முனைவர் மு. பழனியப்பன்
தமிழ் மொழி தமிழர்களுக்கான உயிர், உடல், இனம் சார்ந்த அடையாளம். தமிழ்மொழியின் உயர்வு, வளர்ச்சி, அதன் வளமை அத்தனைக்கும் அம்மொழி வாயிலாகப் படைக்கப்பெற்ற, படைக்கப்பெறும் இலக்கண இலக்கியங்கள் உறுதுணையாக இருந்துவருகின்றன. தமிழ்மொழியின் சிறப்பு அம்மொழி வாயிலாகப் படைக்கப்பெறும் இலக்கியங்களில் உறைந்து கிடக்கிறது என்பது கருதத்தக்கது.
செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும் ஒரு சிறப்புக் கூறு நடுவுநிலைமை என்பதாகும். இக்கூறு தமிழின், தமிழர்களின் நடுவுநிலைப் பண்பை வெளியுலகிற்கு எடுத்துரைப்பதாக உள்ளது.
பட்டினப்பாலை என்ற பத்துப்பாட்டு நூலில் தமிழர்களின் நடுவுநிலை சார்ந்த வணிக முறைமையை மிக்கச் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. சங்க காலத்தில் பண்ட மாற்றுமுறையில் வணிகம் நடைபெற்றுள்ளது. கொண்டு வந்த பொருளுக்கு மாற்றாக மற்றொரு பொருளை தரும் வணிக வழக்கம்தான் ஆரம்பகால வணிக வழக்கமாகும். பிற்காலத்தில்தான் பணம் கொடுத்துப் பொருள் பெறும் முறை தொடங்கியுள்ளது.
காவிரிப்பூம்பட்டினத்தில் அகலமான வணிகத் தெருக்கள் இருந்துள்ளன. அத்தெருக்களின் இருபுறங்களிலும் கடைகள் காணப்பெற்றுள்ளன. ஒவ்வொரு கடையின் முன்பகுதியிலும் கொடி தொங்கவிடப்பெற்றிருக்கிறது. அக்கொடி விற்கும் பொருளின் அடையாளத்தை உணர்த்துவதாக இருந்துள்ளன. இக்கடைகளில் பொருள் வாங்குவோரும், பொருள்களைத் தருவோரும் மிகுந்து காணப்பட்டனர். இவர்களிடத்தில் விளைபொருள்களைப் பெறும்போதும், அதற்கேற்ப மாற்றுப் பொருளைத் தரும்போதும் ஒரு நன்முறை பின்பற்றப் பெற்றுள்ளது.
நெடுநுகத்துப் பகல் போல
நடுவுநின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
(பட்டினப்பாலை 206211)
என்ற அடிகள் சங்க கால நடுவுநிலை மிக்க வணிக வாழ்க்கை முறையை விளக்கி நிற்கின்றன. உழவர்கள் பயன்படுத்தும் நுகத்தடி எனப்படும் உழுகருவியல் தைக்கப்படும் பகலாணி நடுநிலையாக நிற்பதைப் போல வணிகர்கள் நடுவுநிலை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் தம் பொருள்களையும், பிறர் பொருள்களையும் ஒப்ப நாடி வணிகம் செய்துள்ளனர். பொருள்களைக் கொள்கின்றபோது அதிகமாகக் கொள்ளாமலும், பொருள்களைக் கொடுக்கின்றபோது குறைவுபடாமலும் தம் தொழிலைச் செய்துவந்தனர் என்ற இந்தப் பகுதிகள் சங்க கால நடுநிலைமை மிக்க வாழ்க்கைமுறையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
திருக்குறளும் மற்ற நீதி நூல்களும் நடுவுநிலைமையை ஒப்பற்ற சான்றோர் குணமாக கருதுகின்றன. `நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி’ (திருக்குறள் 115) என்கிறது திருக்குறள். வணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணும் முறைமை எது எனில் பிறவும் தமபோல் செய்தல் என்று வள்ளுவர் பட்டினப்பாலையின் வழிவந்து வணிகமுறையின் நன்முறையை உரைக்கின்றார். (திருக்குறள் 120)
முடிமுனைதல், மஞ்சள்பூசுதல் போன்றன மனிதர்க்கு அழகல்ல. நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு (நாலடியார் 131) என்று கல்வி கற்றோர்க்கு உரிய அழகாக நடுவுநிலைமை என்பதை நாலடியார் காட்டுகின்றது.
நடுவுநிலை தவறிய பாண்டிய மன்னனின் இறுதியைச் சிலப்பதிகாரம் சுட்டுகின்றது.
தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே(சிலப்பதிகாரம்20,7276)
என்ற பகுதியில் ஒருவன் சொன்ன சொற்களை உண்மை என்று எண்ணி மாற்றார் பக்கத்தைக் காணாது விடடுவிட்ட மன்னனின் அறம் தவறிய நிலை நடுவுநிலையில் பிறழ்ந்த நிலையாகிவிடுகின்றது. நடுவுநிலை தவறாது வணிகம் செய்த வணிகமுறையினரை நடுவுநிலைத் தவறி அரசன் தண்டித்த கதை சிலப்பதிகாரமாகின்றது.
இவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் நடுநிலை பற்றிய பல செய்திகள் உள்ளன. இவை தமிழ் மொழியின் நடுவுநிலைத் தன்மைக்குச் சான்றாக நிற்கின்றன. இவை புறம் சார்ந்த நடுவுநிலை என்பதாகக் கொள்ளலாம்.
தொல்காப்பியத்திலும் நடுவுநிலைமைப் பண்பு காணப்படுகிறது. தொல்காப்பியர் காலத்தில் பாலைத்திணை என்ற பெயர் ஏற்படவில்லை. நடுவணது திணை என்றே அதனைத் தொல்காப்பியர் அழைக்கின்றார். பாலை ஏன் நடுவணது திணை என்று அழைக்கப்பட்டது என்பது ஆராயத்தக்கதாகும்.
நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே
(தொல்காப்பியம் பொருளதிகாரம். 11.)
என்ற தொல்காப்பிய நூற்பாவில் மிகத் தெளிவாக பாலைத் திணையை நடுவுநிலைத் திணை என்று தொல்காப்பியர் காட்டுகின்றார்.
“காலையும் மாலையும் நன்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவன்மாறி நீரும் நிழலும் இன்றி நிலம் பயன் துறந்து புள்ளும் மாவும் புலம்புற்று இன்பம் இன்றித் துன்பம் பெருகுவதொரு காலமாதலின் இன்பத்திற்கு இடையூறாகிய பிரிவிற்கு நன்பலும் வேனிலும் சிறப்புடைத்தாயிற்று ” என்று நச்சினார்க்கினியர் இதற்குப் பொருள் கொள்ளுவார். அதாவது காலை , மாலை என்ற நாள் பொழுதில் நடுவில் வருவது நன்பகல். அந்த நன்பகலை சிறுபொழுதாகக் கொண்ட பாலை நிலத்தை நடுவுநிலைத் திணை என்று தொல்காப்பியர் அழைத்திருக்கிறார் என்று நச்சினார்க்கினியார் முடிகின்றார்.
இருப்பினும் இன்பம் துன்பம் என்ற இரண்டில் தலைவனுக்கும் தலைவிக்கும் இன்பத்தைத் தருவது குறிஞ்சி என்ற திணை. மற்ற நான்கு திணைகளிலும் இருத்தல், ஊடல், இரங்கல் என்று துயரத்தின் சாயலே மிக்கு இருக்கின்றது. ஆனால் பாலையில் தலைவன் மட்டும் பிரியலாம். அல்லது தலைவனும் தலைவியும் தம் சொந்தங்களை விட்டுப் பிரியலாம். இந்தச் சூழலில் பிரிதல் என்பதை இன்பத்துள் வைப்பதா, துன்பத்துள் சேர்ப்பதா என்று கருதிப் பார்த்தால் நடுவுநிலைக்குள் தொல்காப்பியர் வைத்தது சரி எனப்படும்.
குறிஞ்சி, முல்லை என்ற இரண்டிலும் தலைவன் வந்துவிட்டான், வருவான் என்ற உறுதி உள்ளது. மருதம், நெய்தல் இவற்றில் தலைவன் திரும்பி வருவானா வாரானா என்ற சந்தேகம் நிலைப்படுகிறது. இவை இரண்டு இரண்டாக பிரிவு பட்டு நிற்கும் நிலையில் பாலை என்பது நடுவணதாக நிற்க வாய்ப்புள்ளது. தலைவன் ஏதோ ஒரு காரணம் கருதி பிரிகின்றான். அந்தக் காரணம் நிறைவேறும் வரை தலைவன் தலைவி இருவரும் காத்திருந்து அதன்பின் அனுபவிக்கப் போகிற இன்பத்தை எண்ணி வாழும் பாலை வாழ்க்கை நடுவணதாகத்தான் இருக்க இயலும். எனவே தமிழர் அக வாழ்விலும் நடுவு நிலை ஆட்சி செய்துள்ளது என்பது தெளிவாகின்றது.
வடமொழியானது மெய்ப்பாடுகள் அதாவது இரசங்கள் ஒன்பது என்று கொள்ளும். நடுவுநிலை அதாவது சாந்தம் என்பதையும் அது ஒரு சுவையாகக் கொள்கின்றது. ஆனால் தொல்காப்பியர் அதனை விடுத்து எண் சுவைகளை மட்டுமே மெய்ப்பாடாகக் கொள்ளுகின்றார். இருப்பினும் நடுவுநிலை என்ற மெய்ப்பாட்டை விட்டுவிடாது பிற நிலைக்கலன்கள் என்ற வரிசையில் தருகின்றார். (தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 11) அகமும் புறமும் சார்ந்த மெய்ப்பாடாக நடுவுநிலை என்ற மெய்ப்பாடு விளங்கி நிற்கிறது.
எனவே தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் அதன் நடுவுநிலை என்பது அகம், புறம், இரண்டிற்கும் பொதுவானது என்ற முன்று நிலைப்பாடுகளைப் பெற்றுள்ளது என்பது உணரத்தக்கதாகும்.
இவ்வாறு நடுவுநிலைப் பண்பு என்பது தமிழர் வாழ்வியலின் சிறப்புப் பொருளாகித் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்து வருகிறது. இப்பெருமை தமிழ்மொழியைச் செம்மொழி வரிசையில் தகுதி பெற வைத்துள்ளது.
- அன்புள்ள ஆசிரியருக்கு
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36
- இந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை
- பாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறை
- கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -5)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் ! (கவிதை -35)
- ’நாளை நமதே’ அமீரகத் தமிழ் மன்றம் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
- வெயில்கால மழையின் ஸ்பரிசத்தில்- ஆம்பூர் விமர்சன கூட்டம் குறித்து
- ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 11
- சிதறல்
- ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்
- தட்டுப்பாடு
- கடக்க முடியாத கணங்கள்
- தொடுவானம்
- பிராத்தனை
- பிராத்தனை
- அதிர்வு
- யார் அந்த தேவதை!
- கூடடையும் பறவை
- வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்
- புழுங்கும் மௌனம்!
- விழி மூடித் திறக்கையில்!
- வீட்டின் உயிர்
- முடிவுகள் எனும் ஆரம்பங்கள்!
- ஈழம் கவிதைகள் (மே 18)
- இன்றைய காதல்
- சந்திப்பு
- பிரபாகரனின் தாயாரது இறுதிப் பயணம்
- மூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்
- செம்மொழித் தமிழின் நடுவுநிலைமைத் தகுதி
- சூரியச் சிறகுதிர்ந்து..
- என்ன வாசிப்பது..
- பம்பரக் காதல்
- நீ தானா
- மகிழ்ச்சியின் வலிகள்
- ஒரு பூவும் சில பூக்களும்
- “யூ ஆர் அப்பாயிண்டட் ” – புத்தக விமர்சனம்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 10
- இவர்களது எழுத்துமுறை – 38. மீ.ப.சோமசுந்தரம்
- யாளி
- வானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)
- ரியாத்தில் கோடை விழா – 2011
- இனிவரும் வசந்தத்தின் பெயர்
- l3farmerstamilnadu.com என்ற விவசாயம் சார்பான ஒரு இணைய தளம்
- அரூப நர்த்தனங்கள்
- சுடருள் இருள் நிகழ்வு-06
- வெ.சா. வின் விஜய பாஸ்கரன் நினைவுகள்: தவிர்க்கப்பட்ட தகவல்
- கனவு “ காலாண்டிதழ் : 25 ம் ஆண்டை நோக்கி… 2012: ” கனவி” ன் 25 ஆம் ஆண்டு