பதில் வருத்தம் உள்ளவர். உள்நாட்டுப் போரில் பலி கொடுத்த தன் 18 உறவினர்களுக்காக சாந்தி பலிச் சடங்கு செய்வதற்காக ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அதற்கு நடுவில் சென்னையில் ஒரு இலக்கியக்கூட்டம்.

அவர் சடங்கு செய்ய வேண்டிய 18 பேரில் அவர் மகன் குலசிங்கம் அடக்கம் இல்லை. மூதாதையர் பெயரைக் காப்பாற்றுவதற்காக ‘தலைவரின் ‘ ஆணையின் பேரில் சென்று போரில் பலியானவன். அதிலே எழுத்தாளருக்குப் பெருமிதம். அவன் இறந்த சேதி கேட்டு, ‘ மகனே , நீ எங்கள் குலத்தின் பெருமையைக் காப்பாற்றினாய் ‘ என்று அலறினவர். அவனுடைய ஆன்மா நற்கதியடைந்திருக்கும் என்று திடமாய் நம்புகிறவர். அதனால் தான்

அவனுக்கு மட்டும் சடங்கு வேண்டாம்.

அவன் தாய் என்ன சொல்கிறாள் ?

இனி ஜெயமோகன் வார்த்தைகளிலேயே…

************************************

‘ எத்தனை கேட்டாலும், எத்தனை கற்பனை செய்தாலும் அந்த வேகம் இந்தியத் தமிழனுக்குப் புரிவதே இல்லை. யோகா உருகிய உலோகம் போன்று கொதிநிலையில் இருந்தார். ‘ ஆயிரம் வருசம் ஆனாலும் எங்களுக்கெண்டு ஒரு நாடு வராமப் போகாது. அங்க எண்ட மகனுக்கு ஒரு நடுகல் இருக்கும்… ‘என்றார். எங்கள் குலமே இனி

அவன் பேரால்தான் அழைக்கப் படும். அவனது தந்தையாகத்தான் என் வாழ்க்கைக்கு அர்த்தம் வருகிறது.

போன் வந்திருப்பதாக கீழேயிருந்து வீட்டு உரிமையாளரின் மகன் வந்து சொன்னான். யோகா இறங்கிப் போனார். அவரது பாத ஒலி மறைந்ததும் அவர் மனைவி வேகமாக வந்தார். அவர் உதடு துடிப்பதைக் கண்டேன். ‘ யோகாவிடம் ஒரு விஷயம் சொல்ல முடியுமா ‘ என்றார். ‘என்ன ? ‘ என்றேன் எச்சரிக்கையுடன். ‘ ஒரு முறை புட்டபர்த்திக்கு போக வேண்டும்… ‘ ‘ அதற்கென்ன! யோகாவிடம் சொல்கிறேன் என்றேன் ‘.

‘ இது குலம் ( குலசிங்கம்) விஷயமாக. நான் சொன்னேன் என்றால் அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். … ‘ அந்த அம்மாளின் கண்களில் இருந்து நீர் உதிர்ந்தது. யோகா போன வழியைப் பதற்றத்துடன் பார்த்தார். ‘என் கனவில் குலம் வராத நாள் இல்லை. கையில் புத்தகக்கட்டும் அரை டிராயருமாக வருவான். துக்கத்துடன் ஏதோ சொல்ல ஆரம்பிப்பான் . அதற்குள் கனவு கலைந்து விடும். என் குழந்தைக்கு , என்னிடம் ஏதோ சொல்ல

வேண்டும். அது என்ன என்று அவனிடம் நான் கேட்க வேண்டும். பாபா நினைத்தால் முடியும் என்று சொல்கிறார்கள்….. ‘

யோகா வரும் ஒலி கேட்டு , அவர் உள்ளே போனார். நான் மனம் கலங்கி நின்றிருந்தேன். பின்பு புறநானுற்றின் ஓர் அன்னையைக் கண்டுடைந்தேன். தமிழ் மரபு வீரம் என்றும் அறம் என்றும் முன்வைத்துப் போற்றும் அனைத்தையும் தன் அடிவயிற்றுத்தீயால் பொசுக்கும் அன்னையின் குரலை…..

வெள்ளாட்டு மந்தை போல

அவனைப் போன்ற இளைஞர்

கூடியிருந்த போதும்

பலருடைய தலைக்கு மேலாக

மன்னன் நீட்டிய கள்மொந்தை

என் சிறுவனை இதோ

காலில்லாத கட்டிலில் கிடத்தி

தூய வெள்ளாடையால்

போர்த்தியிருக்கிறது

வெள்ளாட்டு மந்தை என்று மறவர் கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுவதில் உள்ள சுடுவிஷம் தமிழ்க்கவிதைகளில் அபூர்வமாகவே காணக்கிடைக்கிறது. எந்த சித்தாந்தமும் மரபும் அறமும் அன்னையின் அடிவயிற்றின் தீயைப் புரிந்து கொண்டதில்லை போலும்.

************************************

( சங்கச்சித்திரங்கள்- ஜெயமோகன்-கவிதா பதிப்பகம், சென்னை- விலை.ரூ.100)

icarus1972us@vsnl.net

Series Navigation

இகாரஸ் பிரகாஷ்

இகாரஸ் பிரகாஷ்