சோனியா காந்தி – ஒரு நடுநிலைப் பார்வை

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

ஜோதிர்லதா கிரிஜா


தேர்தல் அமர்க்களம் முடிந்துவிட்டது. சோனியா காந்தி தமது உள்ளுணர்வின்படி இந்த நாட்டின் பிரதமர் பதவியைத் துறந்து விட்டார். துறத்தல் (தியாகம்) என்கிற பெருந்தன்மை இந்த நாட்டின் அடிப்படைப் பண்பு. ராமாயணக் கதா நாயகன் ராமன், அவன் தம்பி பரதன், சித்தார்த்த கெளதம புத்தர், மாமன்னர் அசோகன் கியோர் அரசாளும் பதவியைத் துறந்தவர்கள். நாம் அறிந்த காந்தி அடிகளும் இந்தியா விடுதலை யடைந்ததும், எந்தப் பதவியிலும் ஒட்டிக்கொள்ளாமல் சமுதாயச் சேவை செய்யப் போய்விட்டவர். இந்த மண்ணில் வந்து சில ண்டுகளாக வாழ்ந்துகொண்டிருப்பதாலோ என்னவோ, சோனியா காந்தியையும் இந்தப் பெருந்தன்மை பற்றிக்கொண்டது.

சோனியா காந்தி தியாகம் எதுவும் செய்யவில்லை என்று சிலர் சொல்லுகிறார்கள். இதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. தேடி வந்த – அல்லது சிலர் குற்றம் சாட்டுவது போல் “அந்தப் பதவி தமக்கு வர வேண்டும் என்பதற்காக இடையறாது உழைத்ததன் விளைவாய்த் தமக்குக் கிடைப்பதற்கு இருந்த” – மாபெரும் இந்திய நாட்டின் பிரதமர் பதவியை ஒருவர் வேண்டாம் என்று மறுதலித்து மிகவும் தகுதி வாய்ந்த மற்றொருவரை அதற்குப் பரிந்துரை செய்வது மிகப் பெரிய விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளுவதற்கு ஒரு நடு நிலை மனப்பான்மை வேண்டும். அது இல்லாதவர்கள்தான் சோனியா காந்தியின் நிராகரிப்பைப் புரிந்துகொள்ள இயலாதவர்கள்.

சில நாள்களில் பா.ஜ.க. வினரும், பிற இந்து வெறியர்களும் ஒருங்கிணைந்து பதவியாசையால் மட்டுமின்றி, தாம் ஒரு கிறிஸ்துவர் – அதிலும் வெளிநாட்டுக் கிறிஸ்துவர் என்பதற்காகவும் – தமது கூட்டணி அரசைக் கவிழ்க்கவே செய்வார்கள் என்கிற நிலையிலும், எந்த ஒரு நபரும் அக் குறுகிய காலம் வரையிலேனும் பிரதமாராக இருந்து வரலாற்றுச் சிறப்பை எய்துவதில்தான் குறியாக இருப்பார்கள். சோனியாவுக்கு “ஆசை” என்று குற்றம் சாட்டும் சிலர்- அப்படியே இருந்தாலும் – அது மனித இயல்பு என்பதை அவர் விஷயத்தில் மட்டும் வசதியாய்ப் புறக்கணித்துவிட்டு அவரைத் தனித் துலாக்கோலால் எடை போடுகிறார்கள். எழுபதைக் கடந்தவர்கள் ஆசைப் படலாம்; ஆனால் ஐம்பதுகள் ஆசைப்படக்கூடாது! ஒதுங்கிக்கொண்டு விட வேண்டும். இதுதான் அவர்களது நியாயம்!

யார் என்ன பேசினாலும், எவ்வளவு எதிர்த்தாலும் – பேசுகிறார்கள், எதிர்க்கிறார்கள் என்பதற்காகவே ஒரு வரட்டுப் பிடிவாதத்துடன் – ‘பிரதமர் பதவியில் அமர்ந்தே தீருவேன்’ என்று அவர் முடிவு செய்திருந்திருக்க முடியும். ஆனால், செய்யவில்லை. இந்த அவரது முடிவிலிருந்து பதவி ஆசை அவருக்கு இல்லை என்பது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. பதவி சை இருந்திருப்பின், தாம் அரியணையில் அமர்ந்ததன் பிறகு எதிர்க் கட்சியினர் ஆர்ப்பாட்டங்கள் செய்து சில நாளில் அரசைக் கவிழ்க்க முற்படுவார்கள் என்னும் சாத்தியக்கூறு இருப்பினும், அந்தச் சில நாள் வரையிலேனும் பதவியில் அமர்ந்து இந்திய வரலாற்றில் இடம் பெறும் பேரவா அவருக்கு நிச்சயமாய் ஏற்பட்டிருந்திருக்கும். ஆனால், அவரிடம் அது இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அதனாலேயே அவரால் மாபெரும் பதவியைத் துச்சமாய் நினைத்து உதற முடிந்தது.

சோனியா காந்தி எத்தகைய உயர்ந்த ஆன்மா என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்பட்டுவிட்ட உண்மை. தன் பாதுகாவலர்களாலேயே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்ட போது, ‘யே க்யா கர் ரஹே ஹோ ?’ ( என்ன காரியம் செய்யறீங்க ?’ ) என்று கூவியபடி அவர் தரையில் சாய்ந்தார். ‘அம்மா!’ என்று அலறியவாறு வீட்டினுள்ளிருந்து கணத்துள் ஓடிவந்த சோனியா காந்தி இந்திரா காந்தியைத் தம் மடியில் போட்டுக்கொண்டார் – அடுத்த குண்டு தம் மீது பாய்ந்திருக்க்கூடிய நிலை பற்றிய அச்சமோ கவலையோ இல்லாமல்! பெற்ற மகளே செய்யத் தயங்கி, அஞ்சி, மலைத்துச் செயலிழந்து நின்றிருந்திருக்கக்கூடிய ஓர் ஆபத்தான நேரத்தில், சோனியா காந்தி இவ்வாறு செய்தது அவர் ஓர் உயரிய ஆன்மா என்பதைத் துல்லியமாய் வெளிப் படுத்துகிறது.

இவரது ஆன்மாவின் உயர்வைத் தெள்ளத் தெளிவாக்கும் இன்னொரு விஷயமும் ஞாபகத்துக்கு வருகிறது. ராஜீவ் காந்தியின் படுகொலைச் சதியில் சம்பந்தப்பட்டுச் சிறையிலிருந்த நளினி முருகனை, அவர் சிறையில் இருந்த போது குழந்தை பெற்றுக்கொண்ட இளந்தாய் என்னும் ஒரே மனிதாபிமனக் கண்ணோட்டத்தோடு சோனியா காந்தி மன்னித்ததுதான் அது!

சோனியா காந்தி பதவியை மறுதலித்துவிடுவார் என்பதே நாம் எதிர்பார்த்தது. மன்மோகன் சிங்கை அவர் பரிந்துரைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற நம் போன்ற நடுநிலையாளர்களின் எண்ணத்தைப் புரிந்துகொள்ளும் உள்ளுணர்வும் அவருக்கு இருந்திருக்கிறது. மிக நல்ல தேர்வு என்று நாடே அவரைப் போற்றிப் பாராட்டுகிறது.

சோனியா காந்தி பிரதமர் பதவியைத் துறந்ததற்குப் பல காரணங்களைப் பலர் சொல்லத் தொடங்கியுள்ளனர். தீவிரவாதிகளின் கொலைமிரட்டல் அவற்றில் ஒன்று. அதற்கு அஞ்சியவராய் அவர் தோன்றவில்லை. அப்படி இருந்தால், மக்களோடு மக்களாய்த் தெருக்களில் நடந்து தமது பிரசாரத்தைச் செய்திருந்திருக்க மாட்டார். அடுத்த பிரதமர் அவரே என்பது அறிவிக்கப்படாத தீர்மானம் என்பது தெரிந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போதே அவரது உயிருக்கு பத்து இருக்கத்தான் செய்தது.

அவர் இத்தாலியர் என்பது அடுத்த அம்பு. இது ஒன்றை மட்டுமே வைத்துத் தம் அரசைச் சில நாளில் எதிர்க்கட்சியினர் கவிழ்ப்பார்கள் என்பது இவருக்குத் தெரியும். எனவே இரண்டோர் ஆண்டுகளில் மறுபடியும் ஒரு பொதுத்தேர்தல் வரும் என்பதும் இவர் அறிந்ததுதான். அதற்கு இடம் கொடுத்துப் பொருளாதாரச் சீர்குலைவுக்கு வழி வகுக்க அவர் விரும்பாததும் ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும்.

(ஓர் அயல் நாட்டுக்காரர் இந்தியாவை ஆள்வது என்பது சற்றே இடிக்கத்தான் செய்கிறது. இருப்பினும், எந்த நாடு, எந்த மதம், என்ன நிறம் என்பவற்றை யெல்லாம் கடந்து, ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதைக் கவனிக்க வேண்டியதே முக்கியம். இந்த நாட்டை இதுகாறும் ஆண்டவர்கள் என்ன கிழித்தார்கள், அவர்கள் கிழித்தவற்றில் இவர் எதைக் கிழிக்காமல் விடுகிறார் என்பதையும்தான் பார்ப்போமே என்பதே பாமர மக்களின் கருத்தாக இருக்கும். யு.டி.ஐ. (Unit Trust of India) மைய அரசின் நிதி நிறுவனம் என்பதால் நம்பி அதில் பணம் போட்டு ஏமாந்து லட்சக்கணக்கில் இழப்புக்கு ஆளான இந்தியர்கள் அதற்குக் காரணர் ஆன மைய அமைச்சர் குறைந்த பட்சத் தண்டனையான பதவித் துறப்பைக் கூடச் செய்யவில்லை என்பதையும், மாறாக அவருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது என்பதையும் மறக்கவில்லை! ஏதோ இந்தியாவை இன்றளவும் ஆண்டவர்கள் எல்லாரும் அப்படியே சொக்கத் தங்கம் என்பது போலவும், சோனியா காந்தி மட்டும் நம்பத் தகுந்தவர் அல்லர் என்பது போலவும் பேசுவதும் எழுதுவதும் எதன் அடிப்படையில் ?)

சுஷ்மா ஸ்வராஜ் எடுத்த (அசட்டுத்தனமான) மொட்டை யடித்துக்கொண்டு, பத்தியச் சாப்பாடு சாப்பிட்டுத் தரையில் படுத்துறங்கும் முடிவு அவரை அருவருப்பில் நிச்சயமாக ஆழ்த்தி யிருந்திருக்கும். (இந்தியாவில் இன்று லட்சக்கணக்கானோர் வெறுந்தரையில் தானே படுத்து உறங்குகிறார்கள் ? ஒரு வேளைக்கான எளிய சாப்பாடும் கிடைக்காதவர்கள்தானே அவர்கள்! பாராளுமன்ற உறுப்பினர் ஆனதுமே, சுஷ்மா ஸ்வராஜ் இப்படி ஓர் அறிவிப்பைச் செய்திருந்தால், ஒரு (பெண்) காந்தி என்று அவரைக் கொண்டாடியிருக்கலாம். இப்போது சொல்லுவது விதண்டாவாதமல்லவா ? சந்தர்ப்பவாதமல்லவா ?)

இப்படி ஒரு சூழ்நிலையில், அப்படியாவது நாம் பிரதமர் ஆகாவிட்டால்தான் என்ன என்னும் கேள்வி இவருள் கிளம்பி யிருந்திருக்கும்.

இந்தக் காரணங்களை யெல்லாம் மீறி, எவருமே சில நாளேனும் பிரதமர் பதவியில் இருந்து இந்திய வரலாற்றிலும் இடம் பெறவே ஆசைப்பட்டிருப்பார்கள். னால் தேடி வந்த பதவியைத் துறந்ததன் வாயிலாக, சோனியா காந்தி அதற்கும் மேம்பட்ட வரலாற்றுச் சிறப்பை எய்திவிட்டார் என்பதில் துளியும் ஐயமில்லை!

நிலையான ஆட்சி தரும் அறுதிப் பெரும்பான்மை பெற்ற மாபெரும் கட்சியாகக் காங்கிரஸ் கட்சியை உருவாக்கும் பணியில் சோனியா காந்தி வெற்றி பெற வாழ்த்துவோம்!

. . . . . . . . .

பின் குறிப்பு:

1991 இல் ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பின் பிரதமர் பதவி சோனியா

காந்தியைத் தேடி வந்தது. ஆனால், உயிர்க்குப் பாதுகாப்பு மிகவும் பலப்

படுத்தப்படும் சாத்தியம் இருந்தும் அவர் அதை நிராகரித்தார். ஏற்றிருந்தால்,

அவரைக் குற்றம் கூறும் இதே வாய்கள், அன்று, ‘போஃபர்ஸ் பீரங்கி ஊழலை

அப்படியே கிடப்பில் போடுவதற்காகவே அவர் பிரதமர் பதவியை ஏற்று

ள்ளார் ‘ என்று அவதூறு பேசியிருக்கும்தானே!

jothigirija@hotmail.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா