செவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue


மார்ஸ் ஒடிஸ்ஸி விண்கலத்தின் மானிகள் செவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி உறைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்தவாரம் வெளியிடப்பட இருக்கும் (மே 25 2002) அறிவியல்கட்டுரைகளில் வெளிவர இருக்கும் இந்த விஷயம், செவ்வாய் கிரகத்தை ஆராயும் ஆராய்ச்சியில் பெரிய மைல்கல் எனக்கருதப்படுகிறது.

பல வானவியலாய்வாளர்கள் செவ்வாயில் ஏராளமான தண்ணீர் அதன் வெளிப்பரப்பில் ஒருகாலத்தில் இருந்தது எனக்கருதுகிறார்கள். ஆயினும், அந்தத் தண்ணீர் எங்கு சென்று மறைந்தது என்பதை ஒருமித்து கருத்துக் கூறியதில்லை. இந்த வாரம் ஸயன்ஸ் இதழில் வெளியிட இருக்கும் கட்டுரை அந்த பதிலுக்கு உதவலாம்.

பூமி போன்ற கிரகத்தில் உயிர்கள் இருக்க மிகவும் அத்தியாவசியமான தேவை என தண்ணீர் கருதப்படுகிறது. தரைக்கடியில் இருக்கும் தண்ணீர், செவ்வாய் கிரகத்தைப்புரிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் அங்கு மனிதர்கள் பயணம் செய்யவும் மிகவும் முக்கியமான விஷயம். மார்ஸ் ஒடிஸ்ஸி விண்கலத்தின் முக்கிய நோக்கமே அங்கு இருந்ததாகக் கருதப்படும் தண்ணீர் என்னவாயிற்று என்பதை அறிவதுதான். ஏப்ரல் 2001இல் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், இந்த பிப்ரவரியில் தன்னுடைய வேலையை ஆரம்பித்தது. செவ்வாயின் பரப்பில் இருக்கும் வேதிப்பொருள்களை ஆராய்வதும், அதில் இருக்கும் கனிமங்களை ஆராய்வதும் அதன் இதர முக்கிய நோக்கங்கள். முக்கியமாகத் தேடப்பட்ட தனிமம், ஹைட்ரஜன்.

ஒடிஸ்ஸி விண்கலம், செவ்வாயில் இருக்கும் கதிர்வீச்சை அளக்கவும் தேவையான மானிகளை எடுத்துச் சென்றது. அதிக கதிர் இயக்கம் இருக்கும் கிரகத்தில் மனிதர்கள் பயணம் செய்வது மிகவும் கடினமானது.

செவ்வாய் கிரகம், நம் சூரியமண்டலக் கிரகங்களிலேயே மிகவும் அதிகமாக ஆராயப்பட்ட கிரகம். பூமிக்கு மிக அருகாமையில் இருக்கும் இந்தக் கிரகம், பூமி போலவே ஆனதாக இருப்பதும் முக்கியமான விஷயம்.

குளிர்ந்த, பாறைகள் நிரம்பிய செவ்வாயின் பரப்பு பல ஒளிப்படங்களில் மார்ஸ் பாத்ஃபைண்டரால் பிடிக்கப்பட்டது. மார்ஸ் குலோபல் சர்வேயர் என்ற விண்கலமும் சமீபத்தில் செவ்வாயின் பரப்பில் நடந்த புழுதிப்புயலைப் படம்பிடித்து அனுப்பியிருந்தது.

**

Series Navigation

செய்தி

செய்தி