சொல்லடி…என் தோழி!!

This entry is part [part not set] of 42 in the series 20030626_Issue

வேதா


கண்ணை இமை தொடும்;
இமையைக் கண் தொடுமோ ?
மண்ணை மழை தொடும்;
மழையை மண் தொடுமோ ?

திரியில் சுடர் ஆடும்;
சுடரில் திரி ஆடுமோ ?
கிளையில் கொடி படரும்;
கொடியைக் கிளை தழுவும் ?

ஹும்..!
என்னைக்
‘காற்றால், மழையால்
கலங்காதிருப்பவள் ‘ என்று
கட்டியம் கூறினாயே…..

‘புயலும் பூகம்பமும்
புரட்டியும் போடுமோ ? ‘ என்று
சத்தியம் கூட செய்தாயே….

பாரடி என் நிலையை!!
கலக்கம் தவிர்க்க எண்ணிக்
கலைந்துவிட்டேன் நான்!
ஒரு புன்னகையில் பூப்பறித்துப்
புதைந்துவிட்டேன் நான்!

என்
இமை குவிந்த போதெல்லாம் – காளை அவன்
இளம் பார்வை தீண்டுதடி!
மனம் மலரும் போதெல்லாம் – மன்னவனின்
‘மணம் ‘ அழகு சேர்க்குதடி!

மோக நெருக்கமடி – இதைவிடத்
தீயின் வேகம் சொர்க்கமடி!

கொடியைத் தழுவிய கிளையாய்
சுடரின் சுகத்தில் சிறைபட்ட திரியாய்
வண்ண வண்ணமாய் – என்னை
வசியம் செய்த வஞ்சகனை
மனதில்
வரைந்து வரைந்து கரைகின்றேன்;
தினமும், அவன் நினைவில்
அலைந்து அலைந்து தொலைகின்றேன்;

என்
கனவுகள், கற்பனைகள்
காகிதங்கள் ஆனபோதும்
காத்திருந்து தமிழ் அவனைக்
கோர்த்த பின்னே தெரியுதடி,
காகிதத்தில் ‘கவிதை ‘ என்று!!

என்னை அறியாமல் நான்
சிறை பட்டேனடி!
ஏதும் அறியாமலே தான்
சிறை வைத்தேனடி!

உயிரைத் திருடவிட்டு – வெறும்
உடலாகிப் போனேனடி!
உண்மையைச் சொன்னாலே – உள்ளுக்குள்
உவகை பெருக்குதடி!

நிஜத்தில், நேற்றுவரை ‘ நாம் ‘…
இனி,
இன்றுமுதல் ‘நாங்கள் ‘ ஆகிறோம்!

மண்டியிட்டுக் கேட்கிறேன்
தோழி!
முதன்முதலாய் என்னை
மன்னித்ததாய்ச் சொல்வாயா ?

veda
piraati@hotmail.com

Series Navigation

வேதா

வேதா