சுனாமி வேட்கை

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

புகாரி


மனம் பரிகொடுத்து
மணிக்கணக்காய் ரசிக்கும் மக்கள்
இன்று, உயிர் பரிகொடுத்து
அலை பார்க்க நேர்ந்தது

படுத்துக்கிடக்கும்போதே
பயமாய் இருக்கும்
கடல், எழுந்து நின்றால்
என்னாவது

கரைகளிலெல்லாம் கண்ணீர்
ஓரங்களிலெல்லாம் ஓலம்

திடாரென்று எழுந்த
ராட்சச அலைகண்டு
திகைத்து வெடித்த
உயிர்களின் அதிர்ச்சி
கடலைவிட
எத்தனை மடங்கு
பெரியதாய் இருந்திருக்கும்

சிப்பிகளுக்கெல்லாம்
முத்து வழங்கும் கடல்
உயிர் முத்துக்களை
அபகரித்துக்கொண்டு
மனித உடல்களை
வெற்றுச் சிப்பிகளாக்கி
விசிறியடித்துவிட்டது

தன்னிடம் வந்து
உழைப்பைக் கொட்டிய
மீனவப் பணியாளர்களை
கட்டாய ஓய்வு கொடுத்து
பிணங்களாய்
ஊருக்குள் கொண்டுவந்து
கொட்டிவிட்டுப் போய்விட்டது

பாவம்…
கடல் என்ன செய்யும்
நிலநடுக்கத்தின்
பினாமிதானே இந்தச் சுனாமி

கடலின் இடுப்பை
நிலம் ஒடிக்க ஒடிக்க
கதறிக்கொண்டு வந்த
ஒப்பாரிதானே இந்தச் சுனாமி

தன் கோடிக் கரங்களால்
வெறிகொண்டமட்டும்
கரைகளைப் பிறாண்டியபோது
கணக்கற்ற உயிர்கள்
கிழிந்து உதிர்ந்தன

எனக்கொன்றும் தெரியாது
நான் குற்றமற்றவளென்று
நிலத்தின் மடிகளிலேயே
சடலங்களை வீசிவிட்டு
சடுதியில் ஓடிவிட்டது
கடல்

பூமிக்கு
இது வெறும் நடுக்கமல்ல
மல்யுத்தத்தில்
மரணஅடி பட்ட நிலை

நாடுகளெல்லாம்
நகர்ந்துபோய்விட்டன
தாழ்ந்தும் உயர்ந்தும் சில
நிலைகுலைந்துவிட்டன

பூமிக்கோள்
தன் அச்சிலிருந்து
சடக்கென்று வழுக்கி
விலகிப்போய்விட்டது

பூமியைச் சொல்லியும்
குற்றமில்லை
இவையெல்லாம்
வானத்தின் லீலைகள்

மனிதனின் சக்தி
எப்போது
வானத்தை வளைக்கும் ?

நாச வேலைகளை
உதறியெறிந்துவிட்டு
எப்போது மனிதன்
முழுமையாய்த் தன்னை
இதில் நுழைப்பான் ?

அதுவரைக்கும்
ஆளாளுக்கு
ஆயுள் கணக்குப் போடாதீர்கள்

நிரந்தரமென்று எதுவுமில்லை
என்ற நிரந்தரத்துக்குள்
முடங்குங்கள்

*

அன்புடன் புகாரி
buhari@gmail.com

Series Navigation

புகாரி

புகாரி