கிரகம்
“அக்கா, ஆபீஸ்; போயிட்டு வர்றேன்” என்று அக்கா மாலாவிடம் கூறினான் சுப்ரமணியம். “கோயிலுக்கு போயிட்டு ஆபீஸ்க்கு போடா” என்றாள் மாலா. சுப்ரமணியம் சென்னைக்கு புதுசு அவனது சொந்த ஊர் வு.கல்லுப்பட்டி, மதுரைக்கு அருகில் உள்ளது. படித்தது தியாகராஜா பொறியியல் கல்லூரியில் இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு முடியும் முன்னரே கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்தது. இன்று தான் அவன் அலுவலகம் செல்லும் முதல் நாள். “மச்சான்கிட்ட சொல்லிடு” என்று அக்கா மாலாவிடம் கூறிவிட்டு காரணீஸ்வரர் கோவிலை நோக்கி நடந்தான். சென்னைக்கு புதியவன் என்பதால் கண்ணில் பார்க்கும் நிகழ்வுகள் அனைத்தையும் மனதில் அசைபோட்டபடி நடந்து கொண்டிருந்தான்.
பெண் ஒருத்தி அவள் வீட்டு வாசலின் முன்னே ஊசிப்போன சாம்பாரை கொட்டினாள். சாம்பார் கொட்டிய வேகத்தில் அங்கு சேர்த்து வைத்திருந்த குப்பைகள் கலையத்துவங்கின. அதை குப்பை அள்ளும் தொழிலாளி ஒருவன் பார்த்துவிட “ஏம்மா, இப்படி செய்ற, பெருக்கிவச்ச குப்பையெல்லாம் பறக்குதல்ல” என்றான் தொடர்ந்து பேசத்துவங்கினான். “ஏம்மா இது உன் வூடுதான, நீயே அசிங்கம் பண்ற” என்று கூறினான். அவள் “போப்பா நீ பெரிசா பேச வந்துட்ட, இது ஒண்ணும் என் வூடு இல்ல, நாங்க வாடகைக்குதான் இருக்கோம்”. குப்பைக்காரன் ஏதும் பேசாமல் சாம்பார் கொட்டிய குப்பைகளை அள்ளி வண்டியில் போட்டுக் கொண்டான்.
சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் நுழைவாயிலில் உள்ள படிக்கட்டுகளை கும்பிட்டு உள்ளே சென்றான். மணி, சாமியை தரிசித்த பின் கோவிலைவிட்டு வெளியே வந்தான் மணி. பிச்சைக்காரர்கள் அனைவரும் கையில் திருவோடுடன் கோவிலின் வெளியே அமர்ந்திருந்தனர். அவனுக்கு ஒரு பிச்சைக்காரனை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. கைகள் இரண்டு, கண்கள், காது நன்றாகத்தானே இருக்கிறது. இவன் ஏன் பிச்சை எடுக்கிறான்? கையை மணி முன் நீட்டியபடி வாயிலிருந்து வழியும் வெற்றிலைபாக்கு எச்சியை குப்பியில் துப்பினான் அந்த பிச்சைக்காரன்.
வழியில் சிலர் புகைபிடித்துக் கொண்டு இருந்தார்கள். சிலர் பூட்டிய கடையின் படிக்கட்டில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். லேடீஸ் ஹாஸ்டல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தனர். அவர்கள் கழுத்தில் டேக் அணிந்திருந்தனர் அவர்கள் ஜாடையில் வட இந்திய பெண்கள் போல் இருந்தார்கள். மணி அவர்களை பார்த்ததும் அவனுக்குள் உற்சாகம் உண்டானது. பின்னாலிருந்து பார்த்த அவனுக்கு அவர்கள் முகங்களை பார்க்க வேண்டும்போல் இருந்தது. அந்த பெண்கள் மூக்கில் துப்பட்டாவை வைத்து மூடிக் கொண்டு முகமூடி கொள்ளையர்கள் போல் இருந்தனர். மணி அந்த துப்பட்டா முகங்களை பார்த்த படியே முன்னேறிச் சென்றான். பாலத்தின் படிகளில ஏறும்போது ஒருவித கெட்டவாடை காற்றில் கலந்திருப்பதை உணர்ந்தான். அவனும் கைகுட்டையால் மூக்கை பொத்திக் கொண்டு படிகளின் மீது ஏறினான். காய்கறி மார்க்கெட்டின் குப்பைத் தொட்டியில் அதன் கொள்ளவைவிட மூன்று மடங்கு குப்பை கொட்டப்பட்டிருந்தது. பசுமாடு அந்த குப்பையில் மேய்ந்து கொண்டிருந்தது. ஒருவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே அந்த குப்பைத் தொட்டியில் மூச்சாபோனான். குப்பைத் தொட்டி மார்க்கெட்டின் நுழைவாயிலில் இருந்தது. வாடையையும் பொருட்படுத்தாது நுழைவாயிலில் கடைபோட்டு சிலர் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.
வாயையும், மூக்கையும் பொத்திக் கொண்டே மணி சற்றுதூரம் நடந்தான். அந்த பெண்களின் முகத்தில் சற்று நேரத்திற்கு பிறகு முகமூடியில்லை. அந்த பெண்களின் முகத்தை பார்த்து மணி நிச்சயம் அசந்து போயிருப்பான். ஒவ்வொரு முகமும் அழகாக இருந்தது. ஒருத்தி நெற்றியிலும் பொட்டு இல்லை. திருநீரு இல்லை. தலையில் பூ இல்லை ஆனாலும் அந்த பெண்கள் அழகாகத்தான் இருந்தார்கள். சற்று தூரத்துக்கு பின் அவர்கள் வேறொரு பாதையில் பிரிந்து சென்றார்கள்.
பனகல் மாளிகையை ஓட்டிய பெடஸ்டிரியன் பாத்வேயில் நின்று கொண்டிருந்தான் மணி. சிக்னல் இல்லாததால் போலீஸ் ஒருவர் நின்றிருந்தார். போலீஸ் கைகளை உயர்த்தி வாகனங்களை நிறுத்தினார். மணி சைதாப்பேட்டை பஸ்டாண்டை வந்தடைந்தான். அவன் மச்சான் கூறியது நினைவுக்கு வந்தது. “19பு, PP49 பஸ் அடிக்கடி கிடையாது, துரூ பஸ்க்கு வெய்ட் பண்ணாம அடையார் டிப்போ இல்ல திருவான்மியூர் போயிடு அங்கியிருந்து நீலாங்கரைக்கு ஷேர் ஆட்டோ நிறையா இருக்கு”. அய்யோ! அடையார் டிப்போ இல்ல திருவான்மியூர் போற பஸ் நம்பர்கேட்க மறந்துட்டேனே! யாரைக் கேட்பது என்ற குழப்பத்தில் நடந்து கொண்டிருந்தான். காக்கி சட்டை காக்கி பேண்டிலிருந்து ஊழியர் ஒருவரிடம் சென்று கேட்டான். அவர் “தோ இங்கதாம்ப்பா வரும்”. “என்ன நம்பர்? ” “19பு, PP49 பஸ் எல்லாம் போகும்” என்றான். அவன் அடுத்த கேள்வி கேட்கும் முன் அந்த ஊழியர் அந்த இடத்தில் இல்லை. மீண்டும் தயக்கத்துடன் நின்றிருந்தான்.
ஐந்து பேர் பயணிகள் நிற்குமிடத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். மேலும் மூன்று பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அந்த மூவரும் இப்போது தான் அந்த இடத்திலிருந்து தூங்கி எழுந்தவர்கள் போல் இருந்தனர். அவர்கள் தலையில் மற்றும் சீலையில் படிந்திருந்த அழுக்கு தூரத்திலிருந்த மணிக்கே தெரிந்தது. நாய் ஒன்றும் இந்த கூட்டத்தில் அடங்கும்.
யாரோ கத்துவது போல் சத்தம் கேட்டது. அந்த சத்தம் மனிதர்களிடமிருந்து சற்று வித்தியாசப்பட்டிருந்தது. சத்தம் வந்த இடத்தில் பயணிகள் கூட்டம் கூடியிருந்தது. பெரியவர் தலை கூட்டத்தின் நடுவில் இருப்பது அவனுக்கு தென்பட்டது. என்னவென்று பார்க்க கூட்டத்தை நோக்கி நடந்தான் மணி. சுகப்பிரசவம் என்று கூட்டத்தை பார்த்துக் கூறினார் பெரியவர். அவரது கைகளை பார்த்த போது ஆட்டுக்குட்டி ஒன்றை வைத்திருந்தார். ஆட்டுக்குட்டியை தாய் ஆடுவின் முகத்தின் முன் நீட்டினார் பெரியவர். தாய் ஆடு ஆட்டுக்குட்டியை நக்கத் துவங்கியது. கூட்டத்திலிருந்து கரவொளி கேட்டது. பிரசவ இடத்தை சுற்றி மேலும் பயணிகள் கூட்டம் கூடியது. மாட்டு ஆஸ்பத்திரியைத்தான் பஸ் ஸ்டாண்டாக மாற்றிவிட்டார்கள் என்று எண்ணினான்.
42யு ஐ.சி.எப் லிருந்து திருவான்மியூர் வரை என்று போர்டு போட்ட பஸ்ஸில் ஏறினான் மணி. சொகுசுப்பேருந்து என்பதால் இருக்கைகள் மற்ற பஸ்களிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது. ஒரே ஒரு இருக்கை மட்டும் காலியாகியிருந்தது. அதன் பக்கத்து இருக்கையில் பெண் ஒருத்தி அமர்ந்திருந்தாள். காலியான இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான் மணி. அந்தப் பெண் காதில் வாக்மேன் மாட்டிக் கொண்டு ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் இரு காதிலும் இரண்டு சென்டிமீட்டர் தூரத்தில் பிரவுன் கலர் வளையம் தொங்கியது. மூக்கில் வட்ட வடிவ மூக்குத்தி குத்தியிருந்தாள். மணி ஏழு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டான்.
பேருந்தில் பிட்நோட்டீஸ் ஒட்டியிருந்தது அவன் கண்களில் பட்டது. அதை வாசித்து பார்த்தான் உழைப்பு, உயர்வு என்று ஆரம்பத்தில் எழுதியிருந்தது. அதனை அடுத்து ஆயிரம் ரூபாய் முதலீட்டில் மாதம் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம், தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற துடிப்போர்க்கு ஓர் அரியவாய்ப்பு. படிப்பு தேவையில்லை, நேர்மை தான் முக்கியம் என்று எழுதியிருந்தது. மணி கணக்கு போட்டு பார்க்கையில் அவன் சம்பளத்தை விட இதில் கிடைக்கும் மாத வருமானம் அதிகம் போல் தெரிந்தது.
டிரைவர் விண்டோ மிரரை பார்த்துவிட்டு “ஏய் மேல ஏறு டோரை சாத்தப்போறேன்”. சிலர் அவர் பேச்சை கண்டு கொள்ளாமல் டோர் கம்பிகளை பிடித்து தொங்கிக்கொண்டே இருந்தனர். அவர் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே வந்தார். டிரைவர் டோரை லாக் செய்தார். ஒருவன் மட்டும் பஸ்ஸின் வெளியே தள்ளப்பட்டு. டோர் கம்பிகளை பிடித்து தொத்திக் கொண்டு கத்தினான். “யோவ்! யோவ்! நிறுத்துயா” என்று கத்தினான். டிரைவர் பஸ்ஸை ஒரு ஓரமாக நிறுத்தி டோரை திறந்தார். சற்று நேரம் டோரில் தொங்கிய கூட்டத்தினருக்கும், டிரைவருக்கும் வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றுப் பெறாமலே டிரைவர் பஸ்ஸை ஆன் செய்தார்.
சின்னமலையில் சிலர் ஏறினர். ஒருவன் மணி முன்னே வந்து கையை நீட்டினான். டீக்கெட் செக்கர் என்று நினைத்துக் கொண்டு பாக்கெட்டிலிருந்து டிக்கெட்டை எடுத்து நீட்டினான். பதிலுக்கு அவன் சிரித்தபடியே “நான் செக்கர் இல்ல” “வேற என்ன வேணும்”? “உங்க இடம்…. இவங்க என் தோழி கொஞ்சம் பேசணும்” மணி எழுந்து நின்றான். அந்தப் பெண் புதிதாய் அருகில் அமர்ந்தவனை பார்த்து முறைத்தாள். “சாரிமா, நேத்து சாயங்காலம் படத்துக்கு வரமுடியாம போச்சு” என்றான். அவள் ஏதும் பேசாமல் ரோட்டை வேடிக்கை பாhத்துக் கொண்டிருந்தாள். “சாரி, சாரி” என்று அவள் கைகளை பிடித்துக் கொண்டு கூறினான். அவள் கைகளை அவனிடமிருந்து உருவிக் கொண்டாள். அவன் விடாது அவள் தொடைகளை தடவியவாறு “சாரி, சாரி” என்று கூறிக் கொண்டேயிருந்தான். எதிர்பாராத போது “பளார்” என்று அவன் கன்னத்தில் அறைந்தாள். பஸ்ஸில் ஒரு நிமிடம் மௌனம் நிலவியது. அடிவாங்கியவன் கன்னத்தை தடவிக் கொண்டே சற்றும் முற்றும் பார்க்கையில் எல்லோரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். “அப்புறம் ஏண்டா போன் பண்ணல, இரண்டு மணி நேரம் தியேட்டர் வாசல்ல காத்திருந்தேன். என்ன வேற வெலோடவாவது சுத்திக்கிட்டிருந்தியா” என்று கேட்டாள் அவள், “இல்லடா, நேத்துபாத்து மேனேஜர் பயலீவு தரமாட்டேனுட்டான். போன் பண்ணி உனக்கு சொல்லலாம்னு பார்த்தா பேட்டரி டவுண். இத புரிஞ்சிக்காம அடிச்சிட்டியே லதா”. “உன் பேச்ச நம்பலாமா”. “லதா நீ வேணா எங்க மேனேஜருக்கு போன் செய்து கேட்டுக்கோயேன்”.
பஸ் ஊடுசுஐ சிக்னலில் நின்று கொண்டிருந்தது. கேன்சர் இன்ஸ்டியூட் வாசலில் பெண் ஒருத்தி லெமன் சாதம், புளியோதரை விற்றுக் கொண்டிருந்தாள். ஊடுசுஐ சிக்னலில் பச்சை விளக்கு விழுந்தது. பஸ் சீராக அதன் வேகத்தை அதிகப்படுத்தி சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் இப்போது அவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். பஸ் அடையார் டிப்போவை அடைந்தவுடன் டோரில் தொங்கிய கூட்டம் கீழே இறங்கியது. டோரில் தொங்கியவன் பெரிய கருங்கல்லை எடுத்து டிரைவர் சீட் கண்ணாடி வழியே உள்ளே எறிந்தான். டிரைவர் அதிர்ஷடவசமாக தலையை கீழே குனிந்து கொள்ள, டிரைவரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த லதாவின் நேத்தியில வந்து விழுந்தது கல். ஒரு சிலர் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி எறிந்தவனை துரத்தியது. நெத்தியிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. துப்பட்டாவால் லதாவின் நெத்தியில் கட்டு கட்டி அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றான அருகில் அமர்ந்திருந்தவன். சற்று நேர பரபரப்புக்கு பின் பஸ் அடையார் டிப்போவிலிருந்து புறப்பட்டது.
பஸ் திருவான்மியூர் டிப்போவை அடைந்தவுடன், சேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொண்டான் மணி. ஆட்டோ டிரைவர் வாயில் ஜர்தா போட்டுக் கொண்டு மென்று கொண்டிருந்தான். ஜர்தா எச்சியை ரோட்டில் துப்பினான். ஆட்டோ மருந்தீஸ்வரர் கோவிலை தாண்டி சென்று கொண்டிருந்தது. ஒரே நாளில் பகல் பொழுதில் நடந்த இத்தனை நிகழ்வுகள் அவனுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. நடந்த நிகழ்வுகளில் தனக்கு ஒன்றும் ஆகவில்லை அது வரையில் சந்தோஷம்தான். ஆட்டோகாரன் வழி நெடுக எச்சை துப்பிக் கொண்டே வண்டி ஓட்டினான். மணி கடிகாரத்தை பார்த்தான் பத்து முப்பது என்று காட்டியது. “அய்யோ நேரமாயிடுச்சே கொஞ்சம் சீக்கிரம் போங்க” என்றான் மணி. ஆட்டோகாரன் சரியாக காதில்விழாமல் “என்ன சார்”? என்று திரும்பி கேட்கையில் வாயிலிருந்த எச்சின் ஒரு பகுதி மணி சட்டையில் விழுந்தது. “சாரி, சாரி……. தண்ணி தாரேன் துடைச்சிக்கோங்க”. “வேணாம்பா முன்னாடி பார்த்து வண்டிய ஒட்டு” என்று கூறிவிட்டு கைகுட்டையால் அந்த இடத்தை துடைத்ததும் வட்டமாக அந்த கறை பரவியது. நீலாங்கரை நிறுத்தத்தில் இறங்கி சில்லரை கொடுக்கும்போது ஆட்டோக்காரனை முறைத்துக் கொண்டே நின்றான் மணி.
——–
- என் விழியில் நீ இருந்தாய் !
- என் காப்டன் !
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நிலவின் துணை இல்லாமல் பூமியில் நீடிக்குமா உயிரினம் ? (கட்டுரை: 57)
- மே தினம்
- ஹனிஃபாவின் “அழைக்கின்றார் அண்ணா’
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -34 << காதல் பெண்டிர் >>
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – முதல் அத்தியாயம்
- மே 2009 வார்த்தை இதழில்…
- ‘ருது வனம்’ நூல் வெளியீட்டு விழா
- அதிகாரி ஸார்
- பனியும் நெருப்பும் : சண்முகம் சரவணனின் “துறவியின் இசைக்குறிப்புகள்”
- சங்கச் சுரங்கம் – 12 ; முல்லைப் பாட்டு
- இந்தி நடிகருடன் ஒரு இரயில் பயணம்
- கதவுகள் தாழிடப்பட்டிருக்கின்றன
- அம்மம்மா கிழவி
- குன்னிமுத்துகளின் தவிப்பு
- விரும்பாதவை…
- ஒற்றைகை பிள்ளையாரும் ஒரு முதியவர் உயிரும்
- இடறிய விரல்கள்
- “தும்மலுக்கு நன்றி”
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திமூணு
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< கவிஞன் யார் ? >> (தொடர்ச்சி) கவிதை -6 பாகம் -2
- சைதாப்பேட்டையிலிருந்து நீலாங்கரை வரை
- “காப்புரிமை”